Headlines News :
முகப்பு » , » இலங்கை மலையக மக்கள் சிக்கல்கள் - வினாவும் விடையும் - மு.சி.கந்தையா

இலங்கை மலையக மக்கள் சிக்கல்கள் - வினாவும் விடையும் - மு.சி.கந்தையா


கேள்வி : இலங்கை மலையக மக்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ?

பதில் : இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிசாரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபொழுது இலங்கை மலைப் பகுதியில் காப்பி, தேயிலை, இரப்பர் போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக, அய்ரோப்பிய முதலாளிகளால், தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட, இம்மக்களின் வழித்தோன்றல்களான இந்திய வம்சாவழித் தமிழர்களைத்தான் மலையகத் தமிழர்கள் என அடையாளப்படுத்துகின்றோம்.

தமிழகத்திலிருந்து இம்மக்கள் அழைத்துச் செல்லப்படக் காரணமாக இருந்த அன்றைய தமிழகச் சூழல் எது ?

கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை, இதனால் விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமல் போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சத்தின் பிடியில் இருந்து விடுபட மாற்று வழியின்றித் தவித்த நிலை. இத்தோடு பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி போன்ற வரி விதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலை; அய்ரோப்பிய ஆட்சியாளர்கள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஸ் காலனிய நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறாகும்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?

இந்திய வம்சாவழித் தமிழர்கள் எண்ணிக்கை இன்று முப்பது இலட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1964 இல் நிகழ்ந்த சிரிமாவோசாஸ்திரி உடன்படிக்கையால் இன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் பதினைந்து இலட்சம்தான் இருக்கும். இன்று இம்மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை என்பதை விட இருநூறு ஆண்டுகளாக இவர்களின் முன்னோர்களும், இன்று வரை இவர்களும் பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். 1817ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் துவங்கிய பயணம், பின் கங்காணி மற்றும் தரகர்கள் அழைத்துச் சென்று பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டதற்குப் பின், தாயகம் திரும்ப முடியாத நிலை; மலேரியாக் காய்ச்சலாலும், உணவின்றியும் பல்லாயிரக் கணக்கானோர் மாண்டு போனார்கள். தோட்டங்கள் சிறைக்கூடங்களாக ஆக்கப்பட்டு, முழுமையான கொத்தடிமைகளாக ஆனதும், எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதும் வரலாறு ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு உழைத்த இம்மக்களின் சந்ததிகள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்பது ஒன்றா, இரண்டா என்று கூற இயலாது. இலங்கையின் அந்நிய வருவாயில்(1 ). 26 % ஈட்டித்தரும் இம்மக்கள், இன்றும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, (2). 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த குடியிருப்பு , (3). ஏனைய சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில், போசாக்கற்ற உணவும் தரமற்ற குடியிருப்புகளும், (4). குறைந்த நாள்கூலி, உத்தரவாதமற்ற வாழ்க்கை,(5). கல்வியில் பாகுபாடு, (6). அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, (7). பெருந்தோட்டங்கள் துண்டாடல், சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்ப்பகுதியில் புத்தகோயில்கள்,(8). பால்வாடி(குழந்தை பராமாரிப்பு) நிலையங்களில் தமிழ்க் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தமிழ்த் தெரியாத சிங்களப் பணியாளர்கள் நியமனம்,( 9). தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற முடியாத நிலை, (10). பலவந்தக் கருத்தடை, (11). சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ வசதியின்மை, (12). நில உரிமை மறுப்பு, கொத்தடிமைத் தொழில்முறை, தோட்டப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் உருவாக மறுப்பது, படித்த இளைஞர்களையும் தோட்டத் தொழில் செய்ய நிர்பந்திக்கும் அவலம், (13). இரண்டு நூற்றாண்டுகளாகத் தக்க வைத்து வந்த மொழி, பண்பாட்டை இழக்கும் நிலை., (14). பெருந்தோட்டங்கள் பராமரிப்பின்மை, (15). மறுக்கப்பட்டுவரும் சனநாயக உரிமைகள், (16). இனக்கலப்புத் திருமணங்கள், (17). தொழிலாளர்களுக்கான வேலை நாள் குறைப்பு போன்ற பிரச்சினைகளை இன்றும் எதிர்நோக்கியுள்ளார்கள். மேலும் மலையகத் தமிழ் மாணவர்களுக்கென தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க மறுப்பது போன்ற அடிப்படையான கல்விப் பிரச்சனைகளும் தொடர்வதைக் காணலாம்.

நில உரிமை, மொழி உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டு வருகின்றன ?

கடந்த 1972இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இத்தோட்டங்களில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மூன்று, நான்கு தலைமுறைகள் வாழ்ந்து வந்தவர்கள் அம்மண்ணில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டனர். துரத்தப்பட்டவர்கள் நிற்கதியாக்கப்பட்டனர். வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் இவர்களின் உழைப்பு ஏனைய சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தச் சகல துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டபொழுது இவர்கள் தெருக்களில் அவலக்கோலத்தில் ஒரு வேலை உணவிற்குக் கையேந்தி நின்றார்கள். அரசு கையகப்படுத்திய பல தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்பட்டுச் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இப்படி வழங்கப்பட்ட நிலங்களில் தமிழ்த் தொழிலாளியான ஒரு தோட்டத் தொழிலாளிக்குக் கூட நிலம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் நில உரிமை பெறுவதையே பெருந்தேசிய ஆதிக்கவாதம் அனுமதிக்கவில்லை. இதுவும் ஒருவகைப் பெருந்தேசிய இன ஒடுக்குமுறை என்றே கூறலாம்.

மொழி உரிமை என்பது கடந்த 1956இலேயே பறிக்கப்பட்டுச் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. பூர்வீகத் தமிழர்களின் தொடர் போராட்டங்கள், வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக 2006ம் ஆண்டு இலங்கை அமைச்சரவை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மலையகத்தமிழர்கள் 62% வாழும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர்களில் 80% சிங்களவர்களாகும். பதுளை நகரமக்கள் தொகையில் 26.3% தமிழர்களாகும். ஆனால் பதுளை மாநகரச் சபையில் பணியாற்றுவோர்களில் 450 பேரில் ஒருவர் மட்டுமே தமிழ்த் தெரிந்தவராகும். கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை அப்புத்தளை போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது. ஒரு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% தமிழர்கள் வாழ்வோர்களானால் நிர்வாக மொழியாகத் தமிழும் இருக்கவேண்டுமென இலங்கை அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் பெருந்தேசிய இன ஆதிக்க ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் மட்டுமே பதிவுகளாகியுள்ளனவே தவிர நடை முறைப் பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகவே உள்ளதை அறியலாம்.

மலையகத் தமிழர்கள் எவ்வாறான அமைப்புகளின் கீழ் அணி திரட்டப்பட்டுள்ளார்கள்?

பெருந்தோட்ட உருவாக்கத்துக்குப் பல்லும், சில்லுமாக இருந்த இம்மக்களைக் கொத்தடிமைகளாகவே தோட்ட, நிர்வாகம் வைத்துக் கொண்டது. தோட்டங்களில் வாழும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கம் தோன்ற நூறு ஆண்டுகளுக்கும் மேலானது. நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்த போதும் இவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இன்று வரையும் இவர்களுக்கான அரசியல் கட்சி உருவாகவில்லை. மாறாக, எழுபது ஆண்டுகளுக்கு முன் உருவான தொழிற்சங்கங்களின் கீழும் இந்தத் தொழிற்சங்கத் தலைமையோடு முரண்பட்டு வெளியேறும் தலைமைகள் உருவாக்கும் தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழுமே இம்மக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளார்கள்.                                              

மலையகத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசியல் கட்சி ஒன்றை உருவாக்காமல் இருப்பதற் கான காரணம என்ன ?

இம்மக்கள் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பது, தோட்ட நிர்வாகத்தோடு எழும் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டதாகும் . இப்பிரச்சினைகளைக் கையாள்வது தொழிற்சங்கங்கள்தான். தொழிற்சங்கங்களோடு இணைந்த இவர்களின் வாழ்க்கையில் மாற்றுச் சிந்தனைகள் உருவாக, அல்லது உருவாக்க முயல்வோர்களால் தொழிற்சங்கத் தலைமைக்கு ஆபத்து நேரிடும் எனச் சங்கத் தலைமைகள் எண்ணுகின்றன. இத்தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போலவே தங்களை எண்ணுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் போலவே செயல்பட்டுவருகின்றன. இம்மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அமைப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு இத்தொழிற் சங்கத்தலைமைகளே தடையாக இருந்து வருகின்றன. 1980களுக்குப் பின் உருவான சில அரசியல் கட்சிகளும் மலையக மக்களை முழுமையாக அடையாளப்படுத்துவதாக இல்லை.

மலையகத் தமிழர்கள் எத்தனை மாவட்டங்களில் வாழ்கிறார்கள்? அங்கு நிலைமைகள் எப்படி?

பெருந்தோட்டத்தைச் சார்ந்தவர்கள் பதினொரு மாவட்டங்களில் வாழ்கிறார்கள். கொழும்பிவிலும், நுவரெலியாத் தவிர இதர மாவட்டங்களிலும் சிறிய அளவிலும் 1958க்குப்பின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேறிய இம்மக்கள் வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். மலையகப் பகுதி என்பது , சிங்களக் கிராமங்களால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதிகளாகும். சில பகுதிகளில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிங்களக் கிராமங்களை கடந்தே நகரங்களுக்குச் செல்ல வேண்டும்

1964 இல் சிரிமா சாஸ்திரி உடன்படிக்கை உருவானதற்கான வரலாற்றுக் காரணம் எனன ?

1920இல் சர்வசன வாக்குரிமை வழங்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறத் தொடங்கியவுடனே, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை சிங்களப் பூர்சுவா வர்க்கம் மேற்கொண்டது. “தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன் றியமையாதவர்கள்; ஆனால் அரசியல் செயல்பாட்டுக்கு அல்ல” என்ற பிரச்சாரத்தை முன்வைத்தவர்கள், “இம்மக்கள் உழைப்பதற்காக மட்டுமே உள்ள அடிமைகள்” என்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், பிரிட்டிஸ் ஆளுமைக்குக் கீழ் இலங்கை இருந்தபடியால் சர்வசன வாக்குரிமை இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் கிடைத்தது. நாட்டுவிடுதலைக்கு முன் நடைபெற்ற 1931ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டு உறுப்பினர்களை மலையகத் தமிழர்கள் தெரிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அடுத்து வந்த தேர்தலிலும் இரு இந்தியர்களான எஸ். பி. வைத்திலிங்கம், கே. நடேச ஐய்யர் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து ஏழு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 1948இல் நாடு விடுதலை அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை மேற் கொண்டவர்களில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்காவைப் பிரதமராகக் கொண்டு மந்திரிசபை உருவானது. சிறுபான்மைப் பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த சேனநாயக்கா அதிகாரத்துக்கு வந்த ஆறுமாதத்திலேயே குடியுரிமை பறிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து 35 அங்கத்தினர்களும், ஆதரித்து 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் பத்து இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. முழுமையான மனித உரிமை மீறலான இச்சட்டத்தைத் திரும்பப் பெறப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து முறையாக இம்மக்களைத் தலைமைகள் வழி நடத்தாத காரணமும், பெருந்தேசிய இன ஆதிக்கத்தின் செயல்பாடுகளும்தான் இவ்வொப்பந்தம் உருவாகக் காரணங்களாகும்.

குடியுரிமை பறிக்கப்பட்டபோது தோட்டப்பகுதிகளில் பலம் வாய்ந்த தொழிற்சங்கங்களாக இருந்தவைகளைப் பற்றிக் கூறுங்கள்?

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் கோ. நடேச ஐய்யரால் முதல் தொழிற்சங்கமான இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தொடங்கப்பட்டது. தோட்டங்கள் உள்ளே வெளியார் யாரும் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அத்து மீறி யாரும் சென்றால், சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவில் சட்டங்கள் இருந்தன. விற்பனைப் பொருள்களைத் தலையில் சுமந்து செல்லும் சிறு வியாபாரிகளுக்கு இச்சட்டத்தைத் தோட்ட நிர்வாகம் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் துணி வியாபாரியைப் போல் தன்னை மாற்றிக் கொண்ட நடேச ஐய்யர், துணிமூட்டையைச் சுமந்து கொண்டு, தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரத்தைத் தொடங்கினார். தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் சட்ட மீறல்களையும் துண்டறிக்கைகள் மூலம் படிப்படியாக வெளியில் கொண்டு வந்த முதல் மனிதர் அவரே ஆவார்.

இதைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் 1935இல் செயல்படத் தொடங்கிய இடது சாரிகளின் தொழிற்சங்கம் இரண்டாவது தொழிற் சங்கமாகும். இச்சங்கத்தின் தலைமைகள் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இப்போராட்டங்களில், வரலாற்றுப் பதிவாயிருப்பது முல்லோயா போராட்டமாகும். ஆங்கிலேயத் தோட்ட நிர்வாகத்துக்கெதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில், கோவிந்தன் என்ற தொழிலாளி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லோயாவில் நடைபெற்ற இப்போராட்டம் இடதுசாரிகளைப்பற்றிய அச்சத்தை அய்ரோப்பியத் தோட்ட முதலாளிகள் மத்தியில் உருவாக்கியது.

1930ல் நகரப்பகுதிகளில் குறிப்பாக இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரத்தில் பணியாற்றிய இந்தியத் தமிழ், மற்றும் மலையாளிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றும்படியான நிலை உருவானது. இக்காலப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் இந்தியா திரும்பினார்கள். இந்தியர்களுக்கெதிரான பிரச்சாரங்களை, ஏ.ஈ.குண சிங்கா போன்ற தொழிற்சங்கத் தலைவர்களும், சிங்கள பூர்ஷ்வாக்களும் இணைந்து மேற்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் 1939இல் ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கைப் பயணத்தை மேற் கொண்டார்.

இலங்கையில் நடைபெற்று வந்த சில்லறை வணிகத்திலும், மொத்த வியாபாரம், மற்றும் ஏற்றுமதியிலும் இந்திய முதலாளிகளின் மூலதனம் 90% இருந்த காலம் அது. மார்வாடிகளின் தொழில் நிறுவனங்கள் கனிசமான செல்வாக்கைச் செலுத்தியது. குண்டன் மால்ஸ் போன்ற துணி ஆலைகள், மார்வாடிகளுக்குச் சொந்தமானவைகளாக இருந்தன. இவ்வணிகர்களை ஒட்டுமொத்தமாக இணைக்கும் அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. சிங்களவர் மத்தியில் உருவான இந்தியர் எதிர்ப்பு நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் இந்தியர்கள் அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் எண்ணி இருக்க வேண்டும். ஆகவேதான் கொழும்பு நகரத்தில் இருந்த வணிகர்களான லெட்சுமணன் செட்டியார், அசீஸ், தேசாய், வோரா போன்றவர்களை உள்ளடக்கிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. இதுவே 1940இல் இலங்கை இந்தியர் தொழிலாளர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செல்லத் தொடங்கியது.

மேலே தெரிவித்துள்ளதைப் போல 1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு ஏழு உறுப்பினர்கள் இத்தொழிற்சங்கத்தின் மூலமாகத் தெரிவாகிச் சென்றார்கள். இத்தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் இம்மக்களின் வாக்குகள் இடதுசாரிக் கட்சியில் பதினான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய உதவியது. ஆக மலையகத்தின் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக அன்று முதலிடத்தை வகித்த சங்கம் இலங்கை இந்தியர் தொழிற்சங்கமாகும், இரண்டாம் இடத்தில் இடதுசாரிக் கட்சியின் தொழிற்சங்கம் இருந்தது.

இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் 60% மேல் ஈட்டித் தருவதில் முதுகெலும்பாக உள்ள மக்களின் குடியுரிமைப் பறிப்புக்கெதிரான போராட்டம் எவ்வாறானதாக இருந்தது?

தோட்டப் பொருளாதாரத்தைக் கொண்டுதான் நாட்டின் பெரும்பகுதியான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இப்பொருளாதார வருவாயில் தேக்கநிலை ஏற்பட்டால், நாட்டை ஆளும் தலைமை, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தன் ஆட்சியை இழக்க நேரிடும். புதிதாய்ப் பொறுப்பேற்ற அரசு 95 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாற்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அத்தோடு பெரும்பாலான பெருந்தோட்டங்கள் அய்ரோப்பியக் கம்பனிகளுக்குச் சொந்தமானதாக இருந்தன. தேயிலை பறிப்பதில் நாள்கள் தாமதமானாலே தேயிலைத் தளிர்களைப் பறிக்க இயலாமல் போய்விடும். இதனால் பெரும் இழப்புகளை நிர்வாகம் சந்திக்கும். அரசு இயங்குவதிலும் நெருக்கடிகள் உருவாகும். இப்படியான சூழ்நிலை இருந்தும், இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இடதுசாரிகள் தங்கள் பங்கிற்கு 1952 இல் ஒரு கண்டனக் கூட்டத்தோடு தங்கள் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டனர்.

பத்து இலட்சம் மக்கள் மீது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல் சட்டத்தையும் இதன் விளைவால் பத்து இலட்சம் பேர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதையும் எவ்வளவு சாதாரண விடையமாக இத்தலைமை எண்ணியது. இப்படி எண்ணக் காரணமென்ன என்பது இன்றும் கேள்வி வடிவத்திலே உள்ளதால்தான் இலங்கை மலையகத்தில் இன்றும் அது தனது வாரிசுச் சங்கக்கொடியை உயரப் பறக்க வைத்துள்ளதை அறியலாம். இத்தலைமையின் துரோகத்தனத்தை வெளிப்படுத்தாத வரை இந்திய வம்சா வழித் தமிழர்கள் சரியான தலைமையைத் தெரிவு செய்வதில் இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க நேரிடும்.

இம்மக்களின் குடியுரிமைப் பறிப்பின் போது பூர்வீகத் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

பூர்வீகத் தமிழர்களை முன்னிலைப்படுத்திய தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமை என்பது நில உடைமைச் சமூக அமைப்பின் சிந்தனையைக் கொண்டவர்களாகவே (பெரும்பாலானோர்) இருந்தது. இவர்கள் தமிழ் உணர்வாளர்களா என்றால் அது ஆய்வுக்குரியது. மலைநாட்டுத் தமிழர்களைக் கூலிகளாகவும் அந்நியர்களாகவும் பார்த்த பார்வையின் விளைவுதான், சுந்தரலிங்கம், சிற்றம்பலம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமைப் பறிப்பை ஆதரித்து வாக்களித்தது. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், இந்தியர் குடியிருப்போர் சட்டத்தைப் பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் எதிர்த்து வாக்களித்தார். தந்தை செல்வா அவர்கள் இந்நிகழ்வைக் கண்டித்துத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறினார் என்பதெல்லாம் வரலாறாகும்.

வாக்குரிமைப் பறிப்புக்குப் பின் மலையகத் தமிழர்கள் மத்தியில் பூர்வீகத் தமிழர்களுக்கெதிரான கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதில் உண்மை எதுவாக இருக்க முடியும்? சுந்தரலிங்கமும் ,சிற்றம் பலமும், ஆளும்கட்சியில் அமைச்சர்களாக இருந் தார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின், ஆளும்கட்சியில் இருந்து சுந்தரலிங்கம் வெளியேறினார். ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சரானார். குடியுரிமைப் பறிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விவாதம் நடந்தபொழுது, தொண்டைமான் அவர்கள் நாடாளுமன்றத்துக்கே செல்லவில்லை. இரண்டு வடக்குத் தமிழ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித் ததும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித் ததும் ஏற்கத்தக்கதல்ல.

ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் தலைவராகத் திகழ்ந்த திரு. தொண்டைமான் அவர்கள், நாடாளுமன்றத்திற்குச் செல்லாதிருந்தது எந்த வகையில் சரியாகும்? குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் போராட்டத்தை அப்பொழுது மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்கள் குடியுரிமை இழக்கும் பிரச்சினையில் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில், அதனைச் செய்யாமல் இத்தலைமை நழுவ விட்டதேன்?

இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அய்ரோப்பிய முதலாளிகளின் கைகள் பிரிட்டிஸ் நாட்டின் ஆட்சிக் கதவைத் தட்டியிருக்கும். இந்திய அரசும் இம்மக்கள் சம்பந்தமான பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்து, இதில் சம்பந்தபட்டிருக்கும். இடதுசாரிகள், இப்போராட்டத்திற்கு முழுமையான ஆக்கப்பூர்வமான ஆதரவை தந்திருப்பார்கள். மறுபுறம் புத்த மதத் துறவிகள் மத்தியில் இருந்து, சிறு அளவிலான ஆதரவு கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. பூர்வீகத் தமிழ்த் தலைவர்களில் பலர் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி இருப்பார்கள். புற நிலைமைகள் சாதகமாக இருந்தபோதும், மலையகத் தமிழ் தலைமை ஏன் இதைச் செய்யவில்லை? மலையகத்தில் உள்ள அறிவு ஜீவிகள் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதேன் ? பூர்வீகத் தமிழ்த் தலைவர்கள் செய்த தவறுகளை மட்டும் பேசும் இவர்கள் தங்களை வழி நடத்திச் சென்ற இத்தலைமையின் மாபெரும் தவறின் விளைவுகள் பெரும் பாதிப்புகளை உருவாக்கி விட்டன என்பதை இவர்கள் இன்றும் ஏற்க மறுப்பதேன்? தாயகம் திருமபியோர்களில் சிலரிடம் இன்றும் இந்நோய் தொத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். தவறுகள் எல்லாப் பக்கங்களிலும் நிகழ்ந்துள்ளன. அதைச் சற்று அளவீடு செய்து பார்ப்பதன் மூலம் நமது கருத்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிட்டும்.

பாட்டாளி மக்கள் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் இடது சாரிகள் தலைமை இப்போராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை?

இடதுசாரிக் கட்சிகள், பூர்வீகத் தமிழர்களின் உரிமைகளுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் பின்வரும் தீர்வுகளை 1940களில் முன் வைத்தனர்: பூர்வீகத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை உள்ள அரசியல் அதிகாரத்தைப் பெறுவது, இந்திய வம்சாவழித்தமிழர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது. குடியுரிமைப் பறிப்பு வரை இக்கொள்கைகளில் அவர்கள் உறுதிபட இருந்தவர்கள்.

குடியுரிமைப் பறிப்புக்குப்பின் வாக்கு வங்கி அரசியல் காற்று வீசத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் அமைப்புகள் மொழியை முன்னிலைப்படுத்தினார்கள். இதனால், வர்க்க அரசியல் எடுபட மறுத்தது. மலையகப் பகுதிகளில் தொழிற்சங்கத்தின் தேவைகள் அதிகரித்து வந்தகாலம். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை தமிழராக இருந்ததால், அதிக எண்ணிக்கையில், மலையகத் தமிழர்கள் இத்தலைமையின் கீழ் அணிதிரண்டார்கள். இந்நிலையில் வாக்குரிமைப் பறிப்புக்குப்பின், வாக்குரிமை அற்ற மக்களிடம், வாக்கு வங்கி அரசியல் பயன்படாது என்ற எண்ணம் கருக்கொண்டது. அத்தோடு, இம்மக்கள் கோரிக்கைகளை ஆதரித்தால், பெரும்பான்மை மக்களாக இருக்கும் சிங்களவர்களிடம் தாங்கள் தனிமைப்பட நேரிடும் என இவர்கள் எண்ணி இருக்க வேண்டும். 1948&1952 வரை தன் குரலை உயர்த்தியவர்கள், 1952 தேர்தலுக்குப் பின் இம்மக்களின் உரிமைக்காகப் போராடுவதிலிருந்து தங்களைப் படிப்படியாக விலக்கிக் கொண்டார்கள் என்றே கூறலாம். ஆக மலையகத் தமிழர்களும் இடதுசாரிகள் தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. பூர்வீகத்தமிழர்களும், இத்தலைமையை முழுமையாக ஏற்கவில்லை. ஒரு வேளை இந்த இரண்டு பகுதிகளில் உள்ள தமிழர்கள் இடதுசாரித் தலைமையின் கீழ் அணிதிரட்டப்பட்டிருந்து, இடது தலைமை இனவாத பக்கம் சாயாது இருந்திருப்பின் 1940 காலப்பகுதிகளில் எடுத்த தீர்மானம் நடை முறைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இப்பொழுது நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும், துயரங்களைத் தமிழ்ச் சமூகம் சந்திக்காமல் இருந்திருக்கலாம்.

அதே வேளை இரண்டு தமிழ்ச் சமூகங்கள் மத்தியிலும் தங்களுக்கு முழுமையான ஆதரவு இல்லை என்பதால் இடது தலைமைகள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. வாக்குவங்கி அரசியல் இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலுக்கு வழிவகுக்கும். அத்தோடு நாட்டுமக்கள் மத்தியிலிருந்து தனிமை படுத்தப்படும் அவலத்திற்கும் தள்ளப்படுவார்கள் என்பது வரலாறு கற்றுத்தரும் படிப்பினையாகும் .இதை இடது தலைவர்கள் உணர்வார்களா என்றால் இலங்கையில் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சண்முகதாசன் தலைமையில் 1967 காலங்களில் மலையகப் பகுதியைக் குலுக்கிய செங்கொடிச் சங்கத்தின் செயல்பாடுகள் எவ்வாறாக இருந்தன?

ஏனைய சங்கங்களின் செயல்பாட்டைவிட மாறான செயல்பாட்டை அது மேற்கொண்டது. மார்க்கீயச் சிந்தனையைத் தோட்ட இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றது. “மலையக மக்கள் பிரச்சினைக்கு புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தை முன்வைத்தது தொழிற்சங்க அரங்கக் கூட்டங்களில் இக்கருத்தை அது வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையே நிலவும் அரசியல் உரிமை சம்பந்தமான வேறுபாடுகள் என்ன என்பதை அது காணத் தவறியது. குடியுரிமைப் பிரச்சினை தீராதநிலை, வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்கள், கல்வி, மருத்துவம், தொழில் சமூக வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நிரந்தரக் குடியிருப்பு, நில உரிமை மறுப்பு, நாடற்றோர் பிரச்சினையில் தள்ளாட்டம், இப்படிப் பல பிரச்சினைகளைச் சுமந்து நிற்கும் இவர்கள் மத்தியில் “புரட்சி ஒன்றே தீர்வு” என்ற முழக்கம் எவ்வளவு அபத்தமானது! இம்மக்களை இந்நாடு முழுமையாக ஏற்காத காலம், சிங்களப் பெருந்தேசிய இனவாதம் தங்கு தடையின்றி வேரூன்றி முன்னெடுக்க இயக்கங்கள் புதிய வடிவம் (ஜே.வி.பி.) பெற்றுச் செயல்பட்ட காலத்தில் இம்முழக்கம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியம்? அதுமட்டுமல்ல, புரட்சி என்ற சொல்லாடல் மட்டுமே மலையகப் பகுதிகளில் உலாவந்தனவே தவிர, புரட்சிக்கான தயாரிப்புகள் அல்ல.

 1971 இல் மக்கள் விடுதலை முன்ணணி (ஜே.வி.பி.) நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது ஜே.வி.பி. இயக் கத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத மலையக இளைஞர்கள் காவல் துறையினரால் சித்திரவதைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள், அதே வேளை இச்சங்கம் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பதில் ஏனைய சங்கங்களை விட முன்மாதிரியாக இருந்தது என்று கூறலாம்.

நன்றி - கீற்று
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates