இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவுவதில் இந்தியா பின்நிற்கின்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுடன் இந்திய அமைதிப் படையினர்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளே ஆவர். தாக்குதல் நடத்திய பகுதி மக்களுக்கே, இந்தியா அதிக உதவிகளை செய்வதற்கு முனைகின்றது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் இந்திய அரசாங்கத்-துடன் இணைந்து எமது அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி வரையான ரயில் பாதை அமைக்கும் பணி பூர்த்தி செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் 15ஆம் திகதி புதிய ரயில்பாதையில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்-ளது. இந்தக் குழுவினர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவருமான பிரபாகணேசனின் ஏற்-பாட்டில் நேற்று முற்பகல் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசாங்கம் உதவுவதில் பின்னடிப்பு செய்கின்றது. பல தடவைகள் இதுகுறித்து எடுத்துக்கூறியுள்ளபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் அக்கறைகாட்டுவதாக இல்லை.
வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இந்தியா அக்கறை காட்டுகின்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதுடன் இந்திய இராணுவத்தினர்மீது தாக்குதல் நடத்தி இந்திய அமைதிப் படையினரை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு காரணமாக இருந்தவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைச் சேர்ந்தவர்களேயாவர். ஆனால் இந்திய அரசாங்கமானது அப்பகுதிக்கே உதவிகளை செய்வதில் முன்னிற்கின்றது.
50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உதவி செய்துள்ளது. இதில் 45 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக நின்றது. மலையகப் பகு-திக்கு 4 ஆயிரம் வீடுகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் படாதபாடு படவேண்டியிருந்தது. 45 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியினை உடனடியாக வடகிழக்கில் ஆரம்பிக்குமாறு இந்தியத் தூதுவர் எம்மிடம் வலியுறுத்தினார். ஆனால் மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென நாம் கோரியபோது ஆலோசனைகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் வேறுபல சாட்டுக்களும் கூறப்பட்டன.
இந்திய வம்சாவளி மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. ஆயுதங்களை தூக்கவில்லை. ஆனாலும் இந்த மக்களுக்கு உதவுவதில் இந்தியா பின்னடிப்புச் செய்கின்றது.
இந்தியாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். வவுனியாவில் இந்திய வம்சாவளி மக்களை பதிவுசெய்ய நாம் முற்பட்டபோது இந்தியா வம்சாவளி மக்கள் என பதவிசெய்யவேண்டாமெனவும் இலங்கைத் தமிழர்கள் என பதிவுசெய்யுமாறும் ஒரு குழு அச்சுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும் எத்தகைய பாதிப்புமின்றி நாம் செயற்படுகின்றோம்.
இந்தியா பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு எமக்கு உதவுகின்றது. கிளிநொச்சி வரையான புகையிரதப் பாதையினை இந்தியா அமைத்துள்ளது. அடுத்தமாதம் 15ஆம் திகதி இந்த புதிய ரயில் பாதை திறக்கப்படும். அதேபோல் காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும் அமைக்கப்-பட்டு வருகின்றது. சம்பூர் அனல் மின் நிலையமும் இந்தியாவுடன் இணைந்தே மேற்கொள்ளப்படும். பலாலியில் விமான ஓடுபாதையும் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படும்.
வடபகுதியில் சாதி முரண்பாடு இன்னமும் காணப்படுகின்றது.
அண்மையில் வடக்கில் தென்னை மரக்கன்றுகள் வழங்கும் வைபவத்தில் நான் கலந்துகொண்டிருந்தேன். தென்னைமரத்தை வீட்டில் வைத்தால் சாதி குறைந்தவர்கள் என எண்ணுவார்கள் என்று எம்மிடம் சிலர் தெரிவித்தனர். இவ்வாறு அங்கு சாதி முரண்பாடு காணப்படுகின்றது.
இந்தியா அயல்நாடு என்பதனால் எமக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜமாகும். ஆனாலும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் குழுவினர் இச்சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பரிசில்களையும் வழங்கியுள்ளனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...