Headlines News :
முகப்பு » » தோழர் இளஞ்செழியன் - லெனின் மதிவானம்-

தோழர் இளஞ்செழியன் - லெனின் மதிவானம்-


“எனது வாழ்நாள் முழுவதும், தந்தை நாட்டிற்காகவும் புரட்சிக்காகவும் உள்ளத்தாலும் உடலாலும் சேவை செய்துள்ளேன். இந்த உலகத்திலிருந்து நான் மறையும் போது, இன்னும் நீண்ட நாள் இருந்து மேலும் அதிக சேவை செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதற்hககவே அல்லாமல் வேறு எதற்காகவும் வருந்த மாட்டேன். நான் இறந்த பின், எனது இறுதி சடங்குகளைப் பெரியளவில் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். முக்களின் நேரமும் பொருளும் விரையமாக்கப்படாமல் இருப்பதற்காகவே இதைக் கூறுகின்றேன். “
என ஹோ சி மின் தம் உயில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். தோழர் இளஞ்செழியன் பற்றி எழுத நினைக்கின்ற போது மேற்குறித்த நினைவுகள் நெஞ்ஞை நெருடுகின்றது. அவர் வாழ்ந்த காலம், காலத்தின் சூழ்நிலை, அச்சூழ்நிலையில் அவர் இயங்கியமுறை எளிமையான வாழ்க்கை, மக்களை நேசிக்கின்ற பண்பு என்பன ஹோ சி மின்னுடைய வாழ்வின் சில பகுதிகளோடு பொருத்திப் பார்க்க கூடியதாக உள்ளது. எவர்ரொருவருடைய வாழ்வும் பணிகளும் மனித வாழ்வின்  சிறந்த இலக்கணமாக திகழ்கின்றதோ அத்தகையோரின் வாழ்வு சமூக முக்கியத்துவம் உடையவையாகின்றது. இளம்செழியன் இத்தகையோரில் ஒருவராவார். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்வாழ் நாள் ப+ராவும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தவர்.  
மலையக சமூகம் காலணித்துவவாதிகளாலும், இனவாதிகளாலும் மிக கொடுரமாக நசுக்கப்பட்டது.  இளஞ்செழியன் தன்னளவில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதநிதி என்ற வகையிலும் தன்னுடைய தொடர்ச்சியான தேடல் வேட்கையும் இத்தோழரில் ஆழமாக மனிதநேயமாக மாறுவதையும்  அந்த மனிதநேயம் அரசியல் பண்பாட்டுத்துறையில் அவரை செயலூக்கத்துடன் செயற்படத் தூண்டுவதையும் அவருடைய வாழ்க்கை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
 இளஞ்செழியன் பற்றிய ஆய்வுகளும் மதிப்பீடுகளும் அவ்வப்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் திரு. பெ. முத்துலிங்கம் எழுதிய ’எழுதப்படாத வரலாறு” (இரண்டாவது பதிப்பு இலங்கை தி..மு.க. வரலாறு எனத்லைப்பிடப்பட்டு :நாளந்தா பதிப்பகம்- சென்னை,) என்ற இவர் பொறுத்து வெளிவந்த நூலாகும். இந்நூலையொட்டி இளஞ்செழியனை பல்துறைநோக்கில் ஆணுகி ஆராயும் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் வெளிவந்திருப்பதாக தெரியவில்லை.  கொழுந்து இதழில்களில் இவர் பற்றிய பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவ்வாறே திரு. அந்தனி ஜீவா சூரியகாந்திப பத்திரிகையில் இஞஞ்செழியன் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகளும் பல செய்திகளை கூறுவதாக அமைந்திருந்தன.  ஆந்தவகையில் இளஞ்செழியன் பற்றி உருப்படியான விமர்சனங்கள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. மறுப்புறத்தில் அவர் இயங்கி காலத்தில் தோழர்களுக்கு எழுதிய கடிதங்கள், வெளியிட்ட அறிக்கைகள், நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்களை கொண்டே அவர் பற்றி எழுத வேண்டியுள்ளது. அதேசமயத்தில் அவை அனைத்தும் கிடைத்தால் தான் தொகுக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் ஒரே கருத்தை திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருப்பதோ அல்லது இது பற்றிய மதிப்பீடுகளை புறக்கணிப்பதோ அபத்தமான செயலாகும்.
இளம்செழியன் தமது ஆரம்பகால செயற்பாடுகளை கொழும்பில் வாழ்ந்த  தொழிலாளர்களிடையே: முன்னெடுத்தவர்.  வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும்  தாழ்த்தப்பட்டிருந்த கடைசிப்பந்திகள், வீட்டு லேலையாட்கள், நகர சுத்தி தொழிலாளர்கள், சலவை, சிகையளங்கார தொழில்களில் ஈடுப்பட்டிருந்தவர்கள் இன்னும் இது போன்ற இதர வர்க்கத்தினர் மத்தியில் தான் அவரது இயங்து தளம் வேர் கொள்கின்றது. இந்தப் பின்புலத்தில் அத்தகையோரின்  சுயமரியாதையை காத்துக் கொள்வதற்காக தோற்றம் கொண்ட ஸ்தாபனமே இலங்கை சுயமரியதை இயக்கம்(இ.சு.ம-1932). இவ்வியக்கம் தழிழகத்தில் பெரியாரின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது. “ஈழத்தில் தலைநகரான கொழும்பு கொள்ளுபிட்டியில் 1932 ஆம் ஆண்டு இலங்கை சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தோழர்களான நா. பழனியப்பன், எஸ்.கே. மாயகிருஸ்ணன், எஸ்.டி. சுப்பையா, எம். ஏ ஹமீது, சிங்காரம் ஆகியோரின் முயச்சியால் தொடங்கப்பட்டது. இதே ஆண்டு ஈ. வெ.ரா பிரச்சார கழகமொன்று தொடங்கப்பட்டது. இக்கழகத்திற்கு தலைவராக ந. முத்துப்பரியர், செயலாளராக வீரையா, பொருளாளராக நெ.க. காளிமுத்து, ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். இக்கழகத்தில் தோழர்கள், ஆறுமுகம், டி. எஸ் சுப்பையா, கு.யா. திராவிடகழல்,  காத்தமுத்து இளம்செழியன், சிங்காரம், டீ. எம் குரே, ஏ. டி. சுப்பையா ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்( இளஞ்செழிpயன். அ. 2000, ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர இளஞ்செழியன் அரசியல் பொன் விழாக் குழு, கண்டி, ப.2).
இவ்வகையில் தோற்றம் கொண்ட இவ்வியக்கத்தின் கூட்டங்கள் பெரும் பாலும்;இரவு பத்து மணியளவில் தான் ஆரம்பிக்கும் என இளஞ்செழியன் தமது நூலில் பதிவு செய்திருக்கின்றார். காரணம் அந்த தொழிலாளர்களுக்கான  ஓய்வு நேரம் என்பது அதுவாகவே இருந்தது. இவ்வியக்கத்தில் பங்கு பற்றிய பல தோழர்கள் மிகுந்த உணர்வுடனும் அர்பணிப்புடனும் செயற்பட்டமையினாலேயே  குறித்த காலம் வரை நின்று நிலைக்க கூடியதாக இருந்தது.  மூடநம்பிக்கிகைகளுக்கும் மத நம்பிகைகளுக்கும் எதிராக தீவிர கருத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.   சாதியமைப்பை தீவிரமாக சாடிய இவ்வியக்கம் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலுக்கு எதிராகவும்  செயற்பட்டது.
1932ஆம் ஆண்டு ரஷ்ய பயணத்தை மேற்கொண்டிருந்த பெரியார் அதனை முடித்துக் கொண்டு வரும் வழியில்  இலங்கைக்கும் வருகை தந்தார். அவர் இவ்வியக்கத்தின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு நீண்ட உரையாற்றியுள்ளமை இவ்வியக்கத்தினருக்கு ஆதர்சனமாக அமைந்திருக்கின்றது. இதன் தாக்கத்தால் இவர்கள் இந்தி மேலாதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இவ்வகையில் ஒரு ஓடுக்குமுறைக்குட்பட்ட சமூகம் பிறிதோரு சமூகம் ஒடுக்கப்கபடுகின்ற போது அது பற்றிய கரிசனைக் கொள்வது தார்மீகமாகும். இ.சு.ம த்தில் அங்கம் வகித்தவர்கள் பெரும்பாலோனோர் சாதிய ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வும் கோபாவேசமும் இந்தி மொழி திணிப்பிற்கும் அதன் பின்னணியில் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கும் எதிராக குரல் கொடுத்தனர். 
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெரியார் தனது 68ஆவது வயதில் 26 வயது நிரம்பிய மணியம்மையை திருமணம் செய்து கொண்டமை இயக்க தோழர்களிடையே பல அதிருப்திகளை எற்படுத்தியிருந்தது. அதன்வெளிப்பாடாகவே திரு அண்ணாத்துரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாற்று அமைப்பை நிறுவிக் கொண்டார் எனக் பொதுவாக கூறப்படுகின்றது. இருப்பினும் பெரியார் பண்பாட்டுத் தளத்தில் இயங்க அண்ணாத்துரை அரசியல் தளத்தில் இயங்க முனைந்தமைமே இதற்கான பின்னணியாக அமைந்திருந்தது. பார்பன ஆதிக்கத்தை அரசு அதிகாரத்தை கைப்பற்றி தகர்த்த முனையலாம் என்பதை விட தாம் ஒரு அழுத்த சக்தியாக நின்று கொண்டு அரசை நிர்பந்திப்பதன் மூலமே பார்பன ஆதிக்கத்தை தகர்த்தலாம் என்ற அடிப்படையில் பண்பாட்டுத்தளத்தில் செயற்பட்டவர் பெரியார். அண்ணாத்துரை அரசியலதிகாரத்தை கைப்பற்றி சீர்த்திருத்த நடவடிக்கைள் மூலமாக மாற்றத்தை கொண்டு வரலாம் என நம்பி செயற்பட்டார். இதுவே பெரியார் அண்ணாத்துரை முரண்பாட்டிற்கான பிரதான காரணமாக அமைந்திருந்து எனலாம்.  இது பற்றிய ஆழமான ஆய்வுகள் வெளிவர வேண்டியது அவசியமானதாகும். இது அதற்கு ஏற்ற இடமல்ல.  இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக் கூடியதாக உள்ளது. அதன் பின்னணியில் உருவானதே இலங்கை திராவிட முன்னேற்றக் கழகமாகும். புதிய பெயர் மாற்றம் பெற்ற இக்கழகத்தின் அ.ம. அந்தோனிமுத்து பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பின் 1949 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தோழர் இளஞ்செழியன் அதன் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இத்தகைய பின்னணியில் தமது சமூக அரசியல் செயற்பாடுகளுக்கு விய+கம் அமைத்துக் கொண்ட இளஞ்செழியன் அவர்களுடைய பார்வை மலையகத்தை நோக்கி நகர்கின்றது. சுயமரியாதை திருமணம் ஒன்றிற்காகவே அவர் மலையகத்திற்கு (கடுகண்ணாவில் உள்ள கிரிமெட்டியா தோட்டத்திற்கு) வருகின்றார். பொரும்பாண்மையாக உழைக்கு மக்களை தளமாக கொண்டிருக்கின்ற மலையக சமூகம் சார் வாழ்நிலை இ.தி.ம.க. த்தினதும் தோழர் இளஞ்செழியனதும் சமூக செயற்பாடுகளுக்கான பரந்து விரிந்த தளமாக விளங்குகின்றது. இக்காலச் சூழலில்  இ.தி.ம.க. த்தின் நோக்குகளும் போக்குகளும் இலங்கையை(குறிப்பாக மலையகம்) தழுவியதாக மாறியது. இளஞ்செழியன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இவ்வம்சம் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
“இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம்;, இலங்கை மக்களுடையது என்பதே அதன் லட்சியமும் வாழ்வும் ஆகும என்பதை புரிந்துக் கொண்டு ஒரே இன மக்கள் என்ற திராரவிட இனத்தவர்களுக்கான தன்னால் ஆன மட்டும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, பாரத நாட்டு காந்தியார், நேருஜி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறி நாம் இந்தியர்கள் நமது தலைவர்கள் காந்தி நேரு என காங்கிரஸ் பக்கம் மலைநாட்டு மக்களை இழுத்து மக்கள் மீது இந்நாட்டுப் பற்றும், இந்நாட்டு நம்பிக்கையை கொள்ளாத வண்ணம் பல லட்சம் மக்களது வாழ்விலே மண்ணைத் தூவி அவர்களை நாடற்றவர், நாதியற்றவர், என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். முலைநாட்டு மக்களே! அஞ்ஞாதீர்! அஞ்ஞாதீர்! உங்களது பிரஜா உரிமை இதோ பாரோர் புகழும் பாரதப் பிரதமர் நேருவிடமிருந்து வருகிறது தபாலில் என்ற நம்பிக்கையை ஊட்டி... இன்னுமொரு பிரிவினர் சென்னையை காட்டி அங்கிருந்துதான் உங்கள் விடுதலை நிச்சயமாக வரும் என்ற ஆகாத ஊட்டி “…வருகின்றனர் என இ.தி.மு.க சார்பில் தோழர் இளஞ்செழியன் வெயிட்ட அறிக்கையில் குறிப்பிருகின்றார்.  (மேற்கோள், முத்துலிங்கம். பெ. மே.கு.நூ. ப.40)
இளஞ்செழியன் தாம் சார்ந்த ஸ்தாபனங்களை உருவாக்குகின்ற போது அவை உழைக்கும் மக்களையே  ஆன்மாவாக கொண்டிருந்தார். அவர் தமது பண்பாட்டு செயற்பாடுகளை தோட்டத் தொழிலாளர்களிடையே  முன்னெடுத்து செல்கின்ற போது பல தொழிற்சங்க அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்களை அவ்வமைப்புகளில் அங்கம் வகித்தனர்.  ஒரு பொது பணிக்காக அவர்களை வெகுசனமாக திரட்டியிருந்தார். எடுத்துக்காட்டாக தோழர் இளஞ்செழியனாலும் அவரது தோழர்களாலும்  உருவாக்கப்பட்ட இ.தி.மு.க, இளம் சோஷலிச முன்னணி(இ.சோ.மு.) ஆகிய அமைப்புகளின் கோட்டையாக ஹட்டன் பகுதியை சார்ந்த காசல்றி தோட்டம் விளங்கியது. அத்தோட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் அங்கத்தவர்களாக இருந்தனர்;. தோழர் இளஞ்செழியனின் கூட்டங்களை கூட்டங்களை ஒழுங்கமைத்த கோ. ஆறுமுகம் தொழிலாளர் தேசிய சங்கத்தில் முக்கிய பதவியை வகித்தவராவார். அதே போன்று திரு. வே. மணிபாலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவராவர். ஆத் தோட்டத்திலும் அதனை அண்டிய தோட்டங்களிலும் வாழ்ந்த மக்களில் 75 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் இளஞ்செழியனின் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் பங்குப்பட்டியுள்ளனர். தொழிற்சங்கங்களுக்கு அப்பால் ஒரு பண்பாட்டுத்தளத்தில் பொது மக்களை அணித்திரட்ட முடியும் என்பதை மலையகத்திலே சாத்தியமாக்கியவர் தோழர் இளஞ்செழியன். இவ்வாறு அணித்திரட்டிய மக்களிடையே தி.மு.கா, மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுத்து சென்றார். இருப்பினும் பெரியாரின் கருத்துக்களே இவரில் முனைப்புற்றிருந்தது. மக்களிடையே பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை அம்மக்களின் உழைப்பு   சுரண்டலோடும் அதற்கு துணைப்போகின்ற பிற்போக்கு தொழிற்சங்கள் குறித்தும் தீவீரமான கருத்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார்.  இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக தோட்டத் தொழிலாளர்கிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதுடன் அவர்கள் தாம் அங்கம் வகித்த தொழிற்சங்க அமைப்புகளிலும் கேள்விகளை எழுப்பினர். இளஞ்செழியனைக் கடந்தும் திராவிட கருத்துக்கள் மலையகத்திலே பரவியிருந்தன என்பதும் உண்மை. தமிழ் நாட்டு பத்திரிகைகள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தினால் அத்தகைய கருத்துக்கள் பரவியிருந்தன. ஆனால் அவை இளஞ்செழியனால் முன்னெடுக்கப்பட்டது போனறு மலையக சமூகம் சார் சிந்தனையாக அவை அமைந்திருக்கவில்லை. அவை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் பொருத்தமற்றதாக காணப்பட்டது. 
இந்த பின்புலத்தில் மலையக மக்கள் இம்மண்ணுக்குரியவர் என்ற என்ற சிந்தனைப் போக்கு இளஞ்செழியனில் முனைப்புருகின்றது. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்களை அரசியல் அநாதை ஆக்கியதற்கு  எதிராக தீவீர குரல் கொடுத்தவர் இளஞ்செழியன். அவர் ஆரம்ப கால முதலாகவே தமிழ் மக்களின் மொழியுரிமை, மலையக மக்களின் வாக்குரிமை தொடர்பில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களிலும், எழுச்சி கூட்டங்களை நாடாத்துவதிலும் கவனமெடுத்திருந்hர்.  1963 ஆம் ஆண்டு பண்டாரவளையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை ஒன்றுத்திரட்டி நாடற்றவர் மறுப்பு மாநாட்டை கூட்டியமை இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கையில் காடையர் கூட்டத்தால் இவர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவருடன் உறவுக் கொண்டிருந்த இடதுசாரி சிங்களத் தோழர்கள் இவர்களை காப்பாற்றியதுடன் அதரவும் அளித்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.  மலையக மக்களிடையே வீரியமிக்க உணர்வை ஏற்படுத்துவதில் இம் மாநாடு பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. 
அவ்வாறே இளஞ்செழியனின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று மக்கள் விடுதலை முன்னணியிரின் இந்தியவிஸ்தரிப்பு வாதம் தொடர்பான நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியதுடன் அது குறித்து தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முனைந்தமையாகும். 
இலங்கையில் மூலவளத்தை கொள்ளையடித்து அதனை இந்தியாவிலே கொண்டு சேர்த்து நம்நாட்டில்; வாழ்கின்ற இந்திய முதலாளிகளுக்கு எதிரான இனவாத பார்வை மலையக மக்களுக்கு எதிராகவே திருப்பட்ட்டிருந்தன. இலங்கை வாழ் இந்திய முதலாளிகள் பேரினவாதிகளிடையே தமக்கான எதிர்ப்பு தோன்றுகின்ற போது அதற்கு ஆதரவு தேடி மலையக மக்களை அணித்திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்தப்பின்னணியில்  மலையக  சமூகத்தின் இருப்பை சிதைக்க் வேண்டிய தேவை பேரினவாதிகளுக்கு இருந்தது. 1970களின் இறுதிப்பகுதியில் நோர்வ+ட் பிரதேசத்தில்  இளம் சோஷலிச முன்னணியினரின் ஏற்பாட்டில் திரு ரோஹன விஜயவீராவுடனான கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை ஒழுங்கமைத்தவர்களில் திருவாளர்கள் கருப்பையா, ஜெகதீஸ்வரன், பி.எம். லிங்கம், இரா ஜெயராமன், முதலானோர் முக்கியமானவர்கள். தோழர் சி. மாசிலாமணி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  இளஞ்செழியன் சிறப்புரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் திரு. திரு ரோஹன விஜயவீர இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்து பேச மறுத்து விட்ட அதே சமயம் அதனை அவர் சார்ந்த கட்சியுடனான தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போது விவாதிக்கலாம் தட்டிக்கழித்தமைக் குறித்து இளஞ்செழியன் தமது நூலில் பதிவு செய்திருக்கின்றார்.   இது தவறானது என்பதை திரு. ரோஹகண விஜயவீரவுக்கு சுட்டிக்காட்டியதிலும் அதனை மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்ததிலும்  இளம் செழியனுக்கும் இ.தி.மு.க  அமைப்பாக்க செயற்பாட்டின் பின்னணியில் தோற்றம் கொண்ட இளம் சோஷலிச முன்னணிக்கும் முக்கிய பங்குண்டு. இக்கூட்டத்தின் பின் இவ்வியக்கத்தினர் பொலிஸாரின் தேடுதலுக்குட்பட்டனர்.; இளஞ்செழியன், இரா. ஜெயராமன் முதலானோர் தலைமறைவாகியிருந்த சந்தர்ப்பத்தில்; கருப்பையா, ஜெகதீஸ்வரன், பி.எம். லிங்கம் முதலானோர்கள் பொலிசாரின் விசாரனைக்கும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள் என்பதும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டத்தக்கது.
மலையக சமூகத்தின் மீதாக தொடந்து nமுற் கொள்ளப்பட்டு வந்த காட்டுமிராண்டி தனமாக  இன வன்முறைகள் இம்மக்களை பாரதூரமாக பாதித்தது.  உயிர் ஆபத்துகள் - ஈவிரக்க மற்ற நிலையில் இடம்பெற்ற கொலைகள், கற்பழிப்பு சம்பவங்கள்.  அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்கள் கொள்ளையடித்ததுடன் சிலவற்றை அழித்தும் நொருக்கிய நிகழ்வுகள்- தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து அந்நியமாக்கப்ட்ட கொடுமைகள் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் யாவும் இம்மக்களின் வாழ்வை பல்லேறுவிதங்களில் சிதைவுக்குள்hக்கியது. இவ்வானதோர் சூழலில் மக்கள் தமக்கான பாதுக்காப்பு தேடி  வடக்கு பகுதிக்கும் இந்தியாவிற்கும் சென்றனர். சிறு வியாபரிகளும் மற்றும் இதர மத்திய தர வர்க்கத்தினரும் பெரும்பாலும்  இந்தியாவிற்கு சென்றனர். ஒரு சமூகம் என்ற வகையில் இவர்களின் புலம்பெயர்வு அவர்களின் இருப்பில் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. இவ்வகையில் இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரிவாதத்திற்கு எதிராக தோழர் இளஞ்செழியன்  செயற்பட்டுள்ளார். அவரது இரத்த ஜூலை (இளம் சோஷலிச முன்னணி வெளியீடு, கொழும்பு) என்ற நூலில் இம்மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகள், அதன் பின்னணியில் மலையக தலைமைகளில் நிலைப்பாடுகள் என்பன பற்றியெல்லாம் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்குட்படுத்துகின்றார்.
இவ்விடத்தில் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கையேற்ற தலைவர்கள் சிங்கள பௌத்த நிலபிரபுத்த வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். இதே போன்று வடக்கிழக்கு சார்ந்த வெளிபட்ட மிதவாத தலைமைகளும் இலங்கை தேசியத்தின் பின்னணியில் ஏகாதிபத்திய காட்டிக்கொடுப்பு குணாதிசியத்துடன் தம்மை இனங்காட்டிக் கொண்ட போது அதற்கு எதிராக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை தமிழ் இடது சாரிகள் முன்னெடுத்தனர்;. “ ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி தகர்ப்புக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதான பண்ணயைடிமைத் தகர்ப்புத் தேசியக் கடமையை நிறைவுசெய்யும் வரலாற்று பணி கையேற்கப்பட்டது. அதேவேளை தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடி இருக்க வேண்டும் தான். அவ்வாறு போராடவில்லை என்பதாற்றான் தமிழ் தேசியம் பிற்போக்கு நிலையில் வளர்ந்தது என்பதற்கில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியப் போராட்டத்திற்கு எதிராகத் தமிழ் தேசியம் வளர்ந்ததால் அதற்கு எதிரான, தவிர்க்கவியலாத  நிலைபாடு எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமை காரணமாகவே சுயநிர்ணய உரிமைக் குறித்த அவசியமான போராட்டங்களை கைவிட்டனர் தமிழ் இடதுசாரிகள்”(;இரவீந்திரன்.ந. 2012 பின்னுரை, ஊற்றுக்களும்  ஓட்டங்களும்- லெனின் மதிவானம், பாக்கியா பதிப்பகம், கொழும்பு).
இந்நிலையில் ஒடுக்கப்பட்டமக்களின் சாதி தகர்ப்பு போராட்டத்தில் கவனம் செலுத்திய இடதுசாரிகள் தமிழ் மக்கள் மீதான இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன் வைக்க தவறியமை ஒரு இடைவெளியை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான பார்வையை தமிழரசுக் கட்சியினர் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக சாதி தகர்ப்பு போராட்டத்தை நிராகரித்தனர். இங்கு சாதி தகர்ப்பு போராட்டமும் தமிழ் இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும் பிளவுப்பட்ட தேசியப் போராட்டங்களாக அமைந்திருந்தன. சிங்கள இடதுசாரிகளும் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை தமக்கு சாதகமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். மேற்கிளம்பி வந்த பேரிவாதத்திற்கு எதிராக உருப்படியான விமர்சனத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்  சிங்கள இடதுசாரிகள் போதிய கவனமெடுக்கவில்லை என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இவ்வாறானதோர் சூழலில் இலங்கை வரலாற்றில் பேரினவாததை அரசியல் அரங்கில் இனங்கண்டு அதற்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார். அதன் தொடர்ச்சியான ஆளுமையாக வெளிப்பட்டவரே  இளஞ்செழினாவார். பேரிவாத ஒடுக்கு முறைக்கு எதிரான விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்த இளஞ்செழியன் இனவாதியல்ல. இந்நிலையில் தான் அவரது தமிழரசுக் கட்சியினுடனான தொடர்புகள் ஏற்படுகின்றது. இருப்பினும் காலப்போக்கில் தழிரசுக் கட்சிக்குள் காணப்பட்ட முற்போக்குணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் மேலோங்குகின்ற போது அவர்களுடன் இளஞ்செழியன் முரண்படுவது அவரது தெளிவான  பார்வையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் மொழியுரிமை வாக்குரிமை தொடர்பில் தொடர்ந்து முன்னெடுத்த அவரது செயற்பாடுகள் சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல தமிழ் மிதவாத சக்திகளையும் கூட அச்சம் கொள்ள செய்திருந்தது. இ.தி.மு.க பேரிவாதிகளின் தூண்டுதலினால் தடைசெய்யப்பட்ட போது தமிழ் மிதவாதிகளின் மௌனம் இந்தப் பின்னணியிலானதாகும்.   அதேசமயம்; சிங்கள இடதுசாரி தோழர்கள் அவருக்கு இளஞசெழியனுக்கு ஆதரவளித்திருந்தனர். இந்திய விஸ்தரிப்புவாதத்துடன் இளஞ்செழியனை இணைத்துப் பார்த்தமைக்கு இ.தி.ம.க என்ற பெயரும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. தொடந்து வந்த காலங்களில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரியே அவ்வமைப்பு செயற்படத் தொடங்கியது.
யாழ்பாண சாதி அமைப்பு முறையை மலையக சாதி அமைப்பு முறையை ஒப்பு நோக்குகின்ற போது அத்தகைய இருக்கம் கொண்டதாக காணப்படவில்லை. பண்பாட்டுத்தளத்தில் சாதிய அபை;பு தகர்ப்புத் தொடர்பில் இளஞ்செழியன் தொடர்ந்து இயங்கினார். ஆதிக்கம் சார்ந்த சடங்கு முறைகளை நிராகரித்து சுயமரியாதையிலான சடங்குகளை அறிமுகம் செய்திருந்தார். பூப்புனித நீராட்டு விழாவின் போதும் திருமண சடங்குகளின் போது சமூக சீர்திருத்த முறையில் நிகழ்வுகளை ஒருங்கமைத்ததுடன் நீண்ட உரைகளையும் ஆற்றியுள்ளார். பல கலப்பு திருமணங்களையும் செய்து வைத்துள்ளார். சாதியத்pற்கு மூலமான இந்து சமயத்திலிருந்து வேறு சமயங்களுக்கு மாறுவதால் தமது சாதிய அடையாளத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்த கோட்பாட்டை தழுவி தாழ்த்தப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இளஞ்செழியனும் மேற்கொண்டுள்ளார். இந்தப் பின்னணியில் இளஞ்செழியன் இலங்கையில் தோற்றுவித்த அமைப்பே தமிழ் பௌத்த சங்கம் ஆகும்;. வடக்கிலும் திரு. வைரமுத்து தலித் மக்களை சாதிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபடவும் தமக்கான உரிமைகளை பெறுவதற்காகவும் சிங்கள மொழியை கற்பதுடன் பௌத்த மதத்திற்கு மாறுவதே சரியான திசை மார்க்கம் என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளார். அது நடைமுறை சாத்தியமற்ற செயற்பாடுகளுக்கே இட்டு சென்றது என்பதை திரு. யோகரட்ணம் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்ற நூலில் தெளிப்படுத்தியிருக்கின்றார். இதற்கு அப்hல் பரந்துப்பட்ட வெகுசன போராட்டங்களின் ஊடாக தலித் மக்களின் உரிமைகள் எவ்வாறு வென்n;றடுக்கப்பட்டன என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இளஞ்செழியனின் பௌத்த மதமாற்றமும் இந்தப் பின்னணியில் நோக்கத் தக்கதே.   இவரது இயக்கம் வேகமாக பரவிய காலத்தில் தான் அதிகமான கலப்பு திருமணங்கள் மலையகத்தில் நடந்துள்ளன. அத்துடன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போதும் திராவிட இயக்க சார்ந்த மார்க்சிய மூலவர்கள் சார்ந்த பெயர்களே இக்காலத்தில் தான் பெருமளவில் வைக்கப்பட்டுள்ளன.
தோழர் இளஞ்செழியன் ட்ரொட்ஸ்கிய சிந்தாந்ததில் ஈடுபாடு காட்டியதால் வடக்கிலும் மலையகத்திலும் இயங்கிய ஸ்டாலினிச மாஓ சார்ந்த இடது சாரிகளுடன் ஐக்கிய பட முடியாமல் போயிருக்கலாம். அதே சமயம் அவ்விடதுசாரிகளும் தமிழ் தேசிய போராட்டம் பற்றியும் இ.தி.மு.க பற்றியும் கொண்டிருந்த நிலைபாடு- அவற்றில் காணப்பட்ட இடைவெளிகள் காரணமாக இளஞ்செழியளை அரசியல் பண்பாட்டுத் துறையில் இனங்காண முடியாமல் போனமை துரதிஸ்வரமாதொன்றாகும்.
இவ்வகையான புரிதலுடன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழப்பட வேண்டிய சூழ்நிலையில், இ. தி. மு. க. பற்றி சி. சிவசேகரம் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“தமது சமூகத்தின் பின்தங்கிய நிலை, பரவலான மூடநம்பிக்கைகள், மக்களது அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டும் இ.தொ.கா. தொழிசங்க தலைமை போன்றவற்றைக் கண்டு மனம் வெதும்பியவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டது அந்தச் சூழலில் இயல்பு என்றாலும், தமிழகத்தில் பகுத்தறிவு சுயமரியாதை இயக்கங்களது வளர்ச்சிக்கு வசதியாக இருந்த பிராமண விரோத உணர்வு, இந்தி எதிர்ப்பு போன்றவை இலங்கையில் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு சுயமர்யாதைச் சிந்தனைகளில் கவர்ச்சி ஒரு சமுதாய இயக்கமாக வளர மடியாது போனது. என்றாலும் புதிய சமுதாயத்துக்கான தேவையும் மனித சமத்துவம் என்ற இலட்சியத்தையும் சாதி மதங்களின் பேரால் மக்கள்  ஏமாற்றப்படுவதை நிறுத்தப்படுவதையும் ஏற்றுச் செயற்படக் கூடிய சக்திகளின் முக்கியமான தோற்றுவாயிகளில் பகுத்தறிவு சுயமரியாதை சிந்தனையும் ஒன்று.” (அறிவாஞ்சலி ,2000, தம்பு இளையதம்பி நினைவுக்குழு, கொழும்பு, ப. 15)
இதுவரை பார்த்த விடயங்களை கொண்டே மேற் குறித்த கருத்து தவறானது என்பதை காட்ட போதுமானவை என நம்புகின்றேன். தமது முன்னூகங்களுக்கு மாறாக ஆதாரங்கள் தென்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு நிரம்ப துணிச்சலும் நேர்மையும் தேவை. அத்தகைய பண்புகள் இல்லாத போதே மேற்குறித்த புலம்பல்கள் வெளிப்படுகின்றன.
இளஞ்செழியன் பண்பாட்டு தளத்தில் இனவாதத்திற்கும் குறுகிய பிரதேசவாதத்திற்கும் அப்பால் ஓர் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. மலையத்தின் ஆன்மாவாக திகழ்கின்ற தொழிலாள வர்க்க போரட்டத்தின் பின்னணியில் மலையகம் விடுதலை பெறுவதே காலத்தின் தேவையாகும். இந்நிலையில் மலையகத்தின் முன்னோடிகளின் எத்தனங்களை- முயற்சிகளை- செயற்பாடுகளை இன்னொரு தலைமுறையினரிடம்- புறப்பாட்டிடம் கையளிக்கின்ற போது இளஞ்செழியன் போன்ற ஆளுமைகள் குறித்த ஆய்வுகள் காய்த்தல் உவத்தலின்றி வெளிக்கொணரப்படல் வேண்டும். முற்போக்கு மார்சிய ஆய்வுகளின் ஊடாகவே அத்தகைய ஆய்வுகளை வெளிக் கொணர முடியும்.

நன்றி- ஜீவநதி மலையகச் சிறப்பிதழ் (2013)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates