Headlines News :
முகப்பு » , » மாகாணசபை முறைமை: மலையகத்திற்கு ஒரு ‘வெங்காயம்’ -நூல்களின் வெளியீட்டு விழாவில் சிவம்.பிரபாகரன்

மாகாணசபை முறைமை: மலையகத்திற்கு ஒரு ‘வெங்காயம்’ -நூல்களின் வெளியீட்டு விழாவில் சிவம்.பிரபாகரன்


அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கத்தின் ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்புகளும்’, ‘பதின்மூன்றாவது திருத்தமும் தமிழ்மக்களும்’ எனும் இரண்டு நூல்கள் கடந்த ஞாயிறு (06-04-2014) கொழும்புத் தமிழ்ச்சங்க மாலதி மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களின் குத்துவிளக்கேற்றலுடனும் ஆசிரியை மெடோனா அருள்ஞானசீலனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது.

மலையக சமூக ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி ம.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர். சபா ஜெயராஜா அவர்களும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எஸ். கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய அருட்பணி.ம.சக்திவேல் தான் ஒரு மலையகத்தவனாக இருந்த போதும் வடக்கை பூர்வீகமாகக் கொண்ட நண்பர் யோதிலிங்கம் எனது தலைமையில் இந்த விழாவிளை நடத்த வேண்டும் என எண்ணியது மலையக மக்களின் அரசியல் குறித்து அவர் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது. இந்த இரண்டு நூல்களும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்புகளுடன் தொடர்புடையது. ஜனநாயமும் இல்லாத சோசலிசமும் இல்லாத குடியரசும் இல்லாத தனிமனித ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நாட்டின் அரசியல் யாப்பு குறித்த விமரசனப்பார்வையாக இந்த இரண்டு நூல்களும் அமைந்துள்ளன. திருவள்ளுவரும், காரல்மாரக்ஸும் கூட ‘அரசு என்பது அதிகாரத்தின் மையம்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். படை அதிகாரமும் பௌத்த மேலாதிக்கமும் மேலோங்கியிருக்கும், இந்த நாட்டில் அரசியல் யாப்பு என்பது எப்போதுமே தமிழ் முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே கையாளப்பட்டுள்ளன. பதினெட்டாவது திருத்தம் பாதாள உலகத்தினரை அரசியல்வாதிகளாக்கும் பணியையே செய்துள்ளது. பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு ‘நிராகரிக்கப்பட்ட குப்பை’ என நுலாசிரியர் தெரிவித்திருப்பது மிகப்பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.

‘பதின்மூன்றாவது திருத்தமும் தமிழ்மக்களும்’ எனும் நூலின் ஆய்வுரையை சி.அ யோதிலிங்கத்தின் மாணவரும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் சுயாதீன ஊடகவியலாளருமான சிவம்.பிரபாகரன் நிகழ்த்தினார். பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை எட்டு அம்சங்களாக வகைப்படுத்தி அவற்றை விளக்கமாகத் தந்துள்ள நூலாசிரியர் மாகாண சபை முறைமையானது மத்திய அரசின் ஒரு வர்த்தமாணி அறிவித்தல் மூலம் இல்லாமல் ஆக்கக்கூடிய குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட முறைமை என்பதை அழுத்தமாகச் சொல்லவில்லை. வட மாகாண சபையை முன்னிறுத்தி இதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்பட்ட இந்த திருத்தம், இனத்துவ அடிப்படையில் அல்லாது பிராந்திய நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதையும் இந்தியா தனது பிராந்திய நலனுக்காக தமிழ் மக்களின் எவ்வித அபிப்பிராயங்களையும் பெறாது கொண்டு வந்த திருத்தம் ஆதலால் தோல்வியடைந்தது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மலையக மக்களைப் பொறுத்தவரையில் வெறுமனே மாகாண சபை உறுப்பினர்களை மாத்திரம் உருவாக்குவதே பதின்மூன்றாவது திருத்தம் எனவும் மற்றபடி அது மலையக சமூகத்திற்கு ஒன்றையுமே தராத ‘வெங்காயம்’ எனவும் குறிப்பிட்டார்.

‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்புகளும்’ எனும் நூலின் ஆய்வுரையை நிகழ்த்திய சுங்க அத்தியட்சகர் செ.சக்திதரன், இலங்கை குடியரசான பினனர் கொண்டுவந்த இரண்டு அரசியல் யாப்புகளுமே பக்கம் சார்ந்ததாகவே இருந்துள்ளது. அந்த அரசியல் யாப்புகள் குறித்த நுணுக்கமான விடயங்களை தொட்டுக்காட்டியிருக்கும் சி.அ.யோதிலிங்கம் அவர்களின் முடிவுரை நம்முள் பல கேள்விகளை ஏற்படுத்துகின்றது. ‘தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் வரலாற்று ரீதியாகவே தவறிழைத்து வந்துள்ளனர் என்ற கருத்து சரவ்தேச சமூகத்திடம் இன்று வலிமையாக உள்ளது. இதனை மேலும் வலிமைபடுத்த முயற்சிக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கு இது விடயத்தில் பாரிய பொறுப்பு உண்டு’ என்பதே நூலாசிரியரின் முடிவாக உள்ளது. தமிழ் மக்களாகிய நாம் முதலில் காலனித்துவ ஆட்சியாளரகளை நம்பி, பின்னர் இலங்கை அரசாங்கத்தை நம்பி, பின்னர் தமிழ் கட்சிகளை நம்பி, பின்னர் விடுதலை இயக்கங்களை நம்பி, பின்னர் சர்வதேசத்தை நம்பி, இப்போது புலம் பெயர் தமிழ் சமூகத்திடம் நம்பிக்கை கொள்வது எந்தளவுக்கு பொருத்தமானது எனத் தெரியவில்லை. புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நாம் யாரைத்தான் நம்புவது எனும் கேள்வி நம்மிடையே எழுவது தவிரக்கமுடியாததாகின்றது எனவும் தெரிவித்தார்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பேராசிரியர.சபா ஜெயராசா இரண்டு நூல்களினதும் வெளியீட்டுரையை ஆற்றினார். தனதுரையில, ‘சி.அ.யோதிலிங்கம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் விஞ்ஞானி. மற்றைய எந்த துறைக்கும் இல்லாத வகையில் அரசியல் பாடத்தை மட்டும் நாம் அரசியல் விஞ்ஞானம் என்றே கூறுகின்றோம். இன்று நமது சமூகத்தில் அரசியல் விஞ்ஞானிகளுக்கும், சமூக விஞ்ஞானிகளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளை பொறியியலாளராக, வைத்தியராக கணக்காளராக ஆக்குவதற்கு ஆசைபடுகிறார்களே தவிர சமூக விஞ்ஞானிகளாக்க விரும்பவதில்லை. ஆனால் அரசியல், சமூக விஞ்ஞானங்களே சமூகத்தின் அனைத்து விடயங்களுக்கும் தலைமை வழங்குவதாக உள்ளது. அந்த துறையில் தன்னை ஈடுபடுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சி.அ.யோதிலிங்கத்தின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவரது இரண்டு நூல்களும் அளவில் சிறியதாயினும் தரத்தில் உயர்வானவை. ‘கம்யுனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ எனும் நூல் கூட மிகச்சிறியதுதான். ஆனால் உலகையே புரட்டிப்போட்ட புத்தகம் அது. அது போலவே இவரின் இரண்டு நூல்களும் இலங்கை அரசியல் யாப்பு குறித்து மிகப்பெறுமதியானவை என தெரிவித்தார்.

நூலின் முதற் பிரதியை பேராசிரியர். சபா ஜெயராஜா அவரகள் வெளியிட்டு வைக்க சட்ட ஆலோசகர் க.மு.தர்மராசா பெற்றுக்கொண்டார். நூலினை பெற்றுக்கொள்ளும் முன்னர் வழமையாகவே நூலாசிரியருக்கு வாழ்த்துச் சொல்லும் க.மு.தரமராசா அவர்கள், தனது வாழ்த்துரையில் முக்கிய சில விடயங்களை முன்வைத்தார். அதாவது, இலங்கையின் நிரவாகத்துறை, நிறைவேற்றுத்துரை மாத்திரமல்ல, நீதித்துறை கூட பக்கம் சார்ந்து செயற்படுகின்றது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஜெனீவா அமர்வுகளில் இலங்கை அரசுக்காக வாதாடிய ஒருவரே தற்போது பிரதம நீதியரசராக நியமிக்கபட்டுள்ளார் என்பதே இதற்கு போதுமான சான்று என குறிப்பிட்டார். அதேபோல மாவட்ட சபை முறை அறிமுகப்படுத்தப்ப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டவர்களே அது வேண்டாமென அதனை நிராகரித்துததுபோல, தான் விமானத்தில் பயணிப்பதற்கே ஆளுநரிடம் அனுமதிபெறவேண்டும் எனும் நிலையிலுள்ள வடக்கு மாகாண சபை முதலமைச்சரும் அத்தகைய முடிவை எடுத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்தார்.

எழுத்தாளர் - விமரசகர் தெ.மதுசூதனன் நூல் பற்றிய கருத்துரைகளை வழங்கினார். நூலாசிரியர் சி. அ.யோதிலிங்கம் ஏற்புரை வழங்கினார்.

கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியரகள், அரசியல்வாதிகள் தொழிலதிபரகள், எழுத்தாளரகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு பிரதிகள் பெற்றுக்கொண்டு கலந்து சிறப்பித்த ஒரு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகவே நூல் வெளியீட்டு விழா அமைந்தது.

- சுதாமதி  






Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates