Headlines News :
முகப்பு » » இர.சிவலிங்கம் நினைவு - மல்லியப்பூ சந்தி திலகர்

இர.சிவலிங்கம் நினைவு - மல்லியப்பூ சந்தி திலகர்


அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் பதினான்காவது நினைவுப் பேருரை அண்மையில் (24-08-213) கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. குழுவின் தலைவர் எம்.வாமதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வரவேற்புரையை இர.சிவலிங்கம் அவர்களின் மாணவரும் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவருமான ஏ.மதுரைவீரன் வழங்கினார். தனக்கும் இர.சிவலிங்கம் அவர்களுக்குமான உறவு பற்றி சிலாகித்துப்பேசிய மதுரைவீரன் ஒரு பாடசாலை அதிபராக இருந்துகொண்டு சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல் துறைகளில் இர.சிவலிங்கம் எத்தனை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

தலைமையுரை ஆற்றிய குழுவின் தலைவர் எம்.வாமதேவன், இர.சிவலிங்கம் எங்கள் ஆசிரியர். அவரின் பெயரில் இந்த நினைவுப் பேருரை நிகழ்வை கடந்த பதினான்கு ஆண்டுகளாக செய்து வருகிறோம். இது வெறுமனே எங்கள் ஆசானை புகழ்பாடும் நிகழ்ச்சியல்ல. அவரது நினைவின் பேரில் மலையக சமூகக் கலைக் கலாசார கல்வி மற்றும் தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளின் போக்கை ஆய்வு ரீதியாக மீளாய்வு செய்து கொள்ளும் முயற்சியாகும்.

இதுவரை நடைபெற்றுள்ள பதின்மூன்று உரைகளிலும் பல்வேறு ஆளுமைகள் தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளனர். காலத்திற்கு காலம் வெவ்வேறு தலைப்புகளில் இந்த உரைகள் அமைந்துள்ளன. பல்கலைக்கழக பேராசியரியர்கள் முதல் இளம் பட்டதாரிகள் ஆய்வு மாணவர்கள் வரை இந்த நினைவுப் பேருரையை ஆற்றியுள்ளனர். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இளம் பட்டதாரிகள் இந்த நினைவுப்பேருரையை வழங்குவது வளர்ந்துவரும் இளம் கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் அறிமுகம் செய்யும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. எமது குழு நினைவுப் பேருரைகளை ஏற்பாடு செய்வது மாத்திரமல்லாது கலை, இலக்கிய, சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்தல் மற்றும் கல்வி ரீதியாக சாதனைகள் செய்யும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளையும் நடாத்தியுள்ளது. அதேபோல மலையகம் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய வெளியீடுகளையும் செய்துள்ளது. அந்த வகையில் இதுவரை நான்கு நூல்களையும் வெளியீடு செய்துள்ளது. குறிப்பாக நினைவுப்பேரரைகள் உரைகள் நிகழ்ச்சி அன்றே அச்சிடப்பட்டு ஒரு கைநூலாக இலவசமாக வழங்கும் பணியினையும் எமது குழு செய்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் நினைவுப்பேருரையின் தலைப்புடன் தொடர்புடையதாக இன்னுமொரு சிறப்புரையும் அமைந்திருந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.அனீஸ் ‘இலங்கையின் அரசியல் கலாசாரமும் சிறுபான்மையினரின் உள்முரண்பாடுகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இலங்கை அரசியலில் பேரினவாத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டிய தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்கள் தமக்கிடையே கொண்டுள்ள உள் முரண்பாடுகள் காரணமாக எவ்வாறெல்லாம் அந்த வாய்ப்பினை இழந்து வந்துள்ளார்கள் என வரலாற்றுப் பார்வையோடு கலாநிதி.அனீஸ் அவர்களின் உரை அமைந்திருந்தது.

பொதுவாக எந்தவொரு நாட்டிலும் இனம் என்பது அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையிலேயே பார்க்கப்படுவதுண்டு. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கையில் மதத்தினை அடிப்படையாகக் கொண்டு தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் தனியான இனமாகப் பார்;க்கப்படுகின்றனர். 1930 களின் காலப்பபகுதியிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என குரல் எழுப்பப்பட்ட போது சேர்.பொன்.அருணாச்சலம் அவர்கள், முஸ்லிம்களும் தமிழர்கள்தான். அவர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என கூறிவைத்தார். எனினும், தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்த போதும் இலங்கைத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளி தமிழர் என்றும் முஸலிம்கள் என்றும் இலங்கையில் சிறுபான்மை மக்கள் பிரிந்தே இருந்து வந்துள்ளனர். 





இந்திய வம்சாவளியினர் வடக்கத்தியான் என்றும், கள்ளத்தோணியென்றும், இலங்கை முஸ்லிம்கள் 1800 களில் தென்னிந்தியாவில் குறைந்த சாதியனராக இருந்தவர்கள் மதமாற்றப்பட்டு முஸ்லிம்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் எனவும் கற்பிதம் செய்யப்பட்டனர். இவை தொடர் முரண்பாடுகளுக்கே வித்திட்டன. இலங்கையின் மிகக்கொடுமையான சட்டமான இந்தியவம்சாவளியினரான மலையக மக்களுக்கு வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்ட போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், குமார் பொன்னம்பலம் போன்ற இலங்கை தமிழர் தரப்பினரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து சிறுபான்மையினரின் அகமுரண்பாட்டை வளர்த்து பேரினவாதத்திற்கு துணைபோயுள்ளனர். முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகவிருந்த டி.பி.ஜாயா அவர்களும் தமிழர்களின் பிரதிநிதியாகவிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களும் இந்த தீர்மானத்திற்க எதிராக வாக்களித்திருந்தாலும் ஏனைய தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பேரினவாதத்துடன் கைகோர்ப்பு அன்று மலையக மக்களை நாடற்றவராக ஆக்கியது. அதன் பிரதிபயனை இந்த இரண்டு சமூகங்களும் இன்றுவரை அறுவடை செய்து வருகின்றன. தந்தை செல்வாவின் பாசறையில் நின்றிருந்த முஸ்லிம் தேசியம் 1990களில் வடக்கு முஸ்லிம்களுடனான கசப்பான அனுபவங்கள் ஊடாக நீண்டதொரு பகையை உருவாக்கி விட்டுள்ளது. 

தமிழை தாய்மொழியாகக் கொண்ட இலங்கை சிறுபான்மை மக்களுக்கு மக்களின் தலைமை வகிக்கக்கூடிய வாய்ப்பு வடக்கை பின்புலமாகக் கொண்ட தமிழர்களுக்கு கிடைத்துள்ளமை வரலாறு. அதனை நாங்கள் ஐந்து தலைமைகளின் காலகட்டத்தின் கீழ் பொதுவாகப் பார்க்கலாம். சேர். பொன் அருணாசலம், இராமநாதன் சகோதரர்கள் காலகட்டம், ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் காலகட்டம், தந்தை செல்வா அவர்களின் காலகட்டம், அமிர்தலிங்கம் அவர்களின் காலகட்டம், வேலுப்பிள்ளை பிரபாகரனின் கால கட்டம். நாம் இறுதியாகக் கண்டிருக்கக் கூடிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் காலகட்டம் முன்னையவர்களின் காலகட்டத்தை விட மாறுபட்டது. முன்னையவையெல்லாம் அமைதிவழி அரசியல் பயணமாக அமைந்த போதும் இறுதி மூன்று தசாப்த காலங்கள் என்பது ஆயுத போராட்டமாக அமைந்தது. முன்னைய காலங்களில் இருந்து உள்முரண்பாடுகளால் பேரினவாதத்திற்கு துணைபோயிருந்த தமிழ் பேசும் சிறுபான்மை இனம் இந்த இறுதி காலகட்டத்தில் தங்களுக்கிடையே பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு முரண்பாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கக்கூடிய கால கட்டமாக அமைந்தது. இதற்கு மதம், சாதி, பிரதேசவாதம் என எனும் அத்தனை பிரித்தாளும் காரணிகளும் துணையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தசிறுபான்மை உள்முரண்பாடுகளை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள பேரினவாதம் மிகவும் இலகவாக சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கிவைப்பதிலே வெற்றிகண்டு வருகின்றமையே சிறுபான்மை மக்கள் கண்டுள்ள அண்மைக்கால அனுபவமாகும். 

இன்று நாம் ஆறாவது சிறுபான்மைத் தலைமைத்துவ காலகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப்பின் இன்று எல்லோருடைய மதிப்பையும் பெற்று தொழில் முறையில் நீதியரசராக இருந்த ஒருவரை சிறுபான்மை மக்கள் தமது தலைமையாக தெரிவு செய்துகொள்ள பிரயத்தனம் செய்யும் காலம் இது. அவருக்கு முன் ஒரு பாரிய சவால் உள்ளது. பேரினவாதத்துக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் அணிதிரட்டி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய கடப்பாடு, அரசியல் வாதியாக அல்லாமல் நீதியின் பி;ன்புலத்தில் நின்று செயற்படவேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. அவரது அண்மைக்கால உரைகள் சர்வதேச தலையீட்டுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு எனும் நிலைப்பாடு சிறுபான்மை மக்களின் உள் முரண்பாடுகளைக் கடந்து எவ்வாறு அவர் அடையப்போகின்றார் எனும் ஒரு சவாலை அவர் முன் நிறத்தியுள்ளது என உரையை நிறைவு செய்தார் கலாநிதி அனீஸ் அவர்கள். கல்வியாளராக மட்டுமல்லாது ஒரு அரசியல் பரிமாணத்தோடு உரையாற்றியவிதம் அவையை ஒன்றிக்கச் செய்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அடுத்ததாக நினைவுப் பேருரையை அரசறிவியல் துறை பட்டதாரியான சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். ‘மலையக அரசியலில் செல்நெறியும் மலையக மக்களும்’ எனும் தலைப்பிலான அவரது உரையின் ஆரம்பத்திலேயே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இந்திய வம்சாவளி என அழைப்பதா அல்லது மலையக மக்கள் என அழைப்பதா எனும் விவாதத்தை மையப்படுத்தி தான் மலையக மக்கள் என்ற சொல்லாடலையே பயண்படுத்துவதாகவும் அதற்கான காரணங்களையும் விளக்கினார். 
மலையகத்தமிழர் எனும் அடையாளம் இந்த மக்களை இந்தியர் எனும் அந்நிய உணர்வை அவர்களிடத்தும், ஏனைய இலங்கை வாழ் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக உள்ள நிலையிலும் மலையக மக்கள என அழைப்பதே முற்போக்கானது. மலையக மக்கள் மீது திட்டமிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மலையக மகக்ளின் அணிதிரள்வானது இலங்கை எமது நாடு மலையகம் எமது பிரதேசம் நாம் ஒரு இன சமூகம் என்ற தேசிய உணர்வு எழுச்சிக்கு காரணமாகியுள்ளது. 1960 களில் உருவான மலைநாடு, மலையகம் எனும் சொற்பிரயோகம் இன்று மலையத் தேசியம் எனும் கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் இந்த மக்களை ‘மலையக மக்கள்’ என சுட்டும் மரபு நிலவுகின்றது. அதேபோல சிங்கள மக்களும் ‘கந்துகர தெமல ஜனதாவ’ (மலையகத் தமிழ் மக்கள்) என்றும் ஆங்கிலத்தில் ருp உழரவெசல வுயஅடைஇ ர்டைட ஊழரவெசல Pநழிடந என்ற பதங்களும் நிலைபெற்றுள்ளன. எனவே மலையகத் தமிழர் என்ற அடையாளம் தேசிய அங்கீகாரத்தை நோக்கிய நகர்ந்து வருகின்றமை கவனிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.

பிரித்தானியர் வருகையுடன் ஆரம்பித்த தென்னிந்திய தமிழ் மக்களின் கூலிக்கான இடப்பெயர்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அரசியல் பரிமாணம் பெற்றார்கள் என்பதை உரையில் பதிவு செய்த விஜயகுமார் 1931 ஆம் ஆண்டு வரையான இந்தியர்களின் அரசியலும் நடேசய்யரின் பணிகளும், 193 -1947 வரையான மலையகத்தமிழரின் அரசியல் எழுச்சியின் படிகள் இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கும் என்பன பற்றியும் பதிவு செய்தார். இலங்கை இந்திய காங்கிரஸ் யாரை பிரதிநிதித்துவம் செய்தது என்பதும் அதன் வர்க்கச் சார்பினையும் அது எந்த அமைப்புகளின் ஒன்றிணைவாக தோற்றம் பெற்றது என்பதனையும் கொண்டு அறியலாம். ‘பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம், என்பவற்றின் இணைவே இலங்கை இந்திய காங்கிரஸ். எனவே இலங்கை இந்தியர் காங்கிரஸ் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்வதற்காக அமைக்கப்பட்டதல்ல என்பதை அறியலாம்.

1947-1977 வரையான காலப்பகுதியை இடது சாரி அரசியலும் மலையகமும் எனும் உப தலைப்பின் கீழும், தொண்டமானின் தொழிற்சங்க ராச்சியம் ஐக்கியதேசிய கட்சி வசமாதல் பற்றியும் இது பின்னாளில் தொழிற்சங்கவாதம், தேசிய வாதம், பாராளுமன்ற வாதமாக மாறி வந்துள்ள நிலைமைகளையும் கால ஒழுங்கில் எடுத்துரைத்தார். 

முடிவாக மலையக அரசியல் செல்நெறியானது ஒரு புறம் இந்திய மேட்டுக்குடி அரசியல், இந்திய இலங்கை தொழிற்சங்க வாதம், மலையகத் தேசியம், பாராளுமன்றவாதம் என்ற விதத்திலும் மறுபுறம், தொழிற்சங்க அரசியல், இடதுசாரி தொழிற்சங்க போராட்டம் வெகுஜன அரசியல் வெளிப்பாடுகள் என பல்வேறு வழிகளில் பயணித்து வந்துள்ளது. இந்த பாராளுமன்றவாதம் மலையக மக்களின் அபிலாஷைகளை பு+ர்த்தி செய்யும் வகையில் பயணிக்கவில்லை. இதற்கு மாற்றாக வெகுஜன அரசியலுக்கான தேவை எற்பட்டுள்ளது. அவ்வாறான வெகுஜன அரசியலில் மலையக மக்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அனைத்து மக்களின் பொதுவான ஜனநாயக உரிமைகளை உள்வாங்கி குறுகிய மலையகத் தெசியவாதத்தைக் களைய வேண்டும். அப்போதுதான் மலையக மக்கள் தமது தேசியத்தையும் அரசியல் விடுதலையையும் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

பரவலான வாசிப்புகளுடனான தேடலாக அமைந்திருந்த விஜயகுமாரனின் உரை அளிக்கை செய்யும் முறையில் ஒரு வளர்ந்து வரும் ஆய்வாளனுக்குரிய பலம் மற்றும் பலவீனமான அம்சங்களை உள்வாங்கியதாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இர.சிவிலிங்கம் ஞாபகார்த்த குழுவின் உறுப்பினரான சிரேஷ்ட விரிவுரையாளர் தை.தனராஜ் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு விஜயகுமாரின் உரை சிறு நூலாக அச்சிடப்பட்டு அனைவருக்கும் இலவசமாக விநியோகிகக்ப்பட்டமை சிறப்பம்சமாகும். நிகழ்ச்சிகளை தொகுத்தும் நன்றியுரை வழங்கியும் தை.தனராஜ் அவர்களை நிகழ்வுகளை உரிய நேரத்தில் நிறைவு செய்தமை பலரதும் பாராட்டைப்பெற்றது.

வருடந்தோறும் இர.சிவலிங்கம் அவர்களின் பெயரில் நினைவுப்பேருரையாக மலையகம் பற்றிய காத்திரமான கலந்துரையாடலை ஏற்படுத்திவரும் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு புதியவர்களையும் உள்வாங்கிச் செயற்படும் வாஞ்சையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates