Headlines News :
முகப்பு » » மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம்: வெறுமனே குரலோடும் எழுத்துக்களோடும் நின்றுவிடக் கூடாது

மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம்: வெறுமனே குரலோடும் எழுத்துக்களோடும் நின்றுவிடக் கூடாது


இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதியை மலையகம் என்கிறோம். தென்னிந்தியாவிலிருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டு மலைப் பகுதிகளில் செறிந்து வாழும் மக்களை மலையக மக்கள் என்கிறோம். மலைப் பகுதியின் பரந்த நிலப்பரப்பில் தேயிலையையும் குறிப்பிட்டளவு இறப்பர், தென்னை பயிர்ச்செய்கைகளையும் கொண்ட பிரதேசங்களை உள்ளடக்கியிருக்கிறது. சுமார் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இப்பகுதியில் வாழ்கிறார்கள். இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்களைக் கடந்த நிலையிலும் கூட இன்றுவரை அவர்களின் வாழ்க்கையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

தொழில் ரீதியாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பினை தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல தசாப்தங்களாக செலுத்தி வருகின்றனர். ஆனால் கல்வியறிவு, சுகாதாரம், போசாக்கு, மந்த போசணை, நிலவுரிமை, வீட்டுரிமை, சுகாதாரம், பொருளாதாரம், போதிய சம்பள உயர்வு கிடைக்காமை. ஆசிரியர் தொழில் தவிர்ந்த ஏனைய அரச தொழில் வாய்ப்பின்மை, நிலையான அரசியல் கொள்கை இல்லாத அரசியல் தலைமைகள் போன்ற பல சமூக அரசியல் தளங்களிலும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.

பல பிரச்சினைகளின் பின்னணியில் வாழும் இச்சமூகத்திற்கு உயர் கல்வி நிலையங்களும், உயர்தரப் பாடசாலைகளும் உயர்தர வகுப்புக்கான தனியார் நிலையங்களும், தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய கிளைகளும், திறந்த பல்கலைக்கழகங்களின் பிராந்திய கற்கை நிலையங்களும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் (அழகப்பா, அண்ணாமலை) ஓரளவு மலையகப் பிரதேசத்தை நோக்கி வந்துவிட்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால் இவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய கல்விச் சமூகத்தை சார்ந்ததாகும்.

இந்த கற்கை நிலையங்களுக்குத் தேவையான மாணவர்களை உள்வாங்கக்கூடிய தகுதி முதலில் எம் மத்தியில் வர வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருக்கும் பட்டதாரி மாணவர்களின் தொகை போதுமானதாக இல்லை. எமது பல்கலைக்கழக கிளை நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவதற்கும் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் பாரிய சவால்களாக உள்ளன.

இச்சவால்களை முறியடிப்பதற்கு மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர்கள், சிரேஷ்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பின் கீழ் ஒன்றுபட்டு ஒரு சக்தியாக இணைந்து முயற்சித்தால் நிச்சயமாக மலையகத்திற்கு ஒரு தனியான பல்கலைக்கழகத்தை அமைத்துவிடலாம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கும், பேரம் பேசுவதற்கும் இச்செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், கட்டடங்கள், நிலம், மனித பெளதீக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய அரசியல் தலைமைத்துவத்தை முதலில் நாட வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும். ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரையில் பிரச்சினையே தலைமைத்துவத்தில் தான் இருக்கிறது. எனினும் தலைமைத்துவம் விரும்பினால் மலையகத்திற்கென ஒரு பல்கலைக்கழகத்தை அட்டன் அல்லது கொட்டகலையில் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது.

மலையகத்திற்கென பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென்பதில் வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தாலும் இக்கோரிக்கையை எதிர்ப்போர் எவருமில்லை.

மலையகத்திற்கான பல்கலைக்கழகத்தை இன்னும் 5 ஆண்டுகளில் அமைக்க வேண்டும் என வைத்துக்கொண்டால் இதற்கான முன்னோடி வேலைத்திட்டங்களை யார் முன்னெடுப்பது? முதலில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு நுவரெலியா வலயத்தில் தமிழ் மொழி மூலமாக 26 வீதமாக இருக்கின்ற அதேசமயம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் காணப்படுகிறது. எனவே க.பொ.த. சாதாரணதரத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை 50 வீதமாக உயர்த்த ஒவ்வொரு பாடசாலையும், கல்வி வலயங்களும் இணைந்து முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் உயர்தரத்தில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் கலை, வர்த்தகப் பிரிவுகளுக்கே அதிகமான மாணவர்கள் செல்கின்றனர். விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளில் மூன்று பாடங்களிலும் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும், எனவே இதற்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு முன் க.பொ.த சாதாரண தர, உயர்தர வகுப்புக்களுக்கு நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாடசாலை மட்டத்தில் மேற்படி வகுப்புக்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை எடுப்பதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். மலையக கல்வி அபிவிருத்திக் குழுக்களை பிரதேச ரீதியாக உருவாக்க வேண்டும். விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதோடு தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். திறமையான உயர்தர பாட ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைகளுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும். விஞ்ஞானம், கணதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதோடு தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மத்திய மாகாண சபையில் முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த எஸ். அருள்சாமியால் முன்னெடுக்கப்பட்ட ஆண்டுதோறும் 500 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மலையகத்திற்கு தனியான பல்கலைக்கழகம் என்ற கனவு நனவாகும்.

மலையகப் பகுதியிலிருந்து உயர் கல்வி கற்று பல்கலைக்கழகங்களுக்கும் உயர் தொழில்களில் உள்ளோர் தான் படித்த பாடசாலைக்கு தங்களால் இயன்ற அறிவையும் உதவிகளையும் வழங்கி அறிவுசார் சமூகத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற மாணவர்களின் சரியான விபரங்கள் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை. அதுபோலவே உத்தேச மலையக பல்கலைக்கழகத்துக்கான முன்னோடி ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆய்வுகளை மேற்கொள்ள எவரும் உதவி செய்வதாக இருந்தால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.

பல்கலைக்கழகம் வேண்டும் என குரல் கொடுப்போர் வெறுமனே குரலோடும் எழுத்துக்களோடும் நின்று விடாமல் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அரசியல் பேதமின்றி அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். இதில் சுயநலப் போக்குகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையும் கடமையுமாகும்.

கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் பெயரில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பத ற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே மலையகம் விடுக்கும் வேண்டுகோளாகும்.

கொட்டகலை 
இரா. சிவலிங்கம் Mphil

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates