இந்த தொடர் பத்தியின் 3வது பாகத்தை ஆரம்பிக்கையில் வாசகர்கள் பகிர்ந்துக்கொண்டவை பற்றி சில விடயங்களை சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் முநூலில் கருத்துச் சொல்லியிருந்தால் அதனை அப்படியே கடந்த வாரம் போல் இணைத்து விட்டிருப்பேன். 'ஜல்லிக்கட்டு' கவனயீர்ப்புபோல் 'இலங்கையில் தேயிலைக்கு வயது 150 எமக்கு வயது 200' எனும் கவனயீர்ப்பைச் செய்வோமா எனக் கேட்டதனால் என்னவோ ஒரு சத்தத்தையும் காணவில்லை. இதுதானே நமது அரசியல் நிலை. யாராவது எங்காவது முன்னெடுக்கும் அலையில் நாமும் முண்டியடிப்போமே தவிர நமக்கான ஒன்றை முன்னெடுக்க முன்வருவதில்லை. இல்லாவிட்டால் ஒட்டுமொத்த நுவரெலியா மாவட்ட மந்தபோஷாக்காக எழுந்த ஜனாதிபதியின் குரல் 'ஒரு அம்புலன்ஸ்' வண்டியில் அடங்கிவிடுவதை கொண்டாட தயங்காமல் இருப்போமா. இந்த அரசியல்தான் எமது அரசியலாகிக் கிடக்கிறது.
இப்போது மலையகத்தில் மந்தபோஷணத்தை இல்லாமல் ஆக்க ஒரு அம்புலன்ஸ் வண்டி போதும் என கொள்ள முடியுமா? அதுபோலத்தான் ஜல்லிக்கட்டுக்கான 'நமது' போராட்டமும். தேயிலைக்கான வயது இலங்கையில் 150 எனில் நமக்கு வயது இருநூறு. இருநூறு வருடத்திற்கு முன்னர் இலங்கைக் கடற்கரையில் வந்திறங்கியபோது கொடுத்த தொற்றுநோய் பரவாது சொட்டு மருந்து கொடுத்த மருத்துவ முறையில் இருந்து நாம் மாற்றம் பெற்றிருக்கிறோமா? அந்த சொட்டுமருந்தைக் கொடுத்தது இந்தியாவில் இருந்து இந்த நோய் இலங்கைக்குப் போய்விடக்கூடாது இந்திய அரசாங்கமாக அல்லது இலங்கைக்குள் வந்துவிடக்கூடாது என இலங்கை அரசாங்கமோ பொறுப்புடன் செய்த வேலையில்லை. எமது உழைப்பைப் இறப்பினால் இழந்துவிடக்கூடாது என 'பிரிட்டிஷ் கம்பனிகள்' பயன்படுத்திய மருத்துவ முறைதான் அது. இன்றைக்கு இருநூறு ஆண்டுகள் கடந்தும் பிரிட்டிஷ் கம்பனிகளுக்குப் பதிலாக 'பிராந்திய கம்பனிகள்' (RPC) செய்துகொண்டிருக்கின்றன. முன் னூறுக்கும் மேற்பட்ட தோட்ட வைத்திய நிலையங்களில் 30 மாத்திரம் தான் அரச பொறுப்பில் உள்ளது . அதுவும் முறையாக நடத்தப்படுவதில்லை. வருடத்திற்கு 300 மில்லியன் ஒதுக்கப்பட்டு 'நகர மற்றும் தோட்டத்துறை' வைத்தியசாலைகளுக்கு செலவிடப்படுவதாக சொன்னாலும் தோட்ட வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியத்தை தாண்டவில்லை. முற்றுமுழுதாக தோட்ட கம்பனிகள் நடாத்தும் மருத்துவ முறைமைக்குள் ஒரு மில்லியன் பெருந்தோட்ட மக்களை வைத்துக்கொண்டு எப்படி மந்தபோஷனத்தை இல்லாமல் ஆக்குவது. ஒரு அம்புலன்ஸ் வண்டியூடாகவா?
ஒட்டுமொத்த தோட்டப்பகுதி வைத்தியமுறைமை அரசாங்க தேசிய வைத்திய முறைமையில் இருந்து ஓரம்கட்டப்பட்ட ஒன்றாகவே இந்த இருநூறு ஆண்டுகாலமாக இருந்து வருகின்றது. அது பரிணாம வளர்ச்சியில் தோட்ட மருத்துவ உதவியாளர் (Estate Medical Assistant - EMA )எனப்படும் ஒரு முறைமைக்குள் கொண்டு நடாத்தப்படுகின்றது. இந்த மருத்துவர்களுக்கு சம்பளம் கொடுப்பது ஒன்றும் அரசாங்கம் இல்லை. தோட்ட முகாமையாளர். எனவே தோட்டக் கம்பனிகளின் மருத்துவ நிகழ்ச்சி நிரலே இங்கு முன்னெடுக்கப்படுகின்றது. அதற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிக்ழ்ச்சி நிரல் இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. இப்படி தனியாருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும். கட்டுப்பாட்டுக்குள் கிடக்கும் மருத்துவ முறைமையில் இருந்து மந்தபோஷணம் இல்லாத குழந்தைகளை எப்படி ஜனாதிபதி அடையாளம் காண முடியும். எனவே நோயுற்ற பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல 'அம்புலன்ஸ்' அவசியமாகியிருப்பது போல் மந்தபோஷணமில்லா மலையக சிறுவர்களை உருவாக்க தோட்ட மருத்துவ முறை மாற்றப்படல் வேண்டும். தோட்ட முகாமையாளருக்கு அல்லாது மாவட்ட வைத்திய அதிகாரிக்கு பொறுப்புக் கூறும் மத்திய அல்லது மாகாண அரசுக்கு கீழ் மலையக மக்களின் மருத்துவ துறை அமைதல் வேண்டும். இதற்கான கோரிக்கை மக்களிடத்தில் இருந்து எழவேண்டும். இப்படித்தான் தோட்டப்பாடசாலை முறைமையில் இருந்து இப்போது மத்திய மற்றும் மாகாண அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதுபோல் 'சுகாதாரத்திணைக்களம்' தோட்டப்பகுதி சுகாதாரத்தைப் பொறுப்பேற்கும் காலம் கனியும்போதுதான் நாம் இப்போது கல்வித்துறையில் மறுமலர்ச்சி காணுவதுபோல் சுகாதார துறையிலும் ஒரு மறுமலர்ச்சிக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
இந்தப்பின்னணியிலேயே தேயிலையின் நூற்றியைம்பது கால வரலாற்றில் அதனை ஆதாரமாகக் கொண்டு நாம் எங்கு நிற்கிறோம் என நினைந்து எழ வேண்டியிருக்கிறது. இலங்கையின் பணப் பயிர்கள் எவையென கேட்டால் ' தேயிலை, இரப்பர், தெங்கு' என மனப்பாடம் செய்வித்து ஒப்புவித்த காலம் காணாமல் போய்விட்டது. இன்று உலக சந்தையில் இலங்கைத் தேயிலை நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இனி முதலாம் இடத்தைப் பெற கென்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முறையே பின்தள்ள வேண்டியிருக்கிறது. இது நடைமுறைச் சாத்தியமாகுமா? அத்தகையதொரு தேயிலைப் பயிர்ச்செய்கை இப்போது நடைமுறையில் உள்ளதா? மறுபுறத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முதலாம் இடத்தில் இருந்த தேயிலை ஏற்றுமதியும் இப்போது மூன்றாம் நான்காம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாம் இடத்தைப் பிடித்திருக்கும் துறை பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வோர் அங்கிருந்து அனுப்பும் அந்நிய செலாவணிதான் இன்றைய இலங்கையின் முதலாவது 'ஏற்றுமதி' வருமானம். இலங்கை யாரை ஏற்றுமதி செய்து இந்த வருமானத்தை ஈட்டுகிறது. 'பணிப்பெண்களே' அதிகம். பணிப்பெண்களில் எத்தனை மலையக தாய்மார், சகோதரிகள் இருக்கின்றார்கள் ஏன்அவர்கள் இந்தத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும். தங்களைச் சுற்றித் தேயிலைத்தோட்டம் அமைந்திருக்க அது இலங்கையின் ஏற்றுமதி பயிராக இருக்க தான் ஏன் 'ஏற்றுமதி' பண்டமாக்கி நிற்க வேண்டும். தான் ஏன் தந்தையை, தாயை, சகோதர, சகோதரிகளை கணவனை, பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு சென்று வீட்டுவேலைகளை கூலிக்காக செய்ய வேண்டும்.இந்த இருநூறு ஆண்டுகால வரலாற்றில் நாம் ஈட்டிக்கொண்டது என்ன? தேயிலை ஏற்றுமதியில் கீழிறங்கி தேயிலை கொய்த நமது தாயையும் சகோதரிகளையும் ஏற்றுமதி செய்வதா? இந்தியாவில் இருந்து தொழிலுக்காக இறக்குமதியான நாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தொழிலுக்காக ஏற்றுமதியாகப்போகிறோமா?
இப்படியான கேள்விகள் எழும்போதுதான் தேயிலைக்குப்பதிலாக நம்மை நோக்கி வரும் 'பாம் ஒயில்' உற்பத்தி பற்றியும் பேச நேர்கிறது. 'பாம் ஒயில்' என்றவுடன் எவ்வளவு அழகாக இருக்கிறது. நானாக மொழிபெயர்க்கும் வரை எனக்கு 'பாம் ஒயில்' என்பதற்கு தமிழில் என்ன சொல்வதென்று தெரியாது. ஆனால், அந்த உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நமது மக்கள் அதற்கு பொருத்தமான காரணத்தோடு பெயரிட்டிருந்தார்கள். 'கட்டுப்பொல்'. அதனையே "முள்ளுத்தேங்காய்' என மொழிப் பெயர்த்திருந்தேன். ஏற்கனவே தேங்காய் எண்ணை நம்மிடையே பிரபலமாகவுள்ள நிலையில் இந்த முள்ளுத்தேங்காய் எண்ணை பற்றி தெரிந்துக்கொள்வதில் அதிகமானோர் ஆர்வமாகவே உள்ளனர். தவிரவும் தேங்காய் எண்ணையை 'தேங்காண்ணை' என உச்சரிக்கும் நம்மவர்கள் "உங்கள் 'முள்ளுத் தேங்காண்ணை' தொடர் வாசிக்கிறேன். புதிய தகவல்களைத் தருவதாகவுள்ளது. ஏன் இப்படி ஒரு தொடர் எழுத தோன்றியது' எனவும் கேட்கிறார்கள் . அவர்களுக்காக அல்-அஸுமத் தின் அறுவடைக்கனவுகள் நாவலுக்கு எழுதிய குறிப்பின் முதல் பந்தி இங்கே.
எந்தவொரு எழுத்தாளனுக்கும் அவனது பிறப்பும், அந்த பிறப்புசார் பிரதேசமும் அந்த பிரதேசம் சார்ந்து அவன் கொண்டிருக்கும் பிரக்ஞையும், அந்த பிரதேசம் சார் மக்களும், அந்த மக்களின் சமூகம்சார் வாழ்க்கையும் அவர்தம் மொழியும் கலையும்,பண்பாடும் படைப்பாற்றலுக்கான பின்புலத்தை கொடுக்கின்றன. அந்த பின்புலத்தோடு அவனது வாசிப்பு அனுபவங்களும், சமூகம் நோக்கிய பார்வையும் (Perception)தேடலும் இரண்டரக்கலக்கும்போது அவனே ஒரு சமூக விஞ்ஞானியாகி அவன் ஆய்ந்தறிந்தவற்றை புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் வெளிப்படுத்தி நிற்கும் தன்மை கலை, இலக்கியச் செயற்பாட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவை எழுத்துச் செயற்பாடாகவும், கலைச் செயற்பாடுகளாகவும் அளிக்கைகளாகவும் இந்த சமூகத்திற்கு நிரம்பல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. (Supply). இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில் இந்த நிரம்பல் கேள்வியினால் (Demand) எழும்புகின்ற நிரம்பல் இல்லை என்பதுதான். யாரையும் எழுதச்சொல்லியோ ஆடச்சொல்லியோ சமூகத்தில் எவரும் கேள்வி (Demand) விடுப்பதில்லை. ஆனால், ஒரு கலைஞனோ அல்லது எழுத்தாளனோ தன்னுடைய வெளிப்படுத்தலை செய்வதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக்கொள்கிறான். இதற்குள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களும் ஏராளம். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது கலை, இலக்கிய செயற்பாடுகளினால் செழுமையாக்கிக் கொண்டவர்கள் பத்து வீதம் ஆனோர் என்றால் எஞ்சிய தொன்னூறு வீதமும் வறுமையாக்கிக் கொண்டவர்கள் என்பதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்த நிலை தொடரும்போதும் இந்த சமூகத்தில் கலை,இலக்கிய, எழுத்துச் செயற்பாடுகளில் ஈடுபாடு குறைவதுமில்லை,ஈடுபடுவோர் குறைவதுமில்லை. எனவேதான் எழுதத் தோனுவனவற்றை எழுதிக்கொண்டிருக்கிறோம்.
இப்போதைக்கு அது என்னவென்று தெரிந்து கொள்ள தலைப்பை மீண்டும் வாசிக்க...
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...