Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழ் மக்களுக்கு மாடி வீடு வேண்டாம் தனி வீட்டுத்திட்டமே தேவை: திகாம்பரம்

மலையகத் தமிழ் மக்களுக்கு மாடி வீடு வேண்டாம் தனி வீட்டுத்திட்டமே தேவை: திகாம்பரம்


மலையகத்தமிழ் மக்கள் நலன் கருதி அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்களுக்குத் தொழிலாளர் தேசிய சங்கம் ஆதரவு தருகின்ற அதே வேளை இந்த மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கின்ற எந்தவொரு திட்டத்திற்கும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆதரிக்கப் போவதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.

மஸ்கெலியா மொக்கா கீழ்ப்பிரிவு , குயின்ஸ்லேண்ட் , லக்ஷபான , ஹெமில்டன் , லக்கம் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் எஸ்.பத்மநாதனின் அனுசணையில் பெறப்பட்ட கற்றல் உபகரணங்கள் பாடசாலை மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பி.இராஜதுரை ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட பொருட்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா , சோ.ஸ்ரீதரன், உபதலைவர் ஜி.நகுலேஸ்வரன், மஸ்கெலியா அமைப்பாளர் கே.கணேசன, இளைஞரணி செயலாளர் சிவநேசன், அம்பகமுவ அமைப்பாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் சுறியதாவது:

மலையகத் தமிழ் மக்களின் நலன் கருதியே நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். அரசாங்கத்திற்கு கண் மூடித்தனமாக நாம் ஆதரவு தரவில்லை. மலையகத்தமிழ் மக்களுக்குத் தேவையான விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக் கொண்டு வந்துள்ளோம்.

இந்த வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பிரேரித்துள்ள மலையகத்துக்கான மாடி வீட்டுத்திட்டத்திற்கு நாம் எவ்விதத்திலும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மாடி வீட்டுத்திட்டம் மலையகத்தின் புவியியல் அமைப்புக்கேற்ப எவ்விதத்திலும் பொருத்தமில்லாதது.

இந்த மாடி வீட்டடுத்திட்டத்தினை சிலர் பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசுகின்றனர். இந்த நாட்டின் காடுகளை வளம் தருகின்ற பிரதேசமாக மாற்றிய தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு தனி வீட்டுத்திட்டமே பொருத்தமானதாகும்.

குறைந்தது ஐந்து பேர்ச்சஸ் நிலத்துடன் கூடிய தனிவீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும். மலையகத் தோட்டப்பகுதிகளில் இன்னும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. எமக்குக் கிடைக்கின்ற நிதியொதுக்கீடுகள் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றோம்.

மலையகத் தமிழ் சமூகம் உரிமைப் பெற்ற சமூகமாக மாற்றம் பெறுவதற்கு கல்வியே முக்கியமானதாகும். இந்தக்கல்வியை மாணவர்களுக்கு உரிய முறையில் வழங்க வேண்டியது கல்வியலாளர்களின் கடமையாகும். மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நாமும் உதவிகளை வழங்கி வருகின்றோம்.

எனது பிறந்த தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி 2013 ஆம் வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களை எனது சொந்த நிதியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது எம்மீது சிலர் அபாண்டமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். மலையகத்தமிழ் சமூகத்தினை காட்டிக்கொடுக்கப் போவதாக வதந்திகளைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அவ்வாறு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள் மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சைப் பறிகொடுத்துள்ளார்கள்.

இன்று மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் அதிபர் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிபர் ஆசிரியர்கள் தமது கடமையை முறையாக செய்கின்ற பட்சத்தில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அஞ்ச தேலையில்லை.

ஆகவே மலையகத் தமிழ் சமூகம் நலன் கருதி செயற்படுகின்ற தொழிலாளர் தேசிய சங்கத்தினை மலையகத்தமிழ் மக்கள் தொழிற்சங்க அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும்´ என திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates