இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதில் வன்னியிலுள்ள மலையக மக்கள், அரசாங்க அலுவலர்களால் புறக்கணிக்கப்படுவதாக பாதிகப்பட்ட மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தார்.
தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.
பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன், ‘நாங்கள் மலையகத்தில் இருந்து வந்து குடியேறியதால் இந்திய வீட்டுத் திட்டங்களில் இருந்த அரச அலுவலர்கள் எங்களைப் புறக்கணிக்கின்றார்கள் என்று வன்னியைச் சேர்ந்த மக்கள் பலர் என்னிடம் முறையிட்டார்கள்.
இந்தக் கூற்று, எனக்கு முதலில் விந்தையாக இருந்தது. காரணம், இந்திய வீட்டுத் திட்டத்திற்குப் பணம் தருபவர்கள் இந்திய அரசாங்கத்தினர். மலையக மக்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையின் மத்திய மாகாணத்தில் குடியேறியவர்கள் அல்லது வெள்ளைக்காரர்களால் குடியேற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்தில் இடமில்லை என்றால் விந்தையாகத்தானே இருக்கும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் விசாரித்துப் பார்த்ததில் அதன் உண்மை விளங்கியது. எமது மலையக சகோதர, சகோதரிகளை எமது அலுவலர்கள் மிகக் கேவலமான விதத்தில் நடத்துவதாக அறிந்தேன். அதாவது பொது நிகழ்ச்சித் திட்டங்களில் சமூகப் புறந்தள்ளல் நிகழுவதை நான் அவதானித்தேன்’ என்று அவர் கூறினார்.
‘போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் கட்டாயப்படுத்திய அந்தந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய கலாசாரம் இருந்தது. போரின் பின்னரும் இந்த கலாசாரம் தொடர வேண்டிய அவசியமில்லை. உண்மையில் எமது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் கட்டுக்கோப்புக்குள் வர வேண்டும்’ என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘திணைக்களங்களில் மின்குமிழ்களும் மின்விசிறிகளும் அலுவலர்கள் எவரும் இல்லாத நேரத்தில்கூட இயங்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். வெள்ளைக்காரன் காலத்தில் எங்களுக்கு ஒரு குணமிருந்தது. எல்லாம் வெள்ளைக்காரன் சொத்து அதை எப்படி வேண்டுமானாலும் பாவிக்கலாம் என்ற எண்ணம் அப்போது எமக்கிருந்தது. அக்காலத்தில், அரசாங்கம் வேறு நாம் வேறு என்ற ஒரு பாகுபாடு எம்முள் வளர்ந்திருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அதேவிதமான ஒரு மனோநிலை தொடர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலைமை மாற வேண்டும். பொதுச் சொத்துக்கள் எம்மக்களின் சொத்து என்ற எண்ணம் எம்முள் வளர வேண்டும். இது எமது சொத்து. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்ற எண்ணம் எம்முள் வளர்க்கப்பட வேண்டும்.
இந்த உளப்பாங்கை மக்களிடையே விருத்தி செய்ய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘எமது சமூகத்தில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்கள், பலன் குறைந்து போன முதியோர்கள், மாற்றுவலுவுடைவர்கள் உள்ளிட்டோர், உள்ளூர் அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் கருவியாக இந்த செயற்பாட்டை மாற்றுங்கள்.
எம்முள் வலுக்குறைந்தவர்களை வலுப்பெற உதவுவதில் தான் எமது கலாசாரப் பண்புகள் உறைந்து கிடக்கின்றன. சட்டவாட்சியை இறுகப் பற்றுங்கள். குற்றமற்ற மேம்பட்ட சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு இதை விடச் சிறந்த வரைமுறை இருக்கமுடியாது.
மனித விழுமியங்களை மதிப்பதற்குரிய சேவைகளை வழங்கத் தலைப்படுவோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் நுகரும் சகல தேவைகளையும் வழங்கும் உள்ளூராட்சியின் நற்பண்புகளை நாற்திசையும் அறியும் வண்ணம் உங்கள் செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும்.
அபிவிருத்திக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா பணமும் மக்கள் செலுத்திய வரி அல்லது மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய கடன் என்பதை மனதில் நிறுத்துவதுடன் ஒவ்வொரு ரூபாவும் வழங்கக்கூடிய அதிஉச்சப் பயனை மக்கள் பெறும் வண்ணம் ஊழலற்றதான நல்லாட்சியை வழங்கப் பாடுபடுங்கள்.
இதற்கான சமூகக் கணக்காய்வை மக்களே செயற்படுத்தும் வகையிலான வழியையும் அடையக்கூடிய தன்மையையும் ஏற்படுத்திக் கொடுப்பது உங்கள் ஒவ்வொருவரின் முதன்மைப் பணியாக இருக்கட்டும்.
இவை யாவும் ஒரே நாளில் விதைத்து அறுவடை செய்யக்கூடியவை அல்ல. இருப்பினும் இது தொடர்பிலான விடய ஸ்தானங்கள் மக்களிடையே பரவிவிடப்பட வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சியாளனது உள்ளத்தையும் அவை அடைய வேண்டும்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - e-jaffna
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...