Headlines News :
முகப்பு » , » 'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம்: சுமதி சிவமோகன்

'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம்: சுமதி சிவமோகன்

சுமதி சிவமோகன்

'மர்மம் நிறைந்த காட்சிகள், மலையகத்தை சுற்றி நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆவணமாக பிரதிபலிப்பது போன்ற நுட்பங்களை நான் இந்த திரைப்படத்தில் கையாண்டுள்ளேன். இவ்வாறான நுட்பங்களை கையாளும்போதுதான் மலையக மக்களின் குரல்கள் வெளியில் வரும். 
'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம். இதில் அவர்களின் குரலே மேலோங்கி உள்ளது' என்று கூறுகிறார் இங்கிருந்து திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலாநிதி சுமதி சிவமோகன்.

நாடகவியளாலரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி சுமதி சிவமோகன் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் முழுநீளத் திரைப்படம் 'இங்கிருந்து'.

நாடகவியளாலர்,  நாடக நெறியாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் என பல பரிமாணங்களில் தன்னை தக்க வைத்துகொண்டு இருக்கும் இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறைத் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இவர் ஏற்கனவே, 'பிரளயம்', 'ஒரேஞ்சஸ்' ஆகிய இரு குறுந்திரைப்படங்களை எழுதி, இயக்கியுள்ளார். இதில் 'பிரளயம்' குறுந்திரைப்படத்திற்கு பார்சிலோனாவில் விருது கிடைத்தது. அதேபோல், 'இன்சேர்ச் ஒஃப் த ரோட்' ஆவணப்படத்தின் பிரதியாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். 

க்ரிஷ் கர்ணாட்டின் 'நாக மண்டலம்' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து நெறிப்படுத்தியவர். 'மௌனத்தின் நிழல்', 'பயணங்கள்' உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி, நடித்து, நெறிப்படுத்தியிருக்கிறார்.  

திரைப்படத்துறையில் பெண்களின் பங்களிப்பு (இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை வசனம், ஒளிப்பதிவு...) என்பது இன்னும் 50 வீதத்தை எட்டாத ஒரு கட்டத்தில் உலக சினிமா இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே பெண்கள் பலர் தங்களது இருப்பையும் அவ்வப்போது காட்டிச் செல்ல தவறிவில்லை. அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துகொண்டுள்ளார் சுமதி சிவமோகன். 

மாற்று சினிமாவின் அவசியத்தை வலியுறுத்தும் இவர் நமக்கேயான (இலங்கை தமிழ் சினிமா) சினிமா கலாசாரம் ஒன்று உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்த தவறவில்லை. 

இவரை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக நேர்கண்டபோது அவர் கூறியவை,

கேள்வி:- எதனை அடிப்படையாக  கொண்டு இங்கிருந்து திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது?

பதில்:- இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஓர் ஊமைப் பெண் நடித்திருக்கின்றார். வறுமைக்குட்பட்ட ஒரு பெண்ணும், வாய் பேச முடியாத கதாநாயகியும் கொழும்பிலிருந்து செல்லும் ஆய்வாளர் ஒருவரும் தேயிலைத் தோட்டத்தில் சந்திக்கின்றனர். இவர்களை சுற்றி மலையகத்தின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும்வகையில் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. 

மர்மம் நிறைந்த காட்சிகள்;, மலையகத்தை சுற்றி நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆவணம் போன்ற நுட்பங்களை நான் இந்த திரைப்படத்தில் கையாண்டுள்ளேன். இவ்வாறான நுட்பங்களை கையாளும்போதுதான் மலையக மக்களின் குரல்கள் வெளியில் வரும். 'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம். இதில் அவர்களின் குரலே மேலோங்கி உள்ளது. 

இந்த திரைப்படம் குறுகிய கால செயற்திட்டமல்ல. கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நீண்டகால செயற்திட்டம். அது 2013ஆம் ஆண்டே நிறைவு பெற்றுள்ளது.

கேள்வி:- மலையகத்தை அடிப்படையாகக்கொண்டு திரைப்படமொன்றை எடுக்க வேண்டும் என உந்துதல் அளித்தது எது?

பதில்:- மலையகம் என்று கூறும்போது ஒரு பிரத்தியேக சமூகமாக இயங்கி வருகின்றது. பொருளாதார ரீதியாகவும்சரி, கலாசார நிலையிலும்சரி அது ஒரு தனித்துவத்தை கொண்டு இயங்குகின்றது. எனவே மலையகத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்பதே இத்திரைப்படத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.

எனவே மலையகத்தின் முழு சாரத்தையும் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறேன். வெறுமனே மலையகம் என்ற பெயரில் வெறும் காதலை மட்டுமே கூறிச்செல்லாது, ஒட்டுமொத்த மலையக சமூகத்தையும் இத்திரைப்படத்தினூடாக கொண்டு வந்திருக்கிறேன்.

மலையக மக்களின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் இதுவரை இலங்கையில் வெளிவரவில்லை. மலையகத்தினை பின்னணியாக கொண்டு பல காதல் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அந்த திரைப்படங்களில் கொழும்பில் அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து சென்றவர்;களே பாத்திரங்களாகியுள்ளனர். மலையகத்தை பிரதிபலிப்பதற்காக தேயிலை மலையில் தொழில்புரியும் ஒரு பெண் அழகாக சித்தரிக்கப்பட்டிருப்பார். மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்வாங்கப்பட்டிருக்கும். 

மலையகத்தின் யதார்த்தத்தை, அடையாளங்களை, மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக்கூறிய திரைப்படங்கள் இதுவரை வெளிவரவில்லை. அது எனக்கு ஒரு குறையாகவே பட்டது. 

மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் இந்திய திரைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தவர்களாகவே உள்ளனர். தென்னிந்திய திரைப்படங்களை பார்வையிடும் நாங்கள் இதுவரை ஒரு பார்வையாளர்களாகவே இருந்து வந்துள்ளோம். இதனை நான் பிழையென்று கூறவில்லை. 

ஆனால், எவ்வளவு காலத்திற்கு நாங்கள் தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து பார்த்து அதுதான் எமது கலையென்று கூறமுடியும்?. ஏதோ ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளியிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

எமது தமிழ்ச் சமூகத்திற்கேயான ஒரு கலைவடிவம் உருவாகவேண்டியது அவசியம். ஏனைய கலைகளில் எமக்கே உரிய பாணி காணப்படுகின்றது. ஆனால், திரைப்படத்துறையை எடுத்துகொண்டால் அது பெரிய இடைவெளியாகவே காணப்படுகின்றது. ஆரம்பக்காலத்தில் இலங்கை தமிழ் சினிமாவிற்கான ஒரு வடிவம் காணப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை என்றே கூறவேண்டும்.   

கேள்வி:- இந்த திரைப்படத்தை இயக்கும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

பதில்:- இந்த திரைப்படத்திற்கு 80 வீதமான செலவு எனது கைகளிலிருந்தே போயுள்ளது. அதுவே ஒரு பெரிய சவால்தான். அதனைவிட பெரிய சவால் என்று எதுவும் இல்லை.

இத்திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்வதற்காக அதிகமான செயலமர்வுகளை நடத்தியுள்ளேன். அந்தச் செயலமர்வினூடாகவே நான் நடிகர்களை தேர்வு செய்தேன். நடிகர்களை தேர்வு செய்ததுடன் எனது கடமை முடிந்துவிடவில்லை. 

தேர்வு செய்த நடிகர்களுக்கு நடிப்பு சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை வைத்தேன். மலையகத்தில் நடிப்புத் திறமைகொண்ட கலைஞர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். எவ்வித குடும்பப் பின்னணியும் இல்லாத சாதரண ஒரு கலைஞர்களே இங்கிருந்து திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தில் அவர்களது நடிப்பை பார்த்தால் அது விளங்கும். புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தால்கூட இந்தளவு நடித்திருப்பார்களோ என்பது சந்தேகமே. 

அந்தளவு தமது நடிப்புத்திறமைகளை இங்கிருந்து திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் பறைசாற்றியுள்ளனர்.

திரைப்படத்தின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக மலையகத்திற்கு செல்லும்போது ஹோட்டல்களில் தனி பெண்ணாகவே தங்க வேண்டி ஏற்பட்டது. பெண்ணொருவர் தனியாக இருந்து தேநீர் குடிக்கின்றாள் என பார்த்தவர்கள் எண்ணியிருக்கக் கூடும். பிறகு அவர்களாகவே நான் திரைப்படம் எடுப்பதற்காகவே வந்திருக்கிறேன் என்பதனை உணர்ந்துகொண்டார்கள்.

கேள்வி:- இங்கிருந்து திரைப்படத்திற்கு சிங்கள மொழிக் கலைஞர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு குறித்து கூறுங்கள்?

பதில்:- இங்கிருந்து திரைப்படத்திற்கு சகோதர மொழி கலைஞர்களின் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவர்கள் நன்கு ஒத்துழைப்பு தந்தார்கள். நான் சகோதர மொழிக் கலைஞர்களுடன் ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளேன்;. எனவே எனது திரைப்படம் என்று வந்தபோது அக்கலைஞர்கள் எனக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.

புகைப்பட கலைஞர், எடிட்டர் உட்பட பலர் இந்த திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளார். அவர்கள் கேட்ட தொகையை நான் வழங்கவில்லை. ஆனாலும், இந்திரைப்படத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை இங்கு கூறியே ஆகவேண்டும்.

அதேபோல், இந்த இடத்தில் நான் ஒருவரை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். மலையகத்தில் 'சசிக்குமார்' என்ற ஒருவர், இந்த திரைப்படத்தை எடுத்து முடியும்வரை எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

சரியான நேரத்திற்கு செயலமர்வுகளை ஒழுங்கமைத்தது முதல் திரைப்படம்சார்ந்து அனைத்து வேலைகளுக்காகவும் அவர் கடுமையாக உழைத்திருந்தார். அவரில்லாமல் இந்தளவு இந்த திரைப்படத்தை எடுக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.

கேள்வி:- திரைப்படத்தில் இசையமைப்புக் குறித்து கூறுங்கள்?

பதில்:- மலையகத்தில் மிகவும் புகழ்பெற்ற மீனாக்ஷp அம்மாவின் 'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்..' பாடல் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படம் முழுதும் காட்சிகளுக்கு ஏற்பட அதன் குறியிசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு இசையமைத்தவர் இசைக்கலைஞர் வி.சதானந்தன். பாடியிருப்பவர் நிர்மலா ராஜசிங்கம். 

திரைப்படத்திற்கான இசையை இலங்கையின் நவீன இசையமைப்பாளர்களுள் ஒருவரான அன்ரனி சுரேந்திரா வழங்கியுள்ளார்.  அவர் தனக்கு வழங்கிய பொறுப்பை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.

கேள்வி:- இத்திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச விருதுகள் குறித்து கூற முடியுமா?

இங்கிருந்து திரைப்படம் 'ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் 'விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதை'  பெற்றுக்கொண்டுள்ளது.

'புதுமையான கதை சொல்லும் பாணி, சினிமா தளத்தில் எவ்வாறு வெளிவருகிறது' என்பதனை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த திரைப்படத்திற்கு விருதினை பரிந்துரை செய்துள்ளனர். இதனைவிட 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 10ஆவது ஆசிய பெண்கள் மாநாட்டில் இத்திரைப்படத்தை திரையிடவுள்ளனர். 

இந்தியாவில் சென்னையில் இந்த திரைப்படத்தை போட்டுக்காட்டும்படி எனக்கு மின்னஞ்சல் ஒன்றும் வந்துள்ளது. 'தி ஹிந்து' பத்திரிகையில் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமென கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த திரைப்படத்திற்கு பண உதவி கேட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தையும் நான் ஆரம்பத்தில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.

கேள்வி:- இந்த திரைப்படம் இலங்கையில் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் யாரால் முன்னெடுக்கப்பட்டன?

பதில்:- இலங்கைத்திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில்தான் இங்கிருந்து திரைப்படம் வெளியிடப்பட்டது. 

கேள்வி:- திரைப்படத்துறைக்கு நீங்கள் பிரவேசிக்க காரணமாய் இருந்தது எது?

பதில்:- எனக்கு நாடகத்துறை என்றால் அதிக ஈடுபாடு. பல்வேறு நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியும் இருக்கின்றேன். நாகமண்டலம், அடுப்படி அரட்டை, மௌனத்தின் நிழல்கள் உட்பட பல நாடகங்கள் நெறியாள்கை செயப்பட்டுளன.

இதுவே, திரைப்படத்துறையிலும் என்னை பிரவேசிப்பதற்கான உந்துதலை தந்தது.

நேர்காணல்:- க.கோகிலவாணி

தொடர்புடைய  தகவல்கள்....

'இங்கிருந்து' திரைப்படம் ஹட்டனில் வெளியீடு

சுமதியின் 'இங்கிருந்து': இலங்கையின் முதலாவது பரிசோதனைத் திரைப்படம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates