மலையக கலை பேரவை ஏற்பாட்டில் நாட்டியச்சாரிய மீரா எஸ். ஹரிஸ் எழுதிய இலங்கை – இந்திய வம்சாவளி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் தொடர்பான நூல் வெளியீடும், காமன் கூத்து நிகழ்வும் இன்று (29.06.2014) மாலை கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூல் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை பேராசிரியர் சி. மௌனகுருவும் (கிழக்கு பல்கலைக்கழகம்) கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வுகள் யாவும் ஓய்வு நிலை பேராசிரியர் (பேராதனை பல்கலைக்கழகம்) துரை மனோகரன் தலைமையில் நடைபெறும்.
மலையக கூத்துக்கள் எழுத்துப் பிரதியின்றி வழி வழியாகத் தொடர்ந்து வரும் கலைகளாகும். இக்கூத்துகள் தென்னிந்தியாவிலிருந்து இந்த நாட்டுப் பெருந்தோட்டங்களுக்கு வருகை தந்த தமிழ் மக்களின் மூலமே கொண்டு வரப்பட்டன. சிந்தனைப் பிரதியாக அதற்குரிய லயத்துடன் ஆட்டம் பாட்டம் இசை உரையாடல் ஆகியவற்றின் கோர்வையாக பாரம்பரியமாக ஆடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு போன்ற வடகிழக்குப் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் கூத்துக்கள் ஆடப்படுகின்றன. மலையகத்தில் பொதுவாக காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து போன்றவை ஆடப்படுகின்றன.
150 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைப் பெருந்தோட்ட ங்களுக்கு வேலைக்காக வந்த மக்களுள் பெரும்பான்மையினர் இந்து மதத்தினராக இருந்தனர். அம் மக்கள் தமது பாரம்பரிய நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சடங்கு முறைகளையும் செழுமை மிக்க கலைச் செல்வங்களையும் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தினர். அத்துடன் அவற்றைத் தொடர்ந்து பயின்றும் வருகின்றனர். மலையக சமூக அமைப்பிலே இக்கூத்துக்கள் குறிப்பிடத்தக்க சமூக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன.
இக்கூத்துக்கள் மரபைத் தழுவி குறிப்பிட்ட காலப் பகுதியில் சீராக ஆடப்படுகின்றன. காமன் கூத்து மாசி மாதத்து அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளிலிருந்து ஆரம்பமாகின்றது. அர்ச்சுனன் தபசு மார்கழி மாதத்திலும் சில பகுதிகளில் தை மாதத்திலும் நடைபெறுகின்றது. பொன்னர்சங்கர் கூத்து மாரியம்மன் திருவிழாவின் போது சிறப்பாக நடத்தப்படுகின்றது. நடனங்களும் இந்த ஆட்டங்களும் திருவிழாவின் போதும் வைபவங்களின் போதும் சிறப்பாக நடைபெறும். இவற்றிற்கான களம் பெரும்பாலும் தோட்டமாகவும் பிற்காலத்தில் தோட்டங்கள் சிதைந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களாகவுமே அமைந்தன. ஒரு கூத்து ஒரு மேடையைக் கொண்டு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை நடப்பது போல் அல்லது தோட்டத்தையுமே பின்புலமாக கொண்டு ஒரு ஆலயக் குடிலையோ அல்லது திறந்தவெளிப் பொட்டலிலோ களமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்றுவரை தமது தமிழ் பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாத்தும் வளர்த்தும் வருகின்றனர். மலையக மக்களின் பாரம்பரியக் கலைகளான தப்பு, உடுக்கு, உறுமி, கரகம், காவடி, கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் இவற்றோடு காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர்சங்கர், லவன்குசா, காட்டேரியம்மன், கெங்கைமாரியம்மன் கதை, கட்டபொம்மன் கதை, நல்லதங்காள் கதை, பவளக்கொடி என்பன இலங்கையில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பாடப்பட்டும் ஆடப்பட்டு வருகின்றன.
காலவோட்டத்தில் இம்மூன்று கூத்துக்களும் பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து கொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே ஆலயங்களில் புராண வாசிப்பு கதைப்படிப்பு பட்டாபிஷேகம் என்பவற்றைக் குறைத்து தாம் தோட்டத்திற்கு வெளியே உள்ள ஆலயங்களில் காண்கின்ற பூசை முறைகளைப் பின்பற்றி நடக்கும் போது சடங்குகளும் கலைகளும் மாற்றமடைய இக்கூத்துக்கள் முன்பு பெற்றிருந்த முக்கியத்துவத்தினை இழந்து விட்டன.
இன்று இப்பாரம்பரிய கிராமிய கலைகளே எம் மக்களை ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபிப்பதற்கான அடையாளமாக கருதப்படுவதால் இவற்றை அழிவு நிலையில் இருந்து பாதுகாப்பது அவசியமானதாகக் கொள்ளப்படுகின்றது. இன்று எம்மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர்சங்கர் என்பன சிறப்பாக ஆடப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. 1980களின் பின்னர் மலையக மக்களிடத்தில் ஏற்பட்ட கல்வித்துறை அபிவிருத்தி காரணமாக பாடசாலை மட்டத்திலும் கலாசார விழாக்களிலும் இக்கூத்துக்கள் மேடையேற்றப்பட்டபோதும் மக்களிடத்தில் மீண்டும் அங்கீகாரம் கிடைக்கத்தொடங்கியது.
இவற்றில் ஒரு வடிவமான காமன்கூத்தை 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக மக்கள் கலையரங்கத்தினர் அரங்கேற்றினர். ஆனால் அவற்றை சிறப்பாகப் பயில்வதற்கும் அவை பற்றிய ஆய்வுகளையும் செய்து கொள்வதற்கும் வழியேற்படவில்லை.
இம்மக்கள் மலையக மக்களின் கலை மரபை பேணி பாதுகாத்து பயில்நிலை தரத்திற்கு உயர்த்திச் செல்ல வழிகிடைக்கும் போதே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாப்பதோடு எம்மக்களின் கலைகளுக்கு ஒரு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு தமிழக மக்களும் உலகம் முழுவதும் செறிந்து வாழும் இந்திய தமிழர்களும் கைகொடுப்பதன் மூலமே எமது இன அடையாளத்தை இலங்கையில் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும் மலையக மக்களது தனிச் சொத்துக்களான இக்கூத்துக்கள் பேணி ப்பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் கூத்துக்களை தேடுவாரற்ற நிலை ஏற்படலாம். எனவே அவற்றை மக்கள் மத்தியில் அரங்கேற்றும் முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் முன்வர வேண்டும்.
இலங்கையில் மலையகப் பகுதிகளில் ஆடப்படுகின்ற இக்கூத்துக்கள் இன்றுவரை கையெழுத்துப் பிரதியாகவே மக்களிடையே காணப்படுகின்றது. சில பகுதிகளில் இது இன்னமும் வாய்மொழியாகவே பயிலப் பட்டு வருகின்றது. எனவே பல காரணங்க ளுக்காக இக்கூத்தினை ஆவணப் படுத்துவது அவசியமாகும்.
நன்றி - வீரகேசரி 29.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...