அவளுக்கு கள்ளக் காதலன் இருப்பதாக அவளுடைய கணவனுக்கு சொல்லிவிட்டு, அவளை கண்ணாடித்துண்டுகளை விழுங்கவைத்து உலக்கையால் அடிவயிற்றில்...
இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதையல்ல. நிகழ்ந்த சம்பவங்களும் யாரோ ஒருவருடைய வக்கிர கற்பனையில் உருவானதல்ல. இது நிஜம். உண்மையில் நடந்த சம்பவங்கள். மனதை குத்தி குதறும் வேதனையும், அதிர்ச்சியும் தரும் நிஜமாக கடந்த நிகழ்ச்சிகள். மேலும் அதிர்ச்சி தருவது, காவல் துறை இருந்தும், அவர்கள் இந்த நிகழ்வுகளை கண்டுகொள்ளவேயில்லை. காரணம், அரசியல் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளின் நிழலில் குளிர் காயும் கீழ்த்தர காமுகர்களும் கொடியவர்களும்தான். இவர்களது ஆதரவில் செல்வாக்கும் அதிகாரமும் பெறும் அரசியல்வாதிகள், இவர்களது அராஜக சாம்ராஜ்யத்தை கண்டுகொள்வதேயில்லை. அந்த சாம்ராஜ்யத்தின் அன்றாட நிகழ்வுகள் தான் கற்பழிப்புகள், கொலைகள், சொல்ல கூசும் சித்திரவதைகள்.
நூரி ஓர் அழகிய கிராமம், தெரணியகலையில் அமைந்திருந்திருக்கின்றது. கொழும்பிலிருந்து வாகனத்தின் மூலம் மூன்று மணிநேரத்தில் சென்றுவிடலாம். அது ஒன்றும் பிற்பட்ட கிராமமும் அல்ல. சீரான பாதைகள், தொலைத்தொடர்பு என்று எல்லா வசதிகளும் இருக்கும்; ஒரு நல்ல கிராமம். இந்த கிராமம் தேயிலைக்கு பேர்போனது. நூரி தேயிலை தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலகின் உயர் ரக தேயிலை வகைகளில் ஒன்றாகும்.
அந்த கிராமத்தில் பாடசாலைகள், கோயில், புத்தவிகாரை உள்ளன. பெரும்பான்மையாக உள்ள கிராமவாசிகள் தமிழர்கள் ஆவர். அவர்களில் அதிகமானோர் நூரி தோட்டத்திலேயே வேலை செய்கின்றனர். மற்ற இடங்களைப்போல மத்திய தர மக்களும் ஓரளவு வசதி படைத்தவர்களும் சேர்ந்தே வாழ்கின்றனர்.
ஆனால், இங்கு அரங்கேறும் கொடுமைகளோ மற்ற எந்த இடங்களிலும் நடைபெறாத வகையைச் சேர்ந்தது. குட்டைக்கையன் என்று அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க முன்னாள் தெரணியகலை பிரதேச சபையின் தலைவராக இருந்தவன். கிராமத்தில் நடக்கும் கொடுமைகளுக்கும் முதல் காரணகர்த்தா. சிறுவயதில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு கையின் பாதியை இழந்தான், அதனால் காரணப்பெயர் கொண்ட இவனுக்கு நிறையவே அடியாட்கள் உள்ளனர்.
அவனுடைய குடும்பம் பூராவுமே கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதில் கை தேர்ந்தவர்கள். கள்ளச் சாராய விற்பனை மூலம், பணம் சேர சேர அவனுடைய மிருக பலமும் அதிகரித்தது. அதே வேகத்தில் சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட மஹிபால ஹேரத்தின் தீவிர ஆதரவாளனான். அதனை தொடர்ந்து தற்போதைய கால்நடை மற்றும் சமூக பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்திரபாலவின் ஆதரவாளனாகவும் மாறினான். பின்னர் மித்திரபாலவிற்கும் அவனுக்கும் இடையில் நேர்ந்த பிணக்கை தொடர்ந்து மாகாண முதலமைச்சருடனேயே அவனுடைய நட்பு தொடர்ந்தது.
அவனுடைய பயங்கர நடவடிக்கைகளும் கொடுமைகளும் முதலமைச்சரின் ஆதரவுடனேயே நடந்தேறின. அத்துடன் அவருடைய மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனக ஹேரத்தும் அவனை நன்றாக ஆதரித்தார். இவருவருமே அவனுடைய கொடூரச் செயல்களை கண்டுக்கொள்ளவில்லை.
அதன் பயனாக அங்குள்ள காவல் நிலைய அதிகாரிகளும் அவனுடைய அக்கிரமச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தனர். தங்களுடைய அரசியல் தலைமைகளின் நண்பனுக்கு துணை போனார்கள்.
மிகுந்த பீதியுடன் வாழ்ந்த அந்த கிராமத்து மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாகவே நூரி தேயிலை தோட்ட அதிகாரியாக நியமனம் பெற்ற நிஹால் பெரேரா தோன்றினார். நேர்மையான அந்த அதிகாரி கட்டைக்கையனின் சாம்ராஜ்யத்திற்கு ஒரு தடையாக இருந்தார்.
ஏனென்றால் கட்டைக்கையனும் அவனுடைய சகாக்களும் அந்த தேயிலை தோட்டத்தின் வளங்களை சுரண்டியே வாழ்ந்தனர். அவருக்கு முன் கடமையிலிருந்த அதிகாரிகள் எவரும் அவனை பகைத்துக்கொள்ளவில்லை. கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அவனது பலத்திற்கு எதிராக அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
தோட்ட அதிகாரியான நிஹால் பெரேரா நேர்மையான அதிகாரியாக இருந்ததோடு கெட்டதை எதிர்க்கும் மனத்துணிவு உள்ளவராக இருந்தார். இவர்களால் தோட்டத்தில் நடக்கும் அட்டூழியங்களை தட்டிக்கேட்டதோடு அந்த தொழிலாளர்களுக்கும், கிராமத்திலிருந்த அவர்களது குடும்பங்களுக்கும் காவலாக இருந்தார்.
பிரித்தானிய தோட்ட துரைமாருடன் சேர்ந்து பணி புரிந்த இறுதி நால்வரில் நிஹால் பெரேராவும் ஒருவர். ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டுதான் நூரி தேயிலைத்தோட்ட பொறுப்பை ஏற்றிருந்தார்.
அவரை பற்றி அவரின் கீழ் பணிபுர்ந்த கிராமாவாசி 'அவர் எங்களுக்கு ஒரு கடவுள் மாதிரி இருந்தார். யாருக்கும் பயப்படாத முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். நல்ல அனுபவம் பெற்றவர். யாருக்கும் விட்டுக்கொடுக்காதவர். எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்தவர். அத்துடன் அந்த அடியாட்கள் கும்பலுடன் சமாதானமாகவே இருக்க விரும்பினார்' என்றார்.
அவரை கட்டோடு வெறுத்த குட்டைக்கையனும் அவனது அடியாட்களும் அவருக்கு பாடம் புகட்ட நினைத்து, அவர் கொலை செய்யப்படுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன், அவரை பயங்கரமாக தாக்கி அடித்தார்கள்.
இது பற்றி கிராமவாசிகள் கொடுத்த புகாரை, காவல் நிலைய அதிகாரிகள் வழக்கம் போல 'கண்டு' கொள்ளவில்லை. பத்துவருடங்களாக கடைப்பித்து வந்த 'தலையிடா' பழக்கத்தை அவர்கள் மீற விரும்பவில்லை.
சரியாக ஒரு மாதத்தின் பின்னர் நிஹால் பெரேரா பயங்கரமாக தாக்கப்பட்டு, கத்தியால் வெட்டி குத்தப்பட்டிருந்தார். அவரை கட்டைக்கையனின் உறவினர்களும் அடியாட்களுமே வெட்டியிருந்தனர்.
'இதை கேள்விப்பட்டதும், நான் ஓடிப்போய் பார்த்தேன். அவர் தரையில் விழுந்து கிடக்க, அவரை பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்தார்கள்' என்று தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளரான சுமுது நிலன்கா சொன்னார்.
'தோட்ட நிர்வாகம் நிஹால் பெரேராவுக்கு இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தந்திருந்தது. அவர்கள் இருவரும் கூட அந்த கும்பலால் தாக்கப்பட்டு, நிஹால் பெரேராவுடன் சேர்த்து, அவருடைய ஜீப் வண்டியிலேயே அந்த கும்பலால் ஏற்றி செல்லப்பட்டனர். ஜீப் வண்டி புறப்படுவதற்கு முன்னர் என்னுடைய கைதொலைபேசியை பறித்துக்கொண்டனர்.'
'நான் அவர்களை பார்த்தபோது அவர்களுக்கு உயிர் இருந்தது' என்றும் மேலாளர் சொன்னார்.
அதன் பின்னர் அந்த கும்பல் அவர்களை கிராமத்திற்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி, தெரு தெருவாக கொண்டு சென்றிருக்கின்றார்கள். இப்படித்தான் எங்களை எதிர்ப்பவர்களுக்கு நடக்கும் என்று அந்த கும்பல் கூச்சலிட்டு கொண்டு சென்றிருக்கின்றது.
அதன் பின்னர் நடந்ததை இன்னொரு தோட்ட ஊழியர் விபரிக்கையில், ஜீப் வண்டி மீண்டும் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது என கேள்விப்பட்டு, அங்கு சென்றபோது நிஹால் ஜீப் வண்டியில் ரத்தம் வழிய நிர்வாணமாக கிடந்தார். எங்களிடம் தண்ணீர் கேட்டார். அவரை தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் கிடத்தினோம். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் நாங்கள் தாக்கப்படலாம் என்று பயந்து, ஊருக்குள் சென்று வாகனத்தை தேடினோம். பயத்தினால் எங்களுக்கு உதவுவதற்கு ஒருவர் கூட முன்வரவில்லை. பின்னர், துணிந்து நாங்களே அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றோம். அவர் வாயிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. கத்தரிக்கோலால் அவரது வாயை வெட்டியிருந்தார்கள் என்று பின்புதான் தெரிந்துகொண்டோம் என்று சொன்னார்.
முனியாண்டி செவனம்மா. |
நிஹால் பெரேராவின் கொலை, அதிரடி பொலிஸாரின் தலையீடு உண்டாக காரணமாயிற்று. அவர்களது திடீர் வரவின் பின் நிலைமை வழமைக்கு மாறியது.
அவருடைய கொலை, எங்களுடைய வாழ்க்கையை எங்களுக்கு திரும்ப தந்தது. அதிரடிப்படையினர் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இங்கிருக்கவேண்டும். காவல் அதிகாரிகள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமுடியாது என்று அந்த கிராமத்திலிருந்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த கும்பலினால் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் அவர்கள் சொல்வதை கேட்கும் போது உடம்பெல்லாம் பதறுகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்மணி முனியாண்டி செவனம்மா.
'என்னுடைய மூன்று பிள்ளைகளையும் அவர்கள்தான் கொன்றார்கள். என் மூத்தமகன் கணேஷ். அவனை இழுத்துக்கொண்டுபோய் அடிமைபோல நடத்தினார்கள், குட்டைக்கையனுக்கு வேலையாளாக வைத்திருந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவனை கொன்று விட்டார்கள். யாரையும் கொல்ல அவர்களுக்கு காரணம் தேவையில்லை. மரத்திலிருந்து விழுந்து இறந்து போனான் என்று சொல்லி கதையையே மூடி மறைத்து விட்டார்கள்.
அதன் பின் எனது இளைய மகன் முன்னுவை கொண்டுபோய் வேலை வாங்கினார்கள். அண்ணன் இறந்ததிலிருந்து அவனுக்கு மிக ஆத்திரம் இருந்தது. ஒருநாள் குட்டைக்கையன் அவனை கள்ளச் சாராயம் எடுத்துவர சொல்லி, அதை குடித்துக்கொண்டிருக்கையில், ஏன் எனது அண்ணனை கொன்றீர்கள் என்று கேட்டிருக்கின்றான். ஆத்திரமடைந்த குட்டைக்கையன் தனது ஆட்களுடன் சேர்ந்து அடித்து உதைத்து அவனது தலைமயிரையும் தாடியையும் வெட்டி விட்டு அவனையும் கொன்று விட்டான்.
அதன் பின் நான் எனது மகளுடனும் இரு பேத்திகளுடனும் அவளது கணவனோடும் இருந்தோம். அவளுக்கு கள்ளக் காதலன் இருக்கிறான் என்று அவள் கணவனுக்கு சொல்லிவிட்டு, அவளையும் கொன்றார்கள். முதலில் அவளை கண்ணாடித் துண்டுகளை விழுங்கவைத்து உலக்கையால் அடிவயிற்றில் அடித்தே அவளை கொன்றார்கள்' என்று கண்களில் நீர் வடிய தன் கதையை சொன்னாள் அந்த தாய்.
இப்படி பல சம்பவங்கள். கேட்பவர்களுக்கு வெறியூட்டும் கொடூர நிகழ்வுகள்.
இப்போது குட்டைக்கையனும் சகாக்களுமாக 21 பேர் சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்குமா அல்லது பலம் பொருந்திய அரசியல்வாதிகளின் தயவில் தப்பித்து விடுவார்களா? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லவேண்டும்.
காவல் துறையின் தலையாக கடமை, பொதுமக்களை பாதுகாப்பதே. அப்படி உறுதிமொழியுடன் சேவையில் சேர்ந்து கொள்ளும் காவல்துறை அதிகாரிகள், தங்கள் உறுதிமொழிக்கேற்ப பொதுமக்களை பாதுகாக்காவிட்டால் என்ன ஆகும்.
அழகிய சின்னஞ்சிறு நூரி கிராமவாசிகளிடம் இதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
தெரணியகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள், அவர்களுக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இந்த கிராமத்தில் நடைபெறும் அட்டூழியங்களை நிறுத்த முன்வரவில்லை. 'ஏனென்றால் அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் ஆசியுடனும், அவர்களின் தலையீடு இல்லாத ஒத்துழைப்பினாலும், இந்த அடாவடித்தனங்கள் அரங்கேறின' என்று சொல்லும் லக்சுமி ஜெகரான், தன்னுடைய கணவனையும் சகோதரனையும் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிய முன்னாள் பிரதேச சபை தலைவனான, குட்டைக்கையன் என்றழைக்கப்படும் அனில் சம்பிக்க மீது கொடுத்த புகாரை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த திஸ்ஸ குணதிலக்க ஏற்க மறுத்து, படுகாயங்களுடன் இருந்த கணவனையும் சகோதரனையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதாக கூறி அழைத்துபோனவர் அவர்களை பொலிஸ் நிலைய சிறையில் 19 நாட்கள் அடைத்துவைத்தார்.
பாவம், லக்சுமியின் வீட்டை அதற்கு முன்னர் தான் அனில் சம்பிக்கவும் அவனின் அடியாட்களும் தீ வைத்து கொளுத்தி தரைமட்டமாக்கியிருந்தார்கள். அதற்கு புகார் செய்ததனாலேயே அவளுக்கு இந்த கொடுமை நிகழ்ந்தது.
தன் வீட்டை ஒட்டியே கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்த உதேஷிக்கா சிறிகுமாரவும், சம்பிக்கவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்.
'என் கடையை தீ வைத்து கொளுத்தினார்கள். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நான் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து மூன்று வயதான என் சிறிய மகளுடன் குதித்து தப்பித்தேன்'; என்றாள்.
போலிஸுக்கு புகார் செய்து அவள் எழுதிய எட்டு பக்கத்து கடிதத்தினால் ஒரு பலனும் இல்லை. மாறாக மேலும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
பொலிஸ் அதிகாரி திஸ்ஸ குணதிலக்க, முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு மிகவும் வேண்டியவர் முதலமைச்சரின் கையாள்தான் அனில் சம்பிக்க பின்னர் எப்படி பொலிஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று லக்ஷ்மி கேட்டார்.
அந்த ஊரில் உள்ள கோவிலின் அர்ச்சகர் சிவஸ்ரீ தாண்டவன் செல்வேந்திரனிடம் கேட்டபோது முன்னாள் பிரதேச தலைவராக இருந்த அனில் சம்பிக்கவுக்கு வெளியாட்கள் யாரும் ஊருக்குள் வருவது சுத்தமாகவே பிடிக்காது. ஏதும் ஒரு விசேஷத்திற்கு எவரும் வந்தால் அங்கு போய் அவர்களை அடித்து உதைத்து விரட்டிவிடுவார்கள்.
அப்பாவி தமிழ்த்தோட்ட தொழிலாளர்களுடைய நிலங்களில் அத்துமீறி பிரவேசித்து எடுத்துக்கொள்வார்கள். அவற்றை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வார்கள். நிறைய தமிழ்க் குடும்பங்கள், அச்சத்தின் காரணமாக ஊரை விட்டே வெளியேறிவிட்டன. சம்பிக்கவின் நெருங்கிய உறவினர்கள் கோவிலுக்கு அருகிலேயே கள்ள மதுபானச்சாலை ஒன்றை வைத்திருந்தார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இது ஒரு தொல்லையாக இருந்ததோடு, கோவிலுக்கு வரவே அஞ்சினார்கள் என்றும் சொன்னார்.
என்னைக்கூட பகிரங்கமாக அவமானப்படுத்தினார்கள் என்று சொன்ன ஊரிலிருந்த புத்த விகாரையின் குருவான வண.கலபான சுமித்திபால தேரர்.
'ஒருநாள் உயிருக்கு பயந்து விகாரைக்குள் ஓர் இளைஞன் ஓடிவந்து ஒளிந்துக்கொண்டான். கத்தி, கம்புகளுடன் குண்டர்கள் வந்து அவனை தேடினார்கள். நான் பொலிஸுக்கு போன் செய்தேன். போனில் பேசிய பொலிஸ் அதிகாரி நான் வரத்தான் வேண்டுமா? என்று எகத்தாளமாக பேசிவிட்டு போனை வைத்துவிட்டார். அரசியல் செல்வாக்கு இருந்ததால் இவர்களை எவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொலிஸும் கண்டும் காணாமல் இருந்தார்கள்' என்று பெருமூச்சுவிட்டார்.
அரசியல் அயோக்கியர்களின் புகலிடம் என்பார்கள், ஆனால் அதற்கு மேலே போய் குண்டர்கள் சாம்ராஜியத்தின் அஸ்திவாரமாக இங்கு இருந்து வந்திருக்கின்றது...
நன்றி - தமிழ்மிரர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...