Headlines News :
முகப்பு » , , , , » “சாட்சி தராதவர்களை கண்ட இடத்தில் சுடு!” (1915 கண்டி கலகம் –47) - என்.சரவணன்

“சாட்சி தராதவர்களை கண்ட இடத்தில் சுடு!” (1915 கண்டி கலகம் –47) - என்.சரவணன்


அன்றைய பெரும் பிரமுகர்களில் ஒருவரான சேர் சீ.எஸ்.ஒபேசேகரவின் மகனான போரெஸ்டர் ஒபேசேகர எழுதி ஒக்டோபர் 6 அன்று வெளியான கட்டுரையில் இப்படி ஓரிடத்தில் இப்படி  குறிப்பிடுகிறார்.

“சில வழக்குகளைத் தவிர ஏனைய அனைத்து வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகளாக்கபட்டமை நியாப்படி அல்ல என்பதை இன்று மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். எனவே இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக ஒரு அரச விசாரணைகுழு ஒன்று அவசியம்....
இராணுவ நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்ட பலர்; பாரபட்சமற்ற நீதி விசாரணையொன்றின் மூலம் உறுதி செய்யும்வரை மக்கள் நம்ப்பப்போவதில்லை. இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டதனால் மாத்திரம் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதை நான் நம்பப்போவதில்லை...” என்றார் அவர்.

பொய்யான சாட்சிகளை மோசமாக பயன்படுத்தி பல அப்பாவிகளுக்கு அநீதி இளைத்த இன்னொரு தரப்பு பொலிஸ், விதானைமார், மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் ஆவர். இராணுவ சட்டத்தின் கீழ் இவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டன. எனவே இந்த அதிகாரிகளில் பலர் அதனை துஷ்பியோகம் செய்தார்கள். 

கொழும்புக்கான விசேட அணையாளர் ஆர்.டபிள்யு.பயர்ட் (R.W.Byrde) வெளியிட்ட ஒரு அறிக்கையில் இப்படி குறிப்பிடப்படுகிறது.

"சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த சாட்சிகளை மறைக்கும் எவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். கண்டி அரசாங்க அதிபரம் அங்கு ஆணையாளராக இயங்குபவருமான சீ.எஸ்.வாகன் (C. S. Vaughan) இந்த அறிக்கையை விடுத்துள்ளார்...
சாட்சிகள், ஆதாரங்கள், ஒத்தாசைகள் பெறுவதற்காக இராணுவம், அல்லது சிவில் அதிகாரிகள் முன்னிலையில் சமூகமளிக்காது போனால் அவர்கள் கண்ட இடத்தில் சுடப்படுவார்கள்...”
இது ஒரு “ஆணை” ஆகும் ஆணையாளர் ஆர்,.பீ.ஹெலிங்க்ஸ் காலியிலும் அதே போன்ற அறிவித்தலை விடுத்தார். களுத்துறையில் சிங்கள மொழியில் ஆர்.ஜீ.பெஸ்டிங் வெளியிட்ட அறிவித்தலில் இப்படி இருந்தது.

“இராணுவத்துக்கும், சிவில்  அதிகாரிகளுக்கும் அனைவராலும் ஒத்துழைப்பு, தகவல்கள் வழங்கப்பட வேண்டியுள்ளன. இதற்கு ஒத்துழைக்காதவர்கள் கண்ட இடத்தில் சுடப்படுவார்கள்...
யாராவது ஒருவருக்கு எதிராக வழங்கும் சாட்சியை மறப்பதற்காகவோ, தடுப்பதற்காகவோ முற்பட்டால் அவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவளித்தவர்களாக கருதப்படுவார்கள்”
இதன்படி சாட்சியளிப்பதை தவிர்த்ததாக சந்தேகத்துக்குள்ளாகும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவார். அல்லது ஏனைய அறிவித்தல்களில் கூறப்பட்டிருந்தபடி “கண்ட இடத்தில் சுடப்படுவார்கள்”. ஆக தீர விசாரணை தேவைப்படாது. இதன்படி ஒரு முஸ்லிம் தரப்பிலிருந்து எவராவது ஒரு சிங்களவரை நோக்கி “இந்த நபர் எனது வீட்டை கொள்ளையடித்தார். நீ அதற்கு சாட்சியளிக்க வேண்டும்” என்று அழைக்கப்பட்டால். அழைக்கப்பட்டவர் அவர் கூறியதற்கு உடன்படவேண்டும். இல்லையேல் அவர் விசாரணயின்றி மரண தண்டனைக்கோ, “கண்ட இடத்தில் சுடப்படவோ” கூடும் என்கிற பயங்கர நிலை நிலவியது.

ஒரு சாதாரண அப்பாவி கிராமத்தவர் ஒருவரை விதானை அல்லது பொலிஸ் அதிகாரி தமக்கு தேவைப்படும் போது கூறியபடி “சாட்சி” அளிக்காது போனால் அந்தோகதி தான். இது குறித்து ஆர்மண்ட் டீ சூசாவின் நூலில் இப்படி குறிப்பிடுகிறார்..

“சிங்கள கிராமவத்தர் மிகவும் பயந்தவர்கள். அவர்கள் வீரர்களாவது எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் தான். உண்மைக்காக தமது உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்கள் அவர்கள். பொலிசாரின் கருத்தை உறுதிசெய்வதற்காக தாம் முன்வருவதற்கூடாக தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றால் அதைத் தான் அவர்களால் செய்யமுடியும்.”
பொலிஸ் அதிகாரிகள் தாம் முன்வைத்த வழக்குகள் போதுமான பலம் இல்லை என்று கருதினால் இப்படி பொய் சாட்சிகளை பயன்படுத்தியிருக்கிராகள். அதற்கான பல சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன. அதுபோல சில வழக்குகளில் பொலிசார் அம்பலப்படுத்தபட்டும் இருக்கிறார்கள்.

பின்வத்தையில் நாரம்பிட்டிய பிரதேசத்தில் யூ.ஹொந்தனேரிஸ் சில்வா அப்படி அம்பலப்படுத்தியவர்களில் ஒருவர். 1915 ஜூன் மாத இறுதியில் பின்வத்தை பொலிஸ் விதானை (முலாந்தெனியா என்று அழைக்கப்படுவார்கள்) தன்னிடமும் இன்னும் சில கிராமவாசிகளிடமும் வந்து தம்மிடம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஒரு பொலிஸ் விசாரணை அதிகாரியிடம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர்கள் இரண்டாவது தடவையும் வந்து அறிவித்தார்கள். இத்தனையும் தவிர்த்தால் ஏதேனும் நேரும் என்று கருத்தி அவர்கள் பயத்துடன் அங்கு சென்றார்கள். பொலிஸ் விசாரணை அதிகாரி அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஏனைய அனைவரையும் வெளியேறச் சொல்லிவிட்டு; ஜூன் 1ஆம் திகதியன்று ஆதர டயஸ் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தவர்களை அழைத்து முஸ்லிம்களின் கடைகளை உடைக்க வேண்டும் என்று அழைத்தார் என்று கூறவேண்டும் என்று ஆணையிட்டார். இந்த இருவரும் பொலிஸ் அதிகாரி கூறியபடி இராணுவ நீதிமன்றத்தில் நடந்த ஆதர் டயஸ் பற்றிய வழக்கில் கூறியுள்ளனர்.

ஆதர் டயஸ்ஸின் பேரில் சிறிசேன ஜூன் 1அன்று மதியம் மதியம் 1.30க்கு பாணந்துறையில் கிளர்ச்சியாளர்களை கூட்டி முஸ்லிம்களின் கடையை கொள்ளயடிக்கும்படி ஆணையிட்டதாக அவர்கள் அவர்கள் சாட்சியளித்தார்கள். ஆனால் ஐரோப்பிய அதிகாரிகள் சிலர் சிறிசேன அன்றைய தினம் கொழும்பில் இருந்ததை உறுதிபடுத்தினர்.  உண்மை வெளியானதன் விளைவாக சிறிசேனவை விடுவித்தார்கள் ஆனால் இன்னொரு முஸ்லிம் நபரின் சாட்சியத்தின் மூலம் அவர் மீண்டும் கைதாகி தண்டனைக்கு உள்ளானார். ஒரு பொய் சாட்சியை கூற வைக்க போலீசார் மேற்கொண்ட செயல் அம்பலமானது. ஆனால் இன்னொரு பொய் சாட்சியின் மூலம் அந்த போலீசார் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள்.

இந்த சாட்சிகளில் ஒருவரான மைஅப்பு பின்னர் ஒரு முறைப்பாட்டை செய்தார் அதன்படி... ஜூன் 12 அன்று அதிகாலை 4 மணிக்கு பாணந்துறை பொலிஸ் நிலைய அதிகாரி மேலும் இரு பொலிசாருடன் தமது வீட்டுக்கு வந்து கைது செய்து கொண்டு சென்றார்கள். ஆதர்  டயஸ், சிறிசேன ஆகியோரின் ஆணையின் பேரிலா கிளர்ச்சியில் கலந்து கொண்டாய் என்று வினவினார்கள். தாம் அதனை மறுத்ததற்கு; பொலிஸ் விசாரணையதிகாரி கூறியபடி சாட்சி கூறாவிட்டால் மண்ணெண்ணெய் விழுங்கச் செய்து சுட்டுக்கொல்வதாகவும் மிரட்டினார்கள். கூறியபடி செய்தால் விடுவிப்பதாகவும் அறிவித்திருகிறார்கள். அதன் பின்னர் நான்கு நாட்கள் சிறையில் தடுத்து வைத்திருந்து தண்டனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேற்கொண்ட மேன்முரஈட்டின் பிரகாரம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் அந்த போலீசார் அவ்வப்போது வந்து மிரட்டிச் சென்றுள்ளனர்.

பிரபலஸ்தரான டீ.சீ.சேனநாயக்கவை மாட்டி விடுவதற்காக போலீசார் செய்த திகிடுதத்தங்கள் குறித்தும் சேர்.போ இராமநாதன் மற்றும் ஆர்மண்ட் டீ சூசா போன்றோர் விரிவாக பல விளக்கங்களுடன் விபரித்துள்ளார்கள். 50 நாட்களுக்கும் மேலாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் அவர் மரண பீதியுடன் வதை அனுபவித்திருக்கிறார்.

களுத்துறையில் நடந்த சம்பவமொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். 1915 ஒகஸ்ட் 31 அன்று இலங்கையிள் வெளியான பத்திரிகைகளில் இந்த வழக்கு குறித்து வெளியாகியிருந்தது.

கலவரம் செய்தது, கடைகளை உடைத்தது, முஸ்லிம்களின் கடைகளை சூறையாடியது போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐவருக்கு எதிராக பொலிசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. பொலிஸ் விசாரணையதிகாரியின் விசித்திரமான போக்கை அவதானித்த நீதவான் பொய்யான வழக்கில் இவர்கள் சிக்கவைக்கப்பட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று அறிவித்தார். அவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு மேன்முறையீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் மேல்நீதிமன்ற நீதிபதி முன்னைய தீர்ப்பு சரி என்று தீர்ப்பு வழங்கினார்.

போலீசார் தமது பழிவாங்கலுக்காகவும், தோற்கப்போகும் வழக்குகளில் தோற்காதிருக்கவும் இப்படி பல வழக்குகளில் அப்பாவிகளை சிக்க வைக்கும் கைங்கரியம் 100 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்த நிதர்சனம் மெய்ப்பிக்கிறது. 

தொடரும்..





Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates