Headlines News :
முகப்பு » , , , , , » 99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு : 1 - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு : 1 - என்.சரவணன்

சேர் பொன் அருணாச்சலம் - ஜேம்ஸ் பீரிஸ்
பெப்ரவரி 4ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் நமக்கு கிடைத்த நாளென திருப்பி திருப்பி புனையப் படுகின்ற ஒரு மிகப் பெரிய கும்பமேளா சிறிலங்காவில் நடப்பதுண்டு. இந்த நாளன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடும் படி பணிக்கப் படுவார்கள். அவ்வாறு தேசியக்கொடி பறக்கவிடாதவர்கள் சந்தேகத்திற்குள்ளாவார்கள். நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிகள் இந்த நாளில் அமுலுக்கு வரும். இந்த நிலைமை இப்போது சற்று தளர்ந்திருக்கின்ற போதும் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த கொடுமை இது.

ஏனைய நாளை விட சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளாகவும்,  அனைத்து மக்களும் பாதுகாப்பு என்கிற பேரில் இம்சைப் படுத்தப்படும் நாளாகவும் கடந்துபோன யுத்த காலங்களில் இருந்தது அது. சுதந்திரதினம் இந்தளவு வேடிக்கையாகிப் போனதன் பின்னணியின் வரலாற்றுப் பின்புலம் பலரால் மறக்கப்படுகின்ற ஒன்றாகியும் விடுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் உரிமைகள் இழக்கப்பட்டு, உரிமைக்கோரிக்கைகள் நசுக்கப்பட்டு,  அகதிகளாக, அனாதரவாளர்களாக, சீரழிக்கப்பட்டவர்களாக இருப்பதும், ஈற்றில் இருந்தவற்றையும் இழந்தவர்களாக, அகதிகளாக, கைதிகளாக, நாடோடிகளாக, ஆகியிருக்கும் நிலை. இன்று அரசியல் அதிகாரத்தைவிட யுத்தத்தால் இழந்துபோன அடிப்படைகளை மீட்பதில் படாதுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. 

இதே சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் தங்கள் பிரதேசங்களில் கரிநாளாக அனுஷ்டித்து வந்த ஒரு காலமும் இருந்தது. கறுப்புக் கொடி ஏற்றி தமது மறுப்பையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்த காலம் இருந்தது.

ஆங்கிலேயர்கள் தமிழர்களின் சுதந்திரத்தையும் பறித்து சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்து இந்த வருடத்துடன் 69 ஆண்டுகளாக ஆகியிருக்கலாம். ஆனால் தமிழர்கள் அதற்கு முன்னரே சிங்கள தரப்பிடமிருந்து ஏமாற்றப்பட்டு 99 வருடங்கள் ஆகின்றன. இந்த 99 வருடங்களுக்குள் கண்ட வாக்குறுதிகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள், என்பவற்றை சுருக்கமாக மீட்டுப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

வட கிழக்கெங்கும் இது வரைகாலம் பெப்ரவரி 4 என்பது ஒரு கரிநாளாகத் தான் அனுட்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த தினத்தில் அங்கு கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு, சிங்கள பௌத்த அடக்குமுறையின் சின்னமான தேசியக்கொடி (சிங்கக்கொடி) தவிர்க்கப்பட்டு, எரிக்கப்பட்டு, தேசிய கீதத்துக்குப் பதிலாக தமிழ் கீதம் இசைக்கப்பட்டு வந்திருக்கிறது.

“சுதந்திரம்” என்பது தமிழர்களுக்கு “சு” நீக்கப்பட்ட “தந்திரம்” என்றால் அது மிகையில்லை. அது யாரால் யாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்? எவருக்கு கிடைத்திருக்கிற சுதந்திரம்? நிச்சயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது இங்கு வாழும் ஏனைய சிறுபான்மை இனக் குழுமங்களுக்கோ அல்ல.

அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பௌத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாகவும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைகளைக் பிச்சை கேட்கும் தரப்பினராகவும் மாறியது. தொடர்ச்சியாக இரங்கிப் போய் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்கக்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளுடன் பேச முற்படுவது, வாக்குறுதிகள் வழங்குவது, ஒப்பந்தம் செய்து கொள்வது, தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கியெறிந்து விட்டு தமது வேலையைப் பார்ப்பது என்பதே வரலாறாக பதியப்பட்டுள்ளது. 

இவை ஒன்றும் வரலாற்றில் ஒரு முறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பௌத்த அதிகாரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமது விடுதலை என்பது கேட்டுக் கெஞ்சிப் பெறுவது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.

இந்த 99 ஆண்டு கால வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு தான். அது இந்த அதிகாரம் கைமாறப்பட்ட 69 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலந்தொட்டு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்...


முதலாவது நம்பிக்கைத் துரோகம்
1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந்தனர்.

அதன்படி இலங்கை சீர்திருத்தக் கழகம் என்கிற அமைப்பை 1917 இல் உருவாக்கியபோது அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சேர் பொன் அருணாச்சலத்தை தலைவராக நியமித்தனர். இலங்கை சட்ட நூல்நிலையத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. “எமது அரசியல் தேவை” என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..

“இலங்கை பிச்சை கேட்கும் வரிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்” என்றார் (02.04.1917)

வெகு விரைவில் அப்போது இலங்கையில் இயங்கிய ஏனைய சங்கங்களான இலங்கை தேசிய சங்கம், சிலாபம் சங்கம், யாழ்ப்பான சங்கம் ஆகிய சங்கங்களையும் இணைத்து இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொண்டனர். இதனை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்,ஆர்,சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இனரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரிக்கு “எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக கூடிய முதாலாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக் கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை  பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையை சரி கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள். 

இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்பாண சங்கத் தலைவர் ஏ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அத விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

08.12.1918 அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள்.

“மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு எமது ஆதரவை தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்” என்றார்கள்.

அன்றே அருணாசலம் அச்செய்தியை சபாபதிக்கு அறிவித்தார். அந்த உறுதிமொழியின் பேரில் யாழ்பாண சங்கமும் இன ரீதி பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

எப்.ஆர்.சேனநாயக்க
மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்கா, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.

1921சட்டசபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுருத்திய வேளை 

“இலங்கை சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது”  என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

எப்.ஆர்.சேனநாயக்கா இந்த சதியின் பின்னணியில் இருந்தார். இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறினார். இறுதியில் அந்த தொகுதிக்கு ஜேம்ஸ் பீரிசை தெரிவு செய்தார்கள். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாக பதியப்படுகிறது.

இந்த துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார்.  ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது. சிங்கள தரப்பு தமிழர்களுக்கு செய்த துரோக ஒப்பந்த வரலாறு அங்கிருந்து தான் தொடங்கிற்று. முதல் ஒப்பந்த மீறல் அங்கிருந்து தான் ஆரம்பமானது. சிங்கள தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.


முதற்தடவையாக தமிழீழம்
அதுவரை கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் பணியாற்றி வந்த அருணாச்சலம் யாழ்ப்பாணம் சென்று இலங்கை தமிழ் மக்கள் சங்கம் (Ceylon Tamil League) என்கிற அமைப்பை அங்கு 1923 இல் உருவாக்கினார். அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வைத்துத் தான் தமிழ் ஈழம் என்ற சொற்றொடரை முதன் முதலில் உபயோகித்தார். அவரின் உரையில்...

“அரசியல் தேவையின் விளைவாக இச்சங்கம் உருவாக்கப்படுகிறது. இதை உருவாக்குவதற்கு அரசியல் மட்டும் காரணமல்ல. "தமிழ் ஈழம்" என நாங்கள் பெருமையுடன் கூறும் லட்சியத்தை அடைவதற்கு உழைப்பதே இச் சங்கத்தை உருவாக்கியதன் நோக்கம்.” (16.09.1923) என்றார். ஒரு சில மாதங்களில்  அவர் இந்தியாவுக்கு யாத்திரை சென்ற வேளை நோயுற்று இறந்து போனார் (09.01.1924).

இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இ.தே.கா.வினர் சமரசத்துக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த சமரச முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.

கண்டி சிங்களவர்களும் இதே காலப்பகுதியில் தம்மை தனித்துவமான மக்கள் பிரிவினராக அங்கீகரித்து தமது உரிமைகளை பாதுகாக்கக்கப்பட வேண்டும் என்று கோரினார்கள். கண்டியிலுள்ள 7 தொகுதிகளிலும் கண்டியைச் சேர்ந்தவர்களே போட்டியிடவேண்டும் என்று கோரினார்கள். தேசிய காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டிருந்த போதும் நான்கு தொகுதிகளில் கீழ் நாட்டு சிங்களவர்களை கடியில் போட்டியிடச் செய்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றினார்கள். கீழ் நாட்டு சிங்களவர்கள் மீது நம்பிக்கையிழந்த கண்டியச் சிங்களவர்கள் இதன் போது தான் சமஷ்டி கோரிக்கையை முவைத்தார்கள். அதனை ஆதரித்த எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க இந்தக் காலப்பகுதியில் தான் சமஷ்டி பற்றிய தனது உறுதியான கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.  (பிற்குறிப்பை காண்க)

கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர், தமிழர்களுக்குமாக இந்த சமஷ்டி அமைப்பு பிரிக்கப்பட்டு ஆளப்பட வேண்டும் என்றும் “சமஸ்டியே இலங்கைக்கு உகந்த ஒரேயொரு தீர்வு” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து 1926 இல் உரையாற்றியிருந்தார். வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பிரதேசத்தை அவர் அதில் முன்மொழிந்தார். அந்த உரை விரிவான கட்டுரையாக  “த சிலோன் மோர்னிங் லீடர்” பத்திரிகையில் 17.07.1926 அன்று வெளியானது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி - சி.ஈ.கொறயா

"மகேந்திரா" ஒப்பந்தம்
1921இல் தமிழ் தலைவர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.கா.வினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இ.தே.கா இந்த நிலைமைகளை சரி செய்தால் மாத்திரமே ஆங்கிலேயர்களுடன் ஒருமித்து குரல் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்கள்.

இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை இ.தே.கா வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினருக்கும் கண்டியச் சிங்களத் தலைமைகளுக்குமிடையில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடியாகச் சாத்தியப்படவில்லை. அனால் அதன் பின்னர் 1925 யூன் 28ஆம் திகதியன்று தமிழர் மகா சபைக்கும் இ.தே.கா.வினருக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாடு சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் இல்லத்தில் நடந்தது. அவரது இல்லத்திற்கு அவர் வைத்திருந்த பெயர் தான் “மகேந்திரா இல்லம்” எனவே மகேந்திரா ஒப்பந்தம் என்கிற பெயரிலேயே இந்த ஒப்பந்தத்தை அழைப்பார்கள். இதன் போது சி.ஈ.கொறயா, அவரது சகோதரர் விக்டர் கொறயா, ஜோர்ஜ் ஈ டி சில்வா, என்.எச்.ஜயதிலக்க, டி.பீ.ஜாயா, எம், ஏ. அருளானந்தம், பீ.டீ.எஸ்.குலரத்ன, ஆர்,எஸ்,எஸ்.குணவர்தன, எஸ் முத்தையா ஆகியோர் இ.தே.கா சார்பிலும், துரைசாமி, ஏ.கனகரத்தினம், எஸ். ராஜரத்தினம், ஏ.ஆர்.சுப்பிரமணியம், எல்.ஆர்.ஸ்பென்செர், எப்.பெய்லி மயில்வாகனம், டீ.ஆர். நல்லையா, எஸ்.சீ.தம்பையா, எஸ்.ஆர்.இராசரத்தினம் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன் போது தான் “மகேந்திரா ஒப்பந்தம்” (Mahendra Pact) அல்லது ”சிங்கள-தமிழ் ஒப்பந்தம்” எனப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி தமிழர் தரப்பில் தமிழர் மகா சபையில் சார்பில் சேர் வைத்திலிங்கம் துரைசாமியும் இ.தே.கா சார்பில் கொரயாவும் கையெழுத்திட்டனர். துரைசாமி வட மாகாணத்தில் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி.

இந்த ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்த தமிழ் பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 7 விடயங்களில் உடன்பாடு காணப்பட்டது. பெரும்பாலும் அவை இலங்கை தேசிய காங்கிரசின் நடைமுறையில் இனத்துவ அணுகுமுறை குறித்ததாக இருந்தன. 

  1. அரசாங்க சபைக்கான பிரதிநிதித்துவமானது வடக்கு கிழக்கு மற்றும் மேல் மாகாணம் ஆகியவை எவ்வாறு விகிதாசார முறைப்படி இருக்கக் கூடியவகையில் எதிர்கால அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பது குறித்து முதல் பந்தி விளக்குகிறது.
  1. இலங்கை தேசிய காங்கிரசின் விடயதான குழுவானது 35 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அந்த 35 பேரும் பிரதேசவாரியாகவும், இனவாரியாகவும் எப்படி நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இரண்டாவது கோரிக்கை விளக்குகிறது.
  1. எந்தவொரு தீர்மானமும், திருத்தங்களும் காங்கிரசில் தீர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் விடயதான கமிட்டியில் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
  1. விடயதான குழுவில் அவை நான்கில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படல் வேண்டும்.
  1. பெரும்பான்மை என்பது அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மை என்று அர்த்தம் கொள்ளப்படும்
  1. வடக்கு கிழக்கு பற்றிய விடயங்களில் இலங்கை தமிழர் மகா சபையைச் சேர்ந்தவர்களே பிரதிநித்தித்துவப் படுத்துவார்கள்.
  1. தென் பிரதேசம் மேல் மாகாணம் என்றும், சிலாபம், புத்தளம் மாவட்டங்கள் வடமேற்கு மாகாணம் என்றும் (தமிழ் பிரதேச “அத்பத்து” தவிர்ந்தவை), மத்திய பிரதேசம் மத்திய மாகாணம் என்றும், வாடா மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சபரகமுவா மாகாணம, குருநாகல் மாவட்டம் “தமிழ் ரத்பத்து” சேர்ந்து வட மேல்மாகாணம் என்றம், வடக்கு பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாணம் என்றும் அர்த்தப்படுத்தலாம்.

ஆனால் இந்த உடன்பாடுகள் ஒன்றாக கூடி ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்ட போதும் அவர்கள் கொழும்பு திரும்பியதும் இந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.

இக்கோரிக்கை 1925ஆம் ஆண்டு வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் 3வதாக இருந்தது. ஆனாலும் இவ் ஒப்பந்த விடயங்கள் அடுத்த வருடாந்த மாநாட்டுக்கு ஒத்தி போடப்பட்டது. கட்டாயமாக 1926ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் இது முன்வைக்கப்படுமென பிரான்ஸிஸ் டி.சொய்ஸாவால் கொரயாவுக்கு உறுதியளிக்கப்பட்டபோதும் அம் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் கூட இது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தேசிய காங்கிரசினர் நம்பிக்கைத் துரோகிகள் என தமிழ் மக்கள் கருதுவார்கள் என அப்போது 'கொரயா' வால் சொல்லப்பட்டது. அதன்படியே நடந்தது. தமிழ் தலைமை இரண்டாவது முறையும் ஏமாற்றப்பட்டார்கள். இதன் விளைவு தமிழ் அரசியல் தேசிய அரசியலிலிருந்து தனித்துச் செல்லத் தொடங்கியது.
துரோகங்கள் தொடரும்...

உசாத்துணை

  • “The Ceylon National Nongress in disarray, 1920-1; sir Ponnambalam Arunachalam leaves the congress” - K. M. DE Silva - The Ceylon Journal of Historical and Social studies, 1972, Vol. 2 No. 2 pp. 97-117
  • “The Ceylon National Congress in Disarray 11: the triumph of Sir William Manning, 1921-1924” - K. M. DE Silva, The Ceylon Journal of Historical and Social studies, 1973, Vol. 3 No. 1 pp. 16-39
  • “Communal Conflict and the Formation of the Ceylon National Congress - Ariyaratne, R. A, Ceylon Historical and Social Studies Publication Board. The Ceylon Journal of Historical and Social Studies, 1977 Vol. VII No. 1 , pp. 57-82
  • "Elite conflict and the Ceylon national congress 1921-1928" a history of Sri Lanka by K. M. De Silva - 1981, c. Hurst & Company - London University of California press.
  • Broken promises of Sinhala leaders - M.Thirunavukkarasu 2012, Tamil Marumalarchi Sangam
  • “පොන්නම්බලම්-කුමාරස්වාමි පවුල සහ වෙල්ලාල දේශපාලනය” (பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பமும் வெள்ளாள அரசியலும் – நளின் சுபசிங்க 30.01.2014) http://www.yuthukama.com/2015/09/WellalaDeshapalanaya.html
பிற்குறிப்பு:
இலங்கைக்கு சிறந்த  அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று பண்டாரநாயக்க தீவிரமாக கருத்து வெளியிட்ட காலம் அது. சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் அவர் 1926 மே மாதம் ஒரு தொடர் கட்டுரைகளை (மொத்தம் 6 கட்டுரைகள்) எழுதி அதற்கான காரணங்களை நிறுவினார். அது மட்டுமன்றி இந்தியாவின் சேர்ந்து கூட்டாட்சியாகக் கூட இருப்பது இலங்கைக்கு பாதுகாப்பானது என்றார். ஆனால் இந்த கருத்தை தமிழர் தரப்பில் இருந்து ஜேம்ஸ் டீ ரத்னம் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஜேம்ஸ் டீ ரத்னம் இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதி. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  அரசியல்  முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தார். சமஷ்டி விடயத்தில் அக் கட்சியின் அங்கீகாரம் கூட கிடைத்தது ரத்னம் போன்ற தமிழ் தலைவர்கள் தவிர.  அப்பேர்பட்ட இருவரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நின்றார்கள். 


Share this post :

+ comments + 1 comments

அருமையான வரலாற்று ஆவணம். நன்றி

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates