- நேர்காணல்: எஸ்.கணேசன்
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையினை அரசியலாக்க
நாம் விரும்பவில்லை. கூடுமானவரை விரைவாக பேச்சுவார்த்தையினை நிறைவு செய்து தொழிலாளர்களுக்கு
நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காக அமைச்சினூடாக
வழங்க முடிந்த ஒத்துழைப்புக்களையும் கூட நாம் வழங்கி வருகின்றோம் என பெருந்தோட்ட
தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய
செவ்வியின் போதே இதனை தெரிவித்தார். அச்செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி : கூட்டு ஒப்பந்தம் கடந்த 31
ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு
விட்டதா?
பதில்: ஆம். கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி: தற்பொழுது அதன் நிலைப்பாடு பற்றியும்,
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றியும் குறிப்பிட
முடியுமா?
பதில்: கடந்த 31 ஆம் திகதியுடன் கூட்டு
ஒப்பந்தம் நிறைவடைந்தது. எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை
தொழிற்சங்க பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் ஆரம்பித்துள்ளோம்.
அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின்
போது முதலாளிமார் சம்மேளனம் வழமைபோல தங்களுடைய நிலைப்பாட்டை முன்வைத்தனர். எனவே
அது தொடர்பாக ஆராயும் பொருட்டு தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பாக மூன்று பேரும் முதலாளிமார்
சம்மேளனம் சார்பாக மூன்று பேரும் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளோம். இந்தக் குழு
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும். எனவே
அதனடிப்படையில் சில முடிவுகளை எடுப்போம். 15 வருடங்களாக இந்த ஒப்பந்தத்தில் சில
ஷரத்துக்கள் மாத்திரமே அடிக்கடி மாற்றப்படுகின்றன.
நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருக்கும்
சில ஷரத்துக்களை மாற்றுவது தொடர்பாகவும் இந்தக் குழு ஆராயும். எனவே புதுப்பிக்கப்பட்ட
ஷரத்துக்களுடன் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
கேள்வி: எவ்வளவு காலம் வரை இரண்டாவது
பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது?
பதில்: அது தொடர்பில் நாங்கள் இன்னும்
எதுவிதமான இறுதித் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், குறித்த ஒப்பந்தம் எப்பொழுது கைச்சாத்திடப்பட்டாலும் ஏப்ரல் மாதம் 1
ஆம் திகதி முதல் சம்பள உயர்வு உள்ளிட்ட கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
கேள்வி: இவ்வாறு பிற்போடப்படுவதற்கான
காரணம், ஜூன் மாதம் தேர்தல் இடம்பெற்றதன்
பின்னர் மேற்கொள்ளவா?
பதில்: இல்லை. தேர்தலைக் காரணம் காட்டி
பேச்சுவார்த்தையை பிற்போடவில்லை. இப்போதிருக்கும் சூழல் கூட்டுபேரம் பேசுவதற்கு
ஏற்றதாக இல்லை.
கேள்வி: ஏற்றசூழல் இல்லை எனக் கூறுவதற்கான
காரணம் என்ன?
பதில்: உலக சந்தையில் தேயிலை மற்றும்
இறப்பரின் விலை போன்றவற்றை ஆராய்ந்து அதன் சாதக நிலைமைக்கு ஏற்ப பேச்சுக்களை நடத்துவது
சிறந்தது என்று நினைக்கின்றோம். ஆகவே இதற்கு வாய்ப்பானதொரு சூழல் அமையும் வரை
பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதுவும் குறிப்பாக இன்னும் இரண்டொரு மாதங்களில் நல்லதொரு
சூழல் ஏற்படுமென எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: பேச்சுவார்த்தையை மேற்கொள்ள
இன்னும் இரண்டொரு மாதங்கள் செல்லலாம் என கொள்ளலாமா?
பதில்: அதற்கிடையில் பேச்சுவார்த்தை
குறித்தான ஏனைய அனைத்து விடயங்களும் பேசப்படும். சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென
கூறும்போது அதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமைய வேண்டும். அவர்களால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைகளில் அவர்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும்.
எனவே, அவர்கள் இது தொடர்பில் அமைச்சினூடாக பேச்சுவார்த்தை
நடத்த வேண்டுமென கூறியிருந்தனர்.
அதற்கமைய கம்பனி நிர்வாகத்துக்கும்,
பெருந்தோட்ட அமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஊடாக ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தோம்.
பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தெளிவு படுத்தினார்கள்.
தற்பொழுதுள்ள உற்பத்தி செலவின்படி சம்பளமானது அதை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை என்பதும்
அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், சம்பள
உயர்வு பற்றி அவ்விடத்தில் எதையும் குறிப்பிட முடியாதென்றும் அதைத் தவிர்த்து
பிரச்சினைகளை முதலில் தெரிவித்தால் அமைச்சினூடாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என்பதை தீர்மானிப்போமென குறிப்பிடப்பட்டது. இதேவேளை, அவர்களுக்கு நீண்டகால கடனை வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை
அமைச்சரவை மூலம் பெறுற் றுத்தருவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் குறைந்த வட்டியில் அவற் றைப்
பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதோடு, ஏற்றுமதி
தடை விதித்துள்ள
நாடுகளில் இருக்கும் தடையை நீக்கித் தரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அது
குறித்து அமைச்சினூடாக அதற்கான கடிதங்களையும்
அனுப்பத் தீர்மானித்துள்ளோம்.
ஏனெனில், தடைகளானவை பல பாதிப் புக்களை ஏற்படுத்துவதாக கூறியே இந்நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம்.
இத்தடை நீக்கப்பட்டால் தேயிலையின் விலை
அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதன்போது பேரம் பேசவும் இலகுவாக
இருக்கும்.
கேள்வி: எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமா நீங்கள் முன்வைத்தீர்கள்?
பதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே
1,000 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டுமென கூறியுள்ளது. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆகவே நாங்கள் முதலாவது அதனை தவிர்த்து ஏனைய விடயங்களை ஆராய்கின்றோம். அதாவது சம்பளத்துடன்
சம்பந்தப்பட்ட சில விடயங் கள் குறித்து ஆராய்கின்றோம். அமைச்சினூடாக அவர்களின்
ஏனைய பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.
கேள்வி: சம்பள உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து
நடைமுறையாகும் எனக்கூறியுள்ளீர்கள். சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு
எவ்வளவு கால மெடுக்கும்?
பதில்: முடிந்தளவுக்கு விரைவில் நடத்தி
முடிக்க எண்ணுகின்றோம். இதனை எப்பொழுதுமே அரசியலாக்க விரும்பவில்லை. இவை தொழிலாளர்களின்
பிரச்சினையா கவே பார்க்கப்படுகின்றது.
அரசியல் இலாபத்தை விடுத்து கொடுக்கக்கூடிய நியாயமான தொகையை வழங்க ஏற்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ள அமைச்சினூடாக வழங்கமுடிந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றோம்.
கேள்வி: நூறு நாள் வேலைத்திட்டத்தின்
கீழ் தோட்டப்புறங்களில் வீடமைப்பு திட்டங்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகள்
எவ்வாறான நிலையிலுள்ளன?
பதில்: தற்பொழுது ஓரளவுக்கு வீடமைப்பு
திட்டங்களுக்கு தேவையான காணிகளை நாங்கள் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இன்று அது
தொடர்பில் எதுவித தாமதங்க ளோ, தடைகளோ இல்லையென்றே
கூற லாம்.
ஆனால், அமைச்சின் பிரதான வேலையாக வீட்டு உரிமையுடன் தொழிலாளர்களுக்கான
காணியை வழங்குவது தொடர்பாக ஒரு மாத காலமாக பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.
அதனூடாக யார் யாருக்கு காணிகளை வழங்க வேண்டும் எனவும் தீர் மானிக்கப்படவுள்ளதோடு
அதற்கான ஆவணங்களும் தயார்செய்யப்பட்டு வருகின்றன.
கேள்வி: எவ்வளவு காணி தேவை என் பதற்கான
ஆவணங்கள் அமைச்சரவையி டம் கையளிக்கப்பட்டுவிட்டதா?
பதில்: தற்போது அதற்கான கொள்கைகளை கோவையாகத்
தயாரித்துள்ளோம். அதேவேளை, இவற்றில் சில
சட்ட ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை களைப் பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
காணிகள் வழங்க வேண்டுமாக இருந் தால்
காணிகள் அளக்கப்பட்டு அதற்கான காணி உரிமைப் பத்திரங்கள் முறையாகத் தயாரிக்கப்பட
வேண்டும். இவை முறையாக மேற்கொள்ளப்பட நீண்டகால மெடுக்கும். இதுவே எங்களுக்கு காணப்ப
டுகின்ற பிரச்சினையாக உள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...