Headlines News :
முகப்பு » » நாடகக் கலைஞர் மாத்தளை கார்த்திகேசு - தெளிவத்தை ஜோசப்

நாடகக் கலைஞர் மாத்தளை கார்த்திகேசு - தெளிவத்தை ஜோசப்


மலையக மக்கள் என்று இன்று அறியப்படும் அல்லது அடையாளப்படுத்தப்படும்  இலங்கைப் பெருந்தோட்ட மக்களின் கண்டிச் சீமைக்கான புலப்பெயர்வு ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் அவர்களால் இலங்கையின் மலையப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பி; தேயிலைத் தோட்டங்களாலும் ஏற்பட்டது என்பது வரலாறு.

தென்னிந்திய கிராமங்களில் இருந்து தோணிகள் மூலம் கடல் தாண்டிய இவர்கள் மன்னாரில் இறக்கப்பட்டு காட்டு வழியாக நடத்திக்கொண்டு செல்லப்பட்டு கூட்டமாக வைக்கப்பட்ட இடம் மாத்தளை. அங்கிருந்தே இவர்கள் கட்டம் கட்டமாக மலையகத்தின் மற்ற மற்றப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பதும் வரலாறு.

மலையகத்தின் வடக்கு வாசல் என்னும் வரலாற்றுப்பெருமை கொண்ட மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கருப்பையாப்பிள்ளை கார்த்திகேசு. கலை உலகில் பிறந்த மண்ணைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டதால் மாத்தளை கார்த்திகேசுவானவர்.

மாத்தளை விஜய கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். 50களில் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவனாக இருந்த நாட்களிலேயே கல்லூரியின் உப அதிபராக இருந்த திரு.செல்லத்துரை அவர்கள் மேடையேற்றிய ‘நலமே புரியின் நலமே விளையும்’ எனும் நாடகத்திலும், மாத்தளை புனித.தோமையார் கல்லூரி ஆசிரியர் ராஜரட்ணம் அவர்களின் ‘அன்பின் வெற்றி’ நாடகத்திலும் அவருடைய அடுத்த மேடை நாடகமான ‘இதுதான் முடிவு’ நாடகத்திலும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் நாடகத்துறைக்குள் உள்வாங்கப்பட்டவர் மாத்தளை கார்த்திகெசு.

பாடசாலை மட்ட நாடகப்போட்டிக்கு நாடகம் தயாரித்து மேடையேற்றி  பரிசு வாங்கும் பக்குவமும் இவருக்கு கல்லூரி நாட்களிலேயே கிடைத்திருக்கிறது.

நடிப்பிற்கான பாராட்டுதல்களும் (அன்பின் வெற்றி) மேடைத் தயாரிப்புக்கான பரிசும் (பணமா பாசமா) கொழும்பிற்கான தொழில் நகர்வின் பின்னும் இவரை நாடகத்துறையில் இருந்து விட மறுத்தன.

கவின் கலை மன்றம் 1956 ல் கொழும்பு 3 கொள்ளுப்பிட்டியில் அமரர் ஜே.பி. றொபட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அமரர்களான ஜோன் சாமிதாசன், எஸ்.ஈ.செல்லையா, எம்.டி.மோசஸ் ஆகிய கலைஞர்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட அரங்கியல் விருத்திக்கான அமைப்பு இது.

கொழும்பு வந்த நாடகப்பிரியரான மாத்தளை கார்த்திகேசு கவின் கலை மன்றத்தில இணைகின்றார்.

அமரர் ஜே.பி.ரொபட்டும் மாத்தளை கார்த்திகேசுவும் இணைபிரியா இரட்டையர்களாக கொழும்பின் நாடக உலகில் உலா வந்தவர்கள். கவின் கலை மன்றத் தயாரிப்பான ‘பலே புரடியூசர்’ , ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்களில் நடிக்க வைத்து கொழும்பு வாழ் நாடக ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்திய பெருமை அமரர் ஜே.பி.ரொபட்டைச் சார்ந்ததாகும்.

1960-ம் ஆண்டின் தேசிய கலைவிழா ஹட்டனில் நடந்தபோது கவிஞர் நவாலியூர் சொக்கநாதன் அவர்கள் எழுதித் தயாரித்து மேடையேற்றிய ‘சிங்ககிரிச்செல்வி’ என்னும் கவிதை நாடகம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. ஹட்டன், மாத்தளை அரங்குகளில் மேடையேறிய இக்கவிதை நாடகத்தை கொழும்பிலும் பல தடவை மேடை ஏற்றியவர் மாத்தளை கார்த்திகேசு அவர்கள்.

1971ல் இவர் எழுதிய ‘தீர்ப்பு’ என்னும் நாடகம் அந்தனி ஜீவாவின் இயக்கத்தில் பிரபல அரங்கியல் நெறியாளர் சுஹைர் ஹமீட் அவர்களால் மேடையேற்றப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதித் தயாரித்துள்ளார். இவருடைய நாடகப் பிரதிகள் கொழும்பு பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், கொழும்பு ரோயல்  கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித அன்னம்மாள் பாடசாலை போன்ற பிரபல கல்லூரிகளின் தமிழ் விழாக்களில் மாணவர்களால் தயாரித்து மேடையேற்றப்பட்டுள்ளன. ஒரு சில நாடகங்கள் இவருடைய மேற்பார்வையுடனும் அரங்கேறியுள்ளன.

இவருக்கு ஒரு ஏகோபித்த புகழையும், அரங்கியல் பிரபலத்தையும் பெற்றுக்கொடுத்த நாடகம் ‘காலங்கள் அழுவதில்லை’.

1972ல் ஜே.பி.ரொபட்டின் நெறியாள்கையுடன் கவின் கலை மன்றம் மேடையேற்றிய நாடகம் மாத்தளை கார்த்திகேசுவின் ‘காலங்கள் அழுவதில்லை’.

மலரன்பனின் சிறுகதையான ‘உறவுக’ளைத் தழுவி எழுதப்பட்ட இந்த நாடகமே, மலையக மக்களின் உண்மையான வாழ்வை மிகவும் யதார்த்தபூர்வமாக கொழும்பு மேடைகளில் காட்டிய முதல் நாடகமாகும்.

அச்சு ஊடகங்களும் இலங்கை வானொலி போன்ற மின் ஊடகங்களும் இந்த நாடகம் பற்றிப் பேசின, எழுதின. கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு போன்ற பேராசியர்களும் கே.எஸ்.சிவகுமாரன் போன்ற திறனாய்வாரள்களும் இந்த நாடகம் பற்றிப் பேசினர்.

இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் நாடகக் குழு 1972ம் ஆண்டின் சிறந்த நாடகத்துக்கான கௌரவத்தினை மாத்தளை கார்த்திகேசுவின் ‘காலங்கள் அழுவதில்லை’ நாடகத்துக்கு வழங்கியது.

இலங்கை மத்திய வங்கி 1974ல் ஒரு நாடக விழா நடாத்தியது. அந்த விழாவில் ‘காலங்கள் அழுவதில்லை’  நாடகத்துக்கு சிறந்த நாடகப்பிரதி – சிறந்த நாடகம்> சிறந்த நடிப்பு ஆகிய மூன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளார் முன்னிலையில் இரண்டு அரங்குகளில் மேடையேற்றப்பட்டு பெருமை கொண்ட நாடகம் இது.

இவருடைய நாடகங்கள் தேசிய விழாக்களில் தொடர்ச்சியாகப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டன.

1972 – காலங்கள் அழுவதில்லை

1973 – (நாடக விழா நடைபெறவில்லை)

1974 – களங்கம்

1975 – போராட்டம்

1976 – ஒரு சக்கரம் சுழல்கிறது.

மேடை நாடகத்துறையில் இருந்து தொலைக்காட்சிக்கும் அதைத் தொடர்ந்து திரைப்படத்துறைக்கும் காலடி வைத்து சுவடு பதித்தவர் இவர்.

‘குடும்பம் ஒரு கலைக்கதம்பம்’ (ஒரு அங்கம்) ‘காலங்கள்’ (ஏழு அங்கங்கள்)  ஆகியவை இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட இவரது தொலைக்காட்;சி நாடகங்களாகும். 

இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் நடத்திய திரைக்கதை வசனம் எழுதும் போட்டியில் பி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு முதல் பரிசும், மாத்தளை கார்;த்திகேசு அவர்களுக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தன.

‘சுட்டும் சுடர்’ என்பது மாத்தளை கார்த்திகேசுவின் பரிசுபெற்ற திரைப்பிரதி.
மாத்தளை கார்திகேசு அவர்களின் திரைக்கதை, வசனம், தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ‘அவள் ஒரு ஜீவநதி’. படத்தின் இயக்குனர் ஜே.பி.ரொபட் அவர்கள். 

டீன் குமார், விஜயராஜா, செந்தூரன், மாத்தளை கார்த்திகேசு, ஏகாம்பரம், சிதம்பரம், பரினாலை, அனுஸ்கா, போன்றவர்களுடன் கே.எஸ்.பாலச்சந்திரனும் நடித்துள்ளார். கே.எஸ்.பாலச்சந்திரனுக்கு சினிமாவில் பெயர் கொடுத்த திரைப்படம் ‘வாடைக்காற்று’.

எண்பதுகளில் திரைக்கு வந்த ‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படம் மாத்தளை கார்த்திகேசு அவர்களுக்கு நிறையவே அனுபவங்களை மட்டும் கொடுத்துச் சென்றது. 

நாடகத்தை ஒரு ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்ட கார்த்திகேசு அவர்கள் அரங்கியல் செயற்பாடுகளுக்கு அப்பாலும் இலக்கியத் துறை ஈடுபாட்டாளராகவும், செயற்பாட்டாளராகவும் திகழ்ந்துள்ளார்.

மாத்தளையில் மாணவர் மன்றம், இளைஞர் மன்றம், வள்ளுவர் மன்றம் என்று அமைத்துச் செயற்பட்டவர். மாத்தளை சைவ மகாசபையின் முக்கியஸ்தர்களில் ஒருவர். 

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். தற்போது மன்றத்தின் காப்பாளர்களுள் ஒருவர்.

தமிழ் கதைஞர் வட்டத்தின் (தகவம்) தலைவராகப் பணி புரிகின்றவர்.

‘வழிபிறந்தது’ என்ற ஒரு மலையக நாவல் எழுதி வெளியிட்டிருக்கிறார் (1992)

சிறுகதை, இலக்கிய கட்டுரைகளும் எழுதுகின்றார்.

இவை அனைத்துக்கும் மேலாக ஒரு அரங்கியல் கலைஞர் என்பதற்கு அடுத்ததாக தன்னுடைய ‘குறிஞ்சி’ப் பதிப்பகம் மூலமாக 16 இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றார் என்பது முக்கியமானது. 

கலாபூஷணம் உள்ளிட்ட தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ள திரு. மாத்தளை கார்த்திகேசு அவர்கள் ஈழத்து அரங்கியல் துறையின் மிக முக்கியமான ஒருவராகத் திகழ்பவர்.

ஈழத்துத் தமிழ் அரங்கியல் வரலாறு மாத்தளை கார்த்திகேசுவை ஒதுக்கிவிட்டு எழுதப்பட முடியாததது என்பது அவருடைய அரங்கியல் ஆளுமையை உறுதிப்படுத்துகின்றது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates