தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்படாத மலையக கட்சிகளும்
மலையக தோட்டத் தொழலாளர்களை பிளவுபடுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியமான விடயமல்ல. ஏற்கனவே பல சங்கங்கள் இருக்கின்ற போது புதிதாக சங்கங்கள் உருவாக்கப்படும் உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
இன்று பல தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசுவதைவிட அரசியலை பேசிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இன்று பல தொழிற்சங்கங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக செயற்படும் ஸ்தானங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. மலையகத்தில் பிரதேச வாரியாகவும் மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் தொழிற்சங்கங்கள் இயங்கிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.
தொழிற்சங்கம் அமைக்கும் சட்டம் மிக இலகுவாக இருப்பதால் நினைத்தவர்களெல்லாம் சங்கம் அமைக்கின்றார்கள். ஒரு சங்கத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு சிலரின் உதவியோடு புதிய சங்கங்களை அமைக்கின்றார்கள். இதன் காரணமாக தொழிலாளர்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த சங்கங்கள் யாவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்டபோதும் அது சாதகமாக அமையவில்லை.
மலையக சமுதாயம் ஒன்றுபட்டு ஒரு கொடியின் கீழ் இயங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதும் அது இந்நாள்வரை சாத்தியப்படாமல் இருப்பதானது கவலையளிக்கின்றது.
தொழிற்சங்கங்கள் இவ்வாறு பிளவுபட்டு இருப்பதுடன் மேலும் புதிய புதிய சங்கங்கள் உருவாகின்றன. சந்தா பணத்தை பெறும் நோக்கிலா அல்லது வேறு காரணங்களுக்காகவா இவ்வாறு புதிய புதிய சங்கங்கள் உருவாகின்றன என்பது புரியாத புதிராக இருக்கின்றது.
பல தொழிற்சங்கங்கள் இருப்பத்தொன்றும் தவறில்லை. ஆனால், அவையாவும் தொழிலாளர்கள் சார்ந்த அமைப்பாகவும் அவர்களின் அடிப்படை உரிமை களை வென்றெடுக்கும் சக்தியாக இயங்க வேண்டும். மாறாக அரசியல் தேவைகளுக்காக மாத்திரம் அமைக்கப்படக்கூடாது.
1977 ஆம் ஆண்டுக்கு முன் தொழிற்சங்கங்கள் யாவும் தொழிற்சங்கங்களாகவே செயற்பட்டன. ஆனால், அதன் பிறகு ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் அரசியல் பிரிவு என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு தேசிய கட்சிகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. இதனால் மலையக மக்கள் பிரிந்து சென்று பெரும்பான்மையினரின் கட்சிகளை போசிக்கலானார்கள்.
இவ்வாறு செயற்பட்டதன் காரணமாகவே மலையகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைய நேரிட்டது. மலையகத்திற்கு கிடைக்க வேண்டிய பதினாறு பாராளுமன்ற உறுப்பினர் தொகையை இழக்க நேர்ந்தது.
மலையகத்தில் புதிய பல சங்கங்கள் உருவாவதற்கான காரணம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவா என்ற சந்தேகமும் எழுகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.
எவ்வித உடன்பாடும் இல்லாமலும் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லாமல் பிரிந்து நின்று வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலமாக பல வகையான வழிகளில் ஆதாயம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு நிரூபிக்க முடியாவிட்டாலும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கவும் முடியாதுள்ளது.
ஆயிரம் வாக்குகளைக்கூட பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் கூட ஊடகங்கள் வழியாக தமது ஆதரவை தெரிவித்தனர்.
ஏன் இவ்வாறு செய்தார்கள், இதனால் மலையக மக்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது என்பதை கூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இங்குதான் பல சந்தேகங்கள் எழுந்தன.
எவ்வாறாயினும், மலையக மக்கள் தமது ஒற்றுமையை எவருடைய பேச்சுக்கும் இணங்காமல் தாமாகவே முடிவெடுத்து தமது பலத்தை காண்பித்தனர் என்பதும் ஒரு வரலாற்று பதிவாகும்.
எனவே, மக்களின் இந்த ஒற்றுமையினை சீர்குலைக்காமல் சிந்தித்து செயல்பட வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது.
அரசியல் கட்சிகள்
சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் மலையக மக்கள் மூன்றாவது சிறுபான்மை இனமாக இருக்கின்றனர். எனவே, மலையக மக்களின் தேசிய பிரச்சினையினையும் அவர்களது உரிமைகளையும் வென்றெடுக்க மலையக அரசியல்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
ஏனெனில், தற்கால அரசியல் நிலைவரப்படி மலையக மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஒருவரை ஒருவரை குறைகூறி பழிவாங்கும் மனப்பான்மை அகற்றப்பட்டு மலையக சமுதாயம் ஒரு தனித்துவ தேசிய இனம் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.
பல கட்சிகள், கொடிகள் எல்லாம் இருக்கலாம். ஆனால், மலையகம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் தேவையாகும்.
பல கோணங்களில் வெவ்வேறு அரசியல் நோக்கோடு செயற்படும் வடகிழக்கு தமிழ் கட்சிகளும் மக்களும் தேசிய நீரோட்டத்தில் தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியதற்கு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலே மிகச் சிறந்த சான்றாகும். இதேவேளை, மலையக மக்களும் சுயமாகவே முடிவெடுத்து தமது ஒற்றுமையை காட்டியதும் இந்தத் தேர்தலில் தான். எனவே மலையக மக்களை ஒன்றிணைக்க முடியாது என்ற எண்ணம் பிழையானது. தலைவர்கள் ஒன்று பட்டபோதும் மக்கள் தாமாகவே ஒன்றாக இணைந்து செயற்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. எனவே, மக்களைப் போல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்.
விகிதாசாரத் தேர்தலும்
தொகுதிவாரித் தேர்தலும்
தற்போது தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கின்றது. விகிதாசார தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தொகுதிவாரி தேர்தல் நடத்தப்பெற்றால் நிச்சயம் மலையக தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தொகுதிவாரித் தேர்தல் 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போது நுவரெலியா, மஸ்கெலியாவில் மூன்று அங்கத்தவர்கள் தொகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே தெரிவு செய்ய முடிந்தது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்திலேயே இவ்வாறான நிலை என்றால் வடக்கு–கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாத வண்ணம் தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்க வேண்டும். விகிதாசார முறையே எமக்கு உகந்ததாகும்.
இச்சந்தர்ப்பத்தில் மலையக தலைவர்கள் யாவரும் ஒன்று கூடி ஒரு இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும். பொதுக் கொள்கை அடிப்படையில் எல்லா கட்சிகளின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு, தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் அதன் பிரதிபலிப்பை நாம் அனுபவித்தேயாக வேண்டும்.
மலையக மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஒற்றுமையே அவசியம். அதனை ஏற்படுத்துவதற்கு மலையக புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும். கட்சி ரீதியான கௌரவம் பார்க்காமல் மலையக சமுதாயம் என்ற உயர்ந்த நோக்குடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறைபற்றி மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் வாக்கு பலத்தை உயர்த்த முடியும். மலையக மக்களை ஒன்றிணைத்து செயற்பட தலைவர்கள் முன் வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...