பெருந்தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து பறித்து கொடுப்பது மாத்திரமே தொழிலாளர்களின் கடமையாகும். அதனை சிறந்த விலைக்கு விற்பனை செய்வது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதனை விடுத்து தேயிலை சிறந்த விலைக்கு விற்க முடியாமல் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.
அக்கரைப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கல்ந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்வைபவத்தின் போது இத்தோட்டத்திலுள்ள நலன்புரி சங்கத்திற்கு கூரைத்தகடு மற்றும் கதிரைகள் என்பனவும் வழங்கப்பட்டன.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக கூட்டு ஒப்பந்தம் செய்யும் காலங்களில் தோட்ட நிறுவனங்கள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி வருகின்றனர். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்று ஒரு தோட்ட தொழிலாளி 16 கிலோ முதல் 18 கிலோ வரை தேயிலை கொழுந்து பறித்து கொடுக்கின்றார்கள். 4 கிலோ தேயிலை உற்பத்தி செய்கின்றார்கள். ஒரு கிலோ தேயிலை ஆகக்குறைந்தது 400 ரூபாவிற்கு மேலே விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 450 ரூபா மாத்திரமே வழங்குகின்றார்கள்.
ஆனால் தோட்டங்களை நிர்வகிக்கும் தோட்டத் துரைமார்களுக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது. ஆனால் தேயிலை உற்பத்திக்கு முதுகெலும்பாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் சம்பள உயர்வு கேட்டால் தோட்டம் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது கவலைக்குரிய விடயமாகும்.எனவே தொழிலாளிக்கு நாள் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக 750 ரூபா வழங்க வேண்டும். அதற்கு மேல் ஏனைய கொடுப்பனவுகள் வழங்க வேண்டும்.
இந்த சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு முழுமையாக வாக்களித்த தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி அரசாங்கமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறினார்.
நன்றி - http://zajilnews.lk/?p=42559
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...