Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையை உலுக்கிய “ப்ரஸ்கேர்டல்” சம்பவம்! - என்.சரவணன்

இலங்கையை உலுக்கிய “ப்ரஸ்கேர்டல்” சம்பவம்! - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 18

இலங்கையை உலுக்கிய ப்ரஸ்கேர்டல் சம்பவம் நிகழ்ந்து 80 வருடங்கள் ஆகிவிட்டன.

மார்க் அந்தனி ப்ரஸ்கேர்டல் (Mark Anthony Bracegirdle)  இலங்கையின் வரலாற்றிலும், இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றிலும் பதியப்பட்ட முக்கிய போராளி.

ப்ரஸ்கேர்டல் 10.09.1912 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். ஆனால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக  1928 ஆம் ஆண்டு தனது தாயாருடன் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள். தாயார் இனா (Ina Marjorie Lyster) லண்டனில் பெண்கள் வாக்குரிமைக்கான இயக்கத்தின் தீவிர செயற்ப்பாட்டளராக இருந்ததுடன் அதன் காரணமாக சில தடவைகள் சிறை சென்றவர். 1925 ஆம் ஆண்டு தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் வேட்பாளராக இருந்தவர்.

ப்ரஸ்கேர்டல் 8 வருடகாலமாக அவுஸ்திரேலியாவில் இருந்தார். அந்த இடைக்காலத்தில் அவர் உயர்கல்வியையும் கற்று பின்னர் கலைப்பைடைப்புகளை விற்பனை செய்யும் ஒரு கடையொன்றின் முகாமையாளராக பணியாற்றினார். பின்னர் விவசாயத் துறையில் பயிற்சிபெற்றார். 1935 இல் அவர் அவுஸ்திரேலிய இளம் கொம்யூனிஸ்ட் லீக் எனும் இயக்கத்தில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். சிட்னியிலிருந்து ஒரு கப்பல் மூலம் இலங்கைக்கு அவர் 11.03.1936 இல் புறப்பட்டார். ஏப்ரல் 4 அன்று இலங்கை வந்தடைந்தார்.

தேயிலை உற்பத்தி, வர்த்தகம் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவே அவர் வந்தார். மாத்தளையில் மடுல்கெல்லே என்கிற தோட்டத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கு தோட்டங்களில் தொழிற்புரிந்த இந்திய கூலித் தொழிலாளர்களின் மீதான மனிதாபினாமற்ற சுரண்டல், பாரபட்சம், அநீதியை நேரடியாக கண்ணுற்றார். இங்கிலாந்திலுள்ள மாட்டுக்கொட்டகையை விட மோசமான இடங்களில் ஒரே குட்ம்பத்தைச் சேர்ந்த பலர்  தங்கவைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுகாதார வசதி குறைந்த அந்த சூழலில் பல வித நோய்களுக்கு இலக்கானார்கள். மலேரியா நோயினால் ஏற்பட்ட இழப்புகளை ப்ரஸ்கேர்டல் நேரில் கண்ணுற்றார். மந்த போசனம், போசாக்கின்மை, சுகாதாரக் கேடு, முறையான மருத்துவ உதவியின்மை காரணமாக தோட்டங்களில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 200 குழைந்தைகள் தோட்ட மண்ணுக்கே உரமானார்கள்.

1937ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த கூலி 43 சதங்கள் மட்டுமே. 26 நாட்களும் பணிபுரியாவிட்டால் மொத்த மாத சம்பளமும் ரத்துசெய்யப்படும். இது ஒரு தண்டனையாக மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களுக்கான ஒரு புசல் அரிசியை மாதாந்தம் (1 bushel rough rice = 45 lb = 20.41 kg) தோட்ட முகாமையே வழங்கும் அதற்கான கட்டணமாக 4.80 சதத்தை சம்பளத்தில் கழித்துக்கொள்வார்கள். அன்றைய சந்தை விலை கூட ஒரு புசல் அரிசி இரண்டு ரூபாய் தான். வெள்ளைத் துரைமாரின் கொடூரமான உழைப்புச் சுரண்டலை நேரடியாக கண்ணுற்றார் அவர்.

1915 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த பத்திரிகையாளர் நடேச ஐயர் தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்து 1931 இலும், 1936 இலும் அரசாங்க சபைக்கு தெரிவாகியிருந்தார். அவரின் தொழிற்சங்கத்தோடு சேர்ந்து பணிபுரிந்தார் ப்ரஸ்கேர்டல். நாவலப்பிட்டி, ஹட்டன் பகுதிகளுக்கான பொறுப்பை நடேச ஐயர் ப்ரஸ்கேர்டளிடம் ஒப்படைத்தார். நடேசய்யரின் தொழிற்சங்கத்தில் முழுநேர ஊழியராக ப்ரஸ்கேர்டல் இயங்கியிருக்கிறார்.

வேலையிலிருந்து நீக்கம்
தோட்டத் தொழிலாளர்களிடம் எப்படி வேலை வாங்குவது என்பது ப்ரஸ்கேர்டலுக்குத் தெரியாது என்றும் அவர் இந்த தொழிலுக்குத் தகுதியற்றவர் என்றும் கூறி தோட்ட நிர்வாகம் அவரை அவுஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தது.

டிசம்பர் 12 அன்று புறப்படும் கப்பலில் அவரை அனுப்புவதற்கான பயணச்சீட்டையும் கையில் 100 ரூபாவையும் கொடுத்து விடைகொடுத்தது தோட்ட நிர்வாகம்.

ஆனால் அந்த முடிவை ஏற்காத ப்ரஸ்கேர்டல் தோட்டத்தை விட்டு வெளியேறி நவ சமாஜக் கட்சியின் பணிகளில் இணைத்துக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்காக சேவை செய்யப்போவதாக முடிவெடுத்தார்.

p.n.banks
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பேங்க்ஸ் (p.n..banks) தற்செயலாக ப்ரஸ்கேர்டலை சந்தித்து கதைத்தபோது தான் 12 அன்று புறப்படப்போவதில்லை என்றும் தான் ஒரு ஓவியன் என்றும் இலங்கை குறித்த ஓவியங்கள் சிலவற்றைசெய்ய விருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ப்ரஸ்கேர்டல் ஒரு அகதியாக இருக்காதவரை இலங்கையில் இருப்பதில் ஆட்சேபனை இல்லை பேங்க்ஸ் பதிலளித்து விட்டு கடந்துள்ளார்.

இதே காலத்தில் பொலிஸ் மா அதிபராக இருந்த டவ்பிகின் ஓய்வுபெற்று திரும்புவதை கொண்டாடுமுகமாக போஸ்டர் ஒட்டியதற்காக ப்ரஸ்கேர்டளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டு ப்ரஸ்கேர்டலுக்கு ஒரு ரூபாய் ஐம்பது சதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 1915 கலவரத்தின் போது இராணுவச்சட்டத்தைப் பயன்படுத்தி பல உயிர்களை பலியாக்கியவர் டவ்பிகின். டவ்பிகின் மீது இலங்கை மக்களுக்கு மிகப் பெரிய ஆத்திரம் இருந்து வந்தது. டவ்பிகினின் இடத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர் தான் பேங்க்ஸ்.

நடேசய்யருடன்
பேங்க்ஸ் பதவியேற்றதும் ப்ரஸ்கேர்டல் பற்றிய பல விபரங்களை அவுஸ்திரேலியாவிலிருந்து திரட்டியிருந்தார். குறிப்பாக அவுஸ்திரேலியாவில் ப்ரஸ்கேர்டல் கொம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளில் ப்ரைஸ் என்கிற புனைபெயரில் செயற்பட்டுவந்தார் என்பது போன்ற விபரங்களையும் 1937 மார்ச் 3ஆம் திகதி சிட்னியில் இருந்து பெறப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ப்ரஸ்கேர்டலை தங்க வைப்பதற்கான ஒழுங்குகளை பிரபல தொழிற்சங்கவாதியும் அன்றைய சட்டசபை உறுப்பினருமான நடேசய்யர் மேற்கொண்டிருந்தார்.

நடேச ஐயர் ப்ரஸ்கேர்டலை தங்க வைப்பதற்காக ஹட்டன், நாவலப்பிட்டி போன்ற இடங்களில் வீடொன்றை வாடகைக்கு பெற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. ப்ரஸ்கேர்டலுக்காகத்தான் என்பதை அறிந்த கொழும்பைச் சேர்ந்த டொக்டர் ஒருவர் ஹட்டனில் உள்ள தனது வீட்டை ப்ரஸ்கேர்டலுக்கு வாடகைக்கு தரமுடியாதென கூறி நடேச ஐயருக்கு செக்கை திருப்பி அனுப்பிய சம்பவமும் நிகழ்ந்தது.

ப்ரஸ்கேர்டல் நாடு திரும்பாமல் வெள்ளையர்களுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அவரை மீண்டும் அழைத்து எப்படியாவது சரிகட்டி அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்ப முயற்சித்த மடுல்கெலே தோட்ட நிர்வாகம் தோட்ட உரிமையாளர் சங்கத்துக்கு ஊடாக பண ஆசை காட்டி அனுப்ப முயன்றது. அதனை கேலி செய்து நிராகரித்தார் ப்ரஸ்கேர்டல். பயணச் செலவுடன் மேலதிகமாக கொடுப்பனவுகளை கொடுத்து மகிழ்ச்சியாக அவரை அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தன.

நடேச ஐயருடன் பணிபுரியும் சந்தர்ப்பம் அற்றுப் போன நிலையில் அப்போது தொழிற்சங்கமாகவும், கட்சியாகவும் அப்போது தீவிரம் பெற்றுவந்த லங்கா சமசமாஜக் கட்சியில் ப்ரஸ்கேர்டல்  இணைந்தார்.

இடதுசாரித்தளைவர்கள்:
பிலிப் குணவர்தன, என்.எம்.பெரேரா, லெஸ்லி குணவர்தன, வர்ணன் குணசேகர, கொல்வின் ஆர் டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி, ரொபர்ட் குணவர்தன, எஸ்.ஏ.விக்கிரமசிங்க
இடதுசாரி இயக்கத்தில்
ப்ரஸ்கேர்டலை நாட்டை விட்டு வெளியேற்ற தோட்டத் துரைமார் வெள்ளையின பொலிசாரை அணுகினர். புலனாய்வுத்துறை அவரை கண்காணிக்கத் தொடங்கியது, பின் தொடர்ந்தது, அவரை விசாரணை செய்து நாட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தித்தது. ப்ரஸ்கேர்டல் சற்றும் சளைக்காமல் ல.ச.ச.க கூட்டங்களில் தோன்றி பகிரங்கமாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், சுரண்டலையும் எதிர்த்து உரையாற்றினார்.

1937 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கமலாதேவி சட்டோபாத்யாய (இந்தியாவிலிருந்து வந்திருந்த சுதந்திப் போராட்ட வீராங்கனை) இலங்கை விஜயம் செய்ததுடன் மொத்தம் 20 பெரும் கூட்டங்களில் நாடெங்கிலும் உரையாற்றினார். இதனை ஏற்பாடு செய்ததில் ல.ச.ச.க முக்கியமான பங்கை வகித்திருந்தது. பெரும்பாலான கூட்டங்களில் ப்ரஸ்கேர்டலும் கலந்துகொண்டார்.


ஆனால் அவர் உரையாற்றியது 04.04.1937 நாவலப்பிட்டியில் நடந்த கூட்டத்தில் தான்.  அக்கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டீ.சில்வா ப்ரஸ்கேர்டலை அறிமுகப்படுத்தி “முதற் தடவையாக ஒரு வெள்ளை இனத் தோழர் எமது கட்சியின் கட்சிக் கூட்டத்தில் பங்குகொள்கிறார்” என்றார். இலங்கையில் ப்ரஸ்கேர்டலின் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது. 2000 தொழிலாளர்கள் முன்னிலையில் என்.எம்.பெரேரா, ஆகியோரும் ப்ரஸ்கேர்டலும் உரையாற்றினார்கள்.  அவரது உரை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அவரைத் தொடர்ந்த  புலனாய்வுப் பொலிசார் அவரது உரையைப் பற்றியும் அவரது உருவ அமைப்பு, அவரது நடத்தை என்பது பற்றி விலாவாரியாக அறிக்கையிட்டது.

நாவலப்பிட்டி உரை
இளம் ப்ரஸ்கேர்டல் ஆற்றிய உரையின் போது பல இடங்களில் சாமி... சாமீ என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள் தொழிலாளர்கள்.
“நீங்கள் அந்த வெள்ளை மலையினை பாருங்கள். அங்குள்ள வெள்ளை மாளிகையிலே வெள்ளையர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். நீங்கள் 9 மணித்தியாலம் வேலை வாங்கும் சட்டம் இருந்தபோதும் 12 மணித்தியாலங்கள் கட்டாய வேலை வாங்கப்படுகிறீர்கள். அதற்காக எந்தவித மேலதிக கொடுப்பனவும் உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை....
தோழர்களே! சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது என நான் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் உடையவர்களாக இருந்தாலும் வெள்ளை இதயத்தினை கொண்டிருக்கின்றிர்கள். ஆனால் என்னுடைய நாட்டவர்களோ வெள்ளை நிறத் தோலை கொண்டிருந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த உள்ளத்தினை கொண்டுள்ளனர்.
எழுங்கள் தோழர்களே எழுங்கள் உங்கள் சுதந்திரத்துக்காகவும், உரிமைக்காகவும் எழுங்கள். உங்கள் உரிமைக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறேன். ” என்றார்.
ப்ரஸ்கேர்டல் எச்.டி. தோமஸ் என்ற பெரிய துரையினைப் பற்றி தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார். "எச். டி. தோமஸ் தன்னுடைய வேலையாட்களை கடுமையாக நடத்தினார். தொழிலாளர்களின் லயக்காம்பிராக்களுக்கு சென்று அவர்களை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தினார். பல தொழிலாளர்கள் மலேரியா நோயினால் வருந்திய போதும் அவர்களை தேயிலை பறிக்கும் படி கூறினார். மேலும் அவர் தோட்ட பாடசாலைக்குச் சென்று சிறுவர்களையும் தேயிலை பறிக்க செல்லும் படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் படிப்பதைவிட தேயிலை பறிப்பதே நல்லது என்றார். எழுத வாசிக்க அவர்கள் படிப்பதானது; பின்னர் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்நிலையைப்பற்றிய சிந்தனையினை தந்துவிடும்.

நாடுகடத்தும் உத்தரவு
அந்த நீண்ட உரையை விலாவாரியாக அன்றைய புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை எடுத்து அனுப்பினர். இதனை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய ஆளுநர் எட்வர்ட் ஸ்டப்சை (Sir Edward Stubbs) ப்ரஸ்கேர்டலை வெளியேற்றும் ஆணையைப் பிறப்பிக்கும்படி உதவி பொலிஸ் மா அதிபர் பெர்கியுசன் பிரதம செயலாளருக்கு அனுப்புமுன் உள்துறை அமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி உள்துறை அமைச்சர் சேர் பாரன் ஜெயதிலக்கவுக்கு அனுப்பிய அறிக்கையில் 1896 ஆம் ஆண்டின் அரசவைப் பிரகடனத்தின் 3 வது பிரிவின் கீழ் அவரை நாடு கடத்த ஏதுவான காரணங்களை விளக்கி நாட்டின் அமைதியைக் கருத்திற்கொண்டு நாடு கடத்தவேண்டும் என்று தான் கருதுவதாகவும் முடியுமானவரை விரைவில் பிரதம செயலாளருக்கு அவற்றை கிடைக்கச் செய்யும்படி பரிதுரைப்பதாக கூறினார்.

இந்த அறிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்த ஆளுநர் ஆர்.ஏ.ஸ்டப்ஸ் 1937 ஏப்ரல் 20 அன்று ஒரு ஆணையை பிறப்பித்தார்.
“மறைந்த விக்டோரியா மகாராணியினால் அரச சபையில் 1896 ஒக்டோபர் 26 பிறப்பித்திருந்த ஆணையின் 3வது பிரிவின் 3வது சரத்தின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட அதிகாரத்தின் படி ஆளுநரான நான் மார்க் அந்தனி லிஸ்டர் ப்ரஸ்கேர்டலாகிய உம்மை 24  ஏப்ரல் 1937 அன்று மாலை 6க்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறும்படி இத்தால் ஆணையிடுகிறேன்.”
21.04.1937 – நுவரெலியா
ஆர்.ஈ.ஸ்டப்ஸ் – ஆளுநர்

இந்த ஆணை ப்ரஸ்கேர்டலிடம் 21ஆம் திகதியன்றே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 

ப்ரஸ்கேர்டல் தலைமறைவு
இந்த ஆணையை மீறுவது என்று லங்கா சம சமாஜக் கட்சி தீர்மானித்தது. அதன் தலைவர்கள் லண்டனில் சட்டம் கற்ற நிபுணர்களாக இருந்தனர். இந்த அநீதியை எதிர்த்து மக்கள் முன் பிரச்சாரமாக முன்னெடுப்பது என்றும் அடுத்ததாக சட்ட ரீதியில் அணுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த ஆணை 21ஆம் திகதி ப்ரஸ்கேர்டலிடம் சேர்க்கப்பட்டது. 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் பெர்கியுசனை சந்தித்து உரையாடியபோது தான் இந்த ஆணையை நிராகரித்தால் என்ன ஆகும்” என்று வினவினார். உடனடியாக கைது செய்யபடுவீர்கள் என்று பெர்கியுசன் கூறினார். அங்கிருந்து வெளியேறிய ப்ரஸ்கேர்டலை புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

ஏப்ரல் 24 அன்று அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட இருந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது. அவரை ப்ரஸ்கேர்டலை வழியனுப்புவதற்காக கூடியிருந்த பெருமளவு மக்கள் அவருக்காக கோஷமெழுப்பியபடி இருந்தனர். மாலை 6.20க்கு அக்கப்பல் புறப்பட்டது ப்ரஸ்கேர்டல் அங்கு வரவேயில்லை. அனைவரும் களைந்து சென்றனர். ப்ரஸ்கேர்டலை கைது செய்வதற்கான ஆணையை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டார் பெர்கியுசன். ப்ரஸ்கேர்டலை தேடிக்கொண்டிருந்தார்கள்.

இதன் காரணமாக ப்ரஸ்கேர்டலை சமசமாஜித் தலைவர்கள் தலைமறைவாக பாதுகாத்தனர். நாடு கடத்துவதற்கு எதிராகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். மே தினத்தின் போது பிரதான தொனிப்பொருளாக “ப்ரஸ்கேர்டலை நாடு கடத்தாதே. எங்களுக்கு வேண்டும் ப்ரஸ்கேர்டல்” என்கிற கோஷம் அமைந்தது.
"தோழர் ப்ரஸ்கேர்டல் ஐம்பதினாயிரம் மக்கள் மத்தியில் தோன்றினார்."
(சமசமாஜ பத்திரிகையின் தலைப்புச் செய்தியில்)

ப்ரஸ்கேர்டலை நாடு கடத்துவதற்கு எதிராக  மே 5 ஆம் திகதி காலி முகத்திடலில் மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்திற்கு ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரள் அப்போது கலந்துகொண்டார்கள் என பதிவானது. அந்தக் கூட்டத்தில் பெரும் கரகோசத்துடன் ப்ரஸ்கேர்டல் திடீரென மக்கள் முன் தோன்றி ஏகாதிபத்தியத்துக்கும், தோட்டத் துரைமார்களுக்கும் எதிராக உணர்ச்சி ததும்ப உரையாற்றிவிட்டு பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக மீண்டும் அங்கிருந்து மறைந்து தலைமறைவானார்.

பல தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஜோர்ஜ் ஆர்.டீ.சில்வா, என்.எம்.பெரேரா, ஏ.ஈ.குணசிங்க, டீ.எம்.ராஜபக்ஷ, எஸ்.டபிள்யு.ஆர்.டீ பண்டாரநாயக்க, உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஹன்டி பேரின்பநாயகம் மற்றும் மீனாட்சியம்மாள் நடேசய்யர் இந்தக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றியிருந்தனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் துரோகம்
மே மாதம் 4, 5 ஆகிய இரு நாட்கள் அரசாங்க சபையில் ப்ரஸ்கேர்டலை நாடு கடத்துவது பற்றிய ஆணை குறித்து விவாதம் இடம்பெற்றது. இந்த முழு விவாதமும் ல.ச.ச.க வெளியிட்ட “ப்ரஸ்கேர்டல் விவகாரம்” (The Bracegirdle Affair) என்கிற 576 பக்கங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அந்த நூலில் ப்ரஸ்கேர்டல் விவகாரம் தொடர்பாக அரசாங்க உயர்மட்டங்களில் பரிமாறப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள், அரசாங்க சபை விவாதங்கள், அறிக்கைகள், அன்றைய பத்திரிகை செய்திகள், வழக்கு விபரங்கள், தீர்ப்பு, விசாரணைக்குழு அறிக்கை என அத்தனையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம்
அரசாங்க சபையில் காரசாரமாக நடந்த இந்த விவாதத்தின் இறுதியில் நாடுகடத்துவதற்கு எதிராக 34 பேரும் நாடுகடத்துவதற்கு ஆதரவாக 7 பெரும் வாக்களித்தார்கள். 27 வாக்குகளினால் அரசாங்கத்தின் அந்த ஆணை தோற்கடிக்கப்பட்டது. ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தவேண்டும் என்று வாக்களித்த 7 கயவர்களில் ஒருவர் ஜி.ஜி.பொன்னம்பலம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் 1939இல் நாவலப்பிட்டியில் ஜி.ஜி.பொன்னம்பலம் பேசிய பேச்சால் உருவான இனக்கலவரமும் அதனால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கதை இன்னொரு உபகதை.

ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தக் கூடாது என்ற தீர்மானத்தின் மீது நிகழ்ந்த வாக்களிப்பு.
இதற்கிடையில் இதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு தயாரான நிலையில் இருந்தது ல.ச.ச.க. மே 7 அன்று புதுக்கடை வழக்கறிஞர் காரியாலயத்தில் ப்ரஸ்கேர்டல் கைதாவதற்கு ஏதுவாக தயாராக இருந்தார்கள். எதிர்பார்த்தபடி அன்று மாலை ப்ரஸ்கேர்டலை பொலிசார் கைது செய்தார்கள். சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் ஆட்கொணர் எழுத்தாணை கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ப்ரஸ்கேர்டல் கைது செய்யப்பட்டார் என்பதைவிட தன்னை கைது செய்ய வழிவிட்டார் என்றே கூறவேண்டும். ல.ச.ச.க அவரை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுத்தது. ஹேபியஸ் கோபஸ் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யும்போது அவரை கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கெனவே 10 நாட்களைக் கடந்திருந்தது. இந்த இடைக்காலத்தில் ப்ரஸ்கேர்டல் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தார்.

“ப்ரஸ்கேர்டல் வழக்கு”
ஆளுநர் ஸ்டப்ஸின் உத்தரவுக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ல.ச.ச.க செயலாளரும் பிரபல வழக்கறிஞருமான வேர்ணன் குணசேகர. அந்த மனுவில் சட்ட மீறல்களை வரிசைப்படுத்தியிருந்தார் அவர். 

இந்த வழக்கு Abrahams, C. (பிரதம நீதியரசர்) Maartensz. Soert S.J ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த சட்ட நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ததன் பின்னர் அவருக்கு இருக்கும் கருத்து கூறும் உரிமையினை குறிப்பிட்டு ப்ரஸ்கேர்டலின் கைதும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான கவர்னரின் கட்டளையும் சட்டமுரணானது எனத் 18.05.1937 அன்று தீர்ப்பளித்து சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ப்ரஸ்கேர்டலை  உடனடியாக விடுவிக்கும்படியும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆளுநரின் உத்தரவு சட்ட விரோதமானது என்றும், ப்ரஸ்கேர்டலை நாடுகடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சட்ட விதிகள் யுத்த காலத்திலோ அல்லது முழு நாடும் கிளர்ச்சிச் சூழலுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவரை நாடு கடத்தும் அதிகாரம் அவசரகால நிலைமையின் போது மட்டும்தான் ஆளுநருக்கு முடியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இராணுவ சட்டம் அமுலில் இருக்கும்போதோ உள்நாட்டு நெருக்கடி வரும்போது தான் ஏற்படுகிறது. 1937 ஏப்ரல் 20 அன்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு அப்படிப்பட்ட ஒரு நிலையின் கீழ் பிறபிக்கப்பட்ட ஒன்றில்லை. 

மேலும், ப்ரஸ்கேர்டலை நாடுகடத்துவதற்கான காரணம் மக்கள் நலனுக்காகவே என்பது இங்கு சம்பந்தமில்லாதது என்றும், அப்படியும் ஒரு வெளிநாட்டவர் என்றால் அது தீர்க்கப்படவேண்டியது 1917ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க வெளிநாட்டவர் விசாரணைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழேயே. ஆனால் ப்ரஸ்கேர்டல் ஒரு வெளிநாட்டவர் அல்லர். அவர் ஒரு பிரித்தானிய பிரஜை என்கிற அடிப்படையிலேயே அணுகியிருக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக ஒரு வரலாற்று நிகழ்வும் நீதித்துறையில் நிகழ்ந்தது. அதாவது 1896 ஆம் ஆண்டு மகாராணியின் ஆணையான “நாடுகடத்துவது தொடர்பில் ஆளுநருக்கு இருந்த அதிகாரம்” சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இந்தத் தீர்ப்பின் பின்னர் அந்த சட்டம் நீக்கப்பட்டது.

கூடவே இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீ.என்.பேங்க்ஸ் பதவியில் இருந்த நீக்கப்பட வேண்டும் என்று அரச சபையில் பிலிப் குணவர்த்தன கொண்டு வந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 30 அன்று அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புத் தோல்வி, அரசாங்க சபையிலும் பிரேரணை தோற்கடிப்பட்டமை என்பவற்றால் ப்ரஸ்கேர்டலை நாடுகடத்தும் உத்தரவுக்கு கையெழுத்திட்ட ஆளுநர் ஸ்டப்ஸ் பதவிதுறந்து ஜூன் 30 நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜூலை 12 அன்று பிரதி செயலாளரிடமிருந்து ஒரு கடிதம் ப்ரஸ்கேர்டலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி “உங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த பிரயாண அனுமதிப் பத்திரம் காலாவதியாகிவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கோ அல்லது இங்கிலாந்துக்கோ பயணிக்கத் தேவையேற்படின் பிரயாண அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு பிரதம செயலாளர் காரியாலயத்துக்கு வாருங்கள்” என்று இருந்தது.

ஆனால் ப்ரஸ்கேர்டல் அவுஸ்திரேலியாவுக்கோ, இங்கிலாந்துக்கோ புறப்படவில்லை. மாறாக சமசமாஜக் கட்சியுடன் சேர்ந்து நாடளாவிய அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஆணைக்குழுவின் தோல்வி
இதே வேளை அரசாங்க சபை விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் பாரன் ஜயதிலக்க இந்த நாடு கடத்தும் உத்தரவு பற்றி எதுவும் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இதனை விசாரணை செய்வதற்காக 23.11.1937 அன்று பிரதம நீதியரசர் சேர் சிட்னி ஏப்ரகாம் தலைமையிலான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சரியாக ஒரு வருடம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 01.11.1938 அன்று “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு” பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டது.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் அரசாங்க சபையில் 1938 நவம்பர் 22,23,29,30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் நடந்தது. அதில் உரையாற்றிய பிலிப் குணவர்த்தன இது தவறை மூடிமறைக்கும் பிழையான ஆவணம் இது என்றார்.

டிசம்பர் 1 அன்று இந்த ஆணைக்குழு அறிக்கையை கண்டிப்பதாவும், நிராகரிப்பதாகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 34 பெரும் எதிராக 14 பேரும் வாக்களித்தனர். இருவர் நடுநிலை வகித்தனர்.

ஆங்கிலேய அரசு தன்னை நியாயப்படுத்த இந்த ஆணைக்குழுவைப் பயன்படுத்த முயன்றது. ப்ரஸ்கேர்டலுக்கு விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதியில் சந்தேகம் எழுப்பப்படவில்லை. அதேவேளை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பேங்க்ஸ்ஸின் பதவி நீக்கம் சரியானது தானா? உள்துறை அமைச்சர் பாரன் ஜயதிலக்கவின் பாத்திரம் பற்றியதாகவே விவாதங்கள் தொடர்ந்தன. பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக பாரன் ஜயதிலக்கவின் சாட்சியங்கள் அமையாததால் அவரை பொய்யராக்கவே ஆணைக்குழுவும், ஆட்சியாளர்களும் முயற்சி செய்தனர்.

சேர் பாரன் ஜயதிலக்க அப்போது சிங்கள மகா சபையின் பிரதிநிதியாக இருந்தார். சிங்கள மகா சபையின் சார்பில் அமைச்சரவையில் அங்கம் வகித்த பாரன் ஜயதிலக்க உட்பட அனைவரும் அமைச்சரவையில் இருந்து விழ வேண்டும் என்று டெசம்பர் 8 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதே போன்ற ஒரு தீர்மானத்தை இலங்கை தேசிய காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றியது.

ஆணைக்குழு அறிக்கை சவ ஊர்வலமாக
ஏ.ஈ.குனசிங்கவின் தலைமையில் ஹேமபால முனிதாசவின் ஏற்பாட்டில் கொழும்பு டவர் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பாரன் ஜயதிலக்க மற்றும் அமைச்சரவையின் மீது நம்பிக்கை தெரிவிக்குமுகமாகவும், “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கையை” கண்டிக்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்ட “ப்ரஸ்கேர்டல் அறிக்கையை” வைத்து ஏ.ஈ.குணசிங்க மற்றும் முனிதாச ஆகியோர் ஊர்வலமாக அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அந்த சவ ஊர்வலத்துக்கு “தொழிலாளர் வாத்தியக் குழு” சவ வாத்தியம் இசைத்தபடி கொம்பனி வீதியினூடாக காலி முகத் திடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அந்த மைதானத்தில் சிறிது நேரம் வைத்து இருந்து, பலரது உரையின் பின்னர் அந்த “ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கை”யை ஏந்திய சவப்பெட்டியை கடலில் அனுப்பி வைத்தனர்.

ப்ரஸ்கேர்டல் இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத பாத்திரம். ப்ரஸ்கேர்டல் சம்பவம் இலங்கையின் சட்ட, ஆட்சி, நிர்வாக விடயத்தில் மாத்திரம் அதிர்வை உருவாக்கவில்லை. கூடவே இலங்கையின் இடதுசாரி எழுச்சிக்கும் பெரிதும் வித்திட்டது. தொழிலாளர் வர்க்கத்துக்கு புத்துயிர்ப்பைத் தந்து இடதுசாரி வேலைத்திட்டத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தியது. மேலும் இலங்கையின் சுதந்திரக் கோரிக்கைக்கான உந்துதலையும் சூழலையும் கூட உருவாக்குவதில் இந்த சம்பவம் பெரும் வகிபாகத்தைக் கொடுத்தது.

பிரஸ்கேர்டல் 84 வது வயதில் - “The Bracegirdle Affaire” நூலிலிருந்து
ப்ரஸ்கேர்டல் ஆணைக்குழு அறிக்கை வெளிவந்த வேளை ப்ரஸ்கேர்டல் நாட்டில் இருக்கவில்லை. 31.10.1937 அவர் நாட்டிலிருந்து நிரபராதியாகவே Ander Labon எனும் கப்பலில் நாட்டை விட்டு  வெளியேறினார். அவர் அவுஸ்திரேலிய செல்லவில்லை அதே தான் பிறந்த அதே இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது போராட்டங்களை முன்னெடுத்தார். தொல்லியல் துறையில் கற்று லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாகி பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்தார். 22.06.1999 அன்று 87 வது வயதில் மரணமானார்.

இலங்கையை விட்டு அவர் வெளியேறுமுன் இலங்கை தொழிலாளர் வர்க்கத்துக்கு அவர் எழுதிய கடிதத்தை “சமசமாஜ” பத்திரிகை 05.11.1937 அன்று வெளியிட்டது. கடிதத்தின் இப்படி முடிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்துக்கு விளங்கப்படுத்துவேன். ஆங்கில தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை உங்களுக்கு கிடைக்கச் செய்ய இங்கிலாந்து சென்று நான் சகல விதத்திலும் பாடுபடுவேன். உலகத் தொழிலாளர் வர்க்கத்தையும் இலங்கை தொழிலாளர் உலகையும் இணைத்து பணியாற்ற திடசங்கற்பம் கொள்வோம்!
இலங்கை தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்!
உலகத் தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சியிலமர்த்துவோம்!

உசாத்துணை
  1. “The Bracegirdle Affair”  by Wesley S.Muthiah and Sydney Wanasinghe - AYoung Socialist Publications, Colombo -1997 page 1998.
  2. The rise of the labor movement in Ceylon. Author, Kumari Jayawardena. Publisher, Duke University Press, 1972
  3. ලාංකේය නිදහස් සටනේ කතා පුවතක් - බ්‍රේස්‌ගර්ඩ්ල් - නිමල් හොරණ -Godage Publication ,1967
  4. බ්‍රේස්‌ ගර්ඩ්ල් සහ ගෝවින්දන් - මලල්ගොඩ බන්ධුතිලක - Lahiru Publication, 2001
  5. Bracegirdle: The Young Anglo-Australian Behind Sri Lanka’s Independence Struggle, Vinod Moonesinghe
  6. The Bracegirdle Saga: 60 Years After - T. Perera
  7. The Bracegirdle Incident By Laksiri Fernando –
  8. http://www.namathumalayagam.com/2016/11/1915-57.html


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates