தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதைப் பற்றி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி 21 அன்று உரையாற்றியிருந்தார்.
மதவாதம் மற்றும் இனவாதம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும், அப்பிரதேச மக்களின் உண்மையான அபிலாஷைகளுடனேயே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென்றும் சில குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இக்கட்சிகள் இத்தகைய நிலைமைகளை அரசியல் பிரச்சினைகளாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதமும், மதவாதமும் மீளெழுச்சியடைய அனுமதிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இத்தகைய கருத்துக்களை பொத்தம்பொதுவாக இரு தரப்பும் தமக்கானது என்றோ, தமக்கு எதிரானதென்றோ எடுத்தும்கொள்ளும் வகையிலேயே இரட்டை அர்த்தம் தரும் கருத்தாக இருக்கிறது. பொதுவாக சாணக்கியமாக இராஜதந்திரத்துடன் கருத்தை கூறிவிட்டதாகக் கருதிக் கொள்ளலாம். இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த கருத்துக்களை பல அரசியல் தலைவர்களும் இவ்வாறு தான் சாணக்கியத்துடன் கடந்து போகிறார்கள்.
புதிய அரசாங்கம் அடிப்படையில் இனப்பிரச்சினை இருப்பதை ஏற்றுக் கொள்வதே இதை சரிசெய்வதற்கான முன் நிபந்தனை. இதுவரையான அரசாங்கங்கள் இனவாத நிகழ்ச்சிநிரலில் தங்கியிருந்த அரசாங்கங்களாக இருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கமானது ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுவிட்ட இனவாத கட்டமைப்பின் மேலிருந்து ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கிறது. அதைக் களைவதாயின் கொள்கை ரீதியான முடிவை வேகமாக எடுத்தாக வேண்டும். இனப்பிரச்சினை நீடிக்கும் வரை நாட்டின் அபிவிருத்தியையும், அரசியல் – சமூக ஸ்திரத்தனமையையும் முழுமையாக வெற்றிகொள்ள முடியாது என்பதை வரலாற்று அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார சமத்துவம் மாத்திரம் அனைத்துவித சமத்துவத்தையும் கொண்டுவந்துவிடாது என்பதை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதும் அரசியல் பட்டறிவுக்கு தெரிந்தாகவேண்டும்.
வெறுமனே “நாங்கள் இனவாதிகள் அல்லர்” என்கிற பிரகடனம் போதுமானது இல்லை என்பதையும், இனி அது செல்லாது என்பதை உணர வேண்டும்.
இலங்கையில் சிவில் நிர்வாகம் என்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நீதியையும், சிங்களவர்களுக்கு இன்னொரு நீதியையும் வழங்கி வருகிறது என்பதை ஆட்சியாளர்கள் இன்னமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பரஸ்பர சந்தேகமும், நம்பிக்கையீனமும், விரக்தியும், பகையுணர்ச்சியும் மேலோங்கி வளர்ந்திருப்பதை சரியாக இனங்கண்டு தீர்ப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். இனப்பிரச்சினை “தேசியப் பிரச்சினை” என்று அழைக்கப்பட்து வந்த காலம் ஒன்று இருந்தது. இன்றும் அதுவே நடைமுறைத் தன்மை. வெறும் ஆட்சிமாற்றம் கண்டுவிட்டதால் அந்த நிலை மாறப்போவதில்லை. நடைமுறை தீர்வை நோக்கி நகர்வதே முக்கிய தேவை.
மக்கள் அதனை பொறுத்துக்கொண்டும், சகித்துக் கடக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதே கள யதார்த்தம்.
தையிட்டி பிரச்சினை பேரின அரசியல் கதம்பங்களின் நீட்சி என்பதை உணர்ந்தால் மட்டுமே அதனை சரியாக கையாளமுடியும்.
பௌத்த சின்னங்களின் எழுச்சி
இலங்கையில் பௌத்த அடையாளங்கள் காலப்போக்கில் அரசியல் அதிகாரத்துவத்துக்கான பகடைகளாக ஆக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு பெருவரலாறு உண்டு.
பௌத்த தர்ம பூர்வீக மரபின் பிரகாரம் புத்தர் வழிபாட்டுக்கு ஒருவர் அல்லர்.
புத்தர் தன்னை வணங்குவதை விரும்பாதவர். ஊக்குவிக்காதவர். ஆனால் பௌத்த தர்மத்தை போதிப்பதற்காக குறியீடாக புத்தர் உருவ வழிபாடும், பின்னர் அதை ஒரு வழிபாட்டுத் தளமாகவும், காலப்போக்கில் விகாரைகளாகவும் வளர்ச்சியுற்று இன்றைய வடிவத்தை எட்டிருக்கிறது.
பௌத்த துறவிகளின் மடாலயங்கள் போன்றன பௌத்த துறவிகளின் வாழ்க்கை முறைமைக்கு ஏற்ற இடங்களாக பேணப்பட்ட ஒரு பண்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் பௌத்த தர்மத்தை கற்கவும், கடைபிடிக்கவும், கற்பிக்கவும், கடத்தவும் அம்மடாலயங்கள் பேணப்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில் குகைகளிலும், குகைகளை அண்டிய காடுகளிலும் அவர்களின் வாழ்விடங்களாக அமைத்துக் கொள்ளப்பட்டன. காலப்போக்கில் அருகே தியானத்துக்கான இடங்களில் குறியீடாக உருவச் சிலைகளை அமைத்துக் கொண்டதன் நீட்சியே இந்த உருவ வழிபாட்டு வழிமுறை. சிலை உருவாக்கத்தில் அன்றைய மன்னர்களின் வகிபாகவே அதிகம் எனலாம்.
சிலைகளின் அரசியல்
இலங்கையின் வரலாறு நெடுக நிகழ்ந்த போர்களில் சமய சின்னங்களின் மீதும், சமய வழிபாட்டிடங்களின் மீதும், வழிபாட்டு உருவங்களின் மீதும் மாறி மாறி அழித்தொழிப்புகளும் ஆக்கிரமிப்புகளும் போரின் அங்கமாக இடம்பெற்றுள்ளன. சிலைகளும் நினைவுச்சின்னங்களும் பௌத்தத்தைப் பாதுகாக்கும் தேசியவாதக் கதையாடலுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்கிறார் சிங்கள பௌத்த சித்தாந்த உருவாக்கத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நீள் டிவோட்டா (Neil DeVotta).
புத்தர் பரிநிர்வாணமடைந்ததன் பின்னர் அவரைத் தகனம் செய்ததன் பின்னர் அவரின் அஸ்தியில் கிடைத்ததாக சொல்லப்படுகிற எலும்பு எச்சங்கள் பரவலாக பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு அவற்றைப் புனித சின்னங்களாக்கி அவற்றை ஆதாரமாகக் கொண்டு பெரிய விகாரைகள் கட்டப்பட்டு புனிதத் தளங்களாக ஆக்கப்பட்டு புனித வழிபாட்டிடங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் புராதன இலக்கியங்களில் ஒன்றான “தலதா வங்சய” என்கிற வரலாற்று இலக்கியமானது புத்தரின் தாதுப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து அதைப் பாதுகாக்க எவ்வாறான போராட்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றப்பட்டு இறுதியில் இன்று தலதா மாளிகையில் பாதுகாத்து பேணப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றிப் பேசுகிறது.
இவ்வாறு, புத்தர் சிலைகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, கல்லால் செய்யப்பட்ட ஆசனத்திற்குப் பதிலாக, அவர்கள் போதிகளை வணங்கினர். காலப்போக்கில், முதலில் வைக்கப்பட்ட இருக்கையில் புத்தரின் சிலையையும், ஸ்ரீ மகா போதியின் கீழ் புத்தர் அமர்ந்து புத்த நிலையை சித்தரிகின்ற வகையில் அமைக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக (கி.மு 247 - 207) தேவநம்பியதீசன் மன்னனின் பௌத்த பரப்புப் பணிகளின் போது புத்தர் சிலை முதற் தடவையாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பின்னர் முதலாம் ஜெட்டதிஸ்ஸ மன்னரால் புத்தரின் சிலையொன்றை தூபாராமையில் பிரதிஷ்டை செய்து வைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாவம்சம் – 36வது அத். 128-129 செய்யுள்) அச் சிலை "ஊரு சிலா படிமா" என்று அழைக்கப்பட்டதாக வம்சக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றன.
இதன் பின்னர், ஸ்ரீ மகா போதியின் கீழ் வஜ்ராசன வடிவத்தில் அமர்ந்திருக்கிற புத்தர் சிலையொன்று ருவன்வெலி சேய பௌத்த வழிபாட்டிடத்தில் புத்தரின் சிலை செய்யப்பட்டதாக அறியப்ப்படுகிறது. துட்டகைமுனு இங்கே மூன்று திசைகளிலும் ஆசனமமைத்து கிழக்குப் பக்கமாக ஒரு சிலையை உருவாக்கினான் என்கிறது மகாவம்சம். கி.மு. இது 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதால் புத்தர் சிலைகளின் உருவாக்கம் அந்த காலகட்டத்தில் இருந்திருப்பதை உணரலாம்.
கி.பி. 66 ஆம் ஆண்டில், மன்னர் வசப புத்தர் நான்கு புத்தர் சிலைகளை உருவாக்கி, அவற்றை ஸ்ரீமகா போதி அருகே வைத்தார். இதுவும் போதிக்கு அருகே நிறுவப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிற விபரங்களின் அடிப்படையில் ஒருவித தர்க்கரீதியான முடிவுக்கு வர முடிகிறது. அதாவது, இந்த காலகட்டங்களில் புத்தர் சிலை பற்றிய புரிதல் சமூகத்தில் இருந்ததால் புத்தர் சிலை பற்றிய சில அறிகுறிகள் காணக் கிடைக்கின்றன. முதலாம் ஜெட்டதிஸ்ஸ மன்னன் காலத்து புத்தர் சிலை ஒன்றும் குறிப்பிடப்படுகிற போதும் அது தேவனம்பியதீசன் மன்னனின் படைப்பு என்கிற சந்தேகம் கிளப்பப்படுகிறபோதும் அதை ஏற்றுக்கொள்ள போதுமான தொல்பொருள் சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. எனவே, கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரை புத்தரின் சிலைகள் உருவாக்கப்பட்டதாக கருத முடிகிறது.
மகாயான பௌத்தத்தை பின்பற்றிய மன்னர் வலகம்பா காலத்தில் அபயகிரி தரப்பு துறவிகள் புத்தரை மனித உருவச சிலையை நிர்மாணித்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
அனுராதபுர காலத்து புத்தரின் உருவ வடிவமுள்ள வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிற போதும் அத கால நிர்ணயம் குறித்து இன்றும் சந்தேகங்கள் உள்ளன.
பௌத்த தூபிகள் புத்தர் மரணித்து ஒரு நாற்றண்டின் பின்னர் கட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது இந்தியாவில் பிப்ராவா (Piprahwa Stupa) கி.மு 4 ஆம் - 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளை அசோகனால் கட்டப்பட்டதாக அறியப்படும் சாஞ்சி தூபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதியாக கூறப்படுகிறது. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் தேவனம்பியதீச மன்னனால் கட்டப்பட்ட தூபாராம இலங்கையின் முதலாவது தூபியாக கருதப்படுகிறது.
உருவ வழிபாடு
"புத்தர் தனது சொந்த உருவத்தை உருவாக்கி அதனை வணங்கச்செய்ய வேண்டும் என்று விரும்பாதவர். புத்தர் பரிநிர்வாணம் அடைந்து சுமார் 500 ஆண்டுகள் ஆகியும் புத்தரின் சிலைகள் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. புத்தர் தன்னை வணங்குவதை ஆதரித்ததில்லை. ஆரம்பத்தில் அவரின் உபதேசங்களை வழிவழியாக கடத்தியவர்களும் புத்தரை உருவ வழிபாட்டு நிலைக்கு கொண்டுவரவில்லை. அவ்வாறு செய்வது புத்தருக்கு செய்யும் அவமரியாதை என்று கருதினர்.
கிரேக்க இந்திய தொடர்புகளுக்கு முன்பு ஆரம்பகால பௌத்த மரபு புத்தரை மனித உருவமாக சித்திரிப்பதை கொண்டிருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக போதிமரம், பாதச்சுவடுகள், தூபிகள் போன்றன பௌத்தத்தை குறியீடாக சித்திரிக்கிற சின்னங்களாக கருதப்பட்டு வந்தன.
உலகின் பௌத்தம பரவியிருக்கிற நாடுகள் அனைத்திலும் புத்தர் உருவ சிலைகள் வேறுபடுகின்றன. அவரவர் நாகரீகத்துக்கு ஏற்ப புத்தரின் உருவத்தை தங்கள் விருப்பப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நான்கு முகங்களைக் கொண்ட புத்தர் உருவத்தை உருவாக்குகிறார்கள். நான் திசைகளிலும் பௌத்தர்களால் பார்க்கப்படவேண்டும் என்கிற கருத்தாக்கமாக அது கொள்ளப்பட்டது. சில புத்தர்கள் விகாரமான உருவத்துடன் பெரிய வயிறைக் கொண்டிருக்கிறார். சில இடங்களில் புத்தர் குலுங்கச் சிரித்தபடி இருக்கிறார். சில நாடுகளில் புத்தர் அமைதியாக சாந்தமாக இருக்கிறார். இலங்கையில் தேரவாத பௌத்த மரபு அத்தகைய சாந்தம் நிறைந்த புத்தராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அனுராதபுர பொலன்னறுவை காலம் தொட்டு அத்தகைய அமைதியான உருவம் கொண்ட புத்தரையே இலங்கையின் பௌத்த பண்பாட்டு மரபில் காண முடிகிறது.
அதேவேளை புத்தர் இத்தனை அழகாகவும், இளமையாகவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், சுமார் 80 வயதில் மரணித்ததாலும், தியானம், விரதம் என்பவற்றாலும் புத்தர் மெலிந்த, நலிந்த நிலையில் இருந்திருக்கவே வாய்ப்புள்ளதாகக் கருதி அவரை மெலிந்த தோற்றத்திலான உருவத் தோற்றத்தைக் கொண்ட சிலைகளும், ஓவியங்களும் கூட உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.
அவ்வாறான மெலிந்த உருவ புத்தர் சிலையொன்று கி.பி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுக்கு உரிய ஒரு சிலை கிழக்கு ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டிருகிறது. இதனை உண்ணாநிலை புத்தர் (fasting Buddha) என்று அழைக்கின்றனர்.
இலங்கையில் அதிகம் காணப்படுகிற புத்தர் சிலைகள் மூன்று வடிவத்தில் இருப்பதைக் காணலாம்
- பத்மாசன சிலைகள்
- நிற்கும் சிலைகள்
- படுக்கை சிலைகள்
இவற்றில் சமாதி முத்திரையுடன் பத்மாசன நிலையில் இருந்தபடி இருக்கும் சிலைகளே நாடாளாவிய ரீதியில் பிரசித்தம். உலக அளவிலும் அதுவே பிரசித்தம். இவ்வாறு அமர்ந்தபடி உள்ள சிலைகளையே நாடளாவிய ரீதியில் மூலைக்கு மூலை நிறுவுகிற வழக்கம் விரவியுள்ளது.
சாந்தமாக அமர்ந்தபடி இருக்கிற இந்த புத்தர் உருவங்கள் இன்று ஏனைய மதத்தினருக்கு ஒரு ஆக்கிரமிப்பின் வடிவமாக ஆனதொன்ரும் தற்செயல் அல்ல. அது முற்றிலும் பேரின அரசியல் உள்ளடக்கத்தின் விளைவால் ஆனது.
தம்மதீப ஐதீகம்
அடுத்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கைத் தீவிடம் ஒப்படைத்து விட்டு புத்தர் மறைந்ததாக ஒரு ஐதீகம் இன்றும் நம்பப்படுகிறது. அதையே தம்மதீப கோட்பாடாக இலங்கை பௌத்தர்கள் மத்தியில் நிறுவப்பட்டிருக்கிறது. புத்தரின் வழிபாடுகளும், போதனைகளும், அவரின் தர்மமும் பரப்பப்பட்டுள்ள இந்தியா, நேபாள், தாய்லாந்து, மியான்மார், ஜப்பான், சீனா, கொரியா உள்ளிட்ட எந்த நாடுகளிலும் அவ்வாறு இலங்கைக்கு பொறுப்பளித்த வரலாற்று விபரம் கிடையாது. புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்த தகவல்களும் கூட இலங்கைக்கு வெளியில் எங்கும் கிடையாது. தீபவம்சம், மகாவம்சம் போன்ற இலங்கைக்கே உரிய வரலாற்று இலக்கியத்தில் மட்டுமே அப்படி ஒரு ஐதீகம் பதியப்பட்டுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
தேவைக்கும் அதிகமான விகாரைகள் நாட்டில் பெருகிக்கொண்டே செல்கின்றன. மறுபுறம் பௌத்த துறவறம் பூணுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை ஒரு நெருக்கடியாக உணருகின்றனர். ஏற்கெனவே துறவறம் பூண்டவர்களில் பலர் தமது சீருடைகளை களைந்து மீண்டும் பொது வாழ்க்கைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை குறித்தும் எச்சரிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் விகாரைகளும், புத்த சிலைகளும் கவனிக்க ஆளற்ற அளவுக்கு பெருகுகின்றன.
தம்ம தீப சித்தாந்தத்தின் பேரால் பௌத்தத்தை இலங்கையில் காத்திட வேண்டும் என்கிற முனைப்பில் அதையும் சிங்களவர்களிடம் ஒப்படைத்திருப்பதாக புனைந்து சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனையோர் தூர அந்நியப்படுத்தப்பட்டு அவர்கள் ஈற்றில் சிங்கள பௌத்தத்தின் எதிரிகளாகவே சித்திரிக்கிற அளவுக்கு பேரின சித்தாந்தம் வளர்த்தெடுக்கப்பட்டு ஈற்றில் இன – மத முறுகல்களின் கதம்ப வரலாறாக இலங்கையின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது அரசின் கடமையென்று 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் நிறுவியது இதன் நீட்சியாகத் தான். நாடெங்கிலும் புத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் கண்மூடித்தனமாக கட்டியெழுப்பி வருவதும் தம்மதீப சித்தாந்தத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதும்; அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்றிருக்கிற மகாவம்சப் புனைவின் விளைவு தான்.
தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்படுகிற பௌத்த தொல்லியல் சான்றுகள் அனைத்தும் சிங்கள பௌத்தத்துக்கு உரியது என்று உரிமைகோருவோர் அரசதிகார சிங்கள பௌத்த கட்டமைப்பின் ஆதரவினாலேயே மேற்கொள்கின்றனர்.
இந்த இலங்கைத் தீவில் பௌத்தர்களே வசிக்காத இடங்களிலும் பாரிய விகாரைகள் முளைப்பதும், விரிவடைவதும், வியாபிப்பதும் மேற்படி உள்ளடக்கத்தில் இருந்து தான். புத்தரே விரும்பாத, புத்தர் சொல்லாத விபரங்களும் ஐதீகங்களாக புனையப்பட்டு சிறுபான்மை இனத்தவர் மீதும், மதத்தவர் மீதும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பாளராக இன்று நிலைநிறுத்தப்பட்டதற்கும் அமைதியை போதித்த புத்தருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதே வரலாற்று உண்மை.
புத்தர் எது நடக்கக் கூடாது என்று போதித்தாரோ அது புத்தரின் பெயரிலேயே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.
கதிர்காம அனுபவம்.
சமீபத்தில் கதிர்காமம் சென்றிருந்த போது அங்கே கிரிவெஹர விகாரையின் வாசலில் புதிய ஒரு கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.
அதில் இந்த வசனம் செதுக்கப்பட்டிருந்தது.
“கௌதம புத்த பெருமானார் 500 அரஹத் பிக்குகளுடன் 3ம் முறை இலங்கைக்கு விஜயம் செய்து (புத்த ஆண்டு 8 / கி.மு 6 நூற்றாண்டில்) கதிர்காமம் "கிஹிரி வனத்தில்” சகல உயிரினங்களுக்கு இடையேயும் அமைதி ஏற்படுத்தி தர்ம போதனை புரிந்து சுகதேகியுடன் வாழ்ந்ததோடு அங்கு பயன்படுத்திய தங்க ஆசனமும், புத்த பெருமானாரின் தலைமுடியும், அனோமா கங்கையருகில் சிதுவத் இளவரசனால் தலைமுடியை வெட்டிய தங்கத்தினாலான வாளும் வைப்புச் செய்யப்பட்டு மகாகோச பிராந்திய நிர்வாகியினால் "மங்கள மகா வெஹெர” எனும் பெயரால் புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அமைக்கப்பட்டதாகக் கருதப்படும். "கிஹிரிவெஹெர" அல்லது கிரிவிஹாரை சைத்திய ராஜயானன் வஹன்சே.”புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அமைக்கப்பட்ட கிரிவிஹாரை என்று இதில் குறிப்பிடப்பட்டிருப்பது மோசமான வரலாற்று அபத்தம் என்றே உணர முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே நிறுவப்பட்ட தொல்லியல் நூதனசாலைக்கு அடுத்த நாள் சென்று அதன் இயக்குனரும் தொல்லியலாலருமான பெத்தும் என்பவருடன் ஒரு நேர்காணலை எடுத்தேன். இந்த அபத்த கல்வெட்டைப் பற்றி கேட்டபோது, அவரும் அது ஒரு மோசமான திரிபு என்பதை ஏற்றுகொண்டார்.
புத்தர் தன்னையோ தன்னைக் குறியீடாகக் கொண்டோ வணங்குவதை ஏற்றுக்கொள்ளாதவர். மேலும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இவ்வாறான போதிகள் இருந்ததாக இலங்கை இந்திய தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை.
நன்றி - தினகரன் 23.02.2025
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...