Headlines News :
முகப்பு » , » மதிப்புரை : கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே)

மதிப்புரை : கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே)


வீரகேசரி 
185, கிராண்ட்பாஸ் வீதி,
கொழும்பு14

ஒரு பாரிய பணி...

இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு 1815 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவம் கண்டி இராச்சியம் வரை இறுதிப் படையெடுப்பு மேற்கொண்டு கண்டியைக் கைப்பற்றி முதன் முறையாக இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தமையேயாகும். அதன் பின் அதுவரை பணப்புழக்கம் இல்லாத பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட சுயதேவைப்  பொருளாதாரமாக இருந்த இலங்கையின்  பொருளாதாரம் விரைவிலேயே அந்நிய  செலாவணி உழைக்கும் பொருளாதாரமாக (ஊணிணூழூடிஞ்ண உதுஞிடச்ணஞ்ழூ உச்ணூணழூணூ) மாற்றமடைந்தது. இதற்கு மூல காரணமாக அமைந்தது இலங்கையில் முதன் முறையாக 1820 தசாப்தத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகும்.

மலைநாட்டின் கம்பளைக்கருகாமையில் காணப்பட்ட சிங்ஹாபிட்டிய என்ற இடத்தில் வெறுமனே 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு தசாப்த காலத்திலேயே இலட்சம் ஏக்கர்களாகப் பெருகி, அதற்கப்பாலும் வளர்ச்சியடைந்து பின்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தின் ஆணி வேராக மாற்றமடைந்தது. இத்தகைய பாரிய பொருளாதார ரீதியிலான விவசாய பயிர்ச்செய்கையில் ஈடுபட ஆயிரக்கணக்கில் தொழிலாளர் படை தேவைப்பட்டபோது அதனை இலங்கைக்குள்ளேயே திரட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முடியாமற்  போனது. அதற்கு முக்கிய காரணம் சிங்கள மக்கள் தம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூலி வாங்கி வேலை செய்ய தாம் தயாரில்லை என்ற தன்மானப் பிரச்சினையாகும் என்று சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். 

எனினும், தமக்குத் தேவையான கூலித் தொழிலாளர்களை சீனாவில் இருந்தோ தமிழ் நாட்டில் இருந்தோ அழைத்து வர தீர்மானித்தனர். சீனத் தொழிலாளர்களை அழைத்து வருவது செலவு கூடியது என்பதாலேயே  அருகிலிருந்த தமிழ் நாட்டிலிருந்து இந்தியத் தொழிலாளரை அழைத்து வந்தனர். இவர்கள்  இலங்கைக்கு மாத்திரமல்லாமல் மலேசியா, பிஜித்தீவுகள், மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, மொறீசியஸ், டிரினிடாட் முதலான நாடுகளுக்கும் சென்றார்கள். அவ்விதம் அவர்கள் இலங்கைக்கு வந்த வரலாற்றையும் வரும் வழியிலும் வந்த பின்னரும் கோப்பித் தோட்டங்களில் அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் பட்ட துன்பங்களையும் இந்நூலில் உணர்வுபூர்வமாக ஆராய்கின்றார் நூலாசிரியர் இரா.சடகோபன்.

இந்த நாட்டுக்கு இம் மக்களின் வருகையால் பின்வரும் நன்மைகள் கிடைத்தன என்பதனை இப்போதும் பெரும்பான்மை இனத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. 

1)1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் திறந்த பொருளாதாரம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் வரை இந்நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தை உழைத்துத் தருபவர்களாக முன்பு கோப்பி, பின்னர் தேயிலை ஏற்றுமதி மூலம் இவர்களே இருந்தனர். 
2)இந்நாட்டுக்கு நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ஏற்பட காரணமாக இருந்தவர்களும் இவர்களே. இவர்கள் நேரடியாகவே அவற்றை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
3)இந்நாட்டின் பொது வேலைத் திணைக்களத்தின் ஆணி வேராக இருந்தனர்.
4)இலங்கையில் சிறு முதலாளித்துவம் ஏற்படக் காரணமாக அமைந்தது தேசிய  முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு வித்திட்டவர்கள். 
5)அதன் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியாவுக்கு எதிரான தேசிய எதிர்ப்பு இயக்கத்துக்கு காரணமாக அமைந்தவர்கள். 
6)இலங்கையின் சிறு முதலாளித்துவம் எழுச்சி பெற்றமை காரணமாகவே  அவர்களின் அடுத்த பரம்பரை வழித்தோன்றல்களான கல்வி கற்ற பரம்பரையினர் தோன்றி உள்நாட்டு அரசியல் தலைவர்கள் உருவாக காரணமாகினர். 
7)1890 களையடுத்து கோப்பிப் பயிர்ச் செய்கை நோயினால் அழித்து போனமையின் பின்னர் தேயிலை ஏற்றுமதிப் பொருளாதாரம் ஏற்பட்டது. இன்று வரை "சிலோன்' (இழூதூடூணிண) என்று அழைக்கப்பட்ட இலங்கையை உலகம் அறிந்து வைத்திருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் உழைப்பால் அபிவிருத்தியடைந்த தேயிலைப் பயிர்ச்செய்கைதான்.
8)கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புபட்டு பல உப கைத்தொழில்கள், வர்த்தக நடவடிக்கைகள், சேவை வர்த்தகங்கள் தோன்றின. காடுகளை அழிக்கும் ஒப்பந்தம், தொழிலாளர்களை வழங்கும் ஒப்பந்தம், பெருந்தோட்டத் துறைக்கு உணவுகளை வழங்கும் ஒப்பந்தம், சில்லறை மொத்த விற்பனை  வர்த்தகம், கட்டட நிர்மாண ஒப்பந்தம், கட்டட நிர்மாணங்களுக்கான மூலப் பொருள் விநியோக வர்த்தகம், மரங்கள், தளபாட விநியோகம், சாராயம், கள் விற்பனை ஒப்பந்தம் போன்றவற்றின் ஊடாக சிங்கள மத்திய தர வர்க்கம் பிரபுக்கள் என அழைத்துக் கொண்ட மேட்டுக் குடியினரான தேசிய சிங்கள முதலாளிகள் உருவாயினர். 
9) இத்தகையவர்களில் பிரதானமானவர்கள் பின்வருவோர், ச்) டொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார் பதவி வகித்த இவர் பின்னர் பெருந்தோட்டங்களின் உடைமையாளரானார். இவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்தையாவார்.
ஞ)டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க ( 18451912) சாராயம், ரேந்தை, காரிய கைத்தொழிலில் ஈடுபட்டார். இவர் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் தந்தையாவார்.

ஞி)டியூடர் ராஜபக்ஷ தென்னை மற்றும் கறுவாத் தோட்ட உரிமையாளர். இவர் பலப்பிட்டிய ஆண்கள் ஆரம்பப் பாடசாலையை தோற்றுவித்தார். ஏற்கெனவே ஒல்லாந்தர்கள் காலத்திலேயே நீர்கொழும்பு முதல் மாத்தறை வரையிலான கரையாரப் பிரதேச சிங்களவர்கள் மத்தியில் சாராய உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவது பிரசித்தமாகி இருந்தது. இது பிரித்தானியர் காலத்தில் மேலும் பல்கிப் பெருகி இத்துறை வாயிலாக பணம் படைத்த தலைவர்கள், குழுவினர் உருவாகி இருந்தனர். 

இத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜேக்கப் டி மெல் (18931919) குடும்பம், நீர்கொழும்பு ஜே.டி.குரூஸ், மொரட்டுவ சார்ள்ஸ் சொய்ஸா குடும்பம், ஹென்றி ஜோசப் பீரிஸ் (18581918), பொன்ன ஹென்னெத்திகே ஜெரமியஸ் டயஸ்(1848  1902), லிந்தமுலகே ஜோன் கலோவிஸ் (18521916), பொன்ன ஹென்னெத்திகே டொமினோ டயஸ் தோமஸ் டி சில்வா அமர சூரிய  (18471907) டொன் மஸ்தியான் டி சில்வா(18631917) மிரன்கே மத்தியஸ் சல்காது (1860) குடும்பத்தினர் போன்றவர்களாவார்கள்.

சாராயத் தொழிலுடன் சேர்ந்து மரப்பீப்பாய்த் தொழில் மற்றும் மரத்தளபாடத்தொழில், புகையிரத பாதைகளுக்கான சிலிப்பர் கட்டைகள் உற்பத்தித் தொழில், தந்திக் கட்டைகள் உற்பத்தித் தொழில், தந்திக் கம்பங்கள் தயாரிப்பு ஆகியன அதிகரிப்பு காரணமாக மர வியாபாரம், மர ஆலைகள் முதலாளிமார் தோன்றினர். இப்படி கோப்பி பெருந்தோட்டச் செய்கை பின்னர் தேயிலை பெருந்தோட்ட பொருளாதாரம் என்பவற்றை மூல காரணமாகக் கொண்டு உருவாகிய இலங்கையின் தேசிய முதலாளிகள் பின்னர் பாரிய அளவில் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களின் சொந்தக்காரர்களாகி பெரும் தனவந்தர் ஆனார்கள்.

அவர்களின் பின் வந்த பரம்பரையினரே இன்று இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மத்திய தரத்தினராகவும் அரசியல் தலைவர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். 

இத்தகைய அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் இலங்கை நாட்டுக்கு பெற்றுத் தந்தவர்கள் முதலில் கோப்பித் தொழிலாளர்களும் அதன் பின்னர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் தான் என்பதனை இலங்கையின் ஏனைய  மூன்று தேசிய இனங்களான சிங்களம், இலங்கைத்தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் மிக வசதியாக மறந்து போய் விட்டனர். அந்த வகையில் கோப்பிக் காலத்தின் வரலாற்று உண்மைகளையும் வரலாறாகிப் போன கோப்பிக் கால இந்திய தொழிலாளரின் வாழ்வியலையும் அவர்கள் இந்நாட்டை வளங்கொழிக்கச் செய்ய செய்த தியாகங்களையும் சிந்திய வியர்வை, இரத்தம், புதையுண்ட சதை என்பவற்றையும் மீண்டும் ஒரு முறை கிளறிப்பார்த்து இச்சமூகம் இனியாவது விழிப்படைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற சாட்டையடியை வழங்குவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்நூலை தன் அயரா முயற்சியால் சிறப்பாக படைத்துத் தந்திருக்கும் நண்பரும் பத்திரிகையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுக் கொண்டவரும் உயர் இலக்கியப் படைப்பாளியுமான சட்டத்தரணி இரா.சடகோபன் அவர்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.

எம்.செந்தில்நாதன், 
பிரதம நிர்வாகப் பொறுப்பதிகாரி.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates