Headlines News :
முகப்பு » » பதவி விலகும் அரசியல் - ஜீவா சதாசிவம்

பதவி விலகும் அரசியல் - ஜீவா சதாசிவம்



நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வப்போது ஏற்படும் பல மாற்றங்கள் அதிர்ச்சியாக இருக்கும் அதேவேளை சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. இலங்கை அரசியலில் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு அமைச்சர்கள் பதவி ஏற்பதும் அதனை வேறொருவருக்கு மாற்றுவதும் என பலதரப்பட்ட சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த செயல்கள் நல்லாட்சி 'நல்லது' செய்யும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் அதேவேளை, மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலைமையை தோற்றுவித்து விட்டது எனலாம். 

அரசியல் கட்சிகளின் மத்தியில் 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாது போனமையே இந்த துரதிஷ்டவசமான நிலைக்கு  பிரதான காரணம் என்று தோன்றுகிறது.  இந்த வார அலசல் இலங்கை அரசியலில் இடம்பெற்றுவரும் அமைச்சுப்பதவி விலகல் அல்லது விலக்கப்படல் பற்றி ஆராய் கின்றது.   

மேலைத்தேய நாடுகளில் இத்தகைய அமைச்சுப்பதவி துறப்பு அடிக்கடி இடம்பெறக்கூடிய ஒன்றாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளபோதிலும் ஆசிய நாடுகளில் குறிப்பாக தென்னாசிய நாடுகளில் இவ்வாறு தவறுக்கு பொறுப்பேற்று அமைச்சுப்பதவி துறப்பதென்பது அரிது. அண்மைக்காலமாக சர்வதேச அரசியல் சூழலில் இந்த பதவி விலகல் என்பது ஒருபோக்காக   எண்ணத்தோன்றுகிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித் தானியா விலகுவது தொடர்பாக மக்கள் கருத்துக்கணிப்பினை முன்வைத்து அதில் தோல்வியுற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தனது பிரதமர் பதவியையே துறந்து கடந்த வருட நடுப்பகுதியில் தனது கனவான் தன்மையைக் காட்டியிருந்தார். அதேபோல பாகிஸ்தான் பிரதமராகவிருந்த நவாஸ் ஷெரீப் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அண்மைக்காலத்தில்  சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மிக முக்கிய பதவி விலகல்களாக இவற்றைக்கொள்ளலாம். 

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியில் இருந்து விலகும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர் தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் திலக் மாரப்பன. இவர் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழலாக பார்க்கப்பட்ட அவன்ட்காட் விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட விவாதம் ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு ஆதரவானதாக அமைந்தது. 

அரசாங்கத்தின் அமைச்சராக , அதுவும் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னைய அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டான எவன்ட்காட் விவகாரத்தை ஆதரிப்பது என்பது சர்ச்சையை உருவாக்க உடனடியாகவே அவரது அமைச்சுப்பதவி குறித்த கேள்வி எழுந்தது. 

உள்ளகமாக விசாரித் துப்பார்த்ததில் சட்டத்தரணியான திலக் மாரப்பன அவன்காட் நிறுவனத்துக்கு தொழில் ரீதியாக  சட்ட ஆலோசனை வழங்கியிருந்தமையே அவர் அதனை நியாயப்படுத்தியமைக்கு காரணம் என கண்டறியப்பட்டது. தவறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவரும்  2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பொறுப்பினை உணர்ந்து தான் வகித்த அமைச்சுப்பதவியில் இருந்து விலகியிருந்தார். 

இதற்கடுத்ததாக அமைச்சுப்பதவி சம்பந்தமாக பெரும் சர்ச்சையை உருவாக்கியது வட மாகாண சபை.  ஆரம்பத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையாக அது உருவாக் கப்பட்டபோதும் அதிகாரப் பகிர்வு பிரச்சினை காரணமாக அப்போது முதல்வராக இருந்த வரதராஜபெருமாள் தனித் தமிழீழமே தீர்வு என அதனை விட்டு அகன்றார். அதன் பிறகு 20 வருடங்களாக இயங்காமல் இருந்த வடகிழக்கு மாகாண சபை மீண்டும் இயங்கத் தொடங்கியபோது வடக்கு மாகாண சபை வேறாகவும் கிழக்கு மாகாண வேறாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத் தப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்காத  நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிச் சென்ற தரப் பினர் உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அப்போது ஆளும் கட்சியாக இருந்தமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உருவானது.

ஆயுதம் ஏந்திய போராளியாக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திர காந்தன் கிழக்கின் முதலமைச்சராகி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கலானார். நிலைமையை சுதாரித்துக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாமதித்தால் இருப்பதும் பறிபோய்விடும் என்கின்ற அடிப்படையில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்தது. 

அதற்காக பொது வேட்பாளராக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை களமிறக்கி வெற்றி கண்டது. அதேபோல அடுத்து வந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் களமிறங்கி தாங்கள் ஆட்சி அமைக்காதபோதும் பிள்ளையானிடம் இருந்த ஆட்சியை பிடுங்கி முஸ்லிம் காங்கிரஸ் வசம் கொடுத்து தானும் அமைச்சரவையில் பங்கெடுத்துக்கொண்டது. 

வடக்கில் அதிபெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சியமைத்திருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளே இன்றைய பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதில் பிரதானமாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே தமது முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபையில் முன்வைத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இது கட்சித் தலைமையினால் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், குருகுலராசா ஆகிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என விடாப்பிடியாக நின்று அவர்களை விலகச் செய்தார். அதற்கு பதிலாக வேறு இருவரையும் கூட அமைச்சராக நியமித்தார். இதில் திருப்தியுறாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாக தாம் தொடர்ந்தும் மாகாண சபையில் செயற்பட தயார் என்றாலும் தமது தமிழரசுக் கட்சி சார்பாக யாரையும் அமைச்சரவையில் இடம்பெறச்செய்வதில்லை என அண்மையில் தீர்மானித்தது. 

இதன் படி சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் பதவி விலகினார். இப்போது டெலோ அமைப்பைச் சேர்ந்த அமைச்சர் டெனீஸ்வரனை பதவிவிலகுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றார். வடமாகாண சபையில் யார் ஆளும் கட்சி, யார் எதிர்கட்சி என்று விளங்கிக்கொள்வதே சிரமமாக இருக்கிறது. அதிகளவான உறுப்பினர்களைக்கொண்டுள்ள தமிழரசுக் கட்சி தாம் கொண்டு வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்டு நிற்கிறது. ஆக மொத்தத்தில் வடமாகாண சபை இப்போது அமைச்சரவையை அமைத்துக்கொள்ளக்கூட உடன்பாடு எட்டப்படாத ஒரு மாகாண சபையாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. 

வடமாகாண ஆளும் கட்சி எவ்வாறு தமது கட்சிக்குள்ளேயே அமைச்சுப்பொறுப்பு விடயத்தில் குழம்பிப்போய் நிற்கிறதோ அதேபோலதான் மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் அமைச்சுபதவி விடயத்தில் குழம்பிப்போய் நிற்கிறது. இதில் விசேட அம்சம் என்வென்றால் தேசிய அரசாங்கத்தில் இரண்டு தரப்பினரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றபோது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளாகும். 

முதலாமவர் திலக் மாரப்பன தன்னுடைய அமைச்சுப்பதவியை துறந்து தனது கனவான் தன்மையைக் காட்டி இப்போது மீண்டும் வெளிவிவகார அமைச்சராகி தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால், நிதியமைச்சராகவும், வெளிவிகார அமைச்சராகவும் இருந்த ரவி கருணாநாயக்க மீது அவ்வப்போது  எழுந்த குற்றச்சாட்டுக்களால் திணறிப்போனார். அவர் பதவி விலகுவதும் தவிர்க்க முடியாமல் போனது.

 இப்போது எழும்பியிருக்கும் அடுத்த பூதம் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி விலகல் தொடர்பானது. இது முழுமையாக வடமாகாண சபை அமைச்சரவை விவகாரத்தை ஒத்தது. இந்த கட்டுரை அச்சுக்கு போகும் தருணத்தில் அவரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியை பிரதமர் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

இங்கு மிக முக்கிய விடயம் யாதெனில் கடந்த ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் நீதி அமைச்சரான விஜேதாஸ ராஜபக் ஷ திட்டமிட்டு தாமதம் காட்டுகிறார் என்பதுதான். அதைவிட மேலதிகமாக அமைச்சர் திலக் மாரப்பன சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி விலகிய அதே காலப்பகுதியில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவும் அவன் காட் விடயம் தொடர்பில் ஆதரவாக கருத்துத் தெரிவித்து இருந்தார். இதனை அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சரத் பொன்சேகா போன்றோர் தொடர்ச்சியாகவும் வலியுறுத்தி வந்தபோதும் கண்டுகொள்ளமல் இருந்த ஐக்கிய தேசிய கட்சி இப்போது வெள்ளம் தலைக்கு மேல்போகின்றபோது தத்தளித்து தடுமாறி நிற்கின்றது.  

எது எவ்வாறாயினும் தம் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களின்போது பதவி விலகுவதும் அல்லது விலக்கவைப்பதுமான நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இப்போதிருக்கின்ற கேள்வி. பதவி விலகுதல் என்பது கௌரவமான  கனவான்தன்மைக்கான வெளிப்பாடாக மாத்திரம் அமைந்துவிடுவதில் அர்த்தம் எதும் இருப்பதாக தெரியவில்லை மாறாக குறித்த பதவி விலகலுக்கான காரணங்களை கண்டறிந்து மக்களுக்கு பயன்தரக்கூடிய  தீர்மானங்கள் எட்டப்படுமா என்பதுதான் எம்முன் எழுந்து நிற்கும் கேள்விகளாகும். 

(நன்றி வீரகேசரி)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates