நமது தமிழகத்துக்கு மிக அண்மையில் வாழும் இலங்கை மலையக மக்கள் பற்றி நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். தெளிவத்தை ஜோசப் போன்ற மிக காத்திரமான ஒரு தமிழ் படைப்பாளியை இத்தனை வருடகாலம் அடையாளம் காணாமல் இருந்திருக்கிறோம் என்பது மனவருத்தத்திற்குரிய செய்தி. தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களைப்பற்றியே ஓயாது எழுதி வந்திருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதன் மூலம் நாம்தான் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும். இலங்கை மலையக மக்களின் அடையாளமாக இன்று தெளிவத்தை ஜோசப்பை தமிழகத்தில் காணுகிறோம் என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி புகழாரம் சூடினார்.
‘காலத்தால் மறக்கப்பட முடியாத ஆனால் சமகாலத்தில் மறக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளை கெளரவித்தல்’ எனும் நோக்கத்தோடு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரால் உயர் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘விஷ்ணுபுரம்’ விருது இம்முறை ஈழத்தின் முக்கிய இலக்கிய படைப்பாளியும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2013 டிசம்பர் 22 ஆம் திகதி தமிழகம் கோயம்புத்து}ரில் நடைபெற்ற விழாவுக்கு மூத்த எழுத்தாளர் இந்திரா பாரத்தசாரதி தலைமை வகித்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் ஒருங்கிணைத்திருக்கும் ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. உலகெங்கும் வாழும் குறித்த வாசகர் வட்ட நண்பர்கள் கோவையில் ஒரு திருவிழாபோல் ஒன்றுகூடியிருந்தார்கள். காலத்தால் மறக்கப்படமுடியாத படைப்புகளைத் தந்தும் சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இலக்கியகர்த்தாக்களை கெளரவிப்பது இந்த இலக்கிய வட்டத்தாரின் நோக்கம். விருது வழங்குதல் என்பதை> இரண்டுமணி நேரம் கூடி எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி ஒரு நினைவுசிற்பத்தை கையில் கொடுத்து அனுப்பும் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளரை இரண்டு நாட்களுக்கு கொண்டாடும்> அவருடன் உரையாடும்> அவரைது படைப்புகள் பற்றி சம்பாஷிக்கும் அவருடன் வாழும் ஒரு திருநாளாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற கெளரவம் என்பது அவனது படைப்புகளை வாசித்து அதன் மூலம் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்துகொள்வதுதுதான். அந்தப்புரிதலை பெற்றுக்கொள்ளவும் அந்த எழுத்தாளரை வாழ்த்தவும் வருடத்தில் இரண்டு நாட்களை ஒதுக்கி ஒரு மண்டபத்தை ஒதுக்கி ஒன்றுகூடிவிடுகிறார்கள். படைப்பாளியை நடுவிலே அமரவைத்து சுற்றி வாசகர்கள் வட்டமாக சுமார் நூறு முதல் நூற்றியைம்பதுவரை அமர்ந்துகொள்கிறார்கள். இப்படித்தான் தெளிவத்தையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவரது படைப்புகள் பற்றி ஒவ்வொரு வாசகரும் தமது அனுபவத்தையும்> சந்தேகங்களையும் கேள்விகளையும் பாராட்டுக்களையும் பகிரந்துகொண்டார்கள். சுவாரஷ்யமாக சம்பாஷிப்பதுபற்றிய தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமை இலக்கிய உலகம் நன்கறியும். அவருடன் மணிக்கணக்காக இலக்கியம் பேசலாம். ஒரு ஆக்கம் வெளிவந்த காலம்> இதழ்> பத்திரிகை அதன் கருத்துகள் என குறித்துகாட்டி பேசும் நல்லதோர் ‘கதை சொல்லி’ தெளிவத்தை ஜோசப். துல்லியமாகவும் துணிவுடனும் கருத்துக்களை பகிர்பவர். அவரது எளிமையான ‘பேச்சுநடை’ தமிழக வாசகர்களை கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டது.
‘தெனாலி’ திரைப்படத்தில் கமலஹாசன் பேசுவதுதான் இலங்கைத்தமிழ் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவத்தையின் இதயத்திலிருந்துவரும் வரும் இயல்பான வார்த்தைகள் ‘ஐயா…எங்கள மாதிரி பேசுறீங்களே..’ என வாசகர்களை கேட்கவைத்தது. ‘கோயம்பத்து}ருக்கும் கும்பகோணத்துக்கும்..எவ்வளவு து}ரம் …கும்பகோணத்தில் இருந்து பதுளைக்கு வாத்தியார் வேலைக்குபோனவர்தான் எங்க ஆஞ்ஞா… அந்த மாதிரி தேயிலை தோட்டத்துல பஞ்சம் பொழைக்கப் போன பதினைஞ்சு லட்சம் பேரு ..அங்க கெடக்குறோம்.. நீங்கதான எங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க’ என ஒரே மூச்சில் ‘மலையகத்தை’ அறிமுகப்படுத்திவைத்தார் தெளிவத்தை. கலகலப்பாக பேசத் தொடங்கிவிட்ட வாசகர்கள் இரண்டு நாளாக அவரை சுற்றிக்கொண்டார்கள்.
தெளிவத்தையின் படைப்புகள் பற்றி வாசகர்கள் கேட்கும் நுணுக்கமான கேள்விகள் ‘வாசகர் வட்டம்’ எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு கட்டியம் கூறியது. இந்த கலந்துரையாடல்பற்றி தனியான ஒரு கட்டுரையில் பதிவு செய்வதே பொருந்தும். அதே நேரம் ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் இங்கு கூறிச்செல்வது பொருந்தும். இரண்டு இளம் பெண் வாசகர்கள். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சக்கர நாற்காலியில்தான் வாழ்கிறார்கள். தெளித்தை ஜோசப் அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் நடுவில் அமர்ந்திருக்க சுற்றியிருந்த வட்டத்தினர் தங்களது கேள்விகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு நண்பர் அந்த இரண்டு சகோதரிகளையும் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இந்திரா பாரத்தசாரதி> தெளிவத்தை ஆகியோரைப் படித்திருக்கிறீர்களா? என இன்னுமொரு நண்பர் கேட்டார். மிக எளிமையாக ஒரு சகோதரி…. இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு’ கதை பற்றியும் தெளிவத்தை ஜோசப்பின் ‘ஒன்பது’ கதைகள் பற்றியும் கூறினார். குடைநிழல் நாவலில் ‘மீனுக்கும் விரல் இருந்த’ ஒரு விளக்கமே அங்கு நடப்பதை காட்டிவிடுகிறது என நயவுரை வழங்கினார். அடுத்த நாள் விழாவில் முதல் வரிசைக்கு முன்பாகவே இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததுது. எல்லோரும் தெளிவத்தையிடம் வந்து படம் எடுத்துக்கொண்டார்கள். தெளிவத்தை> இவர்களிடம் போய் படம் எடுத்துக்கொண்டார்.
கோவையில் உள்ள இடைநிலைப்பள்ளியின் விழா மண்டபம் மாலை ஆறுமணிக்கு மக்களால் நிறைந்திருந்து. தேயிலை வெளியில் தெளிவத்தை ஜோசப்பின் நிழற்படம் பதித்த பதாகை மேடையின் பின்புறத்தையும் மலையக மக்களின் பின்புலத்தையும் தமிழகத்தில் காட்டி நின்றது. இரவி சுப்பிரமணியம் எனும் இசைக்கலைஞனின் இரு புதல்விகளின் இறைவணக்கப்பாடலோடும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி அவரகளின் வரவேற்புரையுடனும் விழா ஆரம்பமாகியது.
நம்மில் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடையாளப்படுத்துவதே தனது எழுத்தின் பணியாக ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருந்கும் தமிழ் எழுத்தாளரை நான் கூட அறியாமல் இருந்திருக்கிறேன் என்பதற்காக வருந்துகிறேன். எங்கு தவறு நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. காலம் தாழ்த்தியேனும் இந்த மக்கள் பற்றி புரிந்துகொள்ள ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அதே நேரம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாகச் சொல்லப்படும் இந்த நாளில் ஒரு வாசகர் வட்டம் நல்ல வாசிப்பையும் அதேநேரம் இலக்கிய கர்த்தாக்களை கெளரவிப்பதையும் பார்க்க வயது போன எங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என தலைமையுரையில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் இந்திரா பார்த்தசாரதி.
தலைமையுரையினைத் தொடர்ந்து தெளிவத்தையின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நற்றிணைப் பதிப்பாக ‘மீன்கள்’ எனும் தலைப்பில் ஜெயமோகன் தொகுத்திருக்கும் தெளிவத்தையின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை ஒளிப்பதிவாளர் செழியன் வெளியிட்டு வைத்தார். ‘எழுத்து’ பதிப்பித்துள்ள குடைநிழல் நாவலின் மறுபதிப்பை திரைப்பட இயக்குனர் பாலா வெளியிட்டு வைக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தார். திருமதி. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு திருமதி சுதா ஃநவாசன் பொன்னாடையிட்டு கெளரவித்தார். தெளிவத்தை ஜோசப் அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றிய ‘ஸ்டார்’ (மொடன் கன்பக்ஸனரி
) நிறுவனத்தின் சார்பாக ஈழத்தின் எழுத்தாளர் அல்அஸுமத் அவர்கள் பொன்னாடையிட்டு கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் வாழும் எழுத்தாளர் சொர்ணராஜ் விக்கேடாரியா மேற்கொண்டிருந்தார். ‘விஷ்ணுபுரம்’ விருதினை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் இயக்குனர் பாலா அவர்களும் தெளிவத்தைக்கு வழங்கிவைத்தனர். இந்திய மதிப்பு ஒரு லட்சம் பரிசு வழங்கி தெளிவத்தை கெளரவிக்கப்பட்டார்.
எனது திரைப்படங்கள் எல்லாமே ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக அந்த இலக்கியத்தை திரையில் கொண்டுவர முடியாது போனாலும் என்னால் இயன்றவரை முயற்சித்துள்ளேன். தெளிவத்தை ஜோசப் அவர்களின் நாவல்கள்> சிறுகதைகளை வாசித்துள்ளேன். இன்று அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நல்ல திரைப்படங்களை உருவாக்க நல்ல கதைகள் வேண்டும். அதனை இலக்கியவாதிகள்> எழுத்தாளர்களே தர வேண்டும். சினிமா தீண்டத்தகாத தொழில் அல்ல. எழுத்தாளர்களே சினிமாவுக்கு வாருங்கள். தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படும் என அழைப்புவிடுத்தார் இயக்குனர் பாலா.
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ‘தெளித்தை ஜோசப் காட்டும் மலையகத்தின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தெளிவத்தை ஜோசப்பின் நான்கு சிறுகதைகளைக் கொண்டு நயப்புரை ஆற்றினார். மலையக மக்கள் எந்தெந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள் அங்கு எவ்வாறெல்லாம் அவர்கள் மீது சட்டங்கள் பாய்ந்தன. எப்படி ஃமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு திருப்பிப்பெறப்பட்டார்கள் போன்ற விடயங்களை வாசித்துக்காட்ட முயற்சித்தார் சுரேஷ்குமார இந்திரஜித்.
மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுகயீனம் காரணமாக விழாவுக்கு வருகை தரமுடியாதபோதும் அவரது கவிதையொன்றை இசைப்பாடலாக வழங்கி அவையைக் கவர்ந்தார் கலைஞர் இரவி சுப்பிரமணியம்.
வி.சுரேஷ் எனும் வாசகன் தனது கண்ணியுரையின் மூலம் தெளிவத்தையின் படைப்புகள் குறித்து பேசினார். ஒரு படைபாளியின் படைப்பை இன்னுமொரு படைப்பாளியோ அல்லது ஆய்வாளனோ அல்லாது ஒரு வாசகனின் கண்ணோட்டத்திலும் அது பற்றி மேடையில் பேசவேண்டும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தது சிரேஷின் உரை. கண்ணியுரை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மேடையில் நின்றார் வி.சுரோஷ்.
மெற்கிந்திய தீவுகள் முதல் நியுசிலாந்து வரை தமிழர்கள் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். அண்மையில் மேற்கிந்திய தீவுகிளின் கிரிக்கெட் அணி இந்தியா வந்தபோது அதில் ‘வீராசாமி பெருமாள்’ எனும் அசல் தமிழன் விளையாடினான். அவரை நேர்கண்டு அவரது பூர்விகம் பற்றிய தமிழக ஊடகங்கள் செய்திதரும் என ஆவலாக இருந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் விடைபெறும் காய்ச்சலிலேயே நமது தமிழன் வீராசாமி பெருமாள் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டான் என நினைக்கிறேன். இவ்வாறு நாம் கண்டுகொள்ளமால் விட்டவர்கள்தான் நமக்கு மிகமிக அண்மையில் வாழும் எமது இரத்த உறவுகளான இலங்கை மலையக மக்கள் என்பது வேதனைக்குரியது.
அவர்களது வாழ்வின் கொடுமைகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தம் தெளிவத்தையின் ஒவ்வொரு படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். ‘தெளிவத்தை மலையகச் சிறுகதைகளின் தந்தை’ தெளிவத்தை ஜோசப் அவர்களை கெளரவிப்பதன் ஊடாக இலங்கை மலையக மக்கள் மீதான நமது பார்வையும் கவனமும் விசாலப்படவேண்டும். அதுவே நாம் அவருக்கு வழங்கும் கெளரவமாகும். என வாழ்த்தினார் சுரேஸ்.
‘விஷ்ணுபுரம்’ எனும் படைப்பின் மூலமும் இலக்கிய சர்ச்சைகள் மூலமும் பிரபலம் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன்.; அவரது இணையத்தளத்தினூடா தினம் பத்தாயிரம் வாசகர்கள ஜெயமோகனை வாசிப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அவரது வாசகர்களின் வட்டமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. இந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்> வழிநடாத்துனர்> ஜெயமோகன். தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பதை விளக்குவதாக அவரது வாழ்த்துரை அமைந்திருந்தது.
நமது இலக்கிய ஒழுங்குகள் சில நேரம் வெவ்வேறு அதிகார மையங்களிடம் மாட்டிக்கொள்கிறது. படைப்புகளை படைப்புலகம் சாராதவர்களால் எடைபோடப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால் காலத்தால் மறுக்கப்படமுடியாத> மறக்கப்படமுடியாத பல படைப்பாளிகள் சம காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு கெளரவம் செய்யும் முயற்சியே ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய விருது. இது வரை அ.மாதவன்> பூமணி> தேவதேவன் ஆகிறோருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இம்முறை இரட்டிப்பு பரிசுடன் இலங்கை மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்டாலும் காலத்தால் மறுக்கப்படமுடியாத எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். அவரது ‘மீன்கள்’ எனும் சிறுகதையை தமிழில் வெளியான நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நான் பட்டியிலிட்டுள்ளேன். மலையக மக்களது வாழ்விடக் கொடுமைகளைச் சித்திரிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் இருப்பை சூசகமாகச் சொல்லும் படைப்பு அது. அந்நிய மண்ணில் அர்த்தமில்லாது அழியும் தலைமுறையின் உழைப்பை> கண்ணீரை> எதிர்ப்பார்பை கனவைச் சொல்லக்கூடிய தெளிவத்தையின் எழுத்துக்கள் நம்மிடமிருந்து விலகிச் சென்ற ஒரு தமைுறையினரின் கதைகளைச் சொல்பவை. நாம் நம் குருதியால் அறிந்துகொள்ளவேண்டிய மக்களின் வாழ்க்கை அது.
குடை நிழல் நாவலின் ஆசிரியரும் சரி அவர் குரலாக ஒலிக்கும் மையக்கதாபாத்திரமும் சரி புரட்சியாளர்கள் அல்ல. சிந்தனையாளர்கள் அல்ல. வெறும் எளிய மனிதர்கள். ஆனால் நீதியுணர்ச்சியுடன் உரிமை வேட்கையுடன் ஆதிக்கத்துக்கு எதிராக நிலைகொள்ளும் எளிய மனிதனின் உறுதியை நாவலெங்கும் காண முடிகின்றது. நாவலை நான் முதன்மை படைப்பாகக் கருதுவது இதனால்தான்.
தெளிவத்தையின் சிறப்பே அவர் சார்ந்த மலையக மக்களை அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டே எவ்வித வருமான நோக்கமும் இல்லாது ஐம்பது வரடத்திற்கு மேலாக எழுதிக்கொணடிருப்பதுதான். தான் மலையகத் தோட்டத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டுவதற்காகவே ‘தெளிவத்தை’ எனும் தேயிலைத் தோட்டத்தின் பெயரை அவரது ஜோசப் எனும் இயற்பெயருக்கு முன் இட்டுள்ள நேர்மை போற்றுதற்குரியது. அவரது நோக்கத்தின்படியே இன்று மலையக மக்களின் அடையாளமாக தெளிவத்தை ஜோசப் அவர்களை காணுகின்றோம். தெளிவத்தை ஜோசப் இலங்கை மண்ணில் ‘புதுமைப்பித்தனுக்கு’ விழா எடுத்து பெருமை சேர்த்தவர். உண்மையில் இந்த விருதினை அவருக்கு வழங்குவதன் மூலம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கெளரவம் பெறகிறது. என வாழ்த்துரையில் தெரிவத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது ஏற்புரையில்: விஷ்ணுபுரம் விருது எனக்கு வழங்கப்படுவதாக தொலைபேசியில் அறிவித்த போது எனக்கு ஒருவித பூரிப்பு எழுந்தது. உண்மையான தொப்புள்கொடி உறவை தமிழக மக்கள் அறிந்துகொள்ள தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என நினைத்தேன். தெளிவத்தை ஜோசப் என்கிறவன் யார்? அவனுக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படுகிறது போன்றவற்றை நண்பர் ஜெயமோகனின் உரை உறுதி செய்தது என நினைக்கிறேன்.
இலக்கிய வாசகர் சுரேஷ்; அருமையான அவரது உரையின் மூலம் என்னை ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என வாழ்த்தினார். அவருக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எனது சமகாலத்தில் எழுதிய எனக்கு வழிகாட்டியாக இருந்த என்.எஸ்.எம் ராமையா அவர்களையே ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என்பேன். ‘மஞ்சரி’ இதழ் தமிழ்ச சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பொது என்னுடைய ‘மீன்கள்’ கதையையும் என்.எஸ்.எம் இராமையாவின் ‘வேட்கை’ கதையையும் அதில் சேரத்துக்கொண்டு ஒரு குறிப்பையும் எழுதியிருந்தது. தமிழச் சிறுகதைகள் என்றால் நாம்தான் என நினைத்துக்கொண்டுள்ள தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் சிறுகதையின் பல்வேறு நுட்பங்கள் தெரிந்தவர்கள் தமிழகத்துக்க வெளியேயும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக் இந்த கதைகள் அமைந்துள்ளன என அந்தக் குறிப்பில் எழுதியுள்ளமையை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
எனது நண்பர் என்.எஸ்.எம் ராமையா ஒரு முறை பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ வாசித்துள்ளீர்களா தெளிவத்தை என்ககேட்டார். அதற்கு ‘பாரத்தசாரதிகளையெல்லாம் நான் வாசிப்பதில்லை’ என பதில் சொன்னவன் நான். அது நா.பார்த்தசாரதி தொடர்பாக கொண்டிருந்த விமர்சனம் காரணமாக. அவர் சிறந்த பத்திரிகையாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் சுற்றுலாவில் இலங்கைக்கு வந்துவிட்டு எழுதிய ‘மேகம் மூடிய மலைகளின் பின்னால்’ எனும் மலையக மக்கள் பற்றிய நாவல் தொடர்பாக எங்களுக்கு இருந்த விமர்சனமே என்னை அவ்வாறு சொல்லத்து}ண்டியது. ஆனால் என்.எஸ்.எம் ராமையா அவர்கள் ‘நீங்கள் சொல்வது நா.பா. நான் சொல்வது இ.பா -இந்திரா பார்த்தசாரதி என தந்திரபூமியை எனக்கு வாசிக்கத்தந்தார். அதன்பிறகு என்னை ஆகர்ஷித்த பார்த்தசாரதி இந்த இந்திரா பார்த்தசாரதி. இன்று அவர் அருகே என்னை அமரச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது.
எங்கள் மலையக மக்கள் வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது. எங்கள் இலக்கியங்கள் அந்தப் போராட்டங்களை பதிவு செய்துவந்துள்ளன> வருகின்றன. நாங்கள் ‘தமிழ்க்கூலிகள்’ என வெள்ளையர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். எங்களை ஒரு காலத்தில் ‘தோவன்னா காவன்னா’ என்றார்கள். அப்படியென்றால் ‘தோட்டக்காட்டானுகள்’ என்பது பொருள். பல இடங்களில் தோட்டத்தை எடுத்துவிட்டு ‘காட்டானுகள்’ என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதே போல் ஃமா –சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எங்களை கிழங்கு> வெங்காயப் பண்டங்களைப் போன்று பங்குபோட்டுக் கொண்டன இலங்கை- இந்திய அரசாங்ககங்கள். அப்போது ‘தோவன்னா காவன்னாவாக’ இருந்த எங்களை ‘காணா தோவன்னா’ என்றார்கள். இதற்கு கள்ளத்தொணி என்று பொருள். போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் தனிப்பட்ட சண்டையென்றாலும் கூட எங்களைத் தவறாகப் போட்டுக்கொடுத்து புலியென உள்ளே தள்ளிவிடுவார்கள். அதேபோல் ஒரு காலகட்டத்தில் கள்ளத்தோணி எனக் காரணம் காட்டி கைது செய்து கப்பேலேற்றிவிடுவார்கள். எங்கள் கவிஞரும் எழுத்தாளருமான மாத்தளை மலரன்பன் ‘கடலையே காணாத எங்களை கள்ளத் தோணி என்கிறார்கள்’ என ஒரு கவிதையிலே குறிப்பிட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கப்பலேற்றிய மலையகத் தமிழர்கள் இன்றும் தமிழநாட்டில் சிலோன்காரர்களாக வாழ்ந்து கொண்டிருந்கிறார்கள். அவர்களது மறுவாழ்வுக்காக இங்க வந்து மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்டவர்கள் இர.சிவலிங்கம் மற்றும் செந்து}ரன் போன்றோர். செந்து}ரனின் ‘உரிமை எங்கே’ சிறுகதை எமது மக்களின் பிரஜைகள் அந்தஸ்தின் அவலத்தை கோடிட்டுக்காட்டும் முக்கியமாகன சிறுகதை. அந்தக்கதைக்கு கல்கி சூன்றாவது பரிசையே கொடுத்தது. லட்சத்தில் அழியும் கல்கி போன்ற பத்திரிகைகள் அந்த கதையைக் கண்டுகொண்டதே பெரிய விஷயம்தான். சிவலிங்கம் செந்து}ரன் எனும் அந்த இரண்டு செயற்பாட்டாளர்களின் கல்லறையை ஒரு நிமிடமாவது கோத்தகிரியில் தரிசிக்ககிடைத்த வாய்ப்புக்காகவேனும் நான் விஷ்ணுபுரம் எற்பாட்டாளர்களுக்கு நன்றியுடையவனாகிறேன்.
இந்த விருது எனக்கு அறிவிக்கப்படாத போது நான் தமிழகத்திற்கு இலக்கிய பயணம் செய்யும் வாய்ப்பு இந்த 80 வயதில் எனக்குக் கிடைத்திருக்காது. நீங்கள் எனக்கு விருதினை அறிவித்து அம்மாவையும் அழைத்து வாருங்கள் என சொல்லிவிட்டீர்கள். அது சாத்தியமா என யோசித்திருந்தபொது அதனை சாத்தியமாக்கிக்காட்டியவர் என்னுடன் இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் எங்கள் இளைய எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர். அவர் விஷ்ணுபுரம் ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு தகவலை நேற்றுச்சொன்னார். ‘உங்களுக்கு வேண்டுமானால் பிரபல படைப்பாளியை அழைத்து கெளரவிக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். ஆனால் நான் இரண்டு குழந்தைகளை கூட்டிவந்திருப்பதாகவே உணர்கிறேன். அந்த பொறுப்பு எனக்குண்டு’ என கூறினார். அந்தப் பொறுப்பினை ஏற்று செய்து முடித்த திலகருக்கு நன்றி சொல்வது எனது கடமை. அதேபோல இந்த விழாவுக்காக இலங்கையிலுருந்து எந்திருக்கும் எங்கள் எழுத்தாளர் அல்-அஸுமத் அவர்களும் நன்றிக்குரியவர். எனது குடும்பத்தார் கும்பகோணத்தில் இருந்து வருகைதந்திருக்கிறாரகள்;. எனது தம்பி எழுத்தாளர் குடந்தை பரிபூரணின் மகள் ‘தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள்’ பற்றி தமிழகத்தில் பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்துள்ளார். அவரும் வருகை தந்துள்ளார். இலங்கை மலையகத்தில் எங்களுடன் வாழ்ந்து தாயகம் திரும்பிய சகோதரர்கள் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றிகள். ‘பரதேசி’ திரைப்படம் தொடர்பான விமர்சனப்பார்வை என்னிடத்தில் இருந்தாலும் தேயிலையின் வாழ்வியலை திரையில் காட்டியமைக்காக பாலாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பாக ஒழுங்கமைப்புகளைச் செய்துள்ளீர்கள் அதற்காகவும் பாராட்டுக்கள். இந்த விருதின் மூலமாக இலங்கை மலையகத்தில் வாழும் உண்மையான உங்கள் தொப்பூள்கொடி உறவுகளை அடையாளம் காணுவீர்கள் என எண்ணுகிறேன் என குறிப்பிட்டார்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர் செல்வேந்திரன் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். தெளிவத்தையின் இலங்கை நண்பர்கள்> குடும்பத்தினர் சார்பாக அவருக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தனர். பார்வையாளர்கள் வரிசையில் மூத்த எழுத்தாளர் கோவை ஞானி> கவிஞர் தேவதேவன்> நாஞ்சில்நாடன்> எழுத்து பதிப்பகத்தின் வே.அலெக்ஸ் போன்றோர் அமர்ந்திருந்தனர். விழா நிறைவில் எழுத்தாளர் கோவை ஞானி தெளிவத்தையை ஆரத்தழுவி வாழ்த்தினார். தெளிவத்தையின் இரண்டு நூல்களும் மண்டப வாயிலில் விற்றுத் தீர்ந்திருந்தன. கையில் கிடைத்த ஏதாவது ஒரு நூலில் வாசகர்கள்; தெளிவத்தையாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சியின் ஊடாக மலையக மக்களுக்கு தமிழகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித்தந்த விழாவின் ஏற்பாட்டாளரான எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனங்கள் - சர்ச்சைகளுக்கு அப்பால் நின்று மலையக மக்களின் நன்றிக்கும் பாராட்டுதற்கும் உரியவராகின்றார்.
படங்களும் தொகுப்பும் : மல்லியப்புசந்தி திலகர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...