Headlines News :
முகப்பு » » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -2) - மல்லியப்புசந்தி திலகர்

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -2) - மல்லியப்புசந்தி திலகர்


மலையகக் கவிதைப்பாரம்பரியத்தில் நாட்டார் பாடல்களின் சாயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு அல்லது சிறப்புப்பண்பு அதன் வேர் அதுவாகவே அமைந்துவிடுவதனாலாகும் என கொள்ளலாம். இந்த மக்கள் எவ்வாறு எந்த அடிப்படையில் இலங்கை நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பது பலரும் அறிந்த செய்தி. கட்டுரையின் விரிவஞ்சி அது பற்றி இங்கு பேசாமல் விடலாம். எனினும் பாமரர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, பஞ்சம் பிளைக்க வருகை தந்த இந்த மக்கள் கனவுகளை மட்டுமே தமது நெஞ்சில் சுமந்து வந்துள்ளனர். முழுக்க முழுக்க உடலுழைப்பை விற்று வருவாய்தேடி வாழ்க்கையில் சுபீட்சம் காண நாடுகடந்து, கடல் கடந்து, காடுகடந்து அவர்கள் வந்து சேர்ந்த அந்த பயணத்தொடக்கத்திலேயே தமது தோள்களில் கனவுகளையும் மனதினில் தமது வாய் மொழிக்கலைகளையுமே சுமந்து வந்துள்ளனர்.

 19ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இலங்கை நோக்கி (அப்போதைய சிலோன்) பயணித்த தனது மகளை வழியனுப்பும் ஒரு தாயின் புலம்பலே முதல்கவிதை என்று கொள்ளலாம்.

சீமைக்கு போறமுன்னு சிணுங்காத எம்மவளே

கடல்தாண்டி போறமுனு கலங்காதடி ராசாத்தி

சிங்களவேன் ஊர்போயி சீக்கிரமா வாருமடி

இந்த நாட்டார் பாடல் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மக்கள் வருவதில் இருந்தே ஆரம்பிக்கிறது. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் கூட ‘எது கவிதை? அதன் யாப்பு இலக்கணம் என்ன? புதுக்கவிதைகள் என எழுதப்படுபவை கவிதைகள் தானா? என்றெல்லாம் வாத, விவாதங்கள் நடைபெற்று வருகின்ற சூழலில் 19ம் நூற்றாண்டிலேயே தன் மண்ணைவிட்டு வாழ்வைத் தேடி தமது புலப்பெயர்வை ஆரம்பித்தவைத்த மக்கள் கூட்டம் பாடிவைத்த சந்தம் மிகு இப்பாடலை கவிதை என்று கொள்வதில் பின்னிற்க தேவையில்லை.

அவ்வாறு புறப்பட்டு வந்த இம்மக்கள் வருகின்ற வழியில் கடலிலும் காடுகளிலும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர் என்பது வரலாற்று உண்மை. மரணத்திலேயே தம் வாழ்வைத் தொடங்கிய இந்த மக்கள் கூட்டம் அதனை இவ்வாறு பதிவு செய்கின்றது.


பொளைக்கத்தான் நாம வந்து  இன்னும்

பூமி போய் சேரலையே 

கடன்கட்ட வந்து நாம கண்டிபோய் சேரலையே

பாதி வழியில ஏ ராசாவே பரலோகம் போயிட்டீங்க 

இனி நான போயி என்ன செய்ய

ஏ ..ராசாவே ... என்னையும் அழைச்சுபோங்க….


எனும் ஒப்பாரிப்பாடல் இந்த மக்களின் வாழ்க்கைப் வருகையின் இன்னுமொரு பரிமாணத்தினை பதிவு செய்கிறது. இன்னுமொரு பாடல் இவ்வாறு அமைகிறது..

மாத்தள போறமுன்னு மகிழ்ச்சியா நாம வந்தோம்

கண்டிக்கு போறமுனு கடல தாண்டிவந்தோம்

கண்டியும் போகலையே காலும் நடக்கலையே 

என்ன பெத்த அப்பா உசிரோட உன்ன விட்டு ஓடி நா போவேனா…


இந்த பாடல்கள் மலையக மக்களின் வருகையையும் அவர்களின் வாய்மொழி இலக்கியத்தின் வருகையையும் பதிவு செய்கின்றமையை காணலாம். இவ்வாறு மலையகக் கவிதை இலக்கியத்தின் தோற்றுவாயாக அமைந்த நாட்டார் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், கூத்துப்பாடல்கள் இன்றும் கூட மலையகத்தில் வழக்கில் உள்ளது.

மலையகத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகளுள் ஒருவராகிய சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் தனது கவிதைகள் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு அப்பால் ‘மலைநாட்டு மக்கள் பாட்டு’ (கலைஞன் பதிப்பகம் சென்னை 1983) எனும் ஒரு தொகுப்பினை சேகரித்து வெளியிட்டமை இந்தப்பாடல்களின் வரலாற்று முக்கியவத்துக்கான ஒரு சான்று. அதேபோல எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களும் ‘மலையக நாட்டுப்புற பாடல்களை’ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். திறனாய்வாளர் லெனின் மதிவானம் இந்த நாட்டார் பாடல்களின் முக்கியத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஊற்றுக்களும் ஓட்டங்களும் (2012) பாக்யா வெளியீடு பக்.01). இந்த நாட்டுப்புற பாடல்கள் மலையக மக்களின் வாழ்க்கைக்கோலத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றது என்கின்றதன் அடிப்படையில் இந்த பாடல் வழி வந்த மலையக கவிதை இலக்கிய மரபு இன்று புதிய செல்நெறிகளை அடைந்துகொண்டுள்ள போதும் நாட்டார் பாடல்களின் தொடர்வடிவத்திற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

பதுளையை தளமாகக் கொண்டு சமூக, இலக்கிய, தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டு வரும் பசறையூர் கே.வேலாயுதம் தன்வசம் பல பாடல் தொகுப்புகளை வைத்துள்ளார். இதேபோல இன்றைய சூழலில் மலையக நாட்டார் பாடல்களை ஆய்வு செய்து நடைமுறை சூழலில் எவ்வாறு அது புதிய வடிவம் கண்டுள்ளது என்பதனை ‘தோட்டப்புற பாடல்கள்’ எனும் வாய்மொழி இலக்கியமாக பதுளையை தளமாகக்கொண்டு ‘ஊவா வானொலியில்’ பதுளை விமலநாதன் எனும் கலைஞர் பாடிவருகின்றார். மண்வாசனை எனும் நிகழ்ச்சி மூலம் இந்த ‘தோட்டப்புற’ பாடல்களினை அவர் பாடி விளக்கமளிப்பது நாட்டுப்புற பாடல் செல்நெறியிலும் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. பசறையூர் கே.வேலாயுதம், மண்வாசனை விமலநாதன் போன்றவர்களது பாடல், தேடல் மற்றும் ஆய்வு முயற்சிகள் எழுத்துரு பெற்று நூலாக்கம் பெறவேண்டியதன் அவசியம் நிலவுகின்றது.

இந்த நாட்டார் பாடல் அதன் வழிவந்த கிராமிய பாடல்கள், நாடோடிப்பாடல்கள், தெம்மாங்குப்பாடல்கள் ஒப்பாரி பாடல்கள் முதல் இன்றைய தோட்டப்புற பாடல்கள் வரையான மலையகக் கவிதை பாரம்பரியத்தின் வேர்களை அடையாளப்படுத்தி விட்டு மலையகக் கவிதை இலக்கியம் என மக்கள் பாடல்கள் என்ற பொது நிலையில் இருந்த தனிப்பட்டவர்களின் படைப்பிலக்கியமாக பார்க்கின்றபோது நம்முன் நிற்பவர் அருள்வாக்கி அப்துல் காதிருப் புலவர். இவ்வாறு இவர் அடையாளப்படுத்தப்படுவது அவரது பெற்றோரது வருகை மற்றும் அவரது பிறப்பு மலையகத்தோடு தொடர்பு பெற்ற வகையில் அமைவதனாலாகும். இவர் 30.06.1866 ல் கண்டி போப்பிட்டிய எனும் இடத்தில் பிறந்தார் என்பதுவும் இவரது தந்தையார் இந்தியாவின் திருப்பெருந்துறையினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் இவர் சிறு கோப்பித்தோட்டச் செய்கைக்காக இலங்கை வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. (சில பதிவுகள் அருள்வாக்கி அப்துல் காதிருப்புலவரே இந்தியாவில் திருப்பெருந்துரையில்தான் பிறந்தார் என்றும் எழுதப்பட்டுள்ளதாம் (மூலம்: இறைவாக்கப்பெற்ற அருள்வாக்கி பாவலர் சாந்தி முகைதீன் இலக்கியம் விஷேட மலர் 2011 கலாசார மற்றும் கலை அலவல்கள் அமைச்சு). இவரது பிறப்பு தொடர்பான பின்னணி மலையக சமூக உருவாக்கத்தின் ஆரம்ப கட்டமான கோப்பி பயிர்ச்செய்கை, மற்றும் தென்னிந்திய வருகையோடு தொடர்புபடுவதனால் இவர் மலையக இலக்கிய கவிதைப்பாரம்பரியத்துக்குள் வைத்து பேசப்படும் கவிஞராக பார்க்கப்படுகின்றாரே அன்றி அக்கால நாட்டார் பாடல்கள் போன்று மலையக மக்களின் வாழ்வியலை இவரது படைப்புகளில் தரிசிக்க கிடைத்தாக எந்தக்குறிப்புகளும் இல்லை. மற்றபடி இவர் சிறு பராயத்திலேயே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கவியரங்கில் தமிழ்நாட்டின் கவிஞர் வித்துவ சிரோன்மணி அம்பலவாணக் கவிராயர் தலைமையில் கவிபாடிய புலமை மிக்கவர் எனும் குறிப்புகள் உள்ளன. கண்டி மாநகருக்கு அருகாமையிலுள்ள ‘குன்று மலைப்பூங்காவுக்குள் உலவிவரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மயக்கநிலையில் தாம் வியக்கும் காட்சிகளை கண்டதாகவும் அது முதல் தனது நாவில் இருந்து கவிதையூற்று பெருக்கெடுத்து ஒடுவதாகவும்’ புலவர் அவர்கள் தனது கவித்துவ ஆளுமைக்கு விளக்கமளித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வரும் கண்டி மலைக்குன்று பெருமையே அருள்வாக்கி அவர்களை மலையகக்கவிதை வரலாற்றோடு இணைத்துப்பார்க்கச் செய்துள்ளது எனலாம்.

மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடையே இடம்பெறும் விழாக்களிலும் சடங்கு வைபவங்களிலும் பொதுவிழாக்களிலும் வகிதை பொழிவார், கும்மி, நொண்டிச்சிந்து முதலான பாடல்களைப்பாடுவார்’ என அந்தனிஜீவா தனது ‘மலையகமும் இலக்கியமும்’ (மலையகம் வெளியீட்டகம் 1995) நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் மீண்டும் இந்தியா சென்று கற்றுத்தேர்ந்த புலவர் அவர்கள் 1918ம் ஆண்டு கண்டியிலேயே காலமானார்.


(செல்நெறி தொடரும்)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates