Headlines News :
முகப்பு » » மலையகத்தில் தமிழில் நிர்வாகம் : இன்னொரு "கோடீஸ்வரனுக்காக" காத்திருப்பதா... - ஜேசுநேசன்

மலையகத்தில் தமிழில் நிர்வாகம் : இன்னொரு "கோடீஸ்வரனுக்காக" காத்திருப்பதா... - ஜேசுநேசன்


இன்று மலையகத் தமிழ் மக்கள் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்களின் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக் குறைவு.

இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (PARALLEL, CO OR EQUAL LANGUAGE OF ADMINISTRATION) அரசாங்க வர்த்தமானிகள் (GOVT. GAZETTE) ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.

இதில் அக்கறை கொள்ள வேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற் சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999
I) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.

அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.
II) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.
I) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.
II) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.

அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (FOUR GRAVETS), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல் வேண்டும்.

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனை விடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத் தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.

இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

ஜேசுநேசனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்...
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates