சிவனு லட்சுமணன் |
"போராட்டமே வாழ்க்கை. ஆம், மனிதனும் மனித குலமும் இயற்கையின் மூலாதார சக்திகளை எதிர்த்து நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். இந்த தலை சிறந்த போராட்டத்தை வர்க்க அரசாங்கமானது, மனிதனை அடிமைப்படுத்துவதற்கான, மனிதனின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அருவருக்கதக்க போராட்டமாக மாற்றிவிட்டன." சக மனிதர்கனின் நன்மைக்காக, இருப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த சிவனு லட்சுமணன் பற்றி நினைக்கின்ற போது கார்க்கியின் மேற்குறித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.
மலையக மக்களின் வரலாறும் சமூகவுருவாக்கமும் மலர் தூவிய பாதையில் மென்நடைப் பயின்றதல்ல. ஒவ்வவொரு அடியும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், அதுவும் ஒரு ஜீவ மரண போராட்டத்தின் ஊடே வளர்ந்த தொன்றாகும். அத்தகைய போராட்ட பாரம்பரியங்களினூடாக கட்டியெழுப்ப பட்டதே இன்றைய மலையக சமூகமாகும். இன்று புதிதாக தோன்றிவருகின்ற மத்தியதர வர்க்கத்தின் தாக்கம் மலையகத்தை நாலாம் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான். இந்நிலையில் மலையகம் பொறுத்த குறுந் தமிழ் தேசிய உணர்வும் பிராந்திய மேலாதிக்க உணர்வும் தலைக்காட்டுவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது. இருப்பினும் மலையக தேசியத்தின் முற்போக்கான பக்கத்தை விருத்தி செய்து முன்னெடுத்து செல்கின்ற மலையக மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகள் பற்றிய தேடலும் பதிவுகளும் அவசியமாவையாகின்றன.
இவ்வகையில், 1977 ஆம் ஆண்டு தோட்டக் காணியை(நுவரெலியா- டெவன் பகுதியில்) பறிப்பதற்கெதிரான பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இறையாகிய சிவனு லட்சுமணன் போன்ற தியாகிகள் குறித்த நினைவுக் கூறல் அவசியமாதாகின்றது. இந்நினைவுக் கூறல் என்பது கூட வெறும் சம்பரதாய ப+ர்வமான நினைவுரைகளாவோ பதிவுகளாகவோ அல்லாமல் மலைக சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக அமையவேண்டும் என்பதே இன்றைய தேவையாகின்றது. இவ்விடயம் தெடர்பில் நோக்குகின்ற போது சிவனு லட்சுமணனின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான பின்னணி பற்றிய தெளிவுணர்வு அவசியமாதாகும்.
அப்போது ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்னணியும் இந்நாட்டில் தேசிய முதலாளித்துவத்துவ சக்தியாக விளங்கியது. தேசி முதலாத்துவம் வரலாற்றரங்கில் பிரவேசிக்கின்ற போது ஏகாதிபத்திய எதிர்புணர்வைக் கொண்டிருந்ததுடன் மக்கள் சார்ந்த பண்புகளையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பது அதன் முற்போக்கான அம்சமாகும். காலப்போக்கில் தமது வர்க்க நலன் காரணமாக சர்வதேச முதலாளித்துவத்திற்குள் சரணடைந்தனர். அதுவே தேசிய முதலாளித்துவத்தின் குணாதியமாகும். அந்தவகையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஏகாதிப்பத்திய எதிர்ப்புணர்வு படிபடியான மழுங்கியதுடன், தனக்கு கையாளாக பயன்பட்ட தொழிலாள விவசாய வர்க்ககத்திற்கு எதிராக மாறியது. திரு. பண்டாரநாயக்க இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த திருமதி. ஸ்ரீமா பண்டாரநாயக்க காலத்தில் இந்த பண்பு முனைப்படைந்தது.
இவ்வாறான நசிவு தரும் அரசியலின் பின்னணியில் கண்டிய பௌத்த-சிங்கள நிலபிரபுத்துவ உணர்வு முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் திருமதி. ஸ்ரீமா பண்டாரநாயக்க தமது ஒரே ஆண் வாரிசான திரு. அணுரா பண்டாரநாயக்காவை பாராளுமன்ற அரியணையேற்றுவதற்காக நுவரெலியா-மஸ்கெலியா என்ற தேர்தல் தொகுதி உருவாக்கரினார். கண்டிய பௌத்த-சிங்கள உணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"அனுரா இதனை மிகவும் திறமையாகப் புரிந்து கொண்டு செயற்படுபவதாக நிரூபிக்கப் போய் தனது இனவாத சொரூபத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு கண்டிய சிங்கள வீரன் எனக் காட்டிக் கொள்வதற்காக மலையகத் தமிழர் மீது இனவெறியைக் கக்கினார். இவருக்கு ஆதரவாக அவரது மாமனார் மற்றொரு "கண்டிய சிங்கள வீரன்" கொப்பேகடுவ "கண்டிய சிங்களவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுச் சிங்கள மக்களுக்கு பகிர்தளிப்பதற்குத் தடையாக தொண்டமான் குறுக்கே நின்றால் அவரையும் வெட்டிக் கூறுப்போட்டு பகிந்தளிப்பேன்" என முழங்கினார். இங்கு தாக்கப்பட்;டது தொண்டமான் அல்ல மலையக தொழிலாளர்கள்"(மோகன்ராஜ்.க, 1984, ஈழ ஆய்வு மையம், ஐக்கிய இராச்சியம். பக்.154,155.)
இத்தகைய பௌத்த-சிங்கள மேலாதிக்கச் சிந்தனையின் பின்னணியில் மலையக மக்கள் இந்நாட்டில் அந்நிய கூலிகலென்றும் அவர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டவர்கள் என்றும் இனவாத ரீதியான கருத்துகள் சிங்கள மக்களிடையே பிரச்சாரங்களாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்களுக்கு செந்தமாக பல தோட்டக் காணிகள் பறிக்கப்பட்டன. பல தோட்டங்களுக்கு நில அளவையாளர்கள் சென்ற போது அதனை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டங்களினால்; அவர்கள் பின்வாங்கினர். பல இடங்களில் தோட்டத்தொழிலாளர்கள் சிங்கள கடையர்களாலும் படையினராலும் தாக்கப்பட்டார்கள். சில தோட்டங்கள் தரிச நிலங்களாக மாற்றப்பட்டதுடன் அத்தோட்டங்களிலிருந்த தொழிலாளர்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு டெல்டா சங்குவாரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.
இத்தகைய காணிச் சுவிகரிப்பின் இன்னொரு பேரினவாத செயற்பாடாக அமைந்த நிகழ்வுதான் 1977 அம் ஆண்டு மலையகப் பகுதியில் 7000 ஏக்கர் தேயிலைக் காணியை பறித்து நிலமற்ற சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்தளிக்க வேண்டும் என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடிவடிக்கையாகும். தமது உழைப்புக்கான தளம் பறிமுதலாதலால் தாம் பாதிப்படைவோம் என்ற உணர்வில் தொழிற்சங்கங்களை கடந்து வெகுசன மக்கள் போராட்டங்கள் மலையகமெங்கும் எழுந்தன. அவ்வாறு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பொஸிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிவனு லட்சுமணனின் மரணம் விலை மதிப்பற்றது. இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர் என்பதை பீ.ஏ காதர், டி. அய்யாத்துரை ஆகியோர் பதிவாக்கியுள்ளனர். இப்போராட்டத்தின் மூலமாக மலையக மக்களின் காணி பறித்தெடுக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வடக்கிழக்கில் தோன்றிய இயக்கங்கள் மலையகம் பற்றிய கவனம் கொள்ளவும் அவர்களின் தேசிய இனப்பிரச்சனைப் பற்றி கருத்தில் எடுப்பதற்கும் சிவனு லட்சுமணனின் உயிர் தியாகம் முக்கியமானதொரு காரணியாக அமைந்திருந்தது. திம்பு பேச்சுவார்த்தையின் போது மலையக மக்கள் தேசிய இனமாக அங்கிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கான அகவய காரணமா இப்போராட்டமே அமைந்திருந்தது என்பதில் இருநிலைப்பட்டக்கருத்துகளுக்கு இடமில்லை.
மலையகத்தில் சிவனு லட்சுமணனின் மரணத்தை தொடர்ந்து அவரது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை எதிர்த்து தொழிலாளர்கள் புத்திஜீவிகள், மாணவர்கள் என பல தரப்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹட்டனில் ஹைலன்ஸ், பொஸ்கோ கல்லூரி; மணவர்கள் செய்த ஆர்பாட்டம், அவ்வாறே நாவலப்பிட்டியில் மாணர்கள் செய்த போராட்டம் என்பன முக்கிய நிகழ்வுகளாகும். இதன் பின்னணியில் செயற்பட்ட சில ஆசிரியர்கள் அரசியல் பழிவாங்கப்பட்டார்கள். சிலர் 24 மணித்தியாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக நாலபிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் எனபவரின் இடமாற்றத்தைக் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இவ்வாறே வடக்கில் தேன்றிய சில இயக்கங்கள் இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர் என்பதை திரு. சி. புஷ்பராஜா தனது " ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தமது உழைப்புக்கு களமாக் அமைந்த நிலத்தை பாதுகாப்பதற்கான நடந்த போராட்டமும் அதில் உயிர் தியாகம் செய்த சிவணு லட்சுமணனின் இறப்பும் மலையக மக்களை விழிப்புக் கொள்ளச் செய்தது எனலாம்.
சிவனு லட்சுமணனின் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றக் காலச் சூழல் தேர்தல் காலமாக இருந்தமையினால் இந்த சம்பவத்தை மலையக தொழிற்சங்கத்தினரும் , ஐக்கிய தேசிய கட்சியினரும் தமது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக் பயன் படுத்தி;க் கொண்டனர். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில,; முன்னர் பதவிலியிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஜக்கிய தேசியக் கட்சி சுதேச விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இக்காலப் பின்னணியில் உலகமயப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிடப்பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள்நாட்டு ஏகபோக வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்வதாக அமைந்திருந்தன.
இவ்வகையில் பார்க்கின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபகத்தில் குறிப்பிட்டிருந்தாலும் நடைமுறையில் கண்டிய பௌத்த சிங்கள நிலபிரபுத்துவ சிந்தனைகளையே தமது அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தினர். அவ்வாறே இந்நாட்டை விதேச மற்றும் உள்நாட்டு மேட்டுக்குடியினரின் சுகபோகத்திற்கும் செல்வ குவிப்பிற்காகவும் திற்நது விட்ட யு. என். பி அரசாங்கமும் மலையக மக்களுக்கு எதிராக அவர்களது இனத்தனித்துவத்தை தேசிய இனத்திற்குரிய அடையாளங்களை சிதைப்பதற்கான நடிவடிக்கைகளையே மேற்கொண்டது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக மலையக தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் உணர்வுக் கொண்டிருப்பினும் அதனை இவர்கள் துளியளவும் கவனத்pலெடுக்கவில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் எண்பித்திருக்கின்றது.
அன்றைய சூழலில் எமது உழைப்பிற்கு களமாக இருந்த மண் பறிபோவதற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் மலையகத்தில் எழுந்த போராட்டங்கள் உயிர்த்தியாகங்கள் அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய போதினும் காலப்போக்கில் அவை எம்மிடமிருந்து பறிபோனதாகவே காணப்படுகின்றன. இன்று மலையகத்தில் என்றும் இல்லாதவாறு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இயற்கை சூழலும் நீர்விழ்ச்சிகளும் உள்ளாச பிரயாணிகளின் சுகபோகத்திற்கான இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. சிவனு லட்சுமணன் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற டெவன் பிரதேசம் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். ஆனால் இதுவரை சிவனு லட்சுமணனுக்கான நினைவு சின்னமோ அல்லது கல்லறையொ கட்டப்படவில்லை என்பது துயரகரமான செய்தியாகும். இந்நினைவு சின்னங்கள் என்பது கூட சிவனு லட்சுமணனுக்கு வருடாவருடம் தெய்சம் (திவசம்) கொண்டாடவோ சூடம் போடுவதற்கோ அல்ல. இன்று உலகமயமாதல் சுழலில் தன்டையாளங்களையே சுயசிந்தனையோ இல்லாதெழிக்கப்பட்டு- தனது காலையே சூப்பு வைத்து குடிக்க முனைகின்ற தலைமுறையினர் உணவுப் பெறவும் தமது முன்னோர் நமக்காக செய்த மகத்தான போராட்டங்கள் தியாகங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவும் சிவனு லட்சுமணன் நினைவுக் கூறப்படல் வேண்டும்.
சிவனு லட்சுமணன் போன்றோரின் தியாகத்தால் கட்யெழுப்பட்ட மலையக மக்களின் உரிமைக்கான போராட்டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த போராட்டமாகவோ அல்லது குழு போராட்டமாகவோ முன்னெடுக்கப்படாமல் அது பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலையகத் தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் அவசியமானதாகும். இந்த பின்னணியில் சிவனு லட்சுமணன் நினைவுக் கூறப்படல் காலத்தின் தேவையாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...