Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன்

மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன்


மலையக மக்கள் வரலாற்றில் இன்று நாம் மிகப் பிரதான சந்தியொன்றில் வந்து நின்றிருக்கின்றோம். இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை வைத்து நோக்கும் போது மலையக மக்களின் எதிர்காலம் எந்த திசை நோக்கிச் செல்ல இருக்கின்றது என்பது மிகக் குழப்பமானதாகவே உள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத விதத்தில் மலையகம் மிகப் பெரிய தலைமைத்துவ நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. இப்போது காணப்படுகின்ற மலையகத் தலைமைகள் நேர்மையற்றதும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத, பணத்துக்கும் பதவிக்கும் விலை போகத்தக்க தலைமைகளாகவே உள்ளன. இந்த நிலைமையானது மலையகத்துக்கு மட்டுமன்றி பொதுவான நாட்டின் நிலைமையாகவும் உள்ளது.

இத்தகைய நிலையில் மலையக மக்கள் தாம் யார்? தமது பிரச்சினைகள் யாவை? தமது எதிர்கால இலக்குகள் யாவை? இன்றுவரை தாம் விட்ட தவறுகள் என்ன? தமது அரசியல் நிலைப்பாடு எதிர்வரும் காலங்களில் என்னவாக இருக்க வேண்டும்? என்பன தொடர்பில் உரத்துச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக தமக்கென இவர்கள் அரசியல் வேலைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அந்த வகையிலேயே இன்றைய இக் கருத்தரங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

இன்றைய வரலாற்றுத் தேவை

மலையக புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கொழும்பில் இருக்கும் வர்த்தகப் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், கணக்கறிஞர்கள் முதலான தொழிற்சார் நிபுணர்கள் தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்புச் செய்வதில்லையென்றும் அவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து பிரிந்து போய்விட்ட அந்நியர்கள் போல் நடந்துகொள்கின்றனர் என்றும் பொதுவான குற்றச்சாட்டு ஒன்று ஏற்கனவே உள்ளது. ஒரு பிரிவினர் இவர்கள் கொழும்பில் கலியாணம் கட்டிக் கொண்டு சொந்த அபிவிருத்தியில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவர்கள் தம்மை இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காட்டிக் கொள்ளவே வெட்கப்படுகின்றனர் என்றும் அபிப்பிராயம் வைத்துக் கொண்டுள்ளனர். இக்கூற்றுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதனை அவர்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் பல மலையக எழுத்தாளர்கள் இவ் அம்சங்களைக் கதைப் பொருட்களாகக் கொண்டு கதைகள் எழுதியிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய நிலையில் “”நாம் சார்ந்திருக்கும் மலையக சமுதாயத்தில் இருந்து சற்றே சில அடிகள் முன்னோக்கி வந்துவிட்ட நமக்கு இச் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது” என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். உண்மையில் அப்படி ஒரு பொறுப்பு எம் மீது சுமத்தப்பட்டுள்ளதா? என்பதில் பலருக்கும் பலவித கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் எமக்கு அப்படி ஒரு கடப்பாடும் இல்லை என்று கருதுபவர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஆதலால் நாமெல்லாம் நாம் சார்ந்திருக்கும் மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் என்பதில் முரண்பாடுகள் இருக்க முடியாது.

அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்பது அடுத்த கேள்வி. அந்த கேள்வியில் இருந்தே இன்றைய கருத்தரங்கின் தேவை எழுகின்றது. இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் நாம் எவ்விடத்தில் இருக்கின்றோம் என்பது தொடர்ந்தும் வெட்கக் கேடான விடயமாகவே இருக்கின்றது. ஆதலினால் அடுத்து வரும் தசாப்தங்களில் நாம் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாசார வளர்ச்சி கருதி நமக்கென ஸ்திரமான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியம் மிகப் பூதாகரமான தோற்றம் பெற்றுள்ளது. இந்த அவசியத்தைப் புறக்கணித்தால் நாம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மிகப் பின்னோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய நமது அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற சுயநலப்போக்குகளால் மிக விரைவில் நாம் அரசியல் அநாதைகளாகி விடுவோம் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனை இப்போதே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும்.

எவ்வித உணர்வுபூர்வமான சிந்தனைகளும், கொள்கை வேறுபாடுகளுமின்றி எந்தக் கட்சிக்காரன் டிக்கட் தருவான், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று இவர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள். சிலர் பாராளுமன்றத்தில் நுழைந்து விட்டாலே பெரும்பேறு கிடைத்துவிடும் என்ற பேராசையால் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஆதலால் உண்மையான தலைமைகளை இனங்காண வேண்டும் என்ற அவசியமும், உண்மையான தலைமைகளை உருவாக்க வேண்டிய அவசியமும், போலித் தலைமைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற பாரிய பொறுப்பும் கூட நமக்குண்டு.

இன்று நாம் இங்கு கூடியிருப்பதும் கூட அத்தகைய பொறுப்பின் ஒரு அங்கம் தான் என்று நான் கருதுகிறேன். எதிர்காலத்தில் மலையகம் கடைப்பிடிக்க வேண்டிய அல்லது எவ்வித கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது பொருத்தமானதாக அமையும், என்பதனை ஆராய்ந்து பார்க்கவே இங்கு நாம் கூடியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் அண்மையில் ஒரு ஆய்வின் பொருட்டு மலையகத் தமிழரின் வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த சில ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களில் இருந்து பொறுக்கிய சில தகவல்களை, இன்றைய கருத்தரங்குக்கு பொருத்தமான விதத்தில் உங்கள் முன்வைக்கலாம் என்று கருதுகின்றேன்.

மலையகத் தமிழ்த் தேசியத்துவத்தின் தோற்றம்

இலங்கை வாழ் தென்னிந்தியத் தமிழரின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது. எனினும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1804ஆம் ஆண்டில் இருந்தே மலையகத் தமிழ் மக்களின் வரலாறு இலங்கையில் ஆரம்பமாகின்றது என்று கருதலாம். இந்த ஆண்டில் இருந்துதான் யுத்த மற்றும் சிவில் நிர்மாண வேலைகளின் நிமித்தம் தென்னிந்தியத் தொழிலாளர்களை இராணுவக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது ஆரம்பமாகின்றது. நோர்த் என்பவர் ஆளுநராக இருந்தபோது 1804ஆம் ஆண்டில் இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு முன்னோடிப் படை அமைப்பொன்றை (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) அமைத்தார். 1818ஆம் ஆண்டு பிறவுன்றிக் என்ற ஆளுநர் கண்டிக் கிளர்ச்சியை அடக்குவதற்காகப் படை நகர்த்திய போது அதில் 5,000 தென்னிந்தியர் தொழிலாளர்களாக வேலை செய்தனர். 1821ஆம் ஆண்டு எட்வர்ட் பார்ன்ஸ் என்பவர் ஆளுநராக இருந்தபோது மேற்படி பயணியர் படைப் பிரிவை அரை இராணுவத் தன்மை கொண்டதாக மாற்றி பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்களை வீதி, பாலங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தினார். அவர்கள் கொழும்பு கண்டி பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளை அமைத்தனர். இவர்கள் விக்டோரியாப் பாலம், களுத்துறை கட்டுகஸ்தோட்டைப் பாலங்கள் முதலானவற்றையும் அமைத்தனர். எனினும் மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் செய்யவென முதன் முதலில் 1818ஆம் ஆண்டு தொழிலாளர்களைத் திரட்டியவர் பார்ன்ஸ் என்ற ஆளுநரும் ஜோர்ஜ் பர்ட்ஸ் என்ற கோப்பித் தோட்டச் சொந்தக் காரருமாவார்கள். இவர்கள் முதன் முதலில் 1800 இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வந்து கம்பளைக்கருகில் சின்னப்பிட்டிய என்னும் இடத்தில் கோப்பிச் செய்கையில் ஈடுபடுத்தினர்.

எனினும் முன்பு சீதாவாக்கை முதலாம் ராஜசிங்க மன்னன் காலத்திலேயே, அவன் இந்திய மலபார் பிரதேசத்தில் இருந்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த “சாலிய’ குலத்தினர் பெருந் தொகையானோரை இலங்கைக்கு அழைத்து வந்து கருவாப்பட்டை உரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளான். இவர்களின் சந்ததியினர் களுத்துறை மாவட்டத்தில் “தெமழகம’ என்ற கிராமத்தில் இப்போதும் வாழ்வதாகத் தெரிகிறது.

இவ்விதம் ஆரம்பித்த இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழரான மலையகத் தமிழரின் வரலாறு 200 ஆண்டுகளாக கருவாத் தோட்டம், கோப்பித் தோட்டம், கரும்புத் தோட்டம், தென்னந் தோட்டம், கொக்கோத் தோட்டம், சிங்கோனாத் தோட்டம், றப்பர்த் தோட்டம், தேயிலைத் தோட்டம் என்று தோட்டம் தோட்டமாக தொடர ஆரம்பித்தமை நாம் அறிந்த வரலாறாகும்.

சமூக வரலாற்றை அவ்விடத்தில் வைத்து விட்டு அரசியல் ரீதியிலான சிந்தனை வரலாற்றை சற்று நோக்குவது இன்றைய தலைப்புக்கு சற்று பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

அதன் அடிப்படையில் நமது அரசியல் வரலாற்றை ஆய்வுத் தேவை கருதி 2 கால கட்டங்களுக்குரியதாகப் பிரிக்கின்றேன். ஒன்று,

1. 1804 முதல் 1920 வரையிலான காலத்தின் வரலாறு, மற்றது
2. 1920 முதல் இன்று வரையிலான வரலாறு.

இங்கு இரு வேறான சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதனை வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து அவதானிப்போர் தெரிந்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

1. 1804 முதல் 1920 வரையுள்ள காலப் பகுதியில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கையின் “கண்டிச் சீமை’யிலே “மாசியும் தேங்காயும் விளைவதாகக் கருதி’ அவற்றையும் பொன்னையும் பொருளையும் சேர்த்துக் கொண்டு தம் நாட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்ற சிந்தனையிலேயே செயற்பட்டுள்ளனர். மறுபுறத்தில் அவர்கள் பொன்னையும் பொருளையும் சேர்த்தனரா என்பதிலும் பார்க்க தமது சொந்த நாட்டில் நிலவிய வறட்சியும், பசியும், பட்டினியுமே அவர்களை இலங்கை நோக்கித் தள்ளின எனலாம். எனினும் அவர்கள் 1920 காலப்பகுதி வரையில் இலங்கையை தமது நிரந்தர இருப்பிடமாகக் கருதிச் செயற்படவில்லை. அதற்கு அவர்களை அப்போது கட்டிப்போட்டு வைத்திருந்த கங்காணி முறைமையும் கொத்தடிமை முறையும் மேலும் பல காரணிகளும் பங்களிப்புச் செய்தன.

2. ஆனால் இரண்டாவது காலப் பகுதியான 1920ஆம் ஆண்டுக்குப் பின்னரான இவர்களின் சிந்தனையில் மாற்றம் காணப்படுகின்றது. கோப்பியைப் போலன்றி தேயிலைச் செய்கைக்கு நிரந்தரமான தொழிலாளர் தேவைப்பட்டதால் இவர்கள் நிரந்தரமாக தங்க வேண்டுமென உற்சாகப்படுத்தப்பட்டனர். உள்நாட்டில் தேசிய எழுச்சியுடன் கூடிய தொழிலாளர் அமைப்புக்கள் தோன்றவாரம்பித்திருந்தன. ஆரம்பத்தில் கொழும்பை மையமாகக் கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க இயக்க எழுச்சி பின்னர் கோ. நடேச ஐயர் போன்றோரின் முயற்சியால் மலைநாட்டுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்கள் படிப்படியாக இந்தியத் தொடர்புகளை விட்டு விட்டதுடன் அடுத்த தலைமுறையினரையும் உருவாக்கி தாம் இலங்கைக்குரியவர்கள் என்ற சிந்தனையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டனர்.

இச் சிந்தனையின் வரலாற்று ரீதியிலான பரிமாணத்தைப் பார்ப்பது மூலம் மலையகத் தேசிய இனத்தின் வளர்ச்சியையும் அதனை இல்லாமல் செய்ய எத்தனித்த பிற்போக்குவாத இனவாத எதிர்ச் சக்திகளின் செயற்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இதே காலப்பகுதியில் இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியுடன் இலங்கையிலும் அதே விதத்தில் தேசிய எழுச்சி ஒன்று ஏற்பட்டமை நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பலம் வாய்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி ஒன்றும் ஏற்பட்டது. எனினும், இந்த இரண்டு விதமான தேசிய எழுச்சியும், தொழிலாளர் இயக்க எழுச்சியும் முற்றிலும் பௌத்த, சிங்கள இனவாதத்தையும், இந்தியத் தொழிலாளருக்கு எதிரான போக்கையும் கொண்டிருந்தது. ஒரு புறம் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் மறுபுறம் இனவாத சக்திகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருந்தது.

1920களில் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் காலடி எடுத்து வைத்து ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கழிந்துவிட்ட நேரத்தில் மற்றுமொரு புதிய பரம்பரையினர் உருவாகியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் இந்தியத் தமிழர்கள் இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்து வருவதனை மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற இந்தியத் தலைவர்களே கூட விரும்பவில்லை. இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள் தாம் வாழும் நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆதலினால் 1920 முதல் 1950 வரையுள்ள காலம் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட முற்படும் காலமாகவே இருந்தது. அத்துடன் வளர்ந்து வரும் சனத் தொகையுடன் இலங்கைத் தமிழரிலிருந்து வேறுபட்ட, வித்தியாசமான குணவியல்புகளைக் கொண்ட ஒரு சமூகமாகவும் வளர்ந்து வந்தது. இலங்கைத் தமிழர்கள் இப் பிரிவினரை இணைந்த பிரிவினர் என்று இனங்காட்டிக் கொள்ளாமையும் அதற்கு ஒரு காரணியாக அமைந்தது.

1920களை அடுத்தும், 1930களிலும் ஏ.ஈ. குணசிங்கவை தலைமையாகக் கொண்டு எழுச்சி பெற்ற கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் இயக்கம் முதலாளித்துவத்துக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக மலையாளிகளுக்கெதிராகவும் இந்தியத் தமிழர்களுக்கெதிராகவுமே போராட்டங்கள் நிகழ்த்தியது. இந்தப் போராட்டத்தின் போது மலையாளி மக்களுக்கெதிராக வன்முறைகளும் இடம்பெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான மலையாளி மக்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர். அநேகமான மலையாளிகள் சிங்களப் பெண்களை மணந்து கொண்டு சிங்கள இனத்துவ அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆரம்பத்தில் கறுவாத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தவர்களும், ரெயில்வே தொழிலாளர்களாக வந்தவர்களும் சிங்கள இனத்துடன் கலந்து விட்டனர். கண்டி, கடுகண்ணாவைக்கருகில் பலன என்ற இடத்தில் காணப்படும் ரெயில்வே கொலனி முற்றிலும் இந்தியத் தமிழர்கள் வசித்த குடியேற்றமாகும். இவர்களில் அநேகம் பேர் சிங்களத்துவம் பெற்று விட்டனர்.

1930களின் இறுதியில் ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பெரிதும் காரணமாகின. இக் காலமே இந்தியத் தமிழர்களுக்கெதிரான இனத்துவேசத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள், ரெயில்வேத் திணைக்கள ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கெதிராகவும் இனத் துவேசம் கிளப்பி
விடப்பட்டது. அரசாங்கம் இந்தியர்களை வெளியேற்ற பல சட்டங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டது. சில சட்டங்கள் அரச சபையில் நிறைவேற்றப்பட்டன. 15 ஆயிரம் இந்தியரை இலங்கையிலிருந்து வெளியேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய அபிவிருத்திகள் தொடர்பில் அப்போதைய இந்தியத் தலைவர் மகாத்மா காந்திக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட தூதுவராக ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்தார்.

1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற நேருஜியின் இலங்கை விஜயம் இலங்கை இந்தியர் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு எனலாம். இலங்கை வாழ் இந்திய மக்கள் ஒரு குடையின் கீழ் ஸ்தாபன மயப்படுத்தப்பட இது காரணமாயிற்று. அப்போது கொழும்பில் இயங்கி வந்த பல்வேறு ஸ்தாபனங்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அதில் இணைக்கப்பட்டு இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனினும், இத் தாபனத்தில் காணப்பட்ட இந்திய வர்த்தகர்களின் செல்வாக்கு காரணமாக தொடர்ந்தும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் இந்திய செல்வாக்கில் இருந்து விடுபடாமலேயே இருக்க வேண்டிய நிலையும் இதனால் தோற்றுவிக்கப்பட்டது. மறு புறத்தில் இலங்கையின் ஏனைய உள்நாட்டு அரசியல் அமைப்புகள், இலங்கைத் தமிழர்களின் அமைப்புகள் மற்றும் சிங்களவரின் அமைப்புகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியான அமைப்புகளைத் தோற்றுவிப்பதில் பின்னின்றன. கோ. நடேச ஐயரின் அகில இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் மட்டுமே இவர்கள் மத்தியில் இயங்கிய ஒரே ஒரு பிரதான அமைப்பாகும். பிற்காலத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஒன்றும் தாபிக்கப்பட்டு தொழிலாளர் மத்தியில் இயங்கத் தொடங்கியது.

தொடர்ந்தும் இலங்கை சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இந்திய மலையகத் தமிழ் மக்களை ஒதுக்கி, அவர்களுக்கு கொச்சையான பல்வேறு நாம கரணங்கள் சூட்டி இந்தியாவுக்கு விரட்டி விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தன. ஆதலால் அநேகமான சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளுக்கு தாமே குரல் கொடுப்பவர்களாகவே மலையக மக்கள் இருந்தனர். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் இந்தியாவையே நாடும்படி அநாதரவாக்கப்பட்டனர்.

1940 1950 காலப் பகுதியில் சோல்பரி ஆணைக்குழுவால் நிவாரணம் கிடைக்காத நிலையிலும் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் இழந்த நிலையிலும் முற்றிலும் தொழிற்சங்க சக்தியிலேயே தங்கியிருக்க வேண்டியவர்களாயினர். 1945 அளவில் இலங்கை இந்திய காங்கிரஸில் 146,819 அங்கத்தவர்கள் அங்கம் வகித்தனர். தொடர்ந்தும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலும் மேலும் மேலும் பலமான ஸ்தாபனப்படுத்தல் இவர்கள் மத்தியில் நிகழ்ந்தது என்பது முக்கிய அம்சம். சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும் அவர்களால் இம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதனைத் தடுக்க முடியவில்லை. டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தன முதலான தலைவர்கள் விடாப்பிடியாக இம் மக்களின் உரிமைகளை முற்றாகப் பறித்து விடும் நோக்கில் செயற்பட்டமையை வரலாறெங்கும் காணக் கூடியதாகவுள்ளது. அதன் காரணமாக பிரஜா உரிமை பறிக்கப்பட்டு 1947 முதல் 1977 வரையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களால் ஒரு பிரதிநிதியையும் அனுப்ப முடியாமல் போய்விட்டது. 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவையே பார்த்தறிந்திராத சுமார் 1லீ நூற்றாண்டுகளாக இலங்கையையே தமது தாய்நாடாகக் கொண்டிருந்த 6 லட்சம் இந்தியத் தமிழரை இந்தியாவுக்கு அனுப்புவதென்ற ஜனநாயக விரோத தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்று சுமார் 15 லட்சம் சனத்தொகையைக் கொண்டு இம் மக்கள் ஒரு தனியான தேசிய இனமாக வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதனை மறுக்க முடியாது.

இவ்வாறு சுமார் 200 வருட கால இலங்கை இந்திய வரலாறு முற்றிலும் போராட்ட வரலாறாகவே உள்ளது. இவர்களது அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார காரணிகள் இலங்கைத் தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்களுடன் வித்தியாசமானதாகவே இருந்துள்ளன. இந்த 200 வருட கால வரலாற்றில் இந்த மக்கள் கூட்டத்தினர் மிகக் குறைந்த அளவிலேயே ஏனைய சமூகங்களுடன் கலந்துள்ளதுடன் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே தாம் இந்தியத் தமிழர் என்ற தன்னடையாளத்தை இழந்துள்ளனர். இக் காலத்தில் இம் மக்கள் தம் இனத்தின் விசேட இனத்துவ அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து இன்று ஒரு தனியான தேசிய இனம் என்ற அளவுக்கு தம்மைப் பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்திய அடையாளம் அல்லது இந்திய விஸ்தரிப்பு வாதத்தில் இருந்து
விடுபட வேண்டியதன் அவசியம்
இந்தியாவில் இருந்து இறுதியாக வந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள், அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சுமார் 200 வருடங்களாக இந் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்கள் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் தேசிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளுதலில் பங்கு கொள்ளத் தொடங்கினர். சுமார் 16 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பும் அளவுக்கு தமது உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டனர். இந் நிலையில் தொடர்ந்தும் இந்திய அடையாளங்களை தம்முடன் எடுத்துச் செல்வதானது பாரந்தூக்கிக் கொண்டு ஓடுவதற்குச் சமமானதாகவே இருக்கும். வரலாற்றுக் காலம் முழுவதும் இந் நாட்டு பேரினவாதிகள் நம் மீது “இந்தியர்கள்’ வந்தேறு குடிகள் என்று முத்திரை குத்தியதற்குக் காரணம் நாம் இந் நாட்டுக்குரியவர்கள் அல்ல, நாம் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல, நாட்டைச் சுரண்டுபவர்கள் என்று காட்டத்தான்.

இச் சந்தர்ப்பத்தில் நான், பிரஜாவுரிமை சட்டத்திற்கெதிராக கடுமையான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 1948 1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் இருந்து மேற்கோள் ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். அதில் 13ஆம் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு நமது முத்திரை :
“நாம் இலங்கை மக்களுடன் கலந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வதாகச் சில இலங்கை அரசியல் தலைவர்களும் பத்திரிகைகளும் அடிக்கடி புகார் செய்கின்றன. நாட்டு மக்களுடன் தோட்டத் தொழிலாளர் கலந்து பழக முடியாதபடி துருப்பிடித்த பழங்கால தொழிலாளர் சட்டங்கள் நிர்ப்பந்திப்பதோடு துவேஷ மனோபாவம் கொண்ட முந்திய மந்திரி சபையின் போக்கும் தற்போதைய சர்க்காரின் போக்கும் கூட இதற்குக் காரணமாகும். அவர்களுடைய போக்கினாலேயே காங்கிரஸ் ஸ்தாபனம் வகுப்புவாத முத்திரையைத் தாங்கி நிற்க நேரிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் வரை நாம் இந்த முத்திரையைத் தாங்கி இருந்தே தீர வேண்டும். உரிமைகளைப் பெறும் போராட்டத்தில் மற்ற வகுப்புத் தொழிலாளருடன் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர், இந்தியத் தொழிலாளர் ஆகிய இருவருடைய உரித்துகளும் ஒரே மாதிரியானவை தான். நல்ல வேளையாக நமக்கும் இலங்கைத் தொழிலாளருக்கும் அவர்களது தலைவர்களுக்குமிடையில் சௌஜன்யமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவையும் ஒத்துழைப்பையும் கொண்டு நாம் இந் நாட்டு மக்களுடன் ஒன்றி வாழவில்லையென்ற கூற்றை அடுத்த ஆண்டில் பொய்ப்பித்துக் காட்டுவோம்.”

இதே விதத்தில் 1949 1950ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் பின்வருமாறு காணப்படுகின்றது.

அதன் தலைப்பு செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் :
“மற்ற நாடுகளில் செலாவணியை சேமித்து மிச்சப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படும் செலாவணிக் கட்டுப்பாடு இலங்கை அரசாங்கத்தினால் இந்தியர்களின் வாழ்க்கையைக் கஷ்டத்துக்கு உட்படுத்தி அவர்களை இலங்கையை விட்டு “விரட்டியடிக்கும்’ ஓர் அரசியல் ஆயுதமாக உபயோகிக்கப்படுகிறது.

இலங்கையிலிருக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் செலாவணிக் கட்டுப்பாட்டிலாக்கா வேற்றுமை காட்டி வேற்றுமையை ஊர்ஜிதப்படுத்தியும் வருகின்றது. பிரிட்டனுக்கு ரூபா 80 கோடி அனுப்பப்படுகின்றதென்றும் இந்தியாவுக்கு 75கோடி அனுப்பப்படுகின்றதென்றும் மந்திரியே ஒப்புக் கொண்டிருக்கிறார். வருடந்தோறும் பிரிட்டனுக்கு ரூபா 8 கோடி அனுப்பப்படுவதைப் பற்றி மந்திரி சிறிதும் கவலைப்படவில்லை. இந்தத் தொகை இலங்கையரல்லாதவர்களின் உற்பத்தித் துறைகளிலே முடக்கப்பட்டிருக்கும் மூலதனத்தின் லாபம், வட்டி, பங்குப் பணம் என்று மந்திரி கூறுகிறார். ஆனால், இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் பெரும் பகுதி இங்கு இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காகவே தவிர இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனத்துக்காகவல்லவென்று அவர் சொல்கிறார். இந்த அரசாங்கம் முதலாளிகளைப் பாதுகாப்பதில்தான் சிரத்தை கொண்டிருக்கிறதே தவிர தொழிலாளர்களிடம் அதற்குச் சிறிதும் அக்கறையில்லையென்பதற்கு இந்த வெளிப்படையான துவேஷப் போக்கு தெளிவான ருசுவாகும். ஒரு மாநாட்டில் ஸ்ரீ.ஜே.ஆர். ஜெயவர்த்தன விடுத்த அறிக்கை இங்கு குடியேறியுள்ள இந்தியர்களை இலங்கைத் தீவை விட்டு வெளியேற்றும் ஓர் உபாயம்தான் செலாவணிக் கட்டுப்பாடு என்ற நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தவே செய்கிறது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து அரை நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் இதே குற்றச்சாட்டுகளும் போக்குகளும் இன்றும் உள்ளன. ஆதலால் நாம் நம்மை இந்த நாட்டுக்குரியவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் எதிர்கால நமது சமூக வளர்ச்சிக்கு மிக அவசியமானதாகும்.

மலையகத் தமிழ் மக்கள் என்ற எண்ணக்கரு
1960களைத் தொடர்ந்து மலையகத்தின் புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வுகள் தோன்றியுள்ளன. இந்திய வம்சாவளித் தமிழர்களை மலையகத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் போக்கு கொள்கையாக உருவாகா விட்டாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த மலையகப் புத்திஜீவிகளில் குறிப்பிடத்தக்கவர்களான இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்கள் மலையகம், மலையக மக்கள் என்ற சொற்பதங்களை வலிந்து பயன்படுத்தியுள்ளனர். எனினும், 1970களின் பின்னரான அரசியல் நிலைவரம் இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையாலும் இனவாத அரசியலாலும் மேலும் சிக்கலுக்குட்பட்டதால் எதிலும் குழப்ப நிலை நீடிக்கத் தொடங்கியது. 1978, 1980, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த இன வன்முறைச் சம்பவங்கள் சகலரதும் கொள்கைகளை மீண்டும் ஒருமுறை மீளப் பரிசீலனை செய்ய வைத்தன. இந்த நாட்டில் மலையக மக்கள் தொடர்ந்தும் வாழ்க்கை நடத்த முடியுமா? என்ற நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டனர். “”இந்த நாடு உனக்குரியதல்ல” என்று சிங்களப் பேரினவாதிகள் தலையில் ஓங்கி அடித்துக் கூறினார்கள். இவை அனைத்தையும் கடந்த நிலையில் மீண்டும் நாம் மற்றுமொரு சந்தியில் வந்து நிற்கின்றோம். இப்போது இங்கிருந்து எந்தத் திசை நோக்கிச் செல்வது என்பதுதான் கேள்வி? இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதில் ஒன்றை நாம் தேடிக் கண்டுபிடிக்கா விட்டால் மீண்டும் ஆற்றுடன் அடித்துச் செல்லப்படும் மரக் கட்டைகள் போலவே திசை தெரியாமல் செல்ல வேண்டியிருக்கும்.

இன்று இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாட்டின் ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளிலிருந்து நமது பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளாகவே இருக்கின்றன. இன்னமும் நாம் மிக அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடவில்லை. கல்வியில் நாம் பின்தங்கியிருப்பதானது பல விதங்களிலும் நம்மைப் பின்தள்ளுவதாகவே அமைகின்றது. ஆதலால் எதிர்காலத்தை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்கும் போது நமது கொள்கைகளில் மிகத் தெளிவானவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமாகின்றது. நாம் இந்த நாட்டின் சமூகப் பிரிவுகளில் ஒன்றாக உருவாகியுள்ளதுடன் தேசிய வளங்கள், தேசிய ஆட்சி நிர்வாகம், திட்டமிடல் வாயிலாகப் பகிரப்படும் போது அவை எந்த அளவுக்கு நம் மக்களையும் வந்தடைகின்றன என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அப்படி அவை நம்மை வந்தடையாது புறக்கணிக்கப்படும் போது அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய இலக்கொன்றை நாம் அடைய மலையக மக்களும் ஒரு தேசிய இனமாக இந் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் அதில் இது தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கு நாம் இன்றிலிருந்தே செயற்பட வேண்டும்.

மற்றுமொரு விடயமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இந்த நாட்டின் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த நாட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட மறுத்து வருகின்றனர். அவர்கள் மலையக தொழிலாள மக்களின் ஆட்பலத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயம் இவ் வர்த்தக சமூகத்தின் நிதிப் பலமும் மலையகத் தொழிலாள மக்களின் ஆட் பலமும் சேர்ந்தால் பல காரியங்களை இலகுவாக சாதிக்க முடியுமென்றும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

Referances:
1). Kuruppu NSG, A history of working class movement in Ceylon – Ceylon Historical Journal Vol. 1-P.P. 130

2). Ibid – Page 134

3). Moldrich, Donovan – Bitter Berry Bondage

4). Kumari Jayawardena. V-Ethnic and class conflicts in Sri Lanka

5). S.D. Sivanayagam, Thalaivar thondaman P.P. 142, 143

6). Ceylon Indian Congress Report 1945

7). Ibid – 1948 – 1949

8). Ibid – 1949 – 1950

நன்றி - சடகோபன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates