Headlines News :
முகப்பு » » கண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்படமும்: - மல்லியப்புசந்தி திலகர்

கண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்படமும்: - மல்லியப்புசந்தி திலகர்


02-03-2-14 அன்று மாலை கொழும்பு ‘தேசிய கலை இலக்கிய பேரவை’ மண்டபத்தில் ‘இங்கிருந்து’ திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஓராண்டுக்கு முன்னர் திரைப்படக் கூட்டுத்தாபன அரங்கில் ‘இங்கிருந்து’ திiரையிட்டபோது நேத்ரா ‘ஆத்மாவின்’ அழைப்பின் பேரில்  சென்ற எழுத்தாளர்கள் வரிசையில் தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், அல்அஸுமத், லெனின் மதிவானம் போன்றோருடன் நானும் சென்றிருந்தேன். 

இன்றைய கலந்துரையாடலில் கருத்துரை வழங்குவதற்கு அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், கருத்துரை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் ஆகியோருடன்; கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

தெளிவத்தை தனது கருத்துரையில் முதலில் இந்த முயற்சியைப் பாராட்டினார். திரைக்கதை ஆசிரியராக தனது சினிமா அனுபவங்கள் ஊடாக தனது கருத்துக்களைச் சொன்னார். ‘பல சிங்களத் திரைப்படங்களை பார்ப்பதற்கு அழைக்கபட்டுள்ளேன்.  அதனைப் பார்த்து முடித்தவுடன் அதுபற்றி ஏதாவது குறிப்பு எழுதத் தோன்றும். ஆனால் ‘இங்கிருந்து….’ பார்த்துவிட்டுப் போன பிறகு ஏதாவது எழுத வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. அதில் காட்டப்படுவது எல்லாம் மலையகத்தில் நிகழும் காட்சிகள்தான். ஆனால் அவை காட்சிகளாக மட்டுமே இருந்தன. கோர்வையாக சொல்லப்பட்ட திரைக்கதையுடன் கூடிய சினிமாவாக அது தெரியவில்லை’ என சுருக்கமாகவும் இறுக்கமாகவும் தனது கருத்தைப் பதிவு செய்தார் தெளிவத்தை.

அடுத்ததாக மேமன்கவி, திரை மொழியைப்பற்றி பேசினார். ‘பொன்மணி’க்குப்பிறகு ‘இங்கிருந்தெ’ன்றார்.  இன்னுமொரு இலக்கிய கூட்டத்திற்கு போகும் அவசரத்தில் சென்றுவிட்ட மேமன்கவி தனது கருத்துரையை எழுத்தில் பதிவிட்டால் ஆறுதலாக வாசித்தறியலாம்.
அடுத்தாக எனது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். இந்தத் திரைப்படம் குறித்து கருத்துரை சொல்ல எனக்கு உள்ள தகுதியாக, அந்தத்திரைப்படம் காட்ட முயலும் ‘மலையக மக்களின்’ நேரடி ‘லய’ப்பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

எனது கருத்துரையை நான்கு அம்சங்களாக சொல்லப்போகிறேன் என தலைமை தாங்கிய ஊடகவியலாளர் கெஷாயினியிடம் அறிவித்து நேரம்கருதி சுருக்கமாகப் பேசியதை சற்று விரிவாக்கிப் பதிவு செய்வதே இந்த குறிப்பின் நோக்கம்.

பாராட்டு:
‘இங்கிருந்து’ எனும் திரைப்படத்தில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனைக் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள். மலையகத்துக்கேயுரிய கலையுணர்வோடு தொழில்முறை நடிகர்களாக இருக்கட்டும், நடிகர்களாக தோன்றிய தொழிலாளர்களாகட்டும் இருபேருமே அவர்களது பணியை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை மிகவும் உச்சகட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். பொதுவாகச் சொல்லப் போனால் செயற்கையாக வலம் வந்த ‘என்ஜிஓ’ அம்மணிப் பாத்திரம் தவிர்ந்த  ஏனைய எல்லா கலைஞர்களும் அசத்தியிருந்தார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால், ஊமைப்பெண் வேடமேற்ற சகோதரி, வயது முதிர்ந்த அம்மையார், சந்தேகக் கணவனாக, தொழிலாளியாக வரும் (ஆசிரியர், கவிஞர், கலைஞர்) பத்தனையூர் தினகரன் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள். 

வேண்டுகோள்:
இந்த வேண்டுகோள் எங்கள் மலையகக் கலைஞர்களுக்கானது. நமது வாழ்க்கையும், நமக்கான வாழ்க்கையும் நாம் அறியாததது அல்ல. அதை அடுத்தவர் எந்தக் கண்கொண்டும் பார்க்கலாம். எங்களது வாழ்வியல் நாங்கள் அறிந்ததே. எனவே எங்கள் வாழ்வியலை ‘படமாக்க’ முனைவோரை பாராட்டுவோம் ஒத்துழைப்போம். அதற்காக -‘படம்காட்ட’ எவர் வந்து கெமராவைக்காட்டினாலும் நடித்துக்கொடுக்க முன்வராதீர்கள் என்பதுதான் இந்த அன்பான வேண்டுகோள். முதலில் திரைக்கதையை முழுவதுமாக கேட்டு உள்வாங்கி அதன் பிறகு நடிப்பதற்கு ஒத்துக்கொள்வதே சிறப்பு. இல்லாதபட்சத்தில் முற்போக்கு அணியில் தன்னை அடையாளப்படுத்தும் கலைஞன்கூட,  தான் தோன்றி நடித்த ஒரே காரணத்துக்காக பிற்போக்குத்தனமான திரைப்படம் ஒன்றை உயரிய படைப்பாக வக்காளத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அவலம் உருவாகிவிடுகிறது. இது அவதானத்துக்குரியது.

விமர்சனம்:
கொழும்பு செட்டியார் தெருவுக்கு சமாந்திரமாக ஸ்ரீ கதிரேசன் வீதி என அழைக்கப்படும் செக்கட்டித்தெரு - கண்ணாரத்தெருவில் (புகழ்பெற்ற மயிலன் திரைமாளிகை பகுதியில்;) 1990களின் நடுப்பகுதிவரை மினி தியேட்டர்களில் சினிமா காண்பிக்கப்படும். ஒளிநாடா மூலம் ‘டெக்’ ஊடாக தொலைக்காட்சியில் ‘படம்’ ஓட்டுவது அங்கு தொழிலாகச் செய்யப்பட்டது. (பின்னாளில் சட்டநடவடிக்கைகளால் அது தடைசெய்யப்பட்டது) அந்த தெருவில் நடந்து போகும் பாதசாரிகளை படம் பார்க்க கூவியழைக்கும் முறை சுவாரஷ்யமானது. ‘வாங்க பொஸ்… வாங்க அண்ணே..’ என படத்தின் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். ஐந்து ரூபா டிக்கட்.. ஆள் சேர்ந்ததும் படம் காண்பிக்கப்படும். பாதசாரி அந்த படத்திற்கான அழைப்பாளரை சட்டை செய்யாது… ஆர்வம் காட்டாது கடந்து போனால் வாங்க அண்ணே…வாங்க… அஞ்சு பைட் (5 Fight) மூனு பைபோஸ் (3 Byforce - பெண்களை வல்லுறவு செய்யும் தமிழ் சினிமா காட்சிகளே இந்த பைபோஸ் எனச் சொல்லப்படுவது) எனக்கூவி பாதசாரியை படம் பார்க்க இழுக்கும் கூவல் நகைப்புக்குரியது. 
எனக்கென்னவோ அதே அழைப்பாளரின் ரசனையுடன் சுமதி சிவமோகனின் ‘இங்கிருந்து’ திரைப்படத்தில் சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனவோ என எண்ணத் தோன்றியது. மலையகம் தொடர்பாக இயக்குனர் கேள்விப்பட்டவற்றை காட்சியாக்கி ஓடவிட்டுள்ளார். ‘திரைக்கதை’ என்ன விலை? என அவர் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கண்டனம்:
திரைப்படம் ஒன்றை பார்த்து நாம் அறியாத சமூகம் ஒன்றின் வாழ்வியலை அறிந்துகொள்ள முனைவதில் எந்த தவறேதுமில்லை. அதே நேரம் திரைப்படம் ஒன்றை ‘தயாரித்து’ அல்லது ‘இயக்கி’, தான் அறிந்திராத ஒரு சமூகத்தை அறிந்து கொள்ள முனையும் முயற்சி அபத்தமானது. அதனையே சுமதி சிவமோகன் ‘இங்கிருந்து’ மூலம் செய்ய முனைந்துள்ளார். குறிப்பாக மலையக மக்களின் நூற்றியமைப்பது வருடகால வாழ்க்கைப்போக்கில் அடையாளங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தி அந்த மக்களின் அவலத்தை விற்று விருதும், பணமும் புகழும் தேட முனையும் வித்தையை ஒரு மலையகத்தவனாக கண்டனம் செய்கிறேன். 

என்னைத் தொடர்ந்து கருத்துரை வழங்கிய மு சிவலிங்கம் அவர்களும் இதுவரை இலங்கையில் வெளிவந்த மலையக மண்சார்ந்த திரைப்படங்களுடன் ஒப்பிட்டு,  ‘இங்கிருந்து திரைப்படத்தின் சில காட்சிகளில் மலையக சமூகத்தை அநாகரிமாகக் காட்டியுள்ளமைக்கு எதிராக அந்த சமூகத்தின் சார்பாக வழக்குத்தொடரவும் முடியும் எனவும் தெரிவித்தார். உரையை தயார் செய்து வந்திருந்த அவர் அதனை கட்டுரையாக எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளால் இங்கு அது பற்றி விரிவாக விபரிக்கப்படவில்லை.

பதிலுரையாற்றிய ‘இங்கிருந்து…’ இயக்குனர் சுமதி சிவமோகன் : தனது திரைப்படம் தனக்கு சிறந்தது என்றும் தனது தேவைக்காகவே தான் எடுத்ததாகவும் தான் திரைமொழியில் பேசியிருப்பதாகவும், எல்லோருக்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க முடியாது என்றும் தனது படம் ஐம்பது வருட உரையாடப்படும் என்றும் அவையனைத்தையும் மு.சிவலிங்கம் அதிக நேரம் எடுத்து உரையாற்ற முனைவதாகவும் தெரிவித்தார். 

படத்தில் ‘இராணுவத்தை தர்மசீலராகவும் மலையக இளைஞர்கள் மலையகப்பெண்களை மானபங்கம் செய்வதாகக் காட்டப்படும்’ காட்சியை கண்டித்த மு.சிவலிங்கம் அவர்களுக்கு சுமதி அவர்கள் வழங்கிய பதில் விசித்திரமானது. 

அந்தக் காட்சியை தான் காணவில்லை என்றும் தன்னுடைய கெமரா அதைக்கண்டது என்றும் அந்த கெமராதான் அதை எடுத்தது என்றும் பதிலளித்தார். 

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசையும் சத்யேஜித்ரேயையும் கூட கேள்விக்குட்படுத்;திய  சுமதியின் பதிலுரை அருவருப்பையே தந்தது. விரிவுரையாளராக பல்கலைகல்கழக சமூகத்தில் கடமையாற்றும் சுமதி சிவமோகன் சமூகம் ஒரு பல்கலைக்கழம் என்பதை உணரவேண்டும்.

இறுதியாக  சுமதி அவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தேன். 
‘உங்களது அந்த நவீன கெமராவைக் கொண்டு அடுத்த திரைப்படத்தை உங்களது யாழ்ப்பாண சமூகத்தை மையமாகக் வைத்து இயக்குங்கள்’ என்பதுதான் எனது வேண்டுகோள்.  எனது வேண்டுகோள் தனக்கு விளங்கவில்லை என தனது உரையை நிறைவு செய்தார் சுமதி சிவமோகன்.
அவரது திரைமொழி நமக்கெல்லாம் விளங்காதது ஒரு பக்கம் இருக்கட்டும். சுமதியின் உரைமொழியைப் புரிந்துகொள்வதும் சிரமமாகவே இருக்கிறது. 
இடைக்கிடை தனது தாய் மொழியான தமிழில் சொற்களை மறந்துவிடும் சுமதி, வானத்தைப் பார்த்து அந்த சொல்லை கையேத்தி வரவேற்பதும், அந்த சொல்; அவரது ஞானபீடத்திற்கு ஆங்கிலத்தில் வந்து அமர, அதனை வந்தமர்ந்துள்ள கூட்டத்தினரின் உதவியுடன் தமிழுக்கு மொழிபெயர்த்து, அவர் பேசும் உரைமொழியே பார்வையாளருக்கு புரியாதுபோகும் போது, அவரது திரைமொழி பாமர மலையகத்தவர்க்கு புரியாமல் போவது ஆச்சரியமில்லை. எனது வேண்டுகோள் விளங்கவில்லை என்பதும் நியாயமில்லை.

திரைப்படத்துறை நண்பர் ஞானதாஸ் தனது கருத்;துரையில், சுமதி தனது திரைப்படங்கள் ஊடாக சில கட்டுடைப்புகளைச் செய்கின்றார் என பாராட்டியாதோடு; இனிவரும் காலங்களில் சினிமா எடுக்கவருவோருக்கு சுமதியின் இந்த படைப்பு ஒரு பாடமாக அமையலாம் எனவும் சொன்னதிலும் உண்மையிருக்கிறது. எப்படி  ஒரு திரைப்படத்தை எடுக்கக்கூடாது என்பதையும் யாராவது எடுத்துக்காட்டினால்தானே தெரியும். அதற்;கு ‘இங்கிருந்து’ ஒரு எடுத்துக்காட்டுத்தான். 
இது இங்கிருந்து திரைப்படத்துக்கான விமர்சனம் அல்ல. அது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் பதிவு மட்டுமே. எல்லோரும் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். சுமதி அவர்கள் சொல்லும் ‘கற்பழிப்பு’ காட்சிகளை தானாக பதிவு செய்யும் அவரது கெமராவில் அடுத்த திரைப்படத்தை அவர் யாழ்ப்பாணத்தில் எடுப்பார். அப்போது எமது வேண்டுகோள் விளங்கும்.

நன்றி: உதயசூரியன் (தினக்குரல்)







Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates