Headlines News :
முகப்பு » » தோட்டங்கள் முறையாக பராமரிக்கபட்டால் எல்லோராலும் சாதனை படைக்க முடியும்

தோட்டங்கள் முறையாக பராமரிக்கபட்டால் எல்லோராலும் சாதனை படைக்க முடியும்


பத்தனை மவுண்ட் வேர்ணண் தோட்டத்தில் வசிக்கும் வி. தனலட்சுமி, 1899 கிலோ கொழுந்து பறித்து மொத்த ஊதியமாக 57,395 ரூபாய் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கையில் தேயிலைத் தோட்டத்தொழிலில் ஏற்படுத்தப்பட்ட இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவேண்டும்.

தோட்டப்பெண்கள் நன்கு வேலைசெய்து நல்ல வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும். இவர்கள் வருவாய் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லவேண்டியதில்லை என்று பத்திரிகைக்கு தனலட்சுமி அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். இது இவராக சொன்னதா? அல்லது இவ்வாறு சொல்ல வைக்கப்பட்டாரா என்பது தெளிவில்லாதுள்ளது.

மலையகத் தேயிலை தோட்டங்களெல்லாம் மவுண்ட் வேர்ணன் தோட்டமில்லை. ஒரு தேயிலைத் தோட்டம் நன்கு பராமரிக்கப்பட்டால் தனலட்சுமி கூறுவது சரியாகப்படும். ஆனால், நிலைமை நேருக்கு மாறாய் உள்ளதே!

தோட்டத்தை சரியாக பராமரிப்பது எவ்வாறு? முதலில் தேயிலை மலைகள் துப்பரவு செய்யப்படவேண்டும். மழைநீர் வடிந்து செல்ல கான்கள் அமைக்கப்படவேண்டும், உரிய காலத்தில் உரம்போடவேண்டும், தேயிலைச்செடிகளில் படிந்துள்ள பாசியை அகற்றவேண்டும், இலைகளில் ஏற்படும் நோயை அகற்ற பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படவேண்டும், ஆறு அல்லது ஏழு நாட்களுக்கு ஒருமுறையென்று கொழுந்து பறிக்கவேண்டும்,7 நாட்களுக்கு மேலானால் கொழுந்து முற்றிவிடும் தேயிலைச் செடிகள் உரியகாலத்தில் கவ்வாத்து செய்யப்படவேண்டும், தேயிலை மலைகளில் நிழல் தரும் மரங்கள் நாட்டப்படவேண்டும்.

தேயிலை கன்றுகள் உற்பத்திக்கென தவறணை அமைக்கப்படவேண்டும். காலம் பிந்திய விளைச்சல் குறைந்த தேயிலைச் செடிகள் அகற்றப்படும்போது அதற்கொப்பான வேறு இடத்தில் புதிதாக தேயிலை பயிரிடப்படவேண்டும். இவையெல்லாம் கடைப்பிடிக்காது விட்டால் தேயிலை மலைகள் காடாகி விடும். நிதி பற்றாக்குறை என்ற காரணம் காட்டி தோட்டக்கம்பனிகள் எதுவுமே செய்யாதபடியால் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் மூடப்படுகின்றன.

மேலும், அதிக மழை கடும் வெய்யில் காலங்களில் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுகின்றன. இந்தக்காலத்தில் வேலைநாட்கள் குறைக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் வருமானம் குறைகிறது. எனவே தேயிலைத் தோட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் வருடத்தில் பன்னிரண்டு மாதமும் நல்ல சம்பளம் பெறமுடியும் என்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்.

உதாரணத்திற்கு ஒரு தோட்டத்தைப்பற்றி இங்கே குறிப்பிடுவது சாலப்பொருத்தமாகும். இறக்குவானை பிரதேசத்தில் ஒரு தேயிலைத் தோட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2200 அடி உயரத்தில் உள்ளது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் அந்தத் தோட்டம் அம்மாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரி தோட்டமாய் விளங்கியது. ஆங்கிலேயத் துரைமாரும், அவர்களுக்கும் பின் வந்த சுதேசிய துரைமாரும் தேயிலை பயிரிடுகை சம்பந்தமாய் விற்பன்னர்களாய் திகழ்ந்தனர். அங்கே ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை விசேடமானது. காலிமுகத்திடலில் வீசும் காற்றுபோல, சதா காற்றுவீசும் ஓரிடத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. காற்றினால் தேயிலை தளிர்கள் இயற்கையாகவே வாட்டம் பெற்றன. பிற தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்கும் Artificial weathering அங்கு தேவையற்றிருந்தது. உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. மாவட்டத்தில் முதலிடம் வகித்தது. சுற்றியுள்ள தோட்டத்துரைமார் மேற்படி தோட்டத்திற்கு விஜயம் செய்து அந்த இரகசியத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

ஆட்சி மாறியது. தோட்டங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. தேயிலை உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற துரைமார் விலகிச்சென்றனர். தேயிலைப்பற்றியே தெரியாதவர்கள் அல்லது அரைகுறை தெரிந்தவர்கள் அரசியல்வாதிகளால் துரைமார்களாக நியமனம் பெற்றனர்.

தேர்தலின்போது உதவி செய்தவர்கள் என்ற அடிப்படையில் கிராமத்தவர்கள் பெருமளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 12 காவலாளிகள் இருக்க வேண்டிய இடத்தில் 19 பேர் நியமிக்கப்பட்டனர். நான்கு இலிகிதர்கள் இருக்கவேண்டிய காரியாலயத்தில் எட்டுபேர் சேர்க்கப்பட்டனர். தொழிற்சாலையிலும் இதே நிலைதான். தொழிலாளர்களுக்குத் தெரிந்த மரமேறி தேங்காய் பறித்தவர்களும், விறகு வெட்டிப்பிழைத்தவர்களும் மலைகளில் சுப்பவைசர்களாக நியமனம் பெற்றனர்.

ஒரு தோட்டத்தில் பயிரிடப்பட்ட விஸ்தீரணத்தை வைத்தே தொழிலாளர்களும் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆனால், அரசியல்வாதிகளால் அந்த முறை தலைகீழானது. முடிவு? அந்த உன்னதமான தோட்டம் இன்று காடாகி வேறொரு தோட்டத்தின் ஒரு பிரிவாகிவிட்டது. அங்கிருந்த தேயிலைத்தொழிற்சாலை உடைத்து அகற்றப்பட்டுவிட்டது. தமிழ் தொழிலாளர்கள் ஆதரவற்று வாழ்கின்றனர்.

இதுமட்டுமா? ஆங்கிலேயரின் பங்களாக்களில் நுழைந்த கறுப்பு துரைமார் தாங்கள் கனவிலும் பார்த்திராதபடி தளபாடங்களைக்காணலாயினர். விலையுயரந்த தளபாடங்கள் இரவோடிரவாக அவர் களது சொந்த வீடுகளுக்கு மாற்றப்பட் டன. மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள். ஆனால், கால காலமாக அந்த தோட்டத்துக்காக உழைத்து, உயிர்விட்ட இந்திய வம்சாவளி தமிழ்த்தொழிலாளர்களும் அவர்க ளது வாரிசுகளும் இன்று வேலையின்றி அவதி ப்படுகின்றனர். தோட்டங்கள் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறுவர் பராம ரிப்பு நிலையத்தில் கூட மொழி தெரியாத பெண்கள் நியமிக்கப்படுகின்றனர்.

எம்மவர்கள் விரக்தியினால் நகரங்களை நோக்கிப்படையெடுப்பதும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதும் அவர்களது பிழையல்ல. தோட்டத்தை சீர ழித்த வர்கள்தான் காரணம். ஒவ்வொரு தோட்டமும் மவுண்ட் வேர்ணன் தோட் டமாக மாற்றப்பட்டால் மாத்திரமே எம் மில் ஏராளமான தனலட்சுமிமார்களை உரு வாக்கமுடியும்.
ஜே. அந்தனி

 நன்றி - வீரகேசரி 29.06.2013
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates