இன்றைய உலகமயமான சூழலில் என்றும் இல்லாதவாறு மக்களின் உழைப்பு ஏகாதிபத்திய நாடுகளினால் அபகரிக்கப்படுகின்றது. இவர்களின் திருடி வாழும் பண்பு நீங்கலாக அதனை நியாயப்படுத்தும் தத்துவங்கள், கோட்பாடுகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இவ்வாறானதோர் சூழலில் இவற்றை எதிர்த்து மாற்று இயக்கங்களும் தோற்றம் பெற்றுள்ளன. இந்த பிண்ணனி நமது எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், உண்மையான ஆர்வத்துடனும் அர்ப்ணிப்புடனும் செயற்பட வேண்டியுள்ளது. நம் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் வணிக நோக்கமும்; தனிநபர் போட்டிகளும் பெருகி தனிநபர் வாழ்விலும் பொது வாழ்விலும் தாக்கம் செலுத்தி வருகின்றன. மனிதப் பண்புகள் வீழ்ச்சியுற்று சிறுமையும் கயமையும் பெருகியுள்ளன.
நமது பண்பாட்டுச் சூழலில் இத்தகைய விபரீதங்கள் இருந்தபோதிலும் இனி ஒரு விதி செய்வோம் என்ற பாரதியின் நாகரீகத்தில் கால் பதித்து மக்களையொட்டி செயற்படுகின்ற அரசியல் சமூக பண்பாட்டு இயக்கங்களும் அதன் வெளியீடுகளும் இல்லை என்பதல்ல. இத்தகைய பின்னணியில் தோற்றம் கொண்டதே புதிய பண்பாட்டுக்கான வெகுஜனத் தளமும் அதன் வெளியீடான புதிய தளம் என்ற சஞ்சிகையுமாகும்.
முன்கூட்டி தயாரிக்கப்பட்ட முடிவுகளை இறக்குமதி செய்து நமது யதார்த்தத்துக்கும் சூழலுக்கும் அந்நியமான தத்துவங்களை முன்மொழிவது விரக்திக்கும் பின்டைவுக்கும் இட்டுச் செல்லக்கூடியதொன்றாகும். வெற்றுக் கோஷங்களின் அடிப்படையில் போராட்டங்களை முன்மொழிவதாகவே அமையும். இவ்வம்சம் ஒரு வெகுஜன அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு பதிலாக புரட்சியின் புனிதர்களை பாதுகாப்பதற்கும் வழிவிடுவதற்கும் உதவுமேயன்றி, மக்கள் விடுதலையை சாத்தியமாக்கும் சமூக மாற்றத்திற்கு உதவாது.
இந்நிலையில் மக்களின் சகல விதமான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு வெகுஜன அமைப்பை தோற்றுவித்து மக்கள் மத்தியில் செயற்பட வேண்டியுள்ளது. தேசிய ஜனநாயக முற்போக்கு மார்க்சிய சக்திகளை ஒன்றிணைப்பதனூடாக பொது எதிரிக்கு எதிராக போராட முடியும். இவ்விடத்தில் ஒன்றிணைதல் என்பதும் ஒரு கட்சி அல்லது ஒரு குழுவின் ஆதிக்கத்தை இன்னொரு குழுவின் மீது செலுத்துவதல்ல. இவர்களிடையே காணப்படுகின்ற விடுதலை சார்ந்த கூறுகளும் சரியான திசை மார்க்கத்தில் ஒன்றிணைப்பதென்பது அதன் அடிப்படையாகும். இந்தப் பின்னணியில் தோற்றம் கொண்ட புதிய தளம் அத்தகைய பாதையை நோக்கியே பயணிக்க முனைகின்றது. முதலாவது இதழுக்கு வாசகர்கள், பொதுமக்கள் தந்த ஆதரவே இரண்டாவது இதழை வெளிக்கொணரக் கூடியதாக அமைந்திருந்தது. குறிப்பாக இவ்விதழ் வழமை போல் பொதுமக்களின் கருத்துக்களையும் அவர்கள் சார்பான புத்திஜீவிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி அதன் வழி பயணிக்க முனைகின்றது.
இவ்விதழின் சிறப்பம்சமாக தோழர் ஏம்.ஏ.சி. இக்பாலின் நேர்காணல் அமைந்துள்ளது. குறிப்பாக எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் சுவர்களிலும் இளைஞர்களின் உணர்வுகளிலும் இவரது பெயர் ஆழப் பதிந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர (1966 முதல்) ஊழியராக இயங்கியவர். எளிமையான வாழ்க்கை, கடுமையான போராட்டம் என்ற வகையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒருபுறமான பேரினவாத ஒடுக்குமுறைகளும் மறுபுறமான குறுந் தமிழ் தேசிய பாசிச சக்திகளின் ஒடுக்குமுறைகள் முஸ்லிம் மக்களை நோக்கி நகர்ந்ததுடன், அவர்களது இயல்பான வாழ்க்கையைக்கூட சிதை;ததிருந்தது. இந்நிலையில் எழுந்த கருத்துக்கள் சிந்தனைகள் ஒரு வகையில் முஸ்லிம் தேசியம் பற்றி உரையாடுவதற்கும் பல சந்தர்ப்பங்களில் அதுவே முஸ்லிம் தேசியத்தை குறுகியவாதமாக முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக அமைந்தது. இவ்வாறானதோர் சூழலில் முஸ்லிம் ஒடுக்குமுறைகள் குறித்து அவதானம் கொள்கின்ற இத்தோழர், தமிழ் - முஸ்லிம்களின் ஐக்கியம் பற்றியும் தன் கவனத்தை செலுத்தியிருப்பது மானுடம் சார்ந்த அவரது மார்க்சிய பார்வைக்கு தக்க எடுத்துக்காட்டாகும். அதற்கும் மேலாக தமிழ் மக்களிடையே புரையோடிப் போயிருந்த சாதியம் குறித்தும் வடக்கில் எழுந்த சாதியப் போராட்டங்கள் குறித்தும் தனது அனுபவங்களையும் அவர் பதிவாக்கத் தவறவில்லை. என்ற போதிலும் இடதுசாரி இயக்கத்தின் பின்னடைவு குறித்து கூறுகின்றபோது அவற்றின் பிளவை அவர் அவருடைய கட்சி சார்ந்த அகவயப்பட்ட தன்மையிலே பார்க்க நேர்ந்தது துரதிஷ்டவசமானதொன்றாகும். வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தை உருவாக்குவதில் தோழர் கார்த்திகேசனின் பங்கு முக்கியமானதொன்றாகும். அவ்வாறே இடது சாரி இயக்கத்துக்கு ஒரு தத்துவார்த்த பின்னணியை வழங்குவதிலும் அதற்கு ஸ்தாபன வடிவம் கொடுப்பதிலும் தோழர் ந. சண்முகதாசன் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். பின்வந்த காலங்களில் இடதுசாரி இயக்கத்துக்கு இன்னொரு பரிமாணத்தை வழங்குவதில் தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்துக்கு முக்கிய இடம் உண்டு. இன்று இடதுசாரி இயக்கங்கள் ஒரு பின்னடைவை சந்தித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாளுமைகளை சுய விமர்சன (இடதுசாரிகள் குறித்த ஆய்வுகள் சுய விமர்சனமாகவே அமையும்) அடிப்படையில் நோக்கி மீண்டும் ஒரு புணரமைப்புக்கான தளத்தை உருவாக்குவதே இன்றைய தேவையாக உள்ளது. இதற்கு மாறாக இவ்வாளுமைகள் பற்றி குறிப்பிடுகின்றபோது ஒருவருக்கொருவரை வில்லனாக்கிக் காட்டுவது இடதுசாரி புனரமைப்புக்கான செயற்பாடுகளை பின்னடையச் செய்வதாகவே அமையும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவ்விதழில் தேடல் - தீர்வு - படைப்பு (துறையூரான் எம். சிவானந்தன்), இணைந்து பயணிப்போம் (லறீனா அப்துல்ஹக்), போதை வேண்டாம், பாடசாலைகளில் அறநெறிக் கல்வியின் அவசியம் (ஆ. பொன்னையா), தந்தையாவதற்கு ஏற்ற வயது (டொக்டர் எம்.கே. முருகானந்தன்), பெர்னாட்ஷா, எம் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு (முல்லை விபுல்), ரண்டூகா (கீதாதேவி கௌரிபாலன்), இணைந்து அல்லது இணங்கி (சுகு - ஸ்ரீதரன்), புற்றுநோய் ஆஸ்பத்திரி, வவுனியா வடக்கு, வியாபாரிகளின் சுரண்டல் (அ. ஜீவதர்ஷன் - யாழ்) ஆகிய கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் தேடல் - தீர்வு - படைப்பு என்ற கட்டுரைக் குறித்துக்காட்டத்தக்கதொன்றாகும். இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக மட்டுமன்றி அது எவ்வாறு காலத்தையும் உருவாக்குகின்றது குறித்த விவாதங்களை யதார்த்த நோக்கில் முன்வைக்கின்றது. இவ்விதழில் இடம்பெறும் கட்டுரைகளை தொகுத்து நோக்கும் போது அதன் உள்ளடக்கத்தில் நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்பட்ட போதினும் அவை மக்களையொட்டியதாக வேர்கொண்டு கிளைப் பரப்புகின்றது.
இவ்விதழில் இடம் பெறுகின்ற சிறுகதைகள் சிறப்பானதாக அமைந்து காணப்படுகின்றன. பாபுவின் சூட்டி நங்கி என்ற கதை இனவாதம், இனமுரண்பாடு என்பன மேலோங்கிய நிலையில் அதனையும் கடந்து நேயம் எவ்வாறு இணைகின்றது என்பதற்கு சாட்சியாக இக்கதை அமைந்துள்ளது. அவ்வாறே மல்லியப்புச் சந்தி திலகரின் வலி என்ற கதை மலையக பெண்னொருவர் தாதியாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதால் ஏற்படுகின்ற பிரச்சனைகள், முரண்பாடுகள் அதனடியாக தோன்றுகின்ற பண்பாட்டு நெருக்கடிகள் பற்றியதாக அமைந்துள்ளது. மலையக இலக்கியத்தின் அண்மைக்கால போக்குகளை அவதானிக்கின்ற போது : உழைப்பிலிருந்து அந்நியப்பட்டு உழைக்கும் மக்களை கிண்டலடிக்கும் போக்கு: உழைக்கும் மக்களை பாத்திரங்களாக படைக்கப் பட்டிருப்பினும் அதனை நையாண்டி நிலையில் பார்க்கும் நிலை முனைப்படைந்துள்ளதைக் காணலாம். ஆனால் திலகரின் கதைகளில் இப்பலவீனம் இல்லாதிருப்பது நம்பிக்கை தருவதாக அமைகின்றது. அவ்வாறே அவர் மலையகத்தின் பழைய நினைவுகளை கொண்டு (வரலாற்றை பதிவாக்குவது என்பதற்கும் சமகால வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து தப்பியோடுவதற்கும் வித்தியாசம் உள்ளது) சமகால பிரச்சனைகளிலிருந்து தப்பியோடவோ, ஒப்பாரி வைக்கவோ அல்லது உள்ளாச பிரயாணிகள் மனோபாவத்தில் தோட்ட வாழ்க்கையை இன்பமயமானதாக காட்டுவதற்கு அவர் முனையவில்லை. அங்கும் வாழ்க்கை முரண்பாடுகளும் அது ஏற்படுத்தக் கூடிய நசிந்த போக்குகளும் காணப்படும் என்பதையும் இவரது கதை வெளிக்கொணர்கின்றது.
இவ்விடத்தில் பிறிதொரு விடயமும் குறித்துக்காட்ட வேண்டியதாகின்றது. அதாவது மலையக இலக்கியங்ளை குறிப்பாக மலையக மக்களுடைய வாழ்வை வெளிக்கொணர்ந்த அளவு அவர்கள் செய்த கலகங்களையும் போராட்டங்களையும் வெளிக்கொண தவறியிருக்கின்றது. ஓர் ஒப்புவமை வசதி கருதி வடபுலத்து படைப்புகளோடு ஒப்புநோக்குவோம். வடக்கில் எழுந்த தொழிற்சங்க போராட்டங்களை நீர்வை பொன்னையனுடைய படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அவ்வாறே அங்கு எழுந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை கே. டானியலின் எழுத்துக்கள் பிரதிபலித்து நிற்கின்றன. இவ்வகையில் மலையகத்தை நோக்குகின்றபோது மலையகப் படைப்பாளிகளின் படைப்புகளில் சமூக இயக்கங்களும், போராட்டங்களும் படைப்பாக்காத நிலை காணப்படுகின்றது. எனினும் முச்சந்திப் பாடல்கள் என (பெ. முத்துலிங்கத்தின் தொகுப்பு அவதானத்துக்குரியது) மலையக மக்கள் சார்ந்த இயக்கங்களையும் போராட்டங்களையும் ஓரளவு பதிவாக்க முனைந்திருப்பதாகவே தோன்றுகின்றது.
இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக படுகின்றது. ஒன்று மலையக படைப்பாளிகள் ஒரு மத்தியதர வர்க்க குணாதிசயத்துடன் படைப்பை உருவாக்கியமை. இரண்டு தம் அனுபவங்கள் சார்ந்தும் ஏனைய படைப்புக்களில் பெறப்பட்ட அனுபவங்கள் சார்ந்தும் மட்டுமே படைப்புகளை உருவாக்க முனைந்தமை இன்னொரு துரதிஷ்டவசமான நிகழ்வாகும். மலையக இலக்கியத்தில் விமர்சனம் என்பது அந்நியப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. பத்தி எழுத்துக்கள் விமர்சனமாக கணிக்கப்பட்டதுடன் சமூக தளத்திலிருந்து எழுந்த விமர்சனங்கள் கொடுங்கோண்மையாக நோக்கப்பட்டது இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். இந்த மௌனம் களையப்பட வேண்டும்.
இவை தவிர இவ்விதழில் சுகன், முல்லை விபுல், மணி, ஷெல்லிதாசன், வெலிகம ரிம்ஸா முஹம்மத், தவச்செல்வன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுகனின் பகலுமல்லாத இரவுமல்லாதபொழுதை வரவேற்றல் என்ற கவிதை நீண்ட நெடிய அலைக்கழிப்புகளினூடான வாழ்க்கை சிதைவையும் அதன் அடியாக எழுகின்ற உணர்வுகளையும் சித்தரிக்கின்றது.
இவை தவிர பிரேம்ஜி, பாலு மகேந்திரா ஆகியோருக்கான அஞ்சலிகளும் சமூக தளத்தில் வைத்து இவ்வாளுமைகளை தரிசிக்க உதவுகின்றது. மேலும் இவ்விதழின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்று தேடல் என்ற பகுதியில் இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம் அல்லது ஒரு ஊர் குறித்து இடம்பெறுகின்ற தகவல்களாகும். இவ்விதழில் வவுனியா வடக்கு தேடலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...