2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளுக்கான முக்கியதுவம் வாய்ந்த குழு நிலைவிவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களை பிரதிநிதிதுவப் படுத்தும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நிலைமைகள், குறைப்பாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிறைவுகள் குறித்து வாத விவாதங்களை முன்வைத்த போதிலும் மலையகத்தை பிரதிநிதித்துவம் படுத்துகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமையானது மலையக மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான ஜே.ஸ்ரீ ரங்கா இவ் விவாதத்தில் கலந்து கொண்ட போதிலும் அவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு விவாதம் தொடர்பில் தனது உரையை ஆரம்பித்து இரண்டொரு நிமிடங்களிலேயே அவருக்கான நேரம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது வாதமும் முன்வைக்கப்படுவதற்கு நேரம் கிட்யிருக்கவில்லை.
எவ்வாறு இருப்பினும் மலையகத்தில் கல்வி நிலை, மலையகம் எதிர்கொண்டிருக்கின்ற பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அடிப்படை வசதியற்ற நிலைமைகள், ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்கின்ற போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார வசதியின்மை, தொடர்பாடல் வசதியின்மை உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்ற போதிலும் அதனை வெளிப்படுத்துவதற்கு மலையகத் தலைமைகள் என கூறி கொள்வோர் தவறு இழைத்து விட்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், காங்கிரசின் தலைவர் முத்து சிவலிங்கம் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவர் பி. இராதாகிருஷ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் அச்சங்கத்தின் உபதலைவர் பி.இராஜதுரை ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பில் மலையகத்தின் நிலைப்பாடுகளை முன்வைக்க தவறியுள்ள அதேவேளை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான ஆர்.யோகராஜனும் இங்கு உரையாற்றவில்லை.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோர் தமது மாவட்டங்களின் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் அமைச்சர்களிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அத்துடன் தலைநகரில் இயங்குகின்ற பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள குறைப்பாடுகள் குறித்தும் கூட இங்கு சுட்டிகாட்டி எம்.பிக்கள் உரையாற்றியிருந்தனர். இருந்த போதிலும் மலையக மக்களினதோ அல்லது மலையகத்தின் எதிர்கால சந்ததியினரதோ தேவைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் குறித்து கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் சலுகைகளை பெற்று கொடுப்பதற்கு ஏற்றதான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கும் எவரும் முன்வராததால் மலையகத்தின் எதிர்காலத் தலைவர்கள் என்று கூறப்படுகின்ற இன்றைய சின்னஞ் சிறார்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி தொடரும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரதும் அபிலாசைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...