நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்படும் என பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டபோதே இருக்கின்ற ஆட்சி நல்லாட்சியில்லை என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது. எனவே நல்லாட்சி என்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்திக்கொண்டு அதனை உருவாக்குவதற்கு மாறாக இருக்கின்ற ஆட்சியை மாற்றிவிட்டால் அது நல்லாட்சி என்கின்ற புரிதலே பரவலாக ஏற்பட்டது. அதுவே இன்று நிகழ்ந்தும் இருக்கின்றது. ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் ஆட்சி மாறினால் நல்லாட்சி என்கிற மனநிலை மாறி உண்மையில் நல்லாட்சி ஒன்றிற்கான தேவை குறித்தும் உரையாடப்படுகின்றது. எனவே நல்லாட்சி என்பதன் புரிதல் நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கின்றது என்பதனையே இது காட்டுகின்றது.
முன்னைய ஆட்சியில் இருந்த குறைபாடுகள் பல விமர்சனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக ஜனநாயக மறுப்பு, சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சி, மனித உரிமை மீறல், போன்றன அதில் பிரதான கவனத்தைப்பெற்றன. பாராளுமன்றத்திடம் இருந்து விடுபட்ட ஆட்சி முறைமை தனியே நிறைவேற்று அதிகாரத்தை நோக்கி திரும்பியமை ஜனநாயகத் தன்மையை வலுவிழக்கச் செய்தது. அதுவே சர்வாதிகாரத்திற்கும் வழிவகுத்ததது. குடும்ப ஆட்சிக்கும் வழிவகுத்தது. இவற்றினூடாக பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
யுத்தத்தை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தமை சிறுபான்மை தேசிய இனங்களையும் தாண்டி நாட்டில் பரவலாக பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கிய வேளை ஆட்சியை மாற்ற வேண்டும் எனும் தேவைப்பாட்டை உருவாக்கியது. அதேநேரம் இருக்கின்ற அந்த அதிகார மையப்படுத்தலை தன்வசமே வைத்துக்கொள்ள கொண்டுவரப்பட்ட பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தம், ஆட்சியை நீடித்துக்கொள்வதற்காக அவசராமாக ஜனாதிபதி தேர்தலையும் முன்கொண்டுவந்தது.
ஆட்சியை மாற்ற வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்த மக்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பினூடாக ஜனாதிபதி தேர்தலை ஒரு 'சர்வஜன வாக்கெடுப்பாக' மாற்றி ஆட்சியை மாற்றிப்போட்டார்கள். அதனூடாக ஜனநாயக மரபு மீறி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தம் கேள்விக்கு உள்ளானது. எனவே ஜனாதிபதி தேர்தலின்போதே மக்கள் நல்லாட்சிக்கான ஆரம்பத்தை கொடுத்தார்கள்.
அதற்கு பின்னதான நடைமுறைகள் என்று பார்த்தால் ஒரு குடும்பத்தின் அதிகார ஆட்சி ஓரளவு ஆட்டம் கண்டது. அரசியலமைப்பில் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டு 18ஆவது திருத்தம் வலுவிழக்கச் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பதவிக்காலமும் மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் மாற்றவேண்டும் என தமது வாக்குகளால் வழங்கிய ஆணையை அரசாங்கம் சட்டபூர்வமாக நிறைவேற்றியமை நல்லாட்சியின் அடையாளமாகக் கொள்ளமுடிந்தது.
அதேபோல 17வது அரசியல் அமைப்பின் ஊடாக தீர்மானிக்கபட்டும் நடைமுறைப்படுத்தாமல் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. இதுவும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அதுவும் நிறைவேறயிருப்பதன் மூலம் நல்லாட்சிக்கான ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது என கொள்ளலாம். இவை இரண்டும் நாம் காணக்கூடிய பண்பு சார் மாற்றம். இவற்றை பிரயோகிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இருக்கின்றது, என்றே எண்ணத்தோன்றுகின்றது.
அடுத்த எதிர்பார்ப்பு உத்தேச அரசியல் யாப்பு. அத்தகைய யாப்பினை உருவாக்குவதற்காக மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் ஜனநாயகத்தன்மையை காட்டி நிற்பது மகிழ்ச்சி. மக்கள் கருத்தறியும் குழு, நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாகவும் செயற்படுதல் போன்றன ஆட்சியமைப்பை தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் ஜனநாயகத்தை காட்டிநிற்கின்றது. இந்த முன்னெடுப்பு வெற்றியடையும் வரை அது நல்லாட்சிக்கான பயணமாக மட்டுமே கொள்ள முடியும். தவிரவும் தகவல் அறியும் உரிமை சட்டம், காணோமல் ஆக்கப்பட்டடோர் பற்றிய தகவல் அறியும் அலுவலகம் போன்ற முயற்சிகள் கூட நல்லெண்ண வெளிப்பாடுகளே.
ஆனாலும், இந்த எல்லா முயற்சிகளும் நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளாக மாத்திரமே கொள்ளப்பட வேண்டியுள்ளது. காரணம் நல்லாட்சிக்கான ஆணையை மக்கள் வழங்கியிருந்தாலும் அதனைக் கொண்டு நடாத்த வேண்டியது ஆட்சியில் பங்கேற்போரின் பொறுப்பாகிறது. அத்தகைய ஆட்சிப்பங்கேற்போர் மக்கள் ஆணையை மட்டுமின்றி மரபு சார்ந்த முறைசாரா முறைமையொன்றுக்கும் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். அது சுயாதீனமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மந்தமான போக்கினைக் காட்டிநிற்கின்றது. அது மக்களிடத்தில் நம்பிக்கையீனத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. எனவே நல்லாட்சி என்பது ஆட்சியை இருக்கின்ற ஆட்சியை மாற்றிவிடுவது மாத்திரமல்ல. மரபு ரீதியான அரசியல் முறைமைகளில் இருந்தும் விடுபட்டு சுயாதீனமாக செயற்படுதில் இருந்தே ஏற்படுத்தப்படக்கூடியது.
இந்த ஆட்சியின் தவறுக்கான நியாயங்கள் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகளாக இருந்துவிட முடியாது. பண்பு சார் மாற்றங்களுக்கு அப்பால் மக்களின் நாளாந்த வாழ்வில் உணரக்கூடிய அபிவிருத்தியை, பொருளாதார வாய்ப்பு வசதிகளையும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
நல்லாட்சி என்பது மக்கள் உணர்வதாக இருக்க வேண்டும். மக்கள் ஆட்சி மாற்றத்தை உணர்கிறார்களே அன்றி நல்லாட்சி நடப்பதாக இன்னும் உணர்வு பெறவில்லை. எனவே மக்கள் அத்தகைய உணர்வுபெற்றவர்களாக வருவதற்கு நீண்ட நெடிய அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
(நன்றி தினக்குரல்)
(நன்றி தினக்குரல்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...