Headlines News :
முகப்பு » » 1000 ரூபா சம்பள உயர்வு: அரசியல் போட்டியா? தொழிற்சங்க போராட்டமா? - எஸ். இராமையா

1000 ரூபா சம்பள உயர்வு: அரசியல் போட்டியா? தொழிற்சங்க போராட்டமா? - எஸ். இராமையா


தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை வெல்ல முடியாத ஒரு போராட்டமாகி விட்டது. இது தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகும். 

கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து பதினான்கு மாதங்களாகியும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தொழிற்சங்கங்கள் திணறுவதை ஊகிக்க முடிகிறது. இது தொழிற்சங்கங்களின் பிடிவாதமா இல்லை அரசியல்போட்டியா என்பதும் விளங்கவில்லை. 

இக்கூட்டு ஒப்பந்தத்தை பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்த போது எவரிடமும் எதையும் கேட்காமல் 100 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

அப்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களைத் தவிர மற்றவர்கள் 750 ரூபா சம்பள உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதை கவனத்தில் எடுக்காது நூறு ரூபாவிற்கு கைச்சாத்திட்ட வர்கள் தற்போதும் ஆயிரம் ரூபா கோரிக்கையிலிருந்து கீழிறங்கி வராத காரணம் என்ன? 

தமது கோரிக்கையான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை மீளாய்வு செய்து ஒரு முடிவுக்கு ஏன் வர முடியாது? இந்த பிரச்சினையை இழுத்தடிப்பதன் காரணம் என்ன? ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது. 

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை எந்த தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பதும் விளங்கப்படுத்தப்படாத கோரிக்கையாகும். 

எமக்கு தெரிந்த வகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் அதன் பிறகு வந்த பாராளுமன்ற தேர்தலையும் இலக்காக வைத்த கோரிக்கையாகவே அறிய முடிகின்றது. 

முதலாளிமார் சங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தை தர முடியாது என்ற போது இறுதியான ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வராதது ஏன் என்றும் தெரியவில்லை. 

நாளொன்றிற்கு 150 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக் கொடுக்க முன்வந்திருந்தால் தொழிலாளர்கள் நன்மை அடைந்திருப்பார்கள். 

உதாரணமாக நாள் சம்பள உயர்வு 150 ரூபாவாக உயர்ந்திருந்தால் 25 வேலை நாட்களுக்கு 3,750 ரூபா மாதமொன்றிற்கு கிடைத்திருக்கும். 

தொழிற்சங்கம் 

தொழிற்சங்கம் என்பது பேரம் பேசும் சக்தியை கொண்ட ஓர் அமைப்பாகும். கோரிக்கைகள் வைக்கும் போது அதிக அளவான, பெற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கமாகும். கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். விட்டுக்கொடுக்கும் முறையிலும் (Give and Take) என்ற முறையிலும் வென்றெடுக்க முடியும். 

தொழில் தருநர்களின் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்து இரு பக்க நியாயங்களையும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும். 

இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது கூட்டு செய்யும் தொழிற்சங்கங்களையும் வெகுவாக பாதிக்கும். 

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன போதும் தொழிலாளர்களின் போராட்டம் இழுத்தடிக்கப்படுவது ஏன்? 

அப்படியென்றால், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் தலைதூக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். 

தற்போதைய கூட்டு ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனால் இதற்குப் பிறகு தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியும்? 

அப்படி கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாவிடின், சம்பள சபையை உருவாக்கி மீண்டும் பழைய முறைக்கு சட்டம் கொண்டுவர அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். 

முடியாத பட்சத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தமது கருத்து முரண்பாடுகளை தவிர்த்து தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்க வேண்டும். 

ஒற்றுமையாக இருந்து போராட முடியாமல் போனால் தொழிற்சங்கங்கள் யாவும் பலனற்று செயலிழந்து போகும் நிலை ஏற்பட நேரிடும். 

தொழிற்சங்க பலம் இல்லாது போனால் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மீண்டும் காலனித்துவ ஆட்சிக்குள் முடக்கப்படுவார்கள். 

இங்கு பதியப்பட வேண்டியது மலையக மக்களுக்காக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்று அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு ஒரு சம்பள பிரச்சினையை தீர்க்க முடியாமல் போவது இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாகும். 

போராட்டங்கள் நடத்துவதும் காலக்கெடு விதிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. தீர்க்க தரிசனமாக திடகாத்திரமான போராட்டங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். 

எனவே, மலையக தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறி அறிக்கை விடுவதோ அல்லது விமர்சிப்பதோ பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை புரிந்து கொண்டு செயலில் இறங்குங்கள். வெற்றி நிச்சயம். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates