Headlines News :
முகப்பு » » எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் - தெளிவத்தை ஜோசப்

எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் - தெளிவத்தை ஜோசப்


கொடைக்கானல் ‘சிராக்’  அமைப்பு வெளியிட்டிருக்கும் நூல் -எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்-. மலையகத்தில் இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டுக்க பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்ட  மலையக மக்கள் மீதான சமூகம் மற்றும் அரசியல் அநீதிகள் பற்றி விரிவாக பேசுகின்ற நூல் இது.

சிராக் என்பது ‘Ceylon Repatriate Association’ என்பதன் சுருக்கம். இலங்கைத் தமிழர்கள் பற்றி பல தரப்பினராலும் பல முனைகளில் இருந்தும் நிறையவும், பலமாகவும் பேசப்படுகின்ற இன்றைய சூழலில், நூல்கள், கட்டுரைகள் என்று வெளிவருகின்ற சூழலில் இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினராகிய இலங்கை மலையகத் தமிழ் மக்களின் உண்மையான நிலை பற்றியும் அவர்கள் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்ததன் பின்னர் அடைந்துள்ள, அனுபவித்துள்ள, வாழ்க்கைத் துயரங்கள் பற்றியும் இதுவரைப் பேசப்படவில்லை, எழுதப்படவில்லை என்கின்ற சூழலில் இந்த நூலின் வரவு மிக முக்கியமானதாகும்.

தங்களால் உருவாக்கப்பட்ட தங்களின் வாழ்விடமான மலையகப் பெருந்தோட்டக் காணிகளில் இருந்து அச்சுருத்தல், துன்புறுத்தல்கள் மூலமாகவும் அர்சியல் யாப்புகள், நிலச்சுவீகரிப்புகள் இந்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் ஒப்பந்தங்கள் மூலமாகவும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த மக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய இந்திய அரசின் புனர்வாழ்வுத் திட்டங்கள் கொள்கைகள் ஆகியவைகள் இந்த மக்களின் வாழ்வாதார நிலைமைகளை கவனத்தில் கொள்ளாத திட்டங்களே ஆகும்.

இந்திய சீன யுத்தத்தால் சீனாவுடனான உறவு பழுதடைந்திருந்த காலம் அது. அர்சியல் ரீதியாகவும் தனது அண்டை நாடான இலங்கையுடன் நட்புடனும் நல்லுறவுடனும் இருக்கவே இந்தியா விரும்பிய நாட்கள் அவை. ஆகவே பிர்ச்சினைக்கு உட்பட்ட மக்களை விடவும் இந்தியாவின் பாதுகாப்பு நோக்கம் கொண்டதாகவே இந்த ஒப்பந்தத்தின் கைச்சாத்திடல் நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை மலையக மக்களின் அரசியல் ரீதியான வளர்ச்சி தங்களது சிங்கள மய அரசியல் கொள்கைகளுக்கு பாதகமாக அமையும் என்ற நோக்கிலும் சிங்கள இனவாத நோக்கிலும் இந்திப்பிரச்சினையை அணுகியுள்ளது. இந்த ஒப்பந்த்தை நிறைவேற்றுவதற்கான திட்டமிட்ட இன வன்மறைகளும் நடத்தப்பட்டு வந்தள்ளன.

இரண்டு நாட்டு அரசுகளும் தத்தமது நலன்களுக்காக பாவிக்கப்பட்டு பலியிடப்பட்ட மக்கள் கூட்டம்தான் பரிதாபத்துக்குரிய இந்தத் தாயகம் திரும்பிய மலையக மக்கள்.

1974 ல் இந்தியா திரும்பியோரில் பெருமளவினர் பல்வேறு காரணங்களினால் இறந்து போயினர். இம்மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர இது ஒரு காரணமாயிற்று. இம்மக்கள் குறித்தும் புனர்வாழ்வு குறித்தும் ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. பெரும்பாலான ஆய்வுகள் இம்மக்களின் வாழ்க்கை நிலவரத்தை ஐரோப்பாவில் உள்ள சமூக சேவை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டி பொருளாதார உதவிகள் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செய்யப்பட்டவையே.

இந்த ‘சிராக்’ அமைப்பு தங்களின் இந்த ஆய்வு மூலம் இந்த மக்களின் பிர்ச்சினைகளை வெறும் பொருளாதார பிர்ச்சினையாகவோ மனிதாபிமானக் கண்ணோட்டத்துக்குள்ளோ நின்று பார்க்காமல் இந்த மக்களின் பிரச்சினை தேசிய இனச்சிக்கலின் ஒரு கூறு என்றும் அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளே இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் என்றும் சம்பந்தப்பட்ட மக்களின் மனித உரிமைகள் மட்டுமல்ல அவர்களின் எதிர்கால வாழ்வு முழுமையும் பாதிப்புக்க உள்ளாகியிருக்கிறது என்றும்: இந்த மக்களுக்கு வெளியே சமூகத்திற்கும் தீங்கு செய்துள்ளது என்றும் இவற்றினூடாக இம்மக்கள் அனபவிக்கின்ற மனோநிலை பாதிப்புகள் பற்றியும் மிக அழுத்தமாகவே பதிவு செய்கிறது இந்த நூல்.

இந்த நூலுக்கான ஆய்வுகளை எண்மர் மேற்கொண்டு சமர்ப்பித்துள்ளனர். இலங்கையில் மலையகத்தில் பிறந்து வளர்ந்து படித்து எழுத்தாளர்களாக, கவிஞர்களாக சமூகப்பணியாளர்களாக மிளிர்ந்து இந்த ஒப்பந்தங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு தமிழகத்தில்  வாழ்கின்றவர்கள், வாழ்ந்தவர்கள்.

-விரல்கள்- என்ற தன்னுடைய நாவலுக்காக  ‘கலைமகள்’ நாவல் போட்டியில் முதற் பரிச பெற்றுள்ள  (2010) சி.பன்னீர் செல்வம், முற்போக்கு கவிஞரும் ‘சென்று வருகிறேன் ஜென்ம புமியே’  கவிதை மூலம் பிரபல்யம் பெற்றவருமான ‘வண்ணச்சிறகு’ அரு.சிவானந்தன் நாவலாசிரியரும் கட்டுரையாசிரியரும் பத்திரிகையாளருமான டி.சிக்கன் ராஜூ. சமூகப்பணியாளரும் இலக்கிய காரருமான பி.எஸ்.நாதன் போன்றவர்களும் அந்த எண்மர் அடங்கிய குழுவில் பங்காற்றியுள்ளார்கள்.

இந்த ஆய்வுக்கு ஆலாசகர்களாக இருவர் பணியாற்றியுள்ளார்கள். ஒருவர் பெங்களு}ர் இந்தியன் சமூக  நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டான்லி லூர்து சாமி. மற்றவர் கொடைக்கானல் ‘சிராக்’ அமைப்பின் நிறுவுனர் எஸ்.செபஸ்டியன். சிரிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 1974ல் தாயகம் திரும்பியவர். 

1984 அம் ஆண்டு வெளிவந்த ஒரு முக்கியமான நூல் எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates