Headlines News :
முகப்பு » » அரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட முதலாவது தோட்டப்பாடசாலை - பானா. தங்கம்

அரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட முதலாவது தோட்டப்பாடசாலை - பானா. தங்கம்


மலையக பெருந்தோட்ட மாணவர்கள் தேசிய ரீதியில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1977 மற்றும் 1990களில் தோட்டப் பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகள் 1984ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பாடசாலைகளாக இனங்காணப்பட்ட 833 பாடசாலைகள், 1986ஆம் ஆண்டு முதல் சுவீடன் நாட்டின் SIDA செயற்றிட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்தோடு நுவரெலியா கல்வி வலயத்தில் கொட்டகலை பிரதேசத்தில் ஜெர்மன் நாட்டின் GTZ நிறுவனத்தின் மூலம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன.

மத்திய மாகாணத்தில் 427 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குத் தேவையான கட்டிடங்கள், தளபாடங்கள் வழங்கப்பட்டது போல், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளில் அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், டிக்கோயா புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் மஸ்கெலியா நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயம், லக்கம் தமிழ் மகா வித்தியாலயம், சாமிமலை கவரவல தமிழ் மகா வித்தியாலயம், பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம், டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றோடு அருகில் இருந்த பல பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு காலப்போக்கில் அவை தனியான நிர்வாகத்துக்கு மாற்றம் பெறலாயின.

இப்பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் சில பாடசாலைகள் “ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில்” உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

அட்டன் கலவி வலயத்தைச் சேர்ந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் 1977.06.14 இல் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதா கும். அந்த நேரத்தில் சி.கனகமூர்த்தி என்ப வர் அதிபராக இருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் சிங்கள மொழியில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய காரணத்தால் அப்போது அமைச்சராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அனுசரணையோடு 1978 இல் 50 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றைப் பெற்றிருந்தார். பெருந்தோட்டப் பாடசாலை ஒன்றுக்கு முதன் முதலாக அரசாங்கத்தின் நிதியுதவியோடு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்துக்கு “சௌமியமூர்த்தி மண்டபம்” என்று பெயர் சூட்டப்பட்டது. தரம் ஐந்து வரை இருந்த நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இதே ஆண்டில் 6 ஆந் தரம் ஆரம்பிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டதுடன், அரசாங்கத்தால் பாடசாலை சுவீகரிக்கப்பட்ட தினம் “கல்லூரி தினம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து அதிபர் கனகமூர்த்தி மேற்கொண்ட முயற்சியின் பயனாக அமைச்சர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க தொண்டமான் மண்டபம், கோதையம்மாள் மண்டபம் என கட்டிடங்கள் அதிகரித்திருந்தன. எனினும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால் தொண்டர் ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி இடம்பெறலாயின.

அதேபோல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முதலாக மாணவர்கள் தோற்றி 6 பேர் சித்தியடைந்திருந்தார்கள். பின்னர் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டி ருந்தது.

கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்
முன்னாள் அதிபர் சி.கனகமூர்த்தி கால த்தில் பிரகடனப்படுத்தப்பட்ட “கல்லூரி தினம்” வசதிகள் எதுவும் இல்லாத காலத் தில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை, பத்து வருடத்துக்கு ஒருமுறை என்று அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. எனினும், இன்றைய அதிபர் டி.நாகராஜ் தலைமையில் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து “கல்லூரி தினத்துடன் கூடிய பரிசளிப்பு விழா” நடத்தப்பட்டு வருகின்றது.

மேற்படி நிகழ்வில் இந்த வித்தியாலயத் தில் கல்வி கற்று பட்டதாரிகளாக உயர்ந்த நிலையில் உள்ளவர்களில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றார். அத்தோடு, இவ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள இருவரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்து, அவர்க ளையும் அழைத்து கௌரவிப்பதற்கு பாடசாலை நிர்வாகத்தோடு பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. விழாவின்போது மேலும், ஐந்தாம்தரப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ..த.சாதாரண தரம், உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்களும், சகல வகுப்புகளிலும் பாடரீதியாக திறமை காட்டுகின்ற மாணவர்களும், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மாணவர்களும் கௌரவம் பெற்று வருகின்றார்கள்.

“தேசம் நம்மை திரும்பிப் பார்க்கச் செய்வோம்”
கடந்த 14 ஆந் திகதி இடம்பெற்ற “தேசம் நம்மை திரும்பிப் பார்க்கச் செய்வோம்” என்ற தொனிப்பொருளிலான 37அவது ஆண்டு கல்லூரி தினத்துடன் கூடிய பரிசளிப்பு விழாவின் போது, அட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பி. இராஜசேகரம் பிரதம அதிதியாகவும், இவ். வித்தியாலயத்தின் பழைய மாணவரும், பொருளியல் துறையில் முதுகலைமாணி பட்டம் பெற்று, தற்போது M.Phil கற்கை நெறியை மேற்கொண்டு வரும் சமுர்த்தி அதிகார சபையின் செயற்றிட்ட முகாமையாளரும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளருமான எம். வின்சன் ஜெயப்பிரகாஷ் விசேட விருந்தினராகவும், ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி எம்.அமுதமலர், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி எஸ்.ஜெயலெட்சுமி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மாணவர்கள் 100 பேர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.
கல்லூரியின் வளர்ச்சியும் சாதனைகளும் தரம் 1 – 13 வரை வகுப்புகளோடு 1035 மாணவர்களையும், அதிபர், பிரதி அதிபர்களோடு 59 ஆசிரியர்களையும், 33 சமாந்தர வகுப்புகளையும் தன்னகத்தே கொண்டு “ஆயிரம் பாடசாலைகளில்” ஒன்றாக இய ங்கி வரும் நேர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் உயர் கல்விக்காக இலங்கை – இந்திய சமுதாயப் பேரவையின் சார்பாக டாக்டர் எம்.ராமசுப்பு, சுயன்சேவா சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இரா. இராதாகிருஸ்ணன்ஜி ஆகியோர் உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

மலையக அரசியல் தலைமைகளின் சிபாரிசு காரணமாக அட்டன் கல்வி வலயத்தில் தொழிநுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட ஒரேயொரு பாடசாலையாகவும் திகழ்கின்றது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாட சாலை வரலாற்றில் முதன் முறையாக 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு, எம். வாகினி என்ற மாணவி 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார். மேலும், 47 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 60% மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதோடு, எஸ். கனிஷ்கா என்ற மாணவி 5A, 2B, 2C சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் எம். டயானா என்ற மாணவி 3 ‘A’ சித்திகளோடு முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். வணிக பிரிவில் டி. விநாயகமூர்த்தி சித்தியடைந்துள்ளார். மேலும் உயர் தரப் பரீட்சையில் பொது தகவல் தொழில் நுட்பப் பாடத்தில் 100% சித்திகளும் பெறப்பட்டுள்ளன.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு
இந்த ஆண்டு நடைபெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 31 புள்ளிக ளைப் பெற்றுள்ளதோடு, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான Volley Ball போட்டியில் முதன்முறையாக “செம்பியன்” பட்டத்தையும், எல்லே போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. மாகாண மட்ட Volley Ball போட்டியில் மூன்றாவது இட த்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

“தேசம் நம்மை திரும்பிப் பார்க்கச் செய் வோம்” என்ற தொனிப்பொருளுக்கு வலு சேர்க்கும் வகையில் இம்முறை NATIONAL YOUTH போட்டியில் “கரம்” விளையாட்டில் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்களில் பங்குபற்றியுள்ளதோடு, 10 ஆயிரம் மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 1500 மீற்றர், 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும், நடைப் போட்டியிலும் “NORWOOD TMV YOUTH” என்ற பெயரில் பங்குபற்றி வலய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு 8 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் கள். மேலும், இந்த ஆண்டில் மெய்வல்லு நர் தடகளப் போட்டியில் பங்கு பற்றியும் மாணவர்கள் 25 பேர் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளார்கள்.

இளம் கண்டுபிடிப்பாளர்கள்
இவ் வித்தியாலயத்தில் JUNIOR INVEN TOR – 2013க்கான தேசிய தெரிவில் முதல் 10 இடத்துக்குள் சி.வினோலி ரூத் என்ற மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, SRI LANKA INVENTORS COMMISSION மூலம் 2013 இன் வெற்றியாளர்களாக ஆர். நிரோஜன், ஜீ. லக்ஷான், வீ. தான், பி. கிஷோ காந்த், ஜீ. டிலக்சன் ஆகிய மாணவர்கள் ஆசிரியை செல்வி எம்.ஸீனத் வழிகாட்டலுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கணித, விஞ்ஞான தினம்
மலையக மாணவர்கள் கணித பாடத்தை விரும்பிக் கற்கும் வகையில் நுணுக்கத்தோடும், ஆர்வத்தோடும் கற்பித்து, நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக் காரணமாக இருந்த ஆசிரியர் அமரர் கே. ஜீவராஜன் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது மறைவுக்குப் பிறகு ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கணித, விஞ்ஞான தினம் ஜூன் மாதம் 8 ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு, மாணவர்கள் மத்தியில் கணித நுண்ணறிவுப் போட்டியும் நடத்தப்பட்டு வருகின்றது. பாடசாலை மட்டத்தில், கோட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட நுண்ணறிவுப் போட்டி இம்முறை வலய மட்டத்தில் க.பொ.த. சாதாரண வகுப்புகளைக் கொண்ட 45 பாடசாலைகள் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நன்றி - வீரகேசரி
Share this post :

+ comments + 2 comments

எமது பாடசாலை என்றும் உயர்ந்தே செல்லும். எல்லோரையும் உயர்த்தியே செல்லும். Proud of my school....

எமது பாடசாலை என்றும் உயர்ந்தே செல்லும். எல்லோரையும் உயர்த்தியே செல்லும். Proud of my school....

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates