“ஒரு மனநோயாளியின் கைகளில் இந்த நிறைவேற்று ஜனாதிபதவி கிடைத்து விட்டால் என்ன ஆவது?”
என்று அப்போது கேள்வி எழுப்பினார் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா.
சுதந்திரத்துக்குப் பின்னர் சுமார் 46 ஆண்டுகள் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் தான் நாம் வாழ்ந்திருக்கிறோம். இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த 8 பேரில் அப்பத்தவியை துஷ்பிரயோகம் செய்யாத ஜனாதிபதிகள் எவரும் இல்லை. இவர்களில் ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகிய மூவரைத் தவிர ஏனைய ஐவரும் அந்த ஜனாதிபதிமுறையை நீக்குவதாக வாக்குறுதியளித்து அதற்கான மக்கள் ஆணையையும் பெற்று ஜனாதிபதியாக தெரிவான்வர்கள். ஆனால் அந்த நிறைவேற்று அதிகாரத்தில் ருசி கண்டு எவருமே அதை நீக்காமலே அதனை சுவைத்து அனுபவித்துவிட்டு ஓடிவிட்டவர்களே. அந்த மாற்றத்தை இவ்வாட்சியில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தோற்றம் பெற்றது. அடுத்த ஆண்டே அது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1951 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் 1956 ஆம் ஆண்டே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது. 2016 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜேவிபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சுமார் 60 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.
ஒருபுறம் அக்கட்சியை ஒரு கொம்யூனிசப் பேயாகவே சித்திரித்து வந்த வலதுசாரி தேசியவாத ஆட்சியாளர்கள் இரு முறை தடை செய்தார்கள். அதன் விளைவாக இரு முறை தலைமறைவு அரசியலுக்குள் தள்ளப்பட்டதுடன் இரு முறை ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
முதல் மூன்று தசாப்த காலம் அதிகார வர்க்கத்தின் நெருக்குதல்களுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் பலியாக நேரிட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களாகத் தான் அரசியல் அழுத்தங்களையும் பாதுகாப்பு நெருக்கடிகளையும் எதிர்கொண்டபடி முற்றிலும் பாராளுமன்றவாதப் பாதையில் பயணித்து இறுதியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்கு அதன் கொள்கைகளும், உள்ளக வெற்றிகளும் மட்டும் காரணமில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, வீதிகளுக்கு வந்த மக்கள் பட்ட துன்பங்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரகலய போராட்டம் என்பன இவ்வெற்றிக்கான முக்கிய உடனடிக் காரணங்கள் என்பது மறுப்பதற்கில்லை. மாறாக இலங்கையில் ஏனைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டக் கோரி இன, மத, வர்க்க, சாதிய வேறுபாடின்றி மக்கள் தந்த ஆணை என்றே இந்த அரசியல் மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
உலக வரலாற்று சாதனை
மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஒரேயடியில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான ஆட்சியை நிறுவியது. உலகில் வேறெங்கும் இப்படியான உதாரணங்கள் இல்லை.இதுவோர் பிரமாண்ட பாய்ச்சலே. இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம்.
2/3 பெரும்பான்மை ஆபத்தா?
1977 தேர்தலில் ஜே.ஆர். அரசாங்கம் 5/6 பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தது. அந்த யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. இலங்கையின் வாக்களிப்பு மரபின் பிரகாரமும், இனப் பரம்பல் காரணிகளும் இனி ஆட்சியமைபவர்கள் எவரும் 2/3 பெரும்பான்மை பலத்தை பெறமுடியாதபடியான விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அந்த அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தினார். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதியொருவருக்கான உச்சபட்ச அதிகாரத்தையும் அந்த அரசியலமைப்பின் மூலம் நிறுவினார். அதன் பிரகாரம் அந்த அரசிலயமைப்பை மாற்றுவதாக இருந்தால் கூட 2/3 பெரும்பான்மை இன்றி மேற்கொள்ள முடியாது என்று ஜே.ஆர். மட்டுமல்ல பல அரசியல் வல்லுனர்களும் இதுவரை ஆரூடம் கூறி வந்திருக்கிறார்கள். அந்த ஆரூடத்தை சுக்குநூறாக்கியது தற்போது நடந்து முடிந்த 2024 தேர்தலில் தான். அந்த நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜே.ஆர். 1989 வரை ஆட்சி செய்தார்.
வரலாற்றில் இதுவரை 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த ஆட்சிகளின் போது தான் நாடு அதிக அராஜகத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், பல நாசங்களும் ஏற்பட்டுள்ளன. 70ஆம் ஆண்டு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சிறிமா மேற்கொண்ட நாசங்களின் விளைவாகவே ஜே.ஆர். இலகுவாக 5/6 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த இருவர் ஆட்சியிலும் மேற்கொண்ட அதிகார அராஜகத்தின் விளைவாக இரு ஆயுதக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. போதாததற்கு தமிழர் பிரதேசங்களில் ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஜே.ஆரின் ஆட்சியின் போது 1980 யூலை வேலைநிறுத்தத்தின் போது லட்சக்கணக்கானோரை அரச உத்தியோகங்களில் இருந்து நீக்கினார். பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றை பயன்படுத்தி புதிய வடிவத்தினாலான அரச பயங்கரவாதத்துக்கு வழிவகுத்தார். 1982 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுத் தேர்தலை மேலும் ஏழு வருடங்களுக்கு தள்ளிவைத்தார். 83 யூலை படுகொலைகளை பின்னின்று புரிந்து விட்டு அதற்கு சம்பந்தமே இல்லாத மூன்று கட்சிகளைத் தடை செய்தார். தனது அராஜகங்களை மீறுவோரை இலகுவாக நீக்கும் வகையில் தனது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை முன் கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்.
யுத்தத்தில் வென்றதை மூலதனமாக வைத்து 2010 தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை வென்ற மகிந்த ராஜபக்சவின் 2010 - 2015 வரையான ஆட்சி காலப்பகுதியில் மகிந்த ஏற்படுத்திய நாசங்களின் விளைவுகளையும், ஊழல் அராஜகம், துஸ்பிரயோகம் என்பவற்றின் விலை இன்று முழு நாடும் அனுபவிக்கிறது என்பதையும் அறிவோம். அவ்வாட்சியில் மகிந்த ராஜபக்ச தனது 2/3 பலத்தைப் பயன்படுத்தி 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் தனது ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை எதிர்த்த பிரதம நீதியரசர் ஒருவரை பதவி நீக்கியதுடன் விசேட பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவிக்கான கால வரம்பையும் நீக்கியது. அவ்வாட்சியானது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன நிறுவனங்களையும் பலவீனப்படுத்தியது.
“இந்த நிறைவேற்று அதிகாரம் ஒரு பைத்தியக்காரனின் கரங்களுக்கு சென்றால் என்ன ஆகும்” என்று அன்றே கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா எச்சரித்திருந்தார். வரலாற்றில் அதை சகல ஜனாதிபதிகளும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
தம்மிடம் 2/3 பெரும்பான்மை பலத்தைத் தந்தால் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதாகவும், நிறைவேற்றி ஜனாதிபதிமுறையை அகற்றுவதாகவும் கூறி கடந்த மூன்று தசாப்தங்களாக பல ஆட்சிகள் வந்து விட்டன. 2/3 ஐப் பெற்ற ஆட்சிகளோ அதனை செய்யவில்லை. 2/3 பெறாத ஆட்சிகளோ தம்மோடு ஏனைய கட்சிகள் சேர்ந்தால் தேசிய அரசாங்கம் அமைத்து அதனை செய்வதாக கூறின. அதுவும் நடந்ததில்லை.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மேலதிகமாகவே 2/3 ஐ விட அதிகமான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். ஒரு நெருக்கடி காலத்து அரசாங்கத்துக்கு இந்தளவு அதிகாரம் அவசியமானதே. தேசிய மக்கள் சக்தியே எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். அது அவர்களே கூறிய “system change” க்கு எந்தளவு வாய்ப்பளிக்கப்போகிறது என்பதைத் தான் இப்போது அனைவரும் கவனித்து வருகிறார்கள்.
மறுபக்கம் எதிர்க்கட்சிகள் வலுவிழந்திருப்பது ஜனநாயக ஸ்திரத்தனமைக்கு ஆபத்தான சமிக்ஞை என்கிற கருத்தையும் பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன |
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ்?
1989 ஆம் ஆண்டு தேர்தலில் தான் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழான பாராளுமன்றத் தேர்தல் முதன் முதலில் நடத்தப்பட்டது. அதன் மூலம் தெரிவான முதலாவது ஜனாதிபதி பிரேமதாச. அதே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் முதன் முதலில் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலும் அவ்வாண்டு தான் நடத்தப்பட்டது.
மேற்படி விபரங்களின் பிரகாரம் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் இலங்கையில் முதன் முதலில் தனியொரு கட்சி அதிகப்படியான ஆசனங்களை வென்றது இந்த 2024 தேர்தலில் தான். 1977 இல் ஜே.ஆர். மொத்த ஆசனங்களில் 83.33 % வீதத்தை வென்றார். 2024 தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தம் 159 ஆசனங்களை (61.56% வீத ஆசனங்களை) பெற்றிருக்கிறது. 2010 (144), 2020 (145), ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியானது முறையே 144, 145 (64% வீத) ஆசனங்களைப் பெற்று கொண்ட போதிலும் அது தனியொரு கட்சி பெற்ற ஆசனங்கள் அல்ல. அது பல கூட்டணிக் கட்சிகளின் ஆசனங்களையும் உள்ளடக்கியதே.
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 3% வீதத்தைப் பெற்றிருந்த அனுர குமார திசாநாயக்க ஐந்தே ஆண்டுகளில் 42% வீதத்தை தாண்டினார். ஒரு மாதத்தில் நடந்த பாராளுமன்றத்த் தேர்தலில் 3 ஆசனங்களில் (1.33%) இருந்து 159 ஆசனங்களை (70.67%) அடைந்தார். இந்தளவு குறுகிய காலத்தில் ஒரேயடியாகத் தாண்டிய எந்த ஒரு கட்சியும் உலகில் இல்லை என்றே கூறலாம். அதேவேளை சென்ற தேர்தலில் 145 ஆசனங்களைக் கொண்டு ஆட்சியமைத்திருந்த பொதுஜன பெரமுன இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
வாக்களிப்பு குறைந்தது ஏன்?
65.02% மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட (5,325,108) வாக்காளர்கள் வாக்களிப்பில் இருந்து தவிர்த்து இருக்கிறார்கள். அப்படியாயின் வாக்களித்தவர்கள் யார்? வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டவர்கள் யார்?
இந்தத் தேர்தலில் இதற்கு முன்னர் பிரதான கட்சிகளுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிற அதேவேளை அவர்களில் எஞ்சிய பலரே வாக்களிப்பை தவிர்த்திருக்கிறார்கள் என்று பலர் கணிக்கிறார்கள். அதாவது இந்தப் பாரம்பரியக் கட்சிகளை வெறுத்தவர்களின் “விரக்தி வாக்குகள்” – “அதிருப்தி வாக்குகள்” – “அலட்சிய வாக்குகள்” என்றே கருத இடமுண்டு.
மேலும் இம்முறை யாரெல்லாம் தெரிவாக வேண்டும் என்பதை விட யாரெல்லாம் தெரிவாகக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருந்துள்ளனர்.
வரலாற்றில் முதலாவது இடதுசாரி அரசாங்கம்?
இலங்கையில் மிதவாத வலதுசாரி தேசிய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அதிகளவிலான கட்சிப் பிளவுகளையும், உடைவுகளையும் இடதுசாரிக் கட்சிகளில் தான் ஏற்பட்டுள்ளன. இத்தகைய இரு வேறுபட்ட பிளவுகளில் உள்ள வித்தியாசம் யாதெனில்; இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகளில் பெரும்பாலானவை கொள்கை ரீதியான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. ஜேவிபி யும் கடந்த 60 ஆண்டுகளில் பெரிய சிறிய பிளவுகள் என பல்வேறு பிளவுகளை சந்தித்து வந்திருக்கிறது. அதையெல்லாம் தாண்டி அது தாக்குப்பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது என்றால் அது மகத்தான வரலாற்று வெற்றி என்றே கூறவேண்டும்.மேலும் இலங்கையில் தற்போது உள்ள கட்சிகளிலேயே உயர்ந்தபட்ச கட்சி ஒழுங்கைக் கொண்டுள்ள முதன்மைக் கட்சியாக ஜேவிபியைக் குறிப்பிட முடியும். புதிய உலக ஒழுங்கின் கீழ் இடதுசாரிய மரபிலான; கறாரான கட்சி ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க முடிவதில்லை. இதனால் உலகம் முழுவதும் மரபான கட்சி விதிகள், கட்சி ஒழுக்கங்கள் என்பவற்றின் மீது தளர்வை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் சகல இடதுசாரி இயக்கங்களுக்கும் ஏற்பட்டிருப்பது உண்மையே. அந்தப் போக்குக்கு ஜேவிபியும் விதிவிலக்கில்லை. ஆட்சிகளை புரட்சியின் மூலம் கைப்பற்றுவதோ, அதனை தடையின்றி பேணுவதோ நவீன உலகில் கற்பனாவாதமாகவே நோக்கப்படுகிறது. பூர்ஷ்வா தாராளவாத முறைமைக்குள் கிடைக்கிற வெளியை தந்திரோபாய ரீதியில் கையாள்வதே இன்றைய இடதுசாரி இயக்கங்களின் முன்னால் உள்ள தெரிவாகும். அதன் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று நிறுவிய முக்கிய தேர்தல் இதுவாகும். ஆனால் பூர்ஷ்வா அமைப்புடன் தற்காலிகமாக பல்வேறு சமரசங்களை தற்காலிகமாகவேனும் செய்துகொள்ள நேரிடும்.
இனப்பிரச்சினை: சமரசம்! சரணடைவு!?
அதேவேளை இத்தகைய பூர்ஷுவா அமைப்பு வெறும் வர்க்க அமைப்புடன் மாத்திரம் சமரசம் செய்துகொள்ள நிர்ப்பந்திப்பதில்லை. மாறாக பல்வேறு சமூக எற்றத்தாழ்வுகளுடனும், சமூகச் சிக்கல்களுடனும் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கும். உதாரணத்துக்கு இலங்கைச் சூழலில் மையப் பிரச்சினையாக பல தசாப்தங்களாக நீண்டு கொண்டிருக்கும் இனப் பிரச்சினையை அதே சமரசத்துக்குள் கொண்டு வைத்து விடுகின்றன. பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளை சவாலுக்கு இழுக்கும் துணிச்சல் தேசிய மக்கள் சக்திக்கு உண்டா என்றால் அது இல்லை என்றே உணர்ந்து கொள்ளலாம்.
அடிப்படை பேரினவாத கட்டமைப்புடன் மோதுண்டால் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவோ, அல்லது மீண்டும் அதிகாரத்துக்கு வரவோ முடியாது என்கிற கணிப்பை யதார்த்தமாக எவரும் உணர முடியும். பெரும்பான்மை வாக்கு என்பது சிங்கள பௌத்த தேசியவாத வாக்குகளே. அந்த சிங்க பௌத்த வாக்கு வங்கியை யார் தக்கவைத்துக் கொள்வார்களோ அவர்களாலேயே ஆட்சியைக் கைப்பட்ட முடியும் என்பதே இலங்கையின் தேர்தல் பண்பாட்டு மரபின் யதார்த்தமாக எஞ்சியுள்ளது. அவ்வாக்கு வங்கிக்கான போரை கூர்மை படுத்துவதற்காகவே பல தேசியக் கட்சிகள் தமக்குள் போட்டி போட்டு யார் சிறந்த சிங்கள பௌத்த தேசியவாதிகள் என்பதை நிறுவ முற்பட்டதன் விளைவே இலங்கையின் இனப்பிரச்சினையின் இன்றைய வடிவம்.
இன்று இலங்கை என்கிற தேசமானது சிங்கள - பௌத்த பேரினவாதமயப்பட்ட தேசமே. அரசு என்பது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பே. அதில் எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அரசின் நிகழ்ச்சிநிரலையும், அதன் நீட்சி மரபையுமே பேணிக்கடக்கின்ற தற்காலிக சக்திகளே. தேசிய மக்கள் சக்தியும் அதில் விதிவிலக்காக ஆகப் போவதில்லை. ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை வந்த அரசாங்கங்களில் இருந்து வேறுபடும் ஒரே விடயம் கொள்கையளவில் இனவாதத்துக்கு எதிரான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருகிறார்கள் என்பதும். அதற்குரிய ஒரு ஒழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தான் நமக்கு இருக்கிற ஆறுதல்.
அவர்களால் மத சார்பற்ற ஒரு அரசை நிறுவ முடியும் என்று நம்புவதற்கில்லை. சிங்கள பௌத்த தரப்பையோ, கட்டமைப்பையோ திருப்திபடுத்தாமல் ஆட்சியை இலகுவாக கொண்டு செல்ல முடிவதில்லை. முன்னைய ஆட்சி முறைகள் கைகொண்ட சிங்கள பௌத்த ஆதரவில் இருந்து சற்று தளர்வுகளை சிலவேளைகளில் காண முடியும். பல முக்கிய அரச வைபவங்களில் மதச் சடங்குகளை தவிர்த்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஜனாதிபதியின் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது கூட வழமையான மத அனுஷ்டானங்கள், சடங்குகள் இருக்கவில்லை.
இன்றைய சிங்கள பௌத்த தேசியவாத வடிவம்
மக்கள் அரசாங்கத்தை மாற்றி இருக்கிறார்கள் அரசை மாற்றவில்லை. அரசுக்கு என்று சில இயல்புகள் உள்ளன. 1833 இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட அரச கட்டமைப்பு முறையானது பல யாப்பு சீர்திருத்தங்களுக்கு ஊடாகவும் நிர்வாக ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் பல மாற்றங்கள் கண்டு 1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கையர்களுக்கு கைமாற்றப்பட்டு வேறு வடிவம் பெற்று அரச கட்டமைப்பு இயங்கி வந்திருக்கிறது.
இனத்துவ, மதத்துவ, சாதிய, நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க ரீதியிலான பண்பாட்டுக் கூறுகளையும் தாங்கிக் கொண்டு தான் இந்த அரச கட்டமைப்பு தன்னை வளர்த்துக்கொண்டு வந்துள்ளது. இந்த இயல்பை முற்போக்குக் கூறுகளுடன் வளர்த்தெடுப்பது இலகுவானதல்ல. அதை மாற்றுவதற்கு நூறுவீதம் தயாராக இருக்கும் எந்த அரசாங்கத்தாலும் கூட அதனை மாற்றிவிட முடியாது. ஏனென்றால்
அரச கட்டமைப்பின் இயல்புகளாக ஆக்கப்பட்டுள்ள அந்த நாசகர ஆதிக்க இயல்புகளோடு தன்னை வளர்த்துக்கொள்ள அதிக காலத்தையும், உழைப்பையும், சக்தியையும் செலவழித்திருக்கிறது.
அதை ஒரேயடியில் மாற்றும் மாயாஜாலர்கள் எவரும் இதுவரை நமக்கு வாய்த்ததில்லை. இனியும் வாய்க்கப் போவதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு ஒரு வடிவம் உண்டு, அதற்கு என தன்னளவில் வளர்த்து வந்த சித்தாந்தம் உண்டு. அதைக் கொண்டு இயக்க பல சிவில் அமைப்புகளும், கட்சிகளும் நிறுவனங்களும் உள்ளன. அதனை பலப்படுத்தவென சிவில் நிர்வாகத்துறை இறுக்கமாக உள்ளது. ஈற்றில் அது நிறுவனமயப்பட்ட ஒன்று என்கிறோம். அதை மாற்றுவதாயின் மீண்டும் பெரு விலை கொடுத்தே அக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு தேசிய மக்கள் கட்சி குறைந்தபட்ச அடிப்படையையாவது ஏற்படுத்தும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். அத்தகைய ஆரம்பத்தை ஏற்படுத்துவதற்கான பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.
கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்கள் இதனை சரிசெய்யாமல் நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சியை முன்நகரத்த முடியாது என்கிற உண்மையை உணர்த்த போதுமான சிங்கள சக்திகள் இல்லை. தமிழர் தரப்பும் துருவமயப்பட்டு சமரசத்துக்கு சற்றும் அருகில் நெருங்க தயாரில்லாத எதிர்ப்பரசியலை மட்டுமே செய்து வருவதை பெரும்போக்காகக் (mainstream) கொண்டிருக்கிறது. சமரசம் என்றால் சரணாகதி என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது. அரச தரப்பிடம் இருந்து சமரசத்தை எதிர்பார்ப்பது போலவே தமிழர் தரப்பிலும் விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக வேண்டியது காலத்தி கட்டாயம். சமரசம் என்பது இரு தரப்பு நெகிழ்ச்சியையும் முன்நிபந்தனையாகக் கொண்டதே.
இனி வரும் நாட்களில் இனப்பிரச்சினை குறித்த அணுகுமுறைகளைக் கண்காணிப்பதும் அது குறித்த வினையாற்றலை செய்யும் கடமை சிறுபான்மையினருக்கு உரியது.
முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி விவகாரம்
தேசிய மக்கள் கட்சியை ஆதரித்த பல முஸ்லிம்கள் அமைச்சரவையில் முஸ்லிம் எவரும் தெரிவாகவில்லையே என்கிற அதிருப்தியை முன்வைத்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் முஸ்லிம்கள் அல்லாத அமைச்சரவை என்று விமர்சித்தனர். முஸ்லிம் ஆதரவாளர்கள் பலருடன் சந்திப்பை நடத்திய அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு பதில் அளித்த போது
“இதை வைத்து இனவாதிகளாக எங்களை விமர்சிக்க முயற்சிக்காதீர்கள். முஸ்லிம்களுக்கு நியாயம் கோரி பல தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் நாங்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பாடசாலை முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் உடைக்கான துணி வகைகளை வழங்கக் கோரி அமைச்சரவைப் பத்திரம் வழங்கியதும் சிங்கள நான் தான். முஸ்லிம் அமைச்சர்கள் அல்லர். முஸ்லிம் ஒருவர் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. இம்முறை அம்பாறையில் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகவில்லை. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அங்கே அவசியம் என்பதற்காக தேசியப் பட்டியலின் மூலம் ஆதம் பாவா என்கிற ஒரு முஸ்லிம் உறுப்பினரை அங்கே தெரிவு செய்தோம். மேல் மாகாணத்துக்கான ஒரு கவர்னராக முஸ்லிம் ஒருவரையே தெரிவு செய்தோம்....” என்றார்.
அமைச்சரவை 25க்குள் சுருக்கப்பட்டுவிட்டதால் முக்கிய அமைச்சர்கள் கட்சியின் சிரேஷ்டர்கள், முக்கிய துறைசார் நிபுணர்கள் என்போரையே தெரிவு செய்ய நேரிட்டது என்றும் இன, மத அடிப்படையில் தெரிவான அமைச்சரவை அல்ல இதுவென்றும் இது விடயத்தில் பதிலளிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் நீண்ட கால தலைமை வகித்து வரும் பல சிரேஷ்ட தலைவர்களிடம் உங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையே என்கிற கேள்வியை ஊடகங்கள் கேட்ட போது. எங்கள் கடமைகளை செய்ய அமைச்சுப் பதவிகள் எங்களுக்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் கட்சி தெரிவு செய்யும். என்றே பதில் அளித்து வருகின்றனர்.
இதேவேளை இனவிகிதாசாரம் பேணப்படவேண்டியதும் கூட சட்டப்படி அரசின் கடமையே என்பதை கடந்த கால அரசாங்கங்கள் தெரிந்தே தவிர்த்தன. இந்த அரசாங்கத்துக்கு அதை அழுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது.
"இது “சேர்” மாரின் அரசாங்கம் அல்ல. தோழர்களின் அரசாங்கம்."!
புதிய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை சேர் என்று அழைக்க வேண்டாம் என்றும் பெயர் கொண்டோ அலது தோழர் என்றோ அழையுங்கள் என்று தெரிவித்து வருகிறார்கள். சேர், மாண்புமிகு, போன்ற சொல்லாடல்களால் மேலே தூக்கி வைத்ததன விளைவே இதற்கு முந்திய ஆட்சியாளர்களை அதிகாரத்துவத்துக்கு இட்டுச் சென்றது என்று தெரிவிக்கின்றனர்.
இந்தத் தேர்தலும் புதிய ஆட்சியையும் ஒரு புதிய அரசியல் பண்பாட்டை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது என்றே பல நோக்கர்களும் தெரிவிக்கிறார்கள்.
புதிய அமைச்சரவையில் பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து பேரைத் தவிர ஏனைய அனைவரும் அமைச்சரவைக்குப் புதியவர்கள். அந்த ஐவரும் 2004 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியின் போது அமைச்சர்களாக சிறுது காலம் இருந்தவர்கள்.
தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் தமது சம்பளத்தை எடுப்பதில்லை என்றும், பொது நிதிக்கே அச் சம்பளத்தை வழங்குவது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் வசதிகள், சலுகைகள் பலவற்றை பெறுவதை தவிர்த்து இருக்கிறார்கள். இதுவரை ஒவ்வொரு உறுப்பினருக்கும், அமைச்சர்களுக்கும் என பாதுகாப்புக்கு பொலிசார், இராணுவம், உதவியாளர்கள், வீடு, பராமரிப்புக்கென ஏகப்பட்ட செலவுகள் எல்லாவற்றையும் அனுபவித்து வந்தார்கள். சேவை செய்ய வந்தவர்களுக்கு இத்தனை வசதிகள் தேவையில்லை என்பதே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. அமைச்சர்களுக்கு கூட முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பல வசதிகள் கூட வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
கைத்தொழில் அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட அன்று சுனில் ஹந்துநெத்திக்கு வந்த ஒரு தோலைபேசி அழைப்பை தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அழைப்பென மகிழ்ச்சியுடன் நான் அமைச்சர் ஹந்துநெத்தி பேசுகிறேன் என்றபோது மறுமுனையில் கறாராக உங்கள் தொலைபேசி கட்டணப் பாக்கி 22 ஆயிரத்தைக் கடந்துவிட்டது நாளைக்குள் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று எச்சரித்து விட்டு அப்பெண் வைத்து விட்டதாகவும். தனக்கு வந்த முதல் அழைப்பே இப்படித்தான் என்றும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி இருந்தார்.
எல் போர்ட் (L Borad) அரசாங்கம் என்று ரணில் சமீபத்தில் கேலி செய்திருந்தார். முன்னாள் தேர்தல் ஆணையார் மகிந்த தேஷப்பிரிய ஊடக மாநாட்டில் “கலியாணம் கட்டுவதற்கு முதல், அனுபவம் பெற்றுவிட்டு வரவேண்டும் என்கிறீர்களா?” என்று வினவியிருந்தார். இந்த அமைச்சர்கள் ஒரு கட்டுக்கோப்பான கட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம்.
அமைச்சரவையில் ராமலிங்கம் சந்திரசேகரனும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்ற பிரதீப், அருண் ஆகியோரும் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பாராளுமன்றத்தில் 22 பெண்கள், தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்புரிமை எல்லாம் புதிய ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டுக்கான தொடக்கம்.
இதுவரையான அரசாங்க மரபில் மாற்றமும் மறுமலர்ச்சியும், புதிய அரசியல் பண்பாடும் ஆரம்பிக்கிறது என்று உணர முடிகிறது. மக்களுக்கு இதுவோர் புதிய அனுபவம். இவ்வாறு சாத்தியமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இனி வருபவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான உதாரணமாக இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தேசிய மக்கள் சக்தியினர்.
நாம் எவரும் விரும்புகிற, நாம் எவரும் கனவு காண்கிற ஒரு ஆட்சியை எவராலும் ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு வித கனவு utopian மனநிலையில் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதை விட கடந்த 76 ஆண்டுகளில் காணாத முற்போக்கான - முன்னுதாரண மாற்றங்களைக் காண முடியும் என்றே ஊகிக்க முடிகிறது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அது லேசானது அல்ல. அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஏகாதிபத்தியம், கார்பரேட்டுகள், முதலீட்டாளர்கள், ஊழல் மாபியாக்கள் , வலதுசாரி தேசியவாத வங்குரோத்து அரசியல் எதிரிகள், இனவாதிகள், இதுவரை லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம், விரயம் என்பவற்றுக்குப் பழகிய சிவில் நிர்வாகத் துறை என ஏராளமானவற்றை எதிர்கொள்ள நேரிடும். இதுவரை இருந்த அரசாங்கங்கள் அத்தகையவற்றுக்கு சமரசம் செய்து கொண்ட -விலை போனவையாக இருந்தன.
அது இந்த அரசாங்கத்தில் நடக்காது. காரணம் இங்கே அத்தகைய நிலைமையை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை உண்டு. கடந்த காலங்களைப் போல அரசியல் லாபத்துக்காக கூட்டுக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களில் தங்கியிராத அரசாங்கம். தனிநபர்வாதம், அதிகாரத்துவம் என்பவற்றை கொண்டிராமல் கடமைக்கே முன்னுரிமை என்கிற அரசாங்கம். இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெருமளவு சலுகைகள் இராது. அவர்கள் ஊதியத்துக்கு வேலை பார்க்க வந்தவர்கள் அல்லர். கடமையை நிறைவேற்ற வந்த செயற்பாட்டாளர்கள். குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. அதனை சரி செய்வதற்கான பொறிமுறை அங்கு உண்டு என்பதே நமக்கு பேராறுதல். இந்த ஆட்சியானது ஒரு கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்டது என்பது இலங்கை ஆட்சிமுறைக்கு புதியது என்பதை கவனிக்க வேண்டும்.
76 ஆண்டுகாலம் பொறுத்திருந்த நமக்கு இந்த ஐந்து ஆண்டுகளை சரியாக முறையாக செய்ய ஒத்துழைப்பை நாடியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரோ அடுத்த மாதமே வந்து ‘சொன்ன சொல் எங்கே...’ “தீர்வெங்கே...!”என்று அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்கள். அதற்குரிய ஒழுங்குக்கு அவகாசம் கொடுப்பதும் நமது கடமை. அதேவேளை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது நமது உரிமை. மக்கள் விரோத அரசாங்கமாக மாறினால் அதனை தூக்கியெறிவதையும் மக்களால் செய்ய முடியும் என்பதையும் இதே அரசாங்கம் தெரிவான முறைக்கு ஊடாக காட்டப்பட்ட சிறந்த உதாரணம்.
மக்கள் இதனை மறுமலர்ச்சி என்கிற வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் பெருவாரி மக்கள். அந்த நம்பிக்கைக்கு நியாயம் செய்யுமா தேசிய மக்கள் கட்சி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
சில சிறப்பம்சங்கள்
- இலங்கையின் சனத்தொகை 22 மில்லியன்கள். இதில் இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 17,140,354 அதாவது மொத்த சனத்தொகையில் 77.91%.
- அதில் அளிக்கப்பட வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006. (மொத்த வாக்காளர்களில் 65.02%)
- நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 667,240. (அளிக்கப்பட்ட வாக்குகளில் 5.99%)
- தெரிவு செய்யப்பவர்களின் கட்சிகளைச் சேர்ந்த 12 மற்றும் ஒரு சுயேச்சை குழு ஆகியவற்றுக்குமாக 10,457,009 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
- எஞ்சிய 690,997 வாக்குகளும் தெரிவாகாத கட்சிகளுக்கும், சுயேட்சை குழுக்களும் வழங்கப்பட்டுள்ளன. இது சுமார் 6 வீத வாக்குகளாகும்.
- 17,710 வாக்குகளைப் பெற்ற இலங்கை தொழிற்கட்சிக்குக் கூட ஒரு ஆசனம் கிடைத்திருகிறது என்றால் இப்பயன்படாத வாக்குகளின் பெறுமதியை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.
- கடந்த 2020 தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களில் முதலாவது இடம் மகிந்த ராஜபக்ச. அவர் 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தில் இருந்தவர் சரத் வீரசேகர. அவர் மொத்தம் 328,092 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
- மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த சரத் வீரசேகர இம்முறை முற்றிலும் குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.
- இவ்வாறு கிட்டத்தட்ட இனவாதத்துக்கு நேரடி தலைமைத்துவத்தைக் கொடுத்து வந்த பலர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 167 பேர் இழந்துள்ளனர். புதிதாக 176 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு.
- இலங்கையின் வரலாற்றில் முதற்தடவை அதிகளவிலான பட்டதாரிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தருணம்.
- 1978 இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் தனியொரு கட்சி மூன்றில் பெரும்பான்மை பெற்ற முதல் சந்தர்ப்பம்.
- இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
- வரலாற்றில் முதற் தடவையாக தமிழர்களின் கோட்டையாக கருதப்படுகிற யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சியாக அல்லாத ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
- முதற் தடவையாக 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கிறார்கள்.
- முதற் தடவையாக சானு நிமேஷா என்கிற திருனர் (இலங்கை சோசலிசக் கட்சி) தேர்தலில் பங்குபற்றியிருக்கிறார்.
- முதற் தடவையாக பாராளுமன்றத்துக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி தமது தேசியப் பட்டியலின் மூலம் சுகத் வசந்த டி சில்வா என்கிற பார்வையற்ற பட்டதாரி ஒருவரே அவ்வாறு தெரிவு செய்தது.
- பொ.ஜ.மு – பொதுஜன முன்னணி
- ஐ.ம.சு.கூ. – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
- ஐ.தே.க – ஐக்கிய தேசியக் கட்சி
- ஐ.ம.ச – ஐக்கிய மக்கள் சக்தி
- ஸ்ரீ.ல.சு.க – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
- ஸ்ரீ.ல.பொ.பெ – ஸ்ரீ லங்கா போது ஜன பெரமுன
- ஜே.வி.பி. – மக்கள் விடுதலை முன்னணி
- தே.ம.ச – தேசிய மக்கள் சக்தி
கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு சஞ்சிகையில் (ஒக்டோபர் 2024) விரிவாக வெளிவந்த இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 01.12.2024 அன்று வெளியான ஞாயிறு தினகரன் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இரு ஊடகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...