Headlines News :
முகப்பு » » மலையகத்தில் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய அடையாளம் மே தினம்!

மலையகத்தில் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய அடையாளம் மே தினம்!


1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆக தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் தினமாக சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. இலங்கையை பொருத்தவரை இடதுசாரி அமைப்புகள் மாத்திரமே தொழிலாளர் தினத்தை தியாக தினமாக அனுஸ்டிக்கின்றனர். மற்றைய குழுக்கள் தொழிலாளர் தினத்தை தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். 

முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடித்த தொழிலாளர் போராட்டம் இன்று அவர்களுக்கு அரசியல் லாபம் தேடும் உபயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் குடிபோதையில் கும்மாளம் அடிக்கும் இழிநிலைகளும் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. உணர்வின்பால் மே தின அனுஸ்டிப்பில் மக்கள் பங்கேற்பது மிகவும் குறைந்து விட்டது. இலங்கையின் மலையகத்தின் இதனை நன்கு அவதானிக்க முடிகிறது. தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய நாளில் முதலாளி வர்க்கத்திற்கு மாலை போட்டு அழகுபார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 
இது காலம் காலமாக தொடர்கிறது. எனினும் ஆங்காங்கே உணர்வுபூர்வமாக மே தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

லிந்துலை - ஹென்போல்ட் உணர்வுள்ள தொழிலாளர் தின அனுஸ்டிப்பு

அந்த வகையில் இம்முறை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவுபடுத்தியும் உரிமை குரல் எழுப்பியும் சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அடையாளம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தொழிலாளர் தின நிகழ்விற்கு மலையக சமூக ஆய்வு மையம் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. லிந்துலை - ஹென்போல்ட் தோட்ட மைதானத்தில் மே தின அனுஸ்டிப்பு இடம்பெற்றது. இருநூறு வருட காலமாக இலங்கைக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து போன மலையக தொழிலாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் இந்த தொழிலாளர் தினத்தில் தங்களுக்கென சொந்த தனி வீடு மற்றும் காணி உரிமையை கோரி கோஷமிட்டவாறு பேரணி சென்றனர்.

மலையக தேசிய பொங்கல் விழாவின் போது ஹென்போல்ட் தோட்டத்தில் நாட்டப்பட்ட மலையகத்திற்காக உயிர் தியாகம் செய்த முன்னோரை நினைவுபடுத்தும் 'நினைவுக்கல்' இடத்திற்கு பேரணி சென்ற தொழிலாளர்கள் அங்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உலக தொழிலாளர் தினத்தின் அர்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டினர்.
மேலும் மலையகத்திலும் நாட்டிலும் தலைவிரித்தாடும் அடிமை தனத்தை சுட்டெறிப்போம் என்ற கோஷத்துடன் பொது மக்களால் தீ பந்தம் ஒன்றும் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின் ஹென்போல்ட் தோட்ட ஆலயத்தில் பூஜை வழிபாடு இடம்பெற்று தொழிலாளர்களின் தொழில் உபகரணங்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மே தின உரிமை அறைகூவலாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சர்வதேச தொழிலாளர் தின உரிமை கோரிக்கைகள் - 2014 
01.இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலுக்காக திகழும் மலையக தோட்டத் 
 தொழிலாளர்களுக்கு சொந்த தனி வீடு கட்டிக் கொடுக்கப்படுவதோடு காணியும் வழங்கப்பட  வேண்டும். 

02.மலையக மக்களிடையே வறுமையையும் கலாசார சீரழிவையும் நோய்களையும் ஏற்படுத்தும் மது, போதைப் பொருள் மலையகத்தில் இருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும். இவற்றை பயன்படுத்துவதில் இருந்து மலையக மக்களும் விடுபட வேண்டும். 

03.மலையகத்தில் இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண் துஸ்பிரயோகம் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும்.

04.மலையகத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படுதல் நிறுத்தப்பட்டு மலையக மக்களின் சமய, கலை, காலாசார, விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

05.மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குளவி தாக்குதல் போன்ற தொழில் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதோடு இவ்வாறான ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் தொழிலாளர்களுக்கு நட்டஈடு காப்புறுதி வழங்க தோட்ட நிருவாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06.மலையகத்தில் இடம்பெற்று வரும் சந்தேகத்திற்கு இடமான கட்டாயக் கருத்தடை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

07.மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக  அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும். 

08.மலையக மக்கள் இலங்கை திருநாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு சமவுரிமை அளிக்கப்பட வேண்டும். 

09.அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா  அடிப்படைச் சம்பளமாகப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சலுகைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். 

10.படித்த மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு  ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். படித்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு அரச வேலை வாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மலையகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 

11.மலையகத்தில் படித்த சமூகம் அரசியல்வாதிகள் பின் சென்று அவர்களில் தங்கியிருக்காமல்; தங்களுக்கான சுய அரசியல் சமூக கட்டமைப்பை நிறுவ முன்வந்து எதிர்கால சமூகத்தின் நன்மை கருதி சமூக சிந்தனை மாற்றத்திற்காக உழைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

12.மலையகத்தில் கல்வித்துறை முன்னேற்றம் ஏற்பட மலையக மக்களுக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். 

13.ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலையக மக்கள் பயன்படுத்தும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையை உடனடியாக புனரமைப்பு செய்து அதில் காணப்படும் நிருவாக மற்றும் அடிப்படை வசதிகள் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும். 

14.இலங்கை திருநாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் அதில் மலையக மக்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும். 

15.ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மலையக மக்களுக்கென்ற தனி அமைச்சு மீண்டு;ம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இத்தொழிலாளர் தினத்திற்கு தலைமை தாங்கிய மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்பணி மா.சத்திவேல் கூறுகையில் மே தின நிகழ்வோடு நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். இது வரலாற்றின் நிகழ்வு மட்டுமல்ல வாழ்வின் நிகழ்வுமாகும். எமது முன்னோர்கள் உழைப்பிற்காக இரத்தம் சிந்தியுள்ளனர். தொழில் உரிமைகளுக்காக இரத்தம் சிந்தியுள்ளனர். மே தினம் என்பது இரத்தம் தோய்ந்த இரு வரலாற்றின் நிகழ்வாக இருக்கிறது. அந்த தினத்தில் புது வரலாற்றின் உருவாக்கமாக மக்கள் நாம் இங்கு ஒன்றுகூடி இருக்கிறோம்.

தொழிலாளர்களான உழகை;கும் வர்க்கத்தினர் தமது உரிமைகளை ஒரு கொடையாக பெற்றுக் கொண்டதாக சரித்திரம் எழுதப்படவில்லை. 

பெற்றுக் கொண்ட உரிமைகள் யாவும் உயிர் தியாகத்தின் பலனாகும். இவ்வாறு உயிர் தியாகம் செய்தவர்களை மே தினத்தில் நினைவு கூருவதன் மூலமே எமது எதிர்கால வாழ்வை எம்மால் நிச்சயப்படுத்த முடியும். மலையக மண்ணில் மலையக தேசத்தில் நாம் சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டு வருகிறோம். தொழில் நிலத்தில் எண்ணிக்கையிலும் நாம் சிறுபான்மையாக ஆக்கப்படுகிறோம். தொழில் அற்றவர்களாக வெளியேற்றப்படுகிறோம். 

இன்னுமொரு வகையில் எமது பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நாம் இன்று பாதுகாப்போடு விடுதலை பெற வேண்டும் என்றால் எமக்கென்று நாம் வாழும் பிரதேசத்திலேயே சொந்த தனி வீடு, காணி இருக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைக்கிறோம். 

ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் மலையகத்திற்கு என்று தனி அமைச்சு இருந்தது. அந்த அமைச்சு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைச்சை மீண்டும் ஏற்படுத்துவதற்கான தொழிலாளர் சக்தியாக நாம் எழுந்து நிற்போம் அப்போது தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எமது பின்னால் வருவார்கள். 

தொழிலாளர் தினத்தை ஏற்பாடு செய்திருந்த அடையாளம் அமைப்பின் செயலாளர் பழனி 
விஜயகுமார் கருத்து சர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் உரிமை தினமாகும். தியாகிகளை நினைவுகூரும் தினமாகும். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் மலையகத்தில் தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படுவது தொழிலாளர்கள் மேலும் அடிமைப்படுத்துவதாக அமைகிறது. 

மலையகத்தில் இருந்து சிந்தனை மாற்றத்துடன் படித்து வளரும் புதிய தலைமுறையால் இதனை அனுமதிக்க முடியாது. மலையகத்தில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையக மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். மலையகத்தில் மாற்றம் விரும்பும் இவ்வொரு மலையக மண் பற்றாளனும் இந்த சிந்தனை மாற்றத்திற்காக உழைக்க வேண்டும். அதற்கான களப்பணி ஆற்ற வேண்டியது. அவசியமாகும். அடிமை வாழ்க்கை விலங்கை உடைத்தெறிய ஒவ்வொருவரும் செயற்படத் தொடங்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். இந்த கடமையை பொறுப்பேற்கத் தவறினால் மலையகம் மெல்ல மெல்ல அழியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

தொழிலாளர் தின நிகழ்வை ஏற்பாடு செய்த நாள் முதல் அதனை நிறைவேற்றி முடிக்கும்வரை நானும் எனது அடையாளம் குழுவினரும் சந்தித்த அரசியல், சட்ட நெருக்கடிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் சந்ததியை முதலாளிகள் வர்க்கம் எப்படி அடக்கி ஆள முற்படுகின்றது என்பதை நன்கு உணர்ந்து கொண்டோம். 

தொழிலாளர் தினத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவென தயார் செய்யப்பட்ட வீதி நாடகத்தை அரங்கேற்ற முடியவில்லை. இதற்கு அரசியல் சட்ட அழுத்தங்கள் முழு காரணியாக அமைந்தது. தொழிலாளர்களின் நன்மைக்காக செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் மலையகத்தின் பெரிய தொழிற்சங்கமே நேரடியாகவும் மறைமுகமாகவும் கீழ் மட்டத்தில் இருந்தும் மேல் மட்டத்தில் இருந்தும் அழுத்தங்களை பிரயோகித்தமை மன வருத்தம் அளிப்பதுடன் கண்டனத்திற்குரியது. 

மலையே திரண்டு வந்தாலும் பரவாயில்லை எடுத்த காரியத்தை முடித்தே தீருவோம் என்ற ஹென்போல்ட் தோட்ட மக்களின் அசைக்க முடியாத மன உறுதி, நேர்மை, உண்மை, உணர்வு இந்த தொழிலாளர் தின நிகழ்வை வெற்றிகரமாக செய்து முடிக்க பெரிதும் உறுதுணையாக இருந்தது. எனவே இந்த தொழிலாளர் தின தொழிலாளர்கள் ஆமோதித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாளம் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். 

பழனி விஜயகுமார் - செயலாளர் -அடையாளம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates