மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான பொதுக்கலந்துரையாடல் ஒன்று 06.07.2014 அன்று அட்டன் CSC நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் இன, மத, கட்சி, தொழிற்சங்க, அரசியல் பேதங்களை மறந்து பல்வேறு பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் கேட்ட சில விடயங்களை இங்கு பதிய விரும்புகின்றோம்.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா அவர்களின் ஆரம்ப உரையுடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்வு பற்றிய விளக்கத்தினையும் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமையின் அவசியத்தினையும் வலியுறுத்தி முதலில் விளக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் வருகை தந்திருந்த பங்காளர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
திரு முத்துலிங்கம்
•மலையக மக்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமையை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.
•இனங்காணப்பட்ட 37000 ஹெக்டேயர் நிலத்தினை பிரிக்கும் போது அயல்கிராம சிங்களவர்களுக்கும் எமது நிலம் பகிரப்படும் அபாயம் உள்ளது.
•வீட்டுடனான 20 பேர்ச்சஸ் காணியினை கோர வேண்டும்.
•50000 வீடுகள் அமைப்பது தொடர்பாக பேசிகின்றோம். ஆனால் அரச உயர் மட்டத்தில் அதற்கு இன்னும் காசு ஒதுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
•எமது வீடு மற்றும் காணி பற்றி கோரிக்கை விடுப்பதற்கு பலமான ஒரு சிவில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனூடாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன்
•வீடு, காணி என்பவற்றை மாத்திரமல்ல கல்வி, தொழில், சுயதொழில் என சகல விடயங்களையும் உள்ளடக்கிய மலையகத்திற்கான காத்திரமான ஒரு தூரநோக்கு ஆவணம் (vision document) மலையகத்தின் சகல மட்டத்திலும் கலந்துரையாடி தயாரிக்க வேண்டும்.
•அரசிடம் காணியை பெற்று தாமே சுயமாக வீடுகளை கட்டிக்கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
•2012 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்ட ஏற்பாடு, பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் ஒரு தொழிலாளி தனது ஊழியர் சேமலாப நிதியில் 10வீதத்தினை முற்பனமாக வட்டியின்றி பெற்றுக்கொள்ளலாம். அதற்கு வழிகாட்ட வேண்டும் (ஆனால் அவ் நிதியை பெறுவதற்கு காணி ஒப்பணை சமர்ப்பிக்க வேண்டும்)
•மகிந்த சிந்தனையில் 7பேர்ச்சஸ் காணி வீடமைப்பதற்கும் 3பேர்ச்சஸ் காணி வீட்டை சுற்றி ஏனைய தேவைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நாம் 20 பேர்ச்சஸ் காணிக்கான கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.
•வீடமைப்பு போக எஞ்சிய காணிகளை மலையக மக்களுக்கே இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து தேயிலை மீளுற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும்.
திரு லோரன்ஸ்
•இத்தகைய கலந்துரையாடலினை மலையகத்தில் தீர்மானம் எடுக்க கூடிய சகலரையும் இணைத்து ஒரு முழுநாள் கலந்துரையாடலை நடாத்தி அதன் அடிப்படையில் ஒரு பொது அமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டுமேயன்றி வெறுமனே 2.30 மணித்தியாலத்தில் தீர்மானம் எடுக்கக் கூடாது.
•மலையக மக்களுக்கான வீடமைப்பு நடவடிக்கையில் முழுமையாக பிரித்தானிய அரசாங்கத்தையும் இந்தியாவையும் உள்ளீர்க்க வேண்டும். அவ்விரு நாடுகளுக்கும் இந்திய வம்சாவழி மக்களுக்கு வீடமைத்து கொடுப்பதற்கான பாரிய கடப்பாடு உண்டு.
•மலையக மக்களுக்கு காணியும் வீடும் உரிமையும் இல்லை என்பது எமது சமூகத்தின் அகௌரவமான ஒரு விடயம். எனவே இச்சமுகத்தின் கௌரவப்பிரச்சினையை சர்வதேச ரீதியாக பிரச்சாரப்படுத்த வேண்டும்.
•20 பேச்சர்ஸ் கொண்ட மூன்று இலட்சம் வீடுகள் அமைக்கப்பட வேண்டும்.
•வீடமைப்பு திட்டத்தினை உள்ளுராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். எனவே முதலில் பிரதேச செயலர் பிரிவுகளும் கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்பட அழுத்தம் கொடுக்க வேண்டும்.
டொக்டர் கிருஷான் ராஜசுந்தரம்
•மொனராகலை பகுதியல் இந்திய வம்சாவழி மக்களுக்கு 40 வீடுகள் கட்டப்பட்டு தற்போது உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஒரு அடிப்படையான ஆவணமாகக் கொண்டு இச் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
•வீடுகள் அமைக்கும் நடிவடிக்கைகளை பொருத்தமான பொது அமைப்பொன்றிடம் வழங்க வேண்டும்.
பெருந்தோட்ட சமுகமாமன்ற இணைப்பாளர்
•இந்திய வம்சாவழி மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் இக்கலந்துரையாடல் பரவலாக்கப்பட்டு சகல மட்டங்களிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
•எமது இக் கோரிக்கைகளை மக்கள்மயப்படுத்தி பரவலடையச்செய்ய வேண்டும்.
சட்டத்தரணி இரா.சடகோபன்
•வீடமைப்பு அடிப்படையானது காணி. எனவே முதலில் காணியை வென்றெடுக்க வேண்டும்.
•ஆய்வுகளின் படி மலையக மக்கள் 15இலட்சம் என்றபோதும் இன்று 50வீதமானோர் தோட்டப்புறங்களிலிருந்து வெளியேறிவிட்டனர். எனவே 38000 குடும்பங்கள் (நடேசனின் ஆய்வுக்குறிப்பு படி) வீடமைப்பு செயற்திட்டத்திற்கு உள்வாங்கப்பட வேண்டும்.
•வீடமைப்புடன் சகல உட்கட்டுமான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எடுத்துக்காட்டு பாதை, அஞ்சல் அலுவலகம், வைத்தியசாலை, பாடசாலை போன்றன.
•எனவே அன்னளவாக நான்கு பெருந்தோட்டங்களை இணைத்து ஒரு மையப்பகுதியில் மலையக மக்களுக்கான கிராமங்கள் அமைப்பதற்கான யோசனையினை முன்வைக்கலாம்.
•சட்ட ரீதியாக காணிகளை பெறுதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுகின்றமையால் சகலரும் இணைந்து அதற்கான பொருத்தமான ஒரு பொறிமுறையினை வகுக்க வேண்டும். அதற்காக ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
சுதர்ம மகாராஜன் (கண்டி)
•மலையகத்தில் அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், கல்வியிலாளர்கள் என எல்லா துறைகளிலும் உள்ள பழைய நபர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
•எனவே அவர்களை நிராகரிதல், புதியவர்களை அடையாளம் காணல் எனும் புதிய நுட்பத்தை பிரயோகிக்க வேண்டும்.
•புதிய உத்வேகமுள்ள இளைஞர்களை இனங்கண்டு அத்தகையவர்களிடம் மலையக மக்களுக்கான காணி, வீடு தொடர்பான விடயங்களை முன்னெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
அருட்தந்தை கீத பொன்கலன்
•காணிகள் சொந்தம் இல்லை என்றால் வீடுகள் கட்டுவதில் பயன் இல்லை. எவே முதலில் காணியை உரிமையுடையதாக்க வேண்டும்.
•எமது காணியின் அளவினை நாமே குறைத்துக்கொண்டுள்ளோம். அதாவது இப்பொழுது கட்டப்படும் மொட்டை மாடி வீடுகளின் அளவு 1.26 பேச்சர்ஸ் மாத்திரமே. எனவே இந்நிலையை மாற்ற வேண்டும்.
சிவலிங்கம் சிவகுமார் (சூரியகாந்தி பத்திரிகை)
•தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழிலாளர்கள் அல்லாதவர்களே பேசிக்கொண்டிருக்கின்றோம். எப்பொழுது தொழிலாளர்கள் பேசப்போகின்றார்கள்?
•தொழிலாளர்களுக்கு சொந்த காணி, சொந்த வீடு வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்படவேண்டும்.
•மலையக தொழிலாளர்களின் காணி, வீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கருத்து பகிரல்களுக்குப் பின் சட்டத்தரணி தம்பையாவின் முடிவுரையில், இந் நிகழ்வு வீடு, காணி கோரிக்கையின் வரலாற்று தொடர்ச்சி, நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்திருக்கின்றோம். ஒரு மாத கால எல்லைக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட்டு பலமான சிவில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இச்செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற விடயங்களை வலியுறுத்தப்பட்டன. ஏற்பாட்டுக்குழுவின் எழுச்சிப்பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...