Headlines News :
முகப்பு » , , » வி.டி.தர்மலிங்கம் ஒரு ‘மலையக தேசிய அமைப்பாக்கவாதி’ - கலாநிதி.ந.இரவீந்திரன்

வி.டி.தர்மலிங்கம் ஒரு ‘மலையக தேசிய அமைப்பாக்கவாதி’ - கலாநிதி.ந.இரவீந்திரன்

- ‘மலையகம் எழுகிறது’ நூல் ஆய்வுரையில் கலாநிதி.ந.இரவீந்திரன்

மலையகக் கலை, கலாசார, கல்வி, பண்பாட்டு அம்சங்களிலும்  தொழிற்சங்க அரசியல் வரலாற்றிலும் தன்னை முக்கிய ஆளுமையாக பதிவு செய்த அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ (மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்) எனும் நூல் அறிமுக நிகழ்வு 18.08.2013 அன்று தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. எழுநா ஊடக நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலினை இலங்கைக்கு தருவித்து அறிமுகப்படுத்தும் பணியினை பாக்யா பதிப்பகத்தினர் மேற்கொண்டிருந்தனர். அறிமுக நிகழ்வினை தலவாக்கலைத் தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் அரசியல் தோழருமான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் துணைவியார் ஒளித்தீபம் ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் தோழர்களான மு.சிவலிங்கம், எம்.முத்துவேல், திரு.நாகலிங்கம் ஆகியோருடன் லெனின் மதிவானம், மொழிவரதன், தனராஜ், மோகன்ராஜ் முதலான கல்வியாளர்களும் தலவாக்கலை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி சுரேஷ் ஆகியோரும் தீபமேற்றி சிறப்பித்தனர். வி.டி.தர்மலிங்கம் அவர்களின் அரசியல் செயற்பாட்டுத் தோழர்கள் பலரும் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவிகளின்  தமிழ்த்தாய் வணக்கத்துடன் தலவாக்கலை தமிழ்ச்சங்கத்தினர் சார்பில் தலவாக்கலை குணா நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவைத்தார். தலவாக்கலை தமிழ்ச்சங்கத்தினர் சார்பாக வரவேற்புரையை ரஞ்சித்குமார் வழங்கினார். இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்று நாயகனை அறிமுகப்படுத்தும் இந்த நூல் அறிமுக நிகழ்வு தங்களது தமிழ்ச்சங்கத்தின்  ஊடாக நடைபெறுவது பெருமைக்குரியதாக அமைவதாக அவரது உரையிலே குறிப்பிட்டார்.
தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் மு.சிவலிங்கம், வி.டி.தர்மலிங்கம் அவர்களுடனான இளமைக்கால நினைவுகளுடன் தனதுரையை ஆரம்பித்தார். பல்துறை ஆளுமைகளைக் கொண்டிருந்த வி.டி.தர்மலிங்கம் அவர்களை நாம் எவ்வாறு அழைப்பது? ஒரு கலைஞனாக, ஒரு ஆசிரியனாக, ஒரு அதிபராக, ஒரு அரசியல் செயற்பாட்டாளராக ஒரு சமூகப்போராளியாக வாழ்ந்து சாதனைப்படைத்த அவரை ‘ஒரு சமூகவாதி’ என அழைப்பதே பொருத்தமானது என கூறினார். 

அத்துடன் வி.டி.தர்மலிங்கம் அவர்கள் தேர்தல் அரசியலில் அல்லாது சமூக அரசியலில் அதிகம் அக்கறை காட்டியவர் என்றும் தேர்தல் அரசியலுக்குள் கால்வைத்துவிடுகின்றபோது அத்தகைய அரசியல் ஆளுமைகளை ஆளும் வர்க்கத்தினர் தூக்கி எடுத்துவிடும் அபாயத்தை தர்மலிங்கம் அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருந்தார் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். மலையகத்தில் துரதிஸ்டவசமாக இந்த ஆளும் வர்க்க தூக்கியெடுப்புக்கு ஆளாகிய அரசியல் தலைமைகளையே நமது அரசியல் வரலாற்றிலே கண்டிருக்கிறோம். மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் பாராளுமன்றம் செல்லும் நமது அரசியல் ஆளுமைகளை நிறை அமைச்சர்களாகவோ அல்லது அரை அமைச்சர்களாகவோ, ஆலோசகர்களாகவோ தூக்கியெடுத்து ஆளும் வர்க்கத்தின் கடைக்கண் பார்வைக்குள்ளேயே வைத்துக்கொள்வதன் மூலம் பாராளுமன்றம் செல்லும் எவரும் ஆளும் வர்க்கத்தை எதிரே நின்று பார்க்கும் வல்லமை இல்லாது போவது மலையக அரசியல் துர்ப்பாக்கிய நிலையாகவுள்ளது.
 வி.டி.தர்மலிங்கம் அவர்கள் இந்த தேர்தல் அரசியலுக்கு வர நேர்ந்தாலும் இந்த ‘துக்கியெடுப்புக்கு’ உள்ளாகாமல் இருப்பதில் உறுதியாக இருந்தவர். அதனையும் தாண்டி அத்தகையை நிலைக்கு தாம் தள்ளப்படுவதை உணர்ந்த போது தான் இயற்கையாக மரணம் எய்துவதன் மூலம் அதனை மறுதலித்த ஒரு மாமனிதர். இப்போதும் மௌனமாகிக் கிடக்கும் 1943ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் சட்டத்தினை வேரோடு பிடுங்கியெறிய வேண்டும் தனது அரசியல் கனவை எப்போதும் கொண்டிருந்தவர் வி.டி.தர்மலிங்கம் அவர்கள். தான் சார்ந்திருந்த அமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டுவந்து அதனை நீக்கும் முயற்சிகளை எடுத்த போதும் அதில் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது எனவும் குறிப்பிட்டார். இருநூறு வருடகாலமாக இலங்கையின் குடிமக்களாகவன்றி குடியிருப்பாளர்களாகவே வாழும் அவலம் நமது மலையக சமூகத்திற்கு எற்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இனவாத அரசு ஒன்று அந்த சட்டத்தை மீள கையிலெடுக்கும் போது வி.டி.தர்மலிங்கத்தின் அரசியல் கனவின் மகத்துவம் உணரப்படும் எனவும் தெரிவத்தார்.

அறிமுகவுரையை வழங்கிய பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நூலின் உள்ளடக்கத்தை எடுத்துச்சொல்வதை விட இந்த நூல் வெளிவந்ததன் பின்னனி பற்றி பேசுவதே பொருத்தமானது என கூறி அது பற்றி விபரித்தார். நான் வாழ்க்கையில் சில ஆளுமைகளுடன் ஊடாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இலங்கை திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னோடி தோழர்.இளஞ்செழியன், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, மூதறிஞர் சக்தீ பால ஐயா, தெளிவத்தை ஜோசப் என இந்த வரிசை நீளும். எனினும் இந்த வரிசைக்குள் நான் ஊடாட கிடைக்காத இரண்டு ஆளுமைகள் பற்றிய வருத்தம் எனக்குள் உண்டு. அவர்கள் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை மற்றும் வி.டி.தர்மலிங்கம். இந்த இருவரும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்திய ஆளுமைகள். காரணம் இவர்கள் இருவரும் நான் பிறந்து வளர்ந்த மடகொம்பரை மண்ணுக்குரியவர்கள். குறிப்பாக வி.டி.தர்மலிங்கம் அவர்களது பிறந்த வீடு என்பது எங்கள் வீட்டுக்கு மிக அண்மித்தது. அந்த வீடு அந்த தோட்டத்தில் முகப்பு வீடு என பெயர்பெற்ற வீடு. அந்த வீட்டின் தோற்றமே என்னுள் மிகப்பெரிய உந்துதலை எற்படுத்தியது. வரிசையாக இருக்கும் தொட்டத்து லயன் வீட்டில் வி.டி.அவர்கள் பிறந்த வீடு மட்டும் சற்றே முன்னே தள்ளிநிற்கும் ‘முகப்பு வீடாக’ நின்றது. அந்த லயம் கூட ‘முகப்பு லயம்’ என புகழ்பெற்றது. அது வி.டி.அவர்களின் தந்தையார் முதற்கொண்ட அவர்களின் குடும்ப ஆளுமையின் சின்னமான இன்றும் இருக்கிறது. இந்த சூழலில் இருந்து பிறந்து வளர்ந்த சி.வி.வேலுப்பிள்ளை, வி.டி.தர்மலிங்கம் போன்ற ஆளுமைகளை ஆதர்ஸமாகக் கொண்டே நான் என்னை செப்பனிட்டுக் கொண்டேன். அவர்களுக்கு காணிக்கையாக சி.வியின் ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்கிற கவிதைக் காவியத்தை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 2007ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிட்டும் இன்று எழுநா வெளியீடாக வந்திருக்கும் ‘மலையகம் எழுகிறது’ நூலை அறிமுகம் செய்தும் எனது அம்மாவின் பெயரில் இயங்கும் பாக்யா பதிப்பகம் பெருமை அடைகிறது. 
இந்த நூலை வெளிக்கொணர்வதற்கு என்னைத்தூண்டிய காரணிகளில் முதலாவது இந்த நூலுக்காக இரா.சிவலிங்கம் அவர்கள் எழுதிய முன்னுரையை முதலில் வாசிக்கக்கிடைத்தது. இரண்டாவது இந்த நூல் தொடர்பாக பி.ஏ.காதர் அவர்கள் எழுதிய நினைவுகளில்…. எனும் குறிப்பினை வாசிக்கக்கிடைத்தது. வி.டி.அவர்களின் கட்டுரைகள் ‘சரிநிகர்’ பத்திரிகையில் வெளிவந்தவை என அறிந்த போது அதன் ஆசிரியர் குழுவில் இருந்த நண்பர். என். சரவணன் அவர்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப்பெற முடிந்தது. வி.டி.தர்மலிங்கம் அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய இந்தக் கட்டுரைகளை பத்திரிகையில் பிரசுரிப்பதற்கு நண்பர் சரவணன் சிறையில் இருந்து அந்த கட்டுரைகளை கவனமாக வெளிக்கொணர்வதில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இந்த இடத்தில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தற்போது புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசித்தாலும் மலையகம் குறித்த அவரது அக்கறை போற்றுதற்குரியது. 

அடுத்ததாக ‘எழுநா’ ஊடக நிறுவன நண்பர்கள். முகநூல் ஊடாக இவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் வெளியிட்ட இந்த நூலை இலங்கையில் நான் அறிமுகம் செய்ய எண்ணியபோது அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மிகுந்த போற்றுதற்குரியது. அந்த நண்பர்கள் குழுவின் சார்பாக நண்பர் சயந்தன் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவிருந்தும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இது ஈடேறவில்லை. என்றாலும் இந்த அரும்பணிக்காக ‘எழுநா’ ஊடக நண்பர்களுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன் என திலகர் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டார்.
நூலாய்வுரையை வழங்கிய கலாநிதி.ந.இரவீந்திரன் மலையக வரலாற்றுப் பார்வையோடு வி.டி.தர்மலிங்கம் அவர்களின் பணிகளையும் எழுத்துக்களையும் பற்றிய பார்வையை பதிவு செய்தார். கோ.நடேசய்யர், இளஞ்செழியன், இரா.சிவலிங்கம், திருச்செந்தூரன் வரிசையில் வி.டி. தர்மலிங்கம் அவர்களும் மலையக மண்ணை இந்தியாவின் வாலாகப் பார்க்காது இலங்கை மண்ணில் மலையக மக்களை ஒரு தேசிய இனமாகப் பார்த்த பெருமைக்குரியவர் என குறிப்பிட்டார். எனவே வி.டி.அவர்களை ‘மலையக தேசிய அமைப்பாக்கவாதி’ என விளிப்பதே பொருத்தமானது என தெரிவித்தார். மலையகத்தில் பிற்போக்குவாத தொழிற்சங்க அரசியல் தலைமைகளிடையே மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் அரசியலை முன்னெடுக்க முடியும் எனும் நம்பிக்கையுடன் செயற்பட்டவர்களில் வி.டி.தர்மலிங்கத்தின் ஆளுமை முக்கியத்துவம் மிக்கது. அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் நிறைந்த சமூகப்பணி தொடங்கிவைத்த அரசியலில் அடுத்த கட்டத்தை அடையும் முன்பதாகவே நிகழ்ந்த அவரது இறப்பு மலையக அரசியலை அடுத்த படிநிலைக்கு எடுத்துச்செல்வதைத் தடுத்தவிட்டது. இல்லாதபட்சத்தில் இன்று ஒரு வீரியம் மிக்க அரசியல் நிலைப்பாட்டுக்கு மலையக மக்களை அணிதிரட்டக்கூடிய சக்தியாக வி.டி.தர்மலிங்கம் திகழ்ந்திருப்பார் எனவும் குறிப்பிட்டார். கலாநிதி.ந.இரவீந்திரன் அவர்களது உரையை தனியே எழுத்தில் பதிவு செய்யவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
குடும்பத்தினர் சார்பாக இடம்பெற்ற ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதியும் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் இளைய சகோதரருமான வ.செல்வராஜா அவர்களின் உரை உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. திரு. செல்வராஜா அவர்களை உரைக்காக அறிமுகப்படுத்திய தலைமை வகித்த மு.சிவலிங்கம் அவர்கள் ‘தமிழ் தேசியத்துக்கான வட்டுக்கோட்டை தீர்மானம் போல, மலையகத் தேசியத்துக்கான ஹட்டன் தீர்மானம் முக்கியத்துவம் மிக்கது. அந்த மாநாட்டில் திரு.செல்வராஜா அவர்களின் பிரேரணையே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது’ எனும் வரலாற்றுத் தகவல் ஒன்றை முன்வைத்து அறிமுகப்படுத்தினார். 

மலையக மக்கள் தொடர்ச்சியாக இனவாத வன்முறைகளுக்கும் பேரினவாத அரச ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானபோது மலையக அறிவு ஜீவிகள் ஹட்டனில் கூடி ஒரு மாநாட்டினை நடாத்தினார்கள். அந்த மாநாட்டில் மலையக மக்கள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் இவ்வாறு இனவாத தாக்குதலுக்கு உள்வாங்கி அவல வாழ்வு வாழமுடியாது எனவும், இந்திய அரசாங்கத்துடன்  பேச்சுவார்த்தை நடாத்தி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை இந்த மக்களுக்காகப் பெற்று மைசூர் வரையான பிரதேசத்தை தேயிலைப் பெருந்தோட்ட நிலமாக மாற்றும் பொறுப்பை ஏற்பதாகவும் எல்லோரும் இந்தியா சென்று விடுவதென்றும் அன்றைய மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. ஆனாலும் அன்று இளைஞனாக இருந்த வி.டி.யின் இளைய சகோதரர் வி.செல்வராஜா கொண்டுவந்த பிரேரணை பலரது கவனத்தையும் பெற்றது. அதுவே இறுதி தீர்மானமாகவும் அமைந்தது. அந்த தீர்மானம் ‘இலங்கை எமது நாடு. மலையகம் நாம் வளர்த்தெடுத்த பு+மி. இந்த நாட்டில் அந்தஸ்துள்ள பிரஜையாக வாழும் உரிமை நமக்கு இருக்கிறது. அதற்காகப் போராடி வாழ்வது என்றும் அதற்காக ஏவப்படும் இனவாத வன்முறைகளை அடித்தால் திருப்பி அடித்தல் எனும் நிலைப்பாட்டுடன எதிர்கொள்வது’ எனும் பிரேரணையை திரு.செல்வராஜா முன்வைத்;தார். இன்று அந்த நிலையிலேயே எமது சமூகம் இலங்கை நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறது எனவும் மு.சிவலிங்கம் தனது அறிமுகத்தில் குறிப்பிட்டார். 
தனது உடன் பிறந்த அண்ணனை, அரசியல் வழிகாட்டியாக இருந்த தோழனைப் பற்றி உரையாற்றுவது என்பது கடினமானது என கண்கலங்கிய திரு.செல்வராஜா இயல்பாகவே நிகழ்வில் வி.டி.தர்மலிங்கம் அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலிக்கு வித்திட்டார். தொடர்ந்து மலையத்தில் பின்னிப்பிணைந்துள்ள தொழிற்சங்க அரசியல் முரண்நிலை குறித்து தனது கருத்துக்களைப்பதிவு செய்ததோடு இந்த நூலினை வெளிக்கொணர்ந்து மீளவும் வி.டி.யின் ஆளுமையை மலையகத்தில் நினைவுறுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.
‘மலையகம் எழுகிறது’  நூலின் சிறப்புப்பிரதி பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகரினால் திருமதி.தர்மலிங்கம் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. நூலைப் பெற்றுக்கொண்ட திருமதி.தர்மலிங்கம் அவர்கள் உரைநிகழ்த்துகையில், தர்மலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தனது குடும்பத்தை பாசத்தோடு பார்த்தாலும் தன்னை இரண்டாவது மனைவிபோலவும் மலையக மண்ணையே அவர் மனைவியாகவும் குடும்பமாகவும் நேசித்ததாகவும் தெரிவித்தார். தனது கணவர் இறந்துவிட்டார் என நினைத்திருந்த எங்கள் குடும்பத்துக்கு இந்த நூல் இன்னும் அவரது ஆளுமை உயிர்ப்புடன் இருக்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவம் கூறினார்.

அறிமுக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவில்  அங்கம் வகித்த தலவாக்கலை தமிழச் சங்கத்தினர் சுரேஷ், குணா, மோகன்ராஜ், ரஞ்சித், கிஷோ மற்றும் ஆசிரியர் ரட்ணராஜ், லெனின் மதிவானம், பத்மநாதன் முதலானோர் நன்றிக்குரியர்கள்.
மலையகம் எழுகிறது அறிமுக நிகழ்வின் முத்தாய்ப்பாக ‘மாடும் வீடும்’ தந்த  கவிஞர்.மல்லிகை சி.குமாரின் கவிதைவாசிப்பு அமைந்திருந்தது. தனக்கேயுரித்தான பாணியில் கவிதை வாசிப்பு நிகழ்த்திய கவிஞர், அவரது கவிதைக்கு வழங்கியிருந்த தலைப்பு வி.டி.அவர்களை மலையக மண்ணில் மறைக்க முடியாத ஆளுமையாக பதிவு செய்தது. கவிதையின் தலைப்பு: வி.டி. (We Tea) -நாங்களே தேயிலை -
-சுதாமதி-    19.08.2013

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates