“மலையகம் 200” தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 15யூலை 2023 அன்று நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம் இது. இக்கட்டுரையின் சாரம்சமே உரையின் மையமாக இருந்தது.
“தேசியம்” என்பது கட்டமைக்கப்படுவது தான். பல சந்தர்ப்பங்களில் கற்பிதமாக உருவாக்குவதற்கான அவசியமும் இனக்குழுமங்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. தேசிய உருவாக்கத்துக்கான வரைவிலக்கணங்கள் காலத்துக்கு காலம் மாற்றம் கண்டும், புதுப்பித்தும் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது.ஒரு தேசிய இனத்தின் உருவாக்கம் அதுகாரத்துவத்துக்காகவும் உருவாகலாம் அதுபோல அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்காகவும் தனது தனித்துவமான அடையாள தேசியத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
இன்றைய “நவீன” உலக ஒழுங்கில் அடையாள பிரச்சினை எங்கெங்கிலும் மையைப் பிரச்சினையாக ஆகி இருக்கிறது. இலங்கையில் 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர்திருத்தத்துக்கு ஊடாக ஒரே நாடாக்கப்டும் வரை இலங்கைக்கான ஒரு தேசியம் கூட இருந்ததில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை தமிழர்கள் கூட தமிழ் தேசிய இனமாக உணர்ந்ததில்லை. 80 கள் வரை முஸ்லிம்கள் கூட தனித் தேசியமாக உணரத் தள்ளப்படவில்லை. மலையகத் தேசியம் பற்றிய கருத்தும் கூட 90களில் வெளிப்பட்டது தான். இனமாக உணர்வதும் தேசியமாக உணர்வதும், ஆவதும் வேறு வேறு அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டவை.
இலங்கையின் தனித்துவமான பெரும்பான்மை இன மேலாதிக்க சித்தாந்தத்தின் வளர்ச்சி ஏனைய இனங்களின் தனித்துவத்தை நிலைநிறுத்தத் தள்ளின. இறுதியில் தனக்கான தேசியத்தை கட்டமைப்பதற்கும், வடிவமைப்பதற்கும், வரைவிலக்கணப்படுத்துவதற்கும் ஒவ்வொரு இனமும் தள்ளப்பட்டன.
இந்திய வம்சாவளி மக்களை இலங்கையில் சகல அரச பதிவுகளிலும், புள்ளிவிபரத் தொகை மதிப்புகளிலும் அதிகாரபூர்வமாக இந்தியத் தமிழர்கள் (Indian Tamils) என்று அழைக்கப்பட்டாலும், வெகுஜன மட்டத்தில் தோட்டத் தமிழர், பெருந்தோட்டத் தமிழர், மலையகத் தமிழர், என்றெல்லாம் அழைக்கப்படுவதுண்டு. ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் கூலிகள் என்றும், இந்தியக் கூலிகள் என்றும், கூலித் தொழிலாளர்கள் என்றும் பல ஆண்டுகளாக பதிவு செய்து வந்தார்கள். அதுபோக இம்மக்களை வெறுப்புணர்ச்சிமிக்க நையாண்டியுடன் கள்ளத்தோணி, வடக்கத்தேயான், தோட்டக்காட்டான் என்றெல்லாம் கூட ஏனைய சமூகங்கள் அழைத்து வந்தனர்.
இப்போது “மலையகத் தமிழர்” அடையாளத்துக்குள், இலங்கை முழுவதும் வாழும் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் அடக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராய்வதும், அதற்கான பின்னணி வழித்தடத்தை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கம்.
மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர்; இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் நான்கு தேசிய இனங்களுக்கும் வெளியில் கவனிப்பாரற்று நெடுங்காலமாக வாழ்ந்து வரும் கதைகளை இலங்கையின் எந்த இலக்கியங்களும், ஆய்வுகளும் ஒழுங்காக பதிவு செய்ததில்லை.
இதன் காரணமாக ஒரு பெரும் தொழிலாளர் வர்க்கக் கூட்டம் பற்றி மலையகத்தில் கூட புரிதல் அற்ற ஒரு நிலைக்கு வந்திருப்பதை இன்று காண முடிகிறது. அது மட்டுமன்றி கொழும்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் கூட ஏதோ உயர் வர்க்க, உயர் சாதி மேட்டுக்குடி என்றும், இந்திய நலன் பேணும் மக்கள் கூட்டம் என்றும் கூறித்திரிகிற அபத்தப் புனைவுகள் அவர்களுக்கு போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.
உண்மைகள் பல சந்தர்ப்பங்களில் கசக்கும். இயற்கை மருந்தும் கூட பல சந்தர்பங்களில் கசக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை விழுங்குவது தான் நிவாரணி.
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் செறிவாக வாழக் கிடைத்ததால் இனப் பண்பாட்டையும், மரபுகளையும், கலை இலக்கியங்களையும் பேண வாய்ப்பு கிடைத்தது. அதன் வாயிலாக இன அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அரசியல் தலைமைகளையும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும், கூட்டு அரசியல் அபிலாசைகளையும் கூட பேண முடிந்தது. ஆனால் மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகக் கூட்டுக்குள் இணைக்கப்படவில்லை.
செறிவாக வாழாததாலும், சிங்கள சமூகத்தினரோடு பரவலாக கலந்து இருந்ததாலும் அவர்களுக்கு என்று அரசியல் தலைமையை கட்டியெழுப்பும் வலுவற்றவர்களாக நெடுங்காலமாக இருந்திருக்கிறார்கள். இதை வாய்ப்பாக ஆக்கிக்கொண்ட சிங்களக் கட்சிகள் அவர்களை தமது அரசியல் லாபங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்திக் கொண்டது. இம்மக்கள் மத்தியில் இருந்த அரிதான சமூக இயக்கங்கள், சமூக செயற்பாடுகள் எதுவும் பெரும்போக்கு இலக்கியங்களில் பதிவு பெறவில்லை. மலையக மற்றும் ஈழத்து தமிழ் இலக்கியங்களில் உரிய வகையில் பதிவுக்கு உள்ளாகவில்லை. அதன் விளைவே அம்மக்கள் பற்றிய புனைவுகளும், திரிபுகளும், ஐதீகங்களும் இன்று விரவியிருக்கின்றன. சாதாரண பாமர மக்கள் மத்தியில் மட்டுமல்ல புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் கூட இந்த அரசியல் குருட்டுத் தனம் மேலோங்க காரணமாக ஆகியிருக்கிறது.
ஈற்றில் மலையக அடையாளத்துக்கு கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய வம்சாவளியினரையும் இணைத்ததாக வேண்டும் என்று வலுக்கட்டாய அராஜகத்தில் குதித்திருக்கும் ஒரு சிறு கும்பலிடம் என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று இதய சுத்தியுடன் அவர்களிடம் தட்டிக் கேட்டுக்கொள்ளும்படி கேட்க வேண்டியிருக்கிறது.
சரி கடந்த காலத்தைத் தான் விடுவோம். இப்போதாவது சுயவிமர்சனத்துடன் இம்மக்களை இதய சுத்தியுடனான அரசியல் வேலைத்திட்டத்துடன் இணைக்கிறார்களா என்றால் அதையும் எவரும் வைத்த பாடில்லை. இனக் கணக்கெடுப்பு எடுக்கும் போது கணக்கை கூட்டிக் காட்டவேண்டும் என்பதற்கப்பால் கிஞ்சித்தும் இம்மக்கள் மீது அக்கறை இல்லாத கூட்டம்.
இதைப் பற்றியெல்லாம் பேசக்கூடிய அளவுக்கு கருத்து ரீதியாக தம்மை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு கூட மலையகத்துக்கு வெளியில் உள்ள இந்திய வம்சாவளியினர் தமக்கான கூட்டு இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் பலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஈற்றில் அவர்கள்; இந்திய அடியாளும் வேண்டாம், மலையக அடையாளமும் வேண்டாம் நாங்கள் இதுவரை காலம் இருந்ததைப் போல இலங்கை தமிழர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் என்கிற பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி இந்திய வம்சாவளி அடையாளத்தால் எந்தப் பயனும் இருந்ததில்லையோ அது போலத் தான் அவர்களுக்கு மலையக அடையாளத்தை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு பயனும் புதிதாக இருக்கப் போவதில்லை. அதற்கான நம்பிக்கை கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டதுமில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
காலம் கடந்துவிட்ட ஞானம் பிறந்திருக்கிறது என்று ஒரு வகையில் ஏற்றுக்கொண்டால் கூட “இரண்டே நிமிடத்தில் நூடில்ஸ்” தயாரிப்பது போன்ற வடிவத்தில் உடனடி “அடையாள உருவாக்கத்தை” ஏற்படுத்த விளைவது சுத்தக் கோமாளித்தனம். ஒரு சமூகத்தின் கூட்டு இருப்பை ஸ்திரப்படுத்துவதென்பது ஒரு அரசியல் போக்கின் நீட்சியில் அமைவதே. அபத்தமான அவசர கும்பல்தனத்தால் ஒப்பேற்றிவிட முடியாது தோழர்களே.
இன்று இந்த உண்மைகளை எடுத்துக் கூறும் போது மலையகத்துக்கு எதிரானவர்களாகவும், ஏன் எதிரிகளாகவும் கூட குற்றம் சாட்டும் அளவுக்கு வன்மமாக இருக்கிறது.
இதைச் சொன்னால் சாதியத்தை sympathy யாகப் பயன்படுத்தி இக்கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக குற்றம் சுமத்திவிடக் கூடும் பயத்தின் காரணமாகவே அந்த விடயங்களை ஆழமாகப் பேச முடியாமல் இருக்கிறது.
அடையாளத்தின் வழித்தடம்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் உறுதியாக தமது வேரை இங்கே நிலைநிறுத்த முயற்சிக்கையில் பேரினவாதத் தரப்பானது அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய “இந்தியர்கள்” என்றே அடையாளப்படுத்தியது. தலைமுறைகளாக இலங்கையில் வேரூன்றிவிட்டபோதும், இந்தியாவுடனான தொடர்பறுந்துவிட்டபோதும் கூட “இந்தியர்” என்கிற அடையாளத்தையே இலங்கை அரசும், சிங்களத் தேசியவாதிகளும் தந்துகொண்டிருந்தார்கள். அந்த “இந்தியர்” என்கிற அடையாளம் அவர்களை சட்டபூர்வமாக நாட்டை விட்டுத் துரத்தும் வரை பெரிய சிக்கலாக உணரப்பட்டதில்லை. ஒரு கட்டத்தில் “இந்திய அடையாளம்” தமது இருப்புக்கே அச்சுறுத்தலாகும் ஒரு காரணியாக மாறியது. தேடித் தேடி வேட்டையாடி துரத்திப்பிடித்து நாடுகடத்தப்பட்டக் காலத்தில் “இந்தியர்” என்கிற அடையாளத்தை மறைக்கப் படாதுபாடுபட்டனர் இந்திய வம்சாவளியினர். பலர் தமது “சிகப்பு பாஸ்போர்ட்” என்று அழைக்கப்பட்ட இந்தியக் கடவுச் சீட்டை மறைத்தனர், எரித்தனர், புதைத்தனர், அழித்தனர்.
இந்திய அடையாளத்தைப் பேணுவதில் இனி எந்த அர்த்தமும் கிடையாது. நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதைக் கைவிடுவது என்கிற முடிவுக்கு வந்தவேளை; அவர்கள் அதற்கு மாற்றாக எந்த அடையாளத்தை தமக்கு சூட்டிக்கொள்வது என்கிற சிக்கலை எதிர்கொண்டனர். இலங்கையில் தமிழர் என்கிற அடையாளத்துக்கு உரியவர்களாக; ஏற்கெனவே வடக்கு கிழக்கில் பெருவாரியாக வாழும் பூர்வீகத் தமிழர்கள் இருந்தார்கள். எனவே இந்தியத் தமிழர் என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக இலங்கைத் தமிழர் என்கிற பதத்தையே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆனால் புள்ளிவிபரங்களின் படி மலையகப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களை இந்தியத் தமிழர் என்றே பதிவு செய்யப்பட்டு வந்தது.
1960களில் மலையகத்தில் நிமிர்ந்த வெகுஜன எழுச்சிக்கு இலக்கியம் முக்கிய காரணியாக இருந்தது. அந்த இலக்கிய செயற்பாட்டுத் தளம் தான் “மலையகம்” என்கிற புதிய இன அடையாளத்தையும், அதற்கொரு அரசியல் களத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்கிற பதத்துக்கு மாற்றாக இந்திய வம்சாவளியினர் தம்மை “மலையகத் தமிழர்” என்கிற பெயரை இன அடையாளத்துக்கான பெயராக அழைக்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில் அதை ஏனைய அரசியல் சக்திகளும் உள்வாங்கிக்கொண்டனர்.
அரச அங்கீகாரத்துக்காக
இன்று இலங்கையில் சுமார் 17 லட்சம் சனத்தொகையைக் கொண்டு, இந்திய வம்சாவளியினர் ஒரு தனியானதும், நான்காவதுமான தேசிய இனமாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தனியான மொழி, கலை கலாசாரத்தையும் கொண்டு, நாடளாவிய பரந்து வாழ்ந்தாலும் மத்திய மலைநாட்டில் செறிவாக வாழ்ந்துவரும் ஒரு தனியான தேசிய இனம் என்ற உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்று கூறிக் கொள்ள எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்று நிச்சயமாகக் கூற முடியும்.
2015ஆம் ஆண்டளவில் புதிய “நல்லாட்சி” அரசாங்கம்; அரச அதிகாரப் பகிர்வு வாயிலாக இனங்களின் உரிமைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதர்காகவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்காகவும் அரசியல் அமைப்புக்கு ஊடாக சீர்திருத்தம் மேற்கொளவதற்கென புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்க முனைந்தது. அதற்காக அரசாங்கம் சம்பந்தப்பட்ட சகலதரப்பினரிடமிருந்தும் எழுத்துமூல ஆலோசனைகளைக் கோரியிருந்தது. பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தமது ஆலோசனைகளை சமர்ப்பித்தன. மலையகத் தரப்பிலும் அரசியல் நிர்வாக விடயங்கள், உரிமைப் பிரச்சினைகள் , கல்வி மற்றும் சுகாதாரம், காணி ,வீட்டுரிமை போன்றன தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டன.
அப்போது மலையக சிரேஷ்ட சட்டத்தரணி இ. தம்பையா தலைமையிலான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.
“மலையகம் உள்ளடங்களாக இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்கள் அனைவரும் மலையகத் தமிழ் மக்கள் என்ற வரைவிலக்கணத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் ஒரு தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களிலும் அவர்கள் இந்தத் தலைப்பின் கீழேயே (Upcountry Tamil People) சுட்டிக் காட்டப்பட வேண்டும்.”
என்றனர்
அது மட்டுமன்றி இதனை ஒரு பாராளுமன்ற சட்டமாக வடிவமைத்து பாராளுமன்றில் சமர்ப்பித்து சட்ட அங்கீகாரத்தைத் தர வேண்டும் என்றும் கோரினர்.
“மலையகத் தமிழர்” என்கிற டையாளம் இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களை இணைப்பதை விட “இந்தியத் தமிழர்கள்” என்கிற பதம் நிச்சயம் இணைக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் மலையகத்தவர் என்கிற பதம் உணர்வு பூர்வமாக இணைப்பதைவிட “இந்திய வம்சாவளி” பதம் அடிப்படை விஞ்ஞானபூர்வமான யதார்த்த அடையாளத்தை உணர்வுபூர்வமாகக் கொடுக்கிறது. ஆனால் மலையகத்துக்கு வெளியில் வாழும் பலர் “இந்திய வம்சாவளி” என்கிற பதத்தைக் கைவிட்டு பல காலமாகிறது. அதை த்தொடர்ந்தும் சுமக்கத் தயாருமில்லை. இதற்கு மாற்று என்ன என்பதே கேள்வி.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் “மலையக” அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மலையகத்தில் இருந்து வரும் குரல்களேயன்றி அதற்கு வெளியில் இருந்து வரும் முன்மொழிவுகள் அல்ல. மலையக அடையாளத்தை முன்மொழியும் பிரிவினர் கூட அதனைத் திநிப்பதகாக கூறுகின்ற காரனனங்கள் அபத்தமானவை.
எழுத்தாளர் சடகோபன் தனது கட்டுரையொன்றில் கூறும் போது
“மலையகத் தமிழர்கள் முதலில் வந்து கால்பதித்த இடம் " கண்டிச் சீமை " என்ற மலையகம் தான். அங்குதான் அவர்கள் கடந்த 200 வருடங்களாக செறிந்து வாழ்கிறார்கள். மலையகம் என்பது இவர்களது தாயகம். அதன் பின்னரே தத்தமது வேலைகளின் நிமித்தம் அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றார்கள் . எனவே வேறு பிரதேசங்களில் வாழ்பவர்கள் கூட தம்மை மலையகத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.”(1)
இதனை ஒரு தர்க்கத்துக்கு எடுத்துக்கொண்டால் கூட இந்திய வம்சாவளியினர் முதலில் வந்தது கண்டிக்கல்ல. அவர்கள் கொழும்பு பாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்டது பெருந்தோட்டத்துறை தொடங்குவதற்கும் முன்னராகும். மேலும் மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் அனைவரும் வேலையின் நிமித்தம் வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் என்று கூறுவது அடுத்த அபத்தம். மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வருகை பூர்வீகம் வாழ்வியல் வழித்தடம் பற்றிய வெகுஜன அறியாமைக்கு அரசியல் தலைமைகள் மட்டுமல்ல இத்தகைய எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் கூட ஒரு வகையில் காரணம்.
மேலும் சடகோபன் கூறுகிறார்.
“...இதில் முக்கியமானது என்னவென்றால் இது ஒரு புவியியல் ரீதியான கோட்பாடு அல்ல. இது ஒரு அரசியல் ரீதியான கோட்பாடு அல்லது எண்ணக் கருத்தாகக் கருதப்படவேண்டும். மலையகத்தில் வாழாத வடக்கு கிழக்கு, வவுனியா, மன்னார், முந்தல், குருணாகல், களுத்துறை, மாத்தறை போன்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள்கூட மலையகத்தை தமது வேர் ( ROOT ) பிரதேசமாக அங்கீகரித்து இதில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும்...”
என்கிறார்.
சிலவேளை மலையகத்திலிருந்து வேலைநிமித்தம் இடம்பெயர்ந்தவர்களும், சில வேளை கலவரங்களின் போது இடம்பெயர்ந்தவர்களைக் கூட அவர் கூறுகிற எண்ணக்கருவுக்கு பொருந்தலாம். ஆனால் நூற்றாண்டுக்கும் முன்னர் இலங்கைக்கு வேலையின் நிமித்தம் வரும் போதே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் குடியமர்ந்துவிட்ட மலையகத்துடன் தொடர்பற்ற மக்களுக்கு எந்தளவு பொருந்தும் என்பதை சிந்திக்கத் தயாரற்றவர்களாக உள்ளார்கள்.
சடகோபன் வெறும் உதாரணம் தான்; இலங்கை - இந்திய வம்சாவளியினரின் பன்முக வழித்தோன்றளையும், பன்முக வழித்தடத்தையும், பன்முக அடையாளச் சிக்கல்களையும், பன்முகத் தேவைகளையும், பன்முக அபிலாசைகளையும் கட்டுடைத்துப் பார்க்கத் தவறுவதன் விளைவு தான் இவை. இலங்கையில் பெரும்பான்மைவாதத்துக்கு அகப்பட்ட நசுங்கிப்போன மக்களில் நாமும் முக்கிய அங்கம் தான். அப்படி இருக்கையில் சிறுபான்மைக்குள்ளும் சிறுபான்மையாக ஆகியிருக்கும் இன்னோர் பிரிவினரிடம் பெரும்பான்மைவாதத்தைப் பிரயோகிப்பது என்ன தார்மீகம். அவர்களின் அபிலாசைகளை அறிய இதுவரை இவர்கள் மேற்கொண்ட அக்கறை தான் என்ன? பிரக்ஞை தான் என்ன?
உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் அந்தந்தத நாடுகளில் அந்தந்த நாட்டுப் பெயர்களை அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். மலேசிய தமிழர், சிங்கப்பூர் தமிழர், மொரீசியஸ் தமிழர் அல்லது மலேசிய இந்தியர், சிங்கப்பூர் இந்தியர் என்றோ, தென்னாபிரிக்க இந்தியர் என்றோ இன்றும் அழைக்கப்படுகின்றனர் என்பதையும் கவனத்திற் கொள்க.
பெருந்தோட்டங்களுக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர்
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித்தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்ட போது பெருந்தோட்டத்துறை ஆரம்பிக்கப்படாத காலக்கட்டம். ஆரம்பத்தில் வந்த இந்திய வம்சாவளியினர் மத்திய மலைநாட்டுக்கு வெளியில் பல்வேறு தொழில்களுக்காக வந்தார்கள் தான்.
ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து பெருவாரியான தமிழர்கள் கட்டுமானப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டார்கள். குறிப்பாக நாடளாவிய ரீதியில் கட்டுமானப் பணிகளுக்காக அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். பாதைகளை அமைத்தல், பாதைகளை செப்பனிடுதல், மலைகளைக் குடைந்து பாதைகளையும், குகைகளையும் அமைத்தல் மட்டுமன்றி இலங்கையின் பல பிரதேசங்களில் உள்ள அரச காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த குளங்களை மீள் கட்டுமானம் செய்வதற்கும் இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். வான்னியில் இவ்வாறு குடிஎற்றப்பட்டவர்களின் சந்ததியினர் இன்றும் உள்ளனர். இலங்கைக்கு இந்திய வம்சாவளியினரின் முதல் வருகை பெருந்தோட்டத்துறைக்காக அல்ல. மத்திய மலைநாட்டுக்கும் அல்ல. 1823 இலும் அல்ல. மாறாக முதல் வருகை பாதை செப்பனிடுவதற்காக 1817 இல் கொண்டு வரப்பட்டார்கள். அதன் பின் மேற்படி கட்டுமானத் தொழில்களுக்காக கொண்டு வரப்பட்டார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் மத்திய மலைநாட்டில் தங்க வைக்கப்படவும் இல்லை. மாறாக அவர்கள் பணிபுரிந்த பிரதேசங்களிலேயே குடியிருத்தப்பட்டார்கள்.
பிற்காலத்தில் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்பட்ட போது, நகரசுத்தித் தொழிலுக்காக தமிழகத்திலிருந்து ஏராளமான அருந்ததியர்கள் கொண்டு வரப்பட்டு இலங்கையின் நாடளாவிய ரீதியில் சகல நகரங்களிலும் மோசமான சேரிக் குடியிருப்புகளில் குடியிருத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். இன்றும் இலங்கையில் சகல நகரங்களிலும் இவர்கள் நூற்றாண்டாக நகரசுத்தித் தொழிலால குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
அது மட்டுமன்றி கொழும்பு துறைமுகத்தை ஆங்கிலேயர்கள் விரிவாக்கிய போது ஆயிரக்கணக்கான தமிழர்களும், மலையாளிகளும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்கள். குறிப்பாக கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட கொழும்பு வடக்கு பகுதியில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இவர்கள் தான்.
தமிழ் கூலிகள் சியனே கோறளையைத் (Siyane Korale) தவிர (குறைந்தளவினரே இருந்த பிரதேசம்) நாட்டின் சகல பிரதேசங்களிலும் பெருகினார்கள்.
1911 இல் மேல் மாகாணம், தென் மாகாணம், வட மேல் மாகாணம் ஆகியவற்றில் மாத்திரம் மொத்த பெருந்தோட்ட மக்களில் சுமார் 10 வீதத்தினர் இருப்பதாக அந்த அறிக்கை புள்ளிவிபரம் வெளியிட்டிருக்கிறது. அதாவது பெருந்தோட்டத்துறையைச் சாராதவர்கள் நாடு முழுவதும் மலையகத்துக்கு வெளியில் இன்னொரு பெரும் எண்ணிக்கையைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் அறிதல் வேண்டும்.
ஒப்பாரிக் கோச்சிக்குப் பின்னால் அழுது புரண்டோடிய சொந்தங்கள் மலையகத்தில் இருந்து மாத்திரமல்ல கொழும்பிலிருந்தும், களுத்துறையிலிருந்தும், காலியிலிருந்தும், மட்டக்களப்பிலிருந்தும் தான்.
இரண்டாவது பெரும்பான்மை இனமாக சீனர்கள் ஆகியிருப்பார்கள்.
சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக இருந்த பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்தன. சில நாடுகளில் அவர்கள் வருமானத்துக்காக மேற்கொண்ட விவசாய மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக குறைந்த கூலிக்கு ஆள் பிடித்தனர். அவ்வாறு சில நாடுகளில் குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்க முடியாத போது அவர்கள் தெரிவு செய்த முக்கிய இரு நாடுகள் சீனாவும், இந்தியாவும், இந்த இரு நாடுகளில் இருந்து தான் பெருமளவு கொத்தடிமைகளை ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றி கூட்டிச் சென்றனர்.
கரீபியன் நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜித் தீவுகளுக்கும் கரும்புத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இந்தியர்கள் மாத்திரமல்லர், சீனர்களும் தான். அதுபோல இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தென்னிந்தியர்கள் மட்டுமல்ல, சீனர்களும் தான். மலேசியாவில் அங்கிருக்கும் சுதேசிய சீனர்களுக்குப் பதிலாக இந்தியர்களைக் கொண்டு வந்தது போல, இலங்கையில் சுதேசிய சிங்களவர்களுக்குப் பதிலாக தென்னிந்தியத் தமிழர்களை தெரிவு செய்தார்கள்.
அதுமட்டுமல்ல இவர்களை கொத்தடிமைகளாக நிர்வகிப்பதென்றால் தமது சொந்த மண்ணிலிருந்து தனித்து பிடுங்கபட்டிருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் அணுகுமுறையாக இருந்தது. மலேசியாவில் சீனர்களை தெரிவு செய்யாமல் இருந்ததற்கான் காரணமே அவர்களின் பூர்வீகம் அருகாமையிலேயே இருந்தது தான். (2)
இலங்கைக்கு தென்னிந்தியாவில் அல்லாமல் சீனாவிலிருந்து தான் பெருந்தோட்டங்களுக்கு கூலிகளை அழைத்துவரும் திட்டத்தைக் கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். 1850களில் சீனாவிலிருந்து ஒரு கூலித் தொழிலாளரை வாங்க 25 பவுண்டுகள் செலவழிந்த அதே வேளை; ஒரு இந்தியக் கூலியை வாங்க 15பவுண்டுகள் போதுமானதாக இருந்திருக்கிறது. (3)
இலங்கையின் சுதந்திரத்துக்கு ஈராண்டுக்கு முன்னர் தான் 1946இல் குடிசன மதிப்பு வெளியானது. இரண்டாம் உலக யுத்த நெருக்கடி காரணமாக 1941 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய குடிசன மதிப்பு தான் இவ்வாறு ஐந்தாண்டுகள் கழிந்து வெளியானது. இந்த அறிக்கையில் இந்தியத் தமிழர்களின் சனத்தொகை 780,589 என்று குறிப்பிடப்படும் அதேவேளை சீனர்களின் சனத்தொகை 497 பேர் என்கிற குறிப்புகளும் உள்ளன. இவர்கள் நகரங்களில் சிறு கடைகளையும், சிற்றுண்டிச் சாலைகளையும் நடத்தி வந்தவர்களாகத் தான் இருந்தார்கள்.
கசந்த கோப்பி கொத்தடிமைகள் (Bitter berry Bondage) நூலை எழுதிய டொனோவன் மொல்ட்றிச் (Donovan Moldrich) அந்த நூலில் இலங்கையில் சீனத் தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தனியான அத்தியாயத்தை எழுதியுள்ளார். டச்சு காலத்திலும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சீனர்களைப் பற்றியும் குறிப்புகளை எழுதியுள்ள அவர் ஆங்கிலேயர் காலத்தில் என்னென்ன பணிகளில் அவர்கள் அமர்த்தபட்டிருந்தார்கள் என்கிற விபரங்களையும் தருகிறார். (4)
19ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் காலியில் கோட்டைக்கு அருகே சிறிய சீனர்கள் வாழ்ந்த ஒரு காலனி ஒன்றும் இருந்தது என்றும் பூந்தோட்ட பராமரிப்பில் வல்லவர்களாக அவர்கள் இருந்ததால் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்றும் அந்நூலில் குறிப்படப்பட்டுள்ளது.
கண்டியைக் கைப்பற்றிய காலத்தில் கவர்னராக இருந்தவர் சேர் ரொபர்ட் பிரவுன்றிக். (Sir Robert Brownrigg). முதலாவது இலங்கை ரெஜிமென்டின் கப்டனாக இருந்த எல்.டி, புஷ்ஷ (Capt. L. De Bussche) “கண்டி மாகாணம் இந்த சொர்க்கத்தின் ஆசனமாக ("the scat of paradise") ஆகப்போவதால் அதை மேற்கொள்வதற்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை என்றும் அதற்கு திறன்மிக்கவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள் சீனர்களே என்கிற கருத்தை முன் வைத்தார். சீனர்கள் சிங்களவர்களை விட பொருத்தமானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே அக்கேப்டன் ஜாவாவில் பணிபுரிந்த போது சீனர்களின் வினைத்திறனைக் கண்டவர். ஆனால் ஆளுநர் பிரவுன்றிக் அதை மறுத்துவிட்டார். அவருக்கு பின் வந்த ஆளுநர் எட்வர்ட் பார்ன்சும் அக் கேப்டனின் முன்மொழிவை ஏற்கவில்லை. சீனர்கள் சனத்தொகையை மட்டுமே அதிகரித்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. (5)
பின்னர் சீன தேயிலை இலங்கையில் பயிரிடத் தொடங்கிய போது தேயிலை உற்பத்தியில் கைதேர்ந்த சீனர்களையே அதில் ஈடுபடுத்துவதே சரியானது என்கிற கருத்து தொடர்ச்சியாக உரையாடப்பட்டது. ஆனால் இறாத்தல் தேயிலை உற்பத்தி செய்வதற்கு 5 பவுண்டுகள் வரை செலவாகலாம் என்று கணித்ததன் பின்னர் அந்த யோசனையை மொரிஸ் வோர்ம் (Maurice Worms) கைவிட்டார். லாபத்தை ஈட்ட கடினம் என்கிற முடிவுக்கு வந்தார்கள்.
டொரிங்டன் (Torrington) ஆளுநராக வந்த போது சீனர்களை பெருந்தோட்டங்களுக்கு மட்டுமன்றி வடக்கு, வட மத்திய, வட மேற்கு மாகாணங்களில் நெல் பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய பணித்தார்.
ஹொங்காங்கில் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜோன்சன்; டொரிங்டனுக்கு இது பற்றிய தனது அபிப்பிராயத்தை எழுதி அனுபியிருக்கிறார். சீனர்களை தொழிலுக்கு அமர்த்துவதில் உள்ள பிரதானமான நான்கு காரணங்களை அவர் அதில் முன் வைக்கிறார்.
- இரண்டு மூன்று தமிழர்கள் (மலபாரிகள்) உண்ணும் உணவை இரண்டே இரண்டு சீனர்கள் உண்டு விடுவார்கள்.
- தமிழர்களுக்கு அவசியப்படாத ஆடம்பரத்தேவைகள் சீனர்களுக்கு இருக்கிறது.
- சீனாவிலிருந்து சீனர்களை இலங்கைக்கு கொண்டு போகும் செலவை அரசாங்கமோ, தோட்ட உரிமையாளர்களோ ஏற்க வேண்டிவரும். ஆனால் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அவர்களின் செலவிலேயே வந்து விடக் கூடியவர்கள்.
- இன்னொரு நான்காவது காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். அதாவது தமது மனைவி குழந்தைகளை விட்டு தூரத்துக்குச் சென்று பணியாற்றுவது சாத்தியமில்லை.
சீனர்களை கொண்டு வரலாமா என்கிற வாதம் தொடர்ந்தும் இழுபறிபட்டது. அங்கிருந்து ஆண்களைக் கொண்டு வந்தால் அவர்கள் இலங்கை சிங்களப் பெண்களை திருமணம் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தர வதிவிடமாக இலங்கையை ஆக்கிக் கொள்வார்கள். சீனர்கள் சிங்களவர்களை விடவும், இந்தியர்களை விடவும் உடல் உழைப்பில் திறமானவர்கள் என்றும் ஐரோப்பியர்களை விட வெப்பத்தைத் தாங்கக் கூடியவர்கள் என்றும் ரிக்ஸ் (C.R.Rigg) பரிந்துரைத்திருக்கிறார்.
கோப்பி பயிர்ச்செய்கை அமோகமாக வளரத் தொடங்கியபோது கண்டியில் பாதைகளை அமைப்பதற்காக தச்சர்கள், கொத்தனார்கள், கொல்லர்கள் என்போரை சீனாவிலிருந்து வரவழைக்கலாம் என்று (Provincial Road Committee) வீதி அமைப்பதற்கான கொமிட்டி அரசாங்கத்திடம் கோரியது.
1860 இல் சீனாவிலிருந்து கிழக்கிந்தியத் தீவுகளுக்கு சீனர்களை ஏற்றிக் கொண்டு முதலாவது கப்பல் புறப்ட்டுவிட்டது என்றும் ஏனைய இடங்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்குப் பதிலாக சீனர்கள் அவசியப்படுகிறார்களா என்று The Examiner பத்திரிகை கேள்வி எழுப்பியது. அப்பத்திரிகைக்கு எழுதிய ரோவ்டன் பவர் (Rowdon Power) "ஒரு சீனர் திறமையாகவும், விவேகமாகவும் கண்காணிப்பாளராக இருக்கக் கூடியவர் என்பதால் இரண்டு அல்லது மூன்று தமிழ் தொழிலாளர்களின் வேலையை ஒருவரே செய்யக் கூடியவர்" என்றார். China Mail என்கிற பத்திரிகையை ஆதாரம் காட்டி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு அட்டவணையும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை சீனாவிலிருந்து ஏனைய ஆங்கிலேயே காலனித்துவ நாடுகளுக்கு கூலித் தொழிலாளர்களாக அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை அது. (6)
சீனாவிலிருந்து அடிமைகள் :
- போர்னியோ 350,000
- ஜாவா 125,000
- சிங்கப்பூர் 50,000
- மலாக்கா 30,000
- சியாம் 50,000
- இந்தியா 5,000
- ஆஸ்திரேலியா 70,000
- கலிபோர்னியா 50,000
பெருந்தோட்டங்களுக்கு வெளியில்...
அன்றைய இலங்கையில், அரசாங்கத் துறைத் தொழிலாளர்களுக்கு பொதுவாக தங்குமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் கொழும்பு மற்றும் ஒரு சில பெரிய நகரங்களைத் தவிர, தொழிலாளர்கள் தங்கள் சொந்த தங்குமிடங்களைக் தாமாக தேடிக்கொள்ள நேரிட்டது. இருப்பினும் பிற்காலத்தில் இந்த நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது. 1900களின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தொடர்பாக நிலுவையில் இருந்த அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன, மேலும் 1922 ஆம் ஆண்டின் இந்திய குடியகல்வுச் சட்டத்தின் (IEA) VII படி இலங்கைக்கான ஒப்பந்த குடியேற்ற முறை அங்கீகாரத்தை இழந்தது. (7)
1795-ல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு முறையான அரசுக் கட்டடங்களோ, முறையான சாலைகளோ இருக்கவில்லை. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்த கட்டிடங்கள் பெரும்பாலும் ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட கோட்டைகளும் தேவாலயங்களும், தங்குமிடங்களும் தான். வீதிகள்; முக்கிய நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தன, அவை காடுகள் வழியாக அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டவை. அவை வறண்ட காலங்களில் கரடுமுரடான போக்குவரத்திற்கு மட்டுமே ஏற்றவை. ஆனால் மழைக் காலங்களில் கடக்க முடியாதவை. இலங்கையின் முதலாவது ஆளுநரான பிரெடெரிக் நோர்த் 1800 ஆம் ஆண்டு முக்கிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவருடன் 160 பல்லக்கு சுமப்பவர்களும், 400 தொழிலாளர்களும், இரண்டு யானைகளும், ஆறு குதிரைகளும், ஐம்பது காலாட்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (8) இத்தனையும் இன்றி அப்படிப்பட்ட பயணம் அவரால் சாத்தியப்படவில்லை. அதற்கு முன்னிருந்த போர்த்துக்கேய, ஒல்லாந்து ஆளுநர்கள் கூட தமது கட்டுபாட்டுக்குள் இருந்த கரையோரத் தளங்கள் அனைத்துக்குமே சென்று வந்ததில்லை. அப்பயணங்கள் அவ்வளவு இலகுவானதாக இருந்ததில்லை என்கிற உண்மையை நம்மால் உணர முடியும்.
1820 ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் பிரேசர் (Lieut. General John Fraser) தான் இந்த பாதை அமைப்புப் பணிகளைத் தொடங்கியவர். 1841-1867க்கும் இடைப்பட்டக் காலத்தில் தான் இலங்கை முற்றிலும் இராணுவவாத நிர்வாகத்திலிருந்து வணிக முக்கியத்துவம் வாய்ந்த காலனியாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1820 முதல் 1867 வரையான மேஜர் ஸ்கின்னர் காலத்தில் சுமார் 5000 கி.மீ வரையான சாலைகளை அமைத்ததில் பெரும்பங்கு வகித்திருந்தார். பாதைகளை இணைக்கும் சில பாலங்களும் இவற்றில் அடங்கும்.
முன்னோடி தொழிலாளர் படை
காடுகளையும் சதுப்பு நிலங்களையும் கடந்து, கடினமான மற்றும் வாழமுடியாத நிலப்பரப்புகளில் கட்டுமானத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி அவர்கள் வேலை செய்யவும் விரும்பவில்லை. இதன் விளைவாக, காலனித்துவ அரசாங்கம் 1821 ஆம் ஆண்டில் “முன்னோடி தொழிலாளர் படை” (Pioneer Labour Force (PLF)) என்று அழைக்கப்படும் அரை இராணுவமயமாக்கப்பட்ட ஒரு துணைப்படையை அறிமுகப்படுத்தியது. இப்படையை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்வதை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. (9)
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக தென்னிந்தியத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதில் பி.எல்.எஃப் ஈடுபட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி (EIC) 'முன்னோடிகள்' (Pioneers) என்று அழைக்கப்படும் ஒப்பந்த இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. அதுவரை இப்படியான துணைப்படையாக காஃபிர்களையே கிழக்கிந்திய கம்பனி பேணியது. காஃபிர்கள் என்றால் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்த போர்த்துக்கேய குடியேற்றங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளையே குறிப்பர். அடிமை முறை ஒழிப்பின் பின்னர் காஃபிர்களை அடிமைகளாகவே பேண முடியாத நிலையில் பெருமளவு இந்திய கூலித்தொழிலாளர்களை அரை அடிமைகளாக பயன்படுத்த வாய்த்தார்கள். அடிமைகளின் இடத்தை இந்தியக் கொத்தடிமைகளைக் கொண்டு நிரப்பினார்கள் என்று நாம் கூற முடியும்.
முன்னோடி தொழிலாளர் படை (PLF) என்பது 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் (இப்போது இலங்கை) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றுவதற்காக
இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் (EIC) ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்திய தொழிலாளர்களின் குழுவாகும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையில் வர்த்தகத்தை நிறுவதற்கும் வழிவகுத்த வீதிகள், பாலங்கள், ரயில் பாதைகள், நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் பிற பொதுப் பணிகளில் இந்த PLF ஈடுபட்டது. பிரித்தானியப் பேரரசுக்கு மிகவும் இலாபகரமாக விளங்கிய இலங்கையின் தேயிலை தொழிற்துறையை நிறுவுவதில் PLF முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவிலும், பிற காலனி நாடுகளில் உள்ள அதன் தோட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தொழிலாளர்களை வழங்க EIC பயன்படுத்திய ஒப்பந்த தொழிலாளர் முறையிலிருந்தே 1821 ஆம் ஆண்டு PLF உருவானது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, வழக்கமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை, ஒரு குறிப்பிட்ட தொழில் நிபந்தனைகளின் அடிப்படையில் வேலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காஃபிர் துருப்புகளுக்குப் பதிலாக 'முன்னோடிகள்' என்று அழைக்கப்படும் ஒப்பந்த இந்திய தொழிலாளர்களை EIC பணியமர்த்தியது.(10) முன்னோடிகள்; முக்கியமாக தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் வகுப்பினரிடமிருந்து, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்தே ஈர்க்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மண்ணில் ஏற்பட்ட வறுமை, ஒடுக்குமுறைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் நேர்மையற்ற முகவர்களாலும் கங்காணிகளாலும் (கண்காணிப்பாளர்கள்) ஏமாற்றப்பட்டோ அல்லது வற்புறுத்தப்பட்டோ, அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத அல்லது ஒப்புக்கொள்ளாத ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்யப்பட்டனர்.
PLF இல் இருந்தவர்களின் வாழ்க்கை நிலைமைகள் கடுமையானதாகவும் அதன் விளைவாக இலகுவாக சுரண்டக்கூடியதாகவும் இருந்தனர். அவர்கள் நீண்ட மணிநேர கடின உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டதுடன், போதிய உணவு, உடைகள் இன்றி, மோசமான வீடு மற்றும் சுகாதாரம் என்பவற்றின் காரணமாக அதிக இறப்பு விகிதத்தையும் எதிர்கொண்டார்கள். மலேரியா, கொலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் அடிக்கடி பெருந்துயரை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதே போல் இலங்கையின் சுதேசிய சிங்கள மக்களால் வெறுப்புக்கு உள்ளானார்கள். தமது நிலங்களை பறிக்க வந்தவர்களாக இம்மக்கள் பார்க்கப்பட்டார்கள். காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் PLF க்கு குறைந்தபட்ச சட்ட உரிமைகளோ அல்லது பாதுகாப்போ கூட இருக்கவில்லை.(11) இதிலிருந்து தப்பிப் போக எத்தனிபவர்களுக்கு அபராதங்களும் தண்டனைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டன. அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் மத வசதிகள் ஆகியவை மறுக்கப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் திறமையான தொழிலாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை இருந்தது, மேலும் கிடைக்கக்கூடிய தொழிலாளர்கள் பெரும்பாலும் கடினமான மாவட்டங்களில் இத்தகைய பணிகளின் கஷ்டங்களை அனுபவிக்க தயாராக இல்லை. இதனால் தான் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. 1867 ஆம் ஆண்டில் இந்த “முன்னோடிப் படை” 4000 பேரைக் கொண்ட வலுவான தொழிலாளர் துணைப் படையாக இருந்தது . அதன் பின்னர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. 1942இல் 30,000 கி.மீ பிரதான வீதிகளும், மாட்டு வண்டில்கள் செல்லக் கூடிய பாதைகளும், 13,000 கி.மீ நீளமுள்ள இரயில் தண்டவாளப் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
நவீன இலங்கையின் உருவாக்கத்தில் இந்தியத் தொழிலாளர்களின் பங்கானது நிரந்தர வருமானமீட்டும் பெருந்தோட்டத்துறையில் மாத்திரமல்ல, நாடளாவிய உட்கட்டமைப்பின் உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகித்திருப்பதை நாம் உறுதியாக உணர வேண்டியிருக்கிறது. ஆறேழு தலைமுறைகளாக மலையகத்துக்கு வெளியில் வாழ்ந்துவரும் இவர்கள் நமது ஆய்வுக்கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.
ஆக இலங்கையில் இந்திய வம்சாவளியினர் ஆங்கிலேயர்களால் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது பெருந்தோட்டத்துறைக்கும் அல்ல. மத்திய மலைநாட்டுப் பகுதிக்கும் அல்ல. 1823இலும் அல்ல.
பிற்காலத்தில் கோப்பி, கொக்கோ, தேயிலை, இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைக்காக பெருவாரி தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது பெரும்பாலும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலைகொள்ளச் செய்யப்பட்டதாலும் அவ்விடங்களில் செறிவாக இருந்ததாலும் அங்கு தான் அச்ச்சமூகத்துக்கான ஒன்றுபட்ட பண்பாட்டையும் அரசியலையும் கொண்டு நடத்த முடிந்தது. தொழிற்சங்கங்களின் வளர்ச்சியானது அரசியல் இயக்கமாக வடிவெடுத்ததிலிருந்து, சமய, கலாசார, உணவு, பழக்கவழக்க, மொழிப் பேணுகையும், அதனூடாக இந்திய அடியொற்றிய பண்பாட்டைப் பேணவும் ஈற்றில் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் கோரவும் முடிந்தது. எனவே அங்கே தான் இந்திய வம்சாவளியினருக்கான தனித்துவமான இலக்கியம் பிறக்கவும், பேணப்படவும், கொண்டிழுக்கவும் சாதகமானது.
ஆனால் இந்த மத்திய மலைநாட்டுக்கு வெளியில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இந்த வாய்ப்பு எட்டவில்லை. அவர்கள் சிங்களவர்கள் செரிவாக வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் உதிரிகளாகப் பரந்து வாழ நேரிட்டது. தோட்டப்பகுதிகளில் தமது சமயப் பண்பாட்டு அம்சங்களைப் பேண கிடைத்த சூழலும் வாய்ப்பும் இவர்களுக்கு அதே அளவில் இருக்கவில்லை. தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான தொழிற்சங்கம் இருக்கவில்லை. தமது பொது அரசியல் அபிலாசைகளை கோருவதற்கான குறைந்தபட்ச அரசியல் தலைமை கூட இருக்கவில்லை. பல இடங்களில் தமது கல்வியைத் தொடர்வதற்கு தமிழ் பாடசாலைகள் கூட இருக்கவில்லை. இலங்கையின் தென் மாவட்டங்களிலும் வட மேல் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் களுத்துறை, கம்பஹா போன்ற மாவட்டங்களிலும், ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களின் தென் பகுதிகளிலும் சிங்களப் பாடசாலையில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் தெரிவுக்கு தள்ளப்பட்டமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்பிரதேசங்களில் இன்றைய தலைமுறையில் ஏராளமானோர் சிங்களவர்களை மணமுடித்து சிங்களவர்களாகவே ஆகிவிட்டமைக்கு யாரிடம் நோக முடியும். அது என்ன அவர்களின் விருப்பத் தெரிவா? அல்லது மாற்று தெரிவு அற்று நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவா?
அது மட்டுமன்றி பிரஜாவுரிமைச் சட்டங்களுக்கு பலியானவர்கள் இவர்களும் தான். மலைநாட்டுக்கு வெளியில் வாழ்ந்த இவர்களில் ஏராளமானவர்கள் நேரு - கொத்தலாவல, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களின் போது நாடு கடத்தப்பட்டார்கள். அச்சட்டங்கள் நாடு கடத்துவதற்காக பெயர் பட்டியல் இட்டு தேடித்தேடி திரிந்தபோது பல வருடங்களாக ஓடி ஓடி ஒளிந்து வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஈற்றில் முடியாத நிலையில் சரணடைந்து இந்தியா திரும்பியவர்கள் இருக்கிறார்கள்.(12) 1958, 1977, 1983 போன்ற கலவரங்களில் இவர்களும் தாக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள், சொத்துக்களை இழந்தார்கள். தமிழ் நாட்டுக்கு அகதிகளாக திரும்பிச் சென்றார்கள்.
இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளின் இன்னல்களுக்கு கிடைத்த கவன ஈர்ப்பு கூட இவர்களின் அவலங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்கள் பற்றிய பரவலான அறிதலும் இலங்கைச் சமூகத்தில் இல்லாது போனது. எப்படி மலையகப் பிரச்சினைகள் பற்றி ஏனைய இலங்கைச் சமூகத்தினருக்கு போய்ச் சேரவில்லை என்று காலாகாலமாக புலம்பிவந்தோமோ; அதைவிட மோசமாக இந்திய வம்சாவளியினரின் இன்னொரு பெரும் பகுதியினர் குறித்து ஏனைய சமூகங்களுக்கு மாத்திரமல்ல மலைநாடு வாழ் சொந்த தொப்புள் கோடி உறவுகள் மத்தியில் கூட கவன ஈர்ப்பை பெற்றதில்லை என்கிற கசப்பான உண்மையை ஏற்றுகொள்ள எத்தனை பேர் இன்று தயார்?
இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே மோசமான சாதிய அசமத்துவத்துக்கு ஆளாகிய அருந்ததியர் சமூகமும் உண்டு. மலையக தோட்டங்களில் உள்ள லயன்களை விட மோசமான குடியிருப்புகளில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்தவர்கள். இன்னும் அப்படி பல இடங்களில் நாட்டில் உள்ளன.
கல்வியறிவு, மாற்றுத் தொழில்கள், சமூக நீதி என்பவற்றை மிகச் சமீப தசாப்தங்களில் தான் அவர்களில் கணிசமானோர் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நெடுங்காலமாக அரசியல் தலைமையற்றவர்கலாக வாழ்பவர்கள். இந்திய வம்சாவளியினருக்கான எந்த குறைந்தபட்ச சலுகைகளும் எட்டப்படாதவர்கள். இலங்கைக்கான இந்திய தூதரகம் உருவாகி இந்த நூற்றாண்டு காலப்பகுதிக்குள் இந்தியவம்சாவளியினருக்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான புலமைபரிசில்களில் ஒன்றைக்கூட காணாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தியத் தூதரகத்தின் கணக்கில் கூட அகப்படாத உதிரிகளாக வாழ்ந்து வந்தவர்கள். சகல இன்னல்களையும் தாமே போராடி எதிர்கொண்டு மீண்டுகொண்டிருப்பவர்கள்.
இலக்கியங்களை படைக்குமளவுக்கு வசதிகளையோ, வாய்ப்புகளையோ அடையாததற்கு காரணம் அவர்கள் சமூக திரட்சியாக வாழ வழியற்றவர்களாக இருந்தமை. சிதறி வாழ்ந்து வந்ததால் அவர்கள் பேரம் பேசும் வலுவற்ற அரசியல் அனாதைகளாக இருந்தார்கள். செறிவான வாக்கு வங்கியாக இராததால் பல அரசியல் கட்சிகளும் அவர்களை பயன்படுத்திவிட்டு கடப்பவர்களாக இருந்தார்களேயொழிய சமூகமாக அடையாளம் காணவில்லை. எனவே அரசியல் தலைமையை கட்டியெழுப்பும் திராணியில்லாதவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
80களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் தலைமையகம் அமைத்து இந்திய வம்சாவளியினரின் ஏகபோக அமைப்பாக நிறுவ முயற்சித்தது. ஆனால் மீண்டும் மேல்மாகாண தமிழ் வாக்குகள் மலைநாட்டிலிருந்து வந்திறக்கபட்ட இதொகா தலைவர்களுக்கு பயன்பட்டதேயொழிய மேல்மாகாணத்தவர்களின் நேரடி பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கவில்லை. அதன் விளைவு இ.தொ.க தொடர்ந்தும் பெருந்தோட்டத்துறை மக்களின் தலைமையாக நீடித்ததே தவிர மேல்மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் அமைப்பாக அக்கிக்கொள்ளவில்லை. செல்லச்சாமி, பி.பி.தேவராஜ், யோகராஜன் ஆகியோர் கூட இம்மக்களின் நேரடிப் பிரதிகள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாண தமிழ் மக்களின் நேரடி பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு இதுவரை வரலாற்றில் எவரும் தெரிவு செய்யப்பட்டது கிடையாது. மனோ கணேசனையும் சேர்த்துத் தான் இங்கே குறிப்பிடுகிறேன். ஆனால் அம்மக்கள் தமது பிரதிநிதிகளாக அவர்களை தெரிவு செய்ததன் ஒரே நோக்கம் அவர்களின் அரசியல் தலைமையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான்.
அவர்கள் நிச்சயம் இம்மக்களின் பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இம்மக்களின் அரசியல் தலைமையாகவோ, அரசியல் அபிலாஷைகளை (சலுகைகள், நிவாரணங்கள், தொண்டு நடவடிக்கைகள் அல்ல) நிறைவேற்றுபவர்களாக இருந்தார்களா? அம்மக்கள் உதிரிகளாக சிதறியிருக்கிற போதும் தனித்துவமான அரசியல் சக்தியாகவும், தனித்துவமான அரசிய அபிலாஷைகளைக் கொண்டவர்களாகவும் அடையாளம் கண்டு அதற்குரிய அரசியல் திட்டத்துடன் இயங்கிய எவரும் இருந்திருக்கிறார்களா. இல்லை! மாறாக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். மனோ கணேசன் இந்த வாக்கு வங்கியை கவனமாக அடையாளம் கண்டவர்களில் ஒருவர். ஆரம்பத்தில் அவரிடம் சில புரிதலும், குறைந்தபட்ச வேலைத்திட்டமும் இருந்ததை அறிவோம். ஆனால் அவரும் சற்று அகலக் கால் வைத்து அரசியல் செய்ய நேரிட்டதும்; இந்த தனித்துவமான பிரச்சினையும் தூர எறியப்பட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது.
விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தீவு என்பது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட குழுமங்களைக் கொண்ட தேசமாக இருக்கிறது. இனத்துவம், சாதித்துவம், மதத்துவம், பிரதேசத்துவம், என அடையாளங்களுக்குள் அடையாளங்களாக பெருகி, விரிந்து போயிருக்கிற தேசம். சமூக அடையாளங்கள் எனும்போது ஒன்றில் ஆதிக்க சமூகம் அதிகாரத்துவதுக்காக தன்னை ஒரு பேரடையாளமாக ஆக்கிக் கொள்கிறது. மறுபுறம் ஏனைய சமூகங்கள்; குறிப்பிட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பதாலேயே ஆதிக்க அடையாளங்களால் அநாதரவாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தவும், ஈடு செய்யவும் தமது அடையாளத்தை அறிவிக்க நிப்பந்திக்கப்படுகின்றனர். இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலையகம் என்கிற நான்கு தேசிய இனங்களுக்குள் உள்ளடங்காத/உள்ளடக்கப்படாத இன்னொரு பெருவாரி மக்கள் கூட்டமொன்று; ஐந்தாவது தேசிய இனம் என்கிற அடையாளத்தை நிறுவ நிர்ப்பந்திக்கபடுகிறதா என்று பகிரங்கமாக இன்று கேள்வி எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்திய வம்சாவளி என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “மலையகம்” என்கிற பதம் மலைநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினரின் விருப்பாகவும், அலங்காரமான பதமாகவும் இருக்கக் கூடும். ஆனால் அது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் பொருந்துகிறதா என்பதே அடிப்படைக் கேள்வி. மலைநாட்டுக்கு “மலை” என்று பொருந்துகிறது என்று வாதத்துக்கு கூறும் போது மலையகத்துக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எந்த வாதத்தால் பொருந்துகிறது?
இதனால் “மலையகம்” என்கிற அடையாளத்தையோ, பதத்தையோ மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 90களில் மலையக மக்கள் முன்னணி மலையகத் தேசியம், மலையகத்துக்கான சுய நிர்ணய உரிமை, மலையக அதிகார அலகு என்றெல்லாம் முன்னெடுத்த வேளை இந்த அடையாளம் பற்றிய பிரச்சினை எழுந்தது. இறுதியில் “மலையகம்” என்கிற அடையாளத்துக்குள் அனைத்து இந்திய வம்சாவளியினரையும் இணைப்போம் என்று அவர் தெரிவித்தார். அதனை நடைமுறை சாத்தியப்படுத்துவீர்களா? என்கிற கேள்விக்கு நிச்சயமாக மேற்கொள்வதாக கூறினார்.
அன்று தொடக்கம் இந்திய வம்சாவளி என்கிற பதத்தை கைவிட்டு; கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியான நானும் என்னை மலயகத்தவனாகவே அடையாளப்படுத்தி வந்திருக்கிறேன். ஆனால் அதில் ஆனதொன்றும் கிடையாது. என்னை மலையகத்தவனாக என்னைச் சார்ந்தாவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ, ஆனால் குறைந்தபட்சம் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் கூட என்னை மலையகத்தவனாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. சேர்த்துக்கொள்ளவுமில்லை. நான் தான் அதை சொல்லிக்கொண்டு திரிகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.
அதுபோல எழுத்துக்களிலும் கூட மலையகம் என்றே பயன்படுத்தி வந்திருக்கிறேன். மலையகத்துக்கான முதலாவது இணையத்தளத்தை “நமது மலையகம்” என்கிற பெயரில் தொடங்கினேன். அதன் உள்ளடக்கக் கனதி காரணமாக சிறந்த இணையத்தளத்துக்கான ஜனாதிபதி விருதை 2018இல் பெற்றுக்கொடுத்தது இன்னொரு கதை கதை.
மலையக மக்கள் முன்னணி மேற்படி அக்கருத்தாக்கத்தை பலப்படுத்தவும், பரப்பவும் தவறியது. “மலையகம்” என்கிற அடையாளத்தை ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கான பதமாக அவர்கள் முன்னெடுக்கத் தவறியதன் விளைவு “மலையகம்” என்றும், “இந்திய வம்சாவளி” என்றும் இருவித போக்குகள் தொடர்ந்தும் நீடித்தன. மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் மலையகத்தினரை விட அதிகமாக தம்மை இலங்கைப் பிரஜைகள் என்று பதிவு செய்துகொண்டார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். இப்போது அவர்களைத் தான் “மலையகத்தவர்” என்று பதியுங்கள் என்று கூறப்போகிறோம்.
இப்போது என்ன! 5% வீதத்துக்கும் அதிகமாக எண்ணிக்கையைக் காட்டுவதற்காக இவர்கள் தேவைப்படுகிறார்களா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இதயசுத்தியுடன் சொல்லுங்கள். இதுவரை மலையக அரசியல் நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொள்ளப்படாத இவர்களை இன்று பிரக்ஞையாகவே சேர்த்துக்கொள்வதற்காகத்தான் இந்தப் அடையாளப் பெயரிடலை முன்மொழிகிறீர்களா? இன்று எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்காக அடையாளப் பெயர் கோர கிள்ளுக்கீரையாக பயன்படுத்திவிட்டு; அதன் பின்னர் கைவிட எடுக்கப்படும் முஸ்தீபா?
“இந்திய வம்சாவளி” என்கிற பதம் “இந்திய அடையாளத்தை” சுமக்க வைத்துக்கொண்டிருப்பதால் அதனை கைவிடலாம் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள பலர் தயாராகவே இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஏனென்றால் அவர்களை இந்தியர்களாகவும், இந்திய நிகழ்ச்சிநிரலின் “பிடி”என்றும்; சிங்கள பெருந்தேசிய சக்திகள் தமது அரசியல் வசதிக்காக பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. அதற்காகவே அவர்கள் “மலையகம்” என்கிற அடையாளத்தை விட “இலங்கையர்” என்கிற அடையாளப் பதிவையே தொடரப் போகிறார்கள் என்பது எனது கணிப்பு. மலையகம் அல்லது இந்திய வம்சாவளி என்கிற பதங்களால் அவர்களுக்கு ஆகப்போவதென்ன என்கிற யதார்த்தக் கேள்விக்கு இதனை முன்னெடுப்பவர்கள் மேற்சொன்ன விபரங்களில் இருந்து அரசியல் புரிதலை எட்ட வேண்டும்.
கொழும்பு வாழ் இந்திய மேட்டுக்குடிகளின் கோரிக்கை என்கிற திரிபு
மலையகத்தில் பொதுவான ஒரு உளவியல் புரிதல் வெகுஜனமட்டத்தில் கட்டமைக்கப்பட்டு பரப்பப்பட்டு வந்திருக்கிறது.
அதாவது “மலையக மக்கள்” என்கிற அடையாளத்தை மறுத்து “இந்திய” அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் யார் என்கிற ஒரு புனைவு கற்பிதமாக பரப்பப்பட்டு நம்பவைக்கப்பட்டு வந்திருக்கிறது. கொழும்பில் வாழும் இந்தியர்கள் என்போர்;
- உயர் வர்க்க வியாபார வர்த்தகர்களே
- உயர் சாதி மேட்டுக்குடியினரே
- இந்திய தூதரகத்துடனும், இந்தியாவுடனும் நெருக்கமான உறவைப் பேணி இந்திய நலன்களை அனுபவித்து வருபவர்களே
- இலங்கையில் ஒரு காலும், இந்தியாவில் ஒருகாலும் வைத்துக்கொண்டு இரண்டையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே
இவர்கள் தமது உயர்குடி நலன்களுக்காக “இந்தியர்” என்கிற அடையாளத்தை விட்டுகொடுக்கத் தயாரில்லையாம்.
இந்த வாதம் ஒரு பத்தாம்பசலித்தனமானதும், மிகுந்த அறிவுப் பஞ்சம் உள்ள வாதமும் கூட. சிலர் அறியாமையால் இதை முன்வைக்கிறார்கள். புத்திஜீவிகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் இன்னும் பலரோ அறிவதில் அக்கறையே இல்லாமல் இதனை பிரச்சாரப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
1971 ஜேவிபி கிளர்ச்சிக் காலத்திலும் கூட தமது ஐந்து முக்கிய வகுப்புகளில் ஒன்றாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் தரகுக் கூட்டமாக இந்திய வம்சாவளியினரைக் கூறியது. அவர்கள் சுட்டிக்காட்டியதும் மேற்படி பட்டியலைத் தான். அந்தப் பட்டியல் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஜே.வி.பியினர் இந்திய வர்த்தக – வியாபார சக்திகளைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியினர் இவர்கள் மட்டும் தானா? ஒட்டுமொத்த கொழும்பு வாழ் இந்திய வம்சாவளியினரில் இவர்களின் வீதம் என்ன?
இன்றும் கொழும்பு வாழ் உழைக்கும் வர்க்க இந்திய வம்சாவளி மக்களை இந்திய தரகுமுதலாளித்துவ மேட்டுக்குடிகளாக நிறுவ முற்படுவதும் ஜே.வி.பி போன்ற சக்திகள் கொண்டிருந்த முட்டாள்தனமான அணுகுமுறைக்கு ஒப்பானது.
மேற்படி “இந்திய வம்சாவளி” அடையாளத்தை பேண முனையும் சக்திகள் இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினரே. ஆனால் மலையகத்துக்கு வெளியில் (குறிப்பாக கொழும்பைச் சூழ) வாழ்ந்து வரும் பெருவாரி இந்திய வம்சாவளி மக்கள் என்ன பணக்காரர்களா? உயர் சாதியினரா? வியாபார/வர்த்தகர்களா? அல்லது இந்திய தொடர்பைத் தான் பேணுபவர்களா?
நிச்சயமாக இல்லை. மலையகத்துக்கு வெளியில் வாழும் லட்சோப இந்திய வம்சாவளி மக்கள்; சாதாரண உழைக்கும் வர்க்கத்தினர், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கொழும்பு வாழ் மக்களைக் குறிப்பிடலாம். இந்தியத் தொடர்பற்றவர்கள். இவர்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்து வரும் அருந்தியர்களும் அடங்குவர். அதைவிட, கொழும்பு வாழ் பரதவர் சமூகமும், மலையாள சமூகமும் கூட உள்ளடங்குவர். இந்த உண்மையை வசதியாக மறைத்து மேற்கொள்ளும் தர்க்கங்களால் மலையகத்துக்கு எதைப் பெற்றுக் கொடுக்க முடியும்?
இந்திய வம்சாவளியினராக மலையகத்தில் இருந்த பல அரசியல் பிரச்சினைகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் இவர்களுக்கும் இருந்தது. பிரஜாவுரிமை பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, நாடற்றவர்களாக ஆக்கப்பட்டமை, நாடுகடத்தும் ஒப்பந்தங்களின் மூலம் நாடு கடத்தப்பட்டமை, கலவரங்களில் பாதிக்கப்பட்டமை, அதன் காரணமாக அகதிகளாக ஆனமை, இடம்பெயர்வு, அகதிகளாக இந்தியா திரும்பியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இவர்களும் அதே அளவில் எதிர்கொண்டவர்கள்.
மேலதிகமாக, பெருவாரி சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அங்கே தமிழ் மொழிப் பாடசாலை அற்ற நிலையும், தமது சமய பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வழியின்றியும் தமக்கான பண்பாட்டை பேண வழியின்றி தமது அடையாளத்தை இழந்து சிங்களவர்களாக கரைந்துவிட்டவர்களும் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.
பெருவாரி மக்கள் சேரிகளிலும் முடுக்குகளிலும் வாழ்பவர்கள். குறிப்பாக அரசியல் ரீதியில் அநாதரவாக நீண்ட காலம் தனித்து விடப்பட்டவர்கள். வேறு வழியின்றி சிங்களப் பெரும்பான்மை அரசியல் சக்திகளில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். மலையக அரசியல் நிகழ்ச்சிநிரலில் இருந்து நெடுங்காலமாக அக்கறை காட்டப்படாதவர்களும் கூட. அதனால் ஏனைய சமூகங்களுடன் கலந்துவிட்டவர்கள். கணிசமானவர்கள் சிங்களவர்களாகவே ஆகிவிட்டவர்கள். மேல்மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்ட வேளையிலும், அதன் வசதிகள் குறைக்கப்பட்ட வேளைகளிலும் எந்த தமிழ் தரப்பும் வந்தும் மீட்டதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களை வேண்டுமென்றால் கூறிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு கூட்டு அரசியல் பிரக்ஞையாக அது நிகழ்ந்ததில்லை. 80களின் பின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் தளமமைத்து பணியாற்றியதை எவராவது உதாரணத்துக்கு காட்டக்கூடும், ஆனால் அது கூட ஒட்டுமொத்த இந்தியவம்ம்சாவளியினரை அரசியல் ரீதியில் இணைக்கின்ற அரசியல் திட்டமாக நிகழவில்லை. ஏனோ தேர்தல் அரசியலுக்கு தேவைப்படுகிற வாக்குவங்கிக்காக சில சேவைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை உறுதியாகக் கூற முடியும்.
மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் தமக்கான பண்பாட்டையோ, மொழியையோ, மரபையோ, அபிலாசைகளையோ பேணுவதற்கான அரசியல் சக்தியாகவோ, சமூகத் திரட்சியாகவோ இருக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன? கூட்டாக சமூக சக்தியாக தம்மை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் தலைமையோ, வழிநடத்துவதற்கு ஒரு அரசியல் திட்டமோ, நிழ்ச்சிநிரலோ இருந்தது கிடையாது என்பதை “மலையக அடையாளம்”கோரும் சக்திகள் சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். மலையக அரசியலானது தொழிற்சங்க அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு பரிமாற்றம் அடைந்த காலத்தில் இதை சரிசெய்ய இ.தொ.கா தவறிவிட்டது என்று தப்பிவிடத்தான் முடியுமா?
சிங்களத் தரப்பின் முதலாவது துரோகம் தொடங்கிய இடம்:
ஒன்றை இங்கு முக்கியமாக நினைவிற் கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் முதலாவது துரோகம் எனப் பார்க்கப்படுவது 1918 ஆம் ஆண்டு இலங்கை தேசிய சங்கம் ஆரம்பிக்கும் போது அருணாச்சலத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம். மேல்மாகாணத் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை தருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு பின்னர் ஏமாற்றிய கதையையும், அதனால் இலங்கை தேசிய காங்கிரசின் முதல் தலைவரான சேர்.பொன் அருணாச்சலம் அதில் இருந்து விலகிய கதையையும் நாம் அறிவோம். அந்த மேல் மாகாண மக்கள் யார். இந்த பெருவாரி இந்திய வம்சாவளி மக்கள் அன்றி வேறு யார்.
அந்தளவுக்கு நூறாண்டுக்கு முன்னரே இம்மக்களின் எதிர்காலம் பற்றிய சர்ச்சை அரசியல் களத்துக்கு வந்திருக்கிறது. தேசிய காங்கிரசின் துரோகத்தோடு அந்த விவகாரமும் நெடுங்காலமாக கைவிடப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டுகளில் இந்த அரசியல் இடைவெளியை நிரப்பவென வந்த மனோ கணேசனின் நிகழ்ச்சி நிரலும் காலத்துக்கு காலம் வெவ்வேறு அரசியல் நிகழ்ச்சிநிரலால் மடைமாற்றப்பட்டதால்; இம்மக்களின் அரசியல் அப்படியே நீர்த்துப் போனதுடன் கூடவே; இலங்கைவாழ் சகல இந்திய வம்சாவளி மக்களையும் இணைக்க கிடைத்த வாய்ப்பும் தவறவிடப்பட்டிருக்கிறது.இன்றைய நிலையில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் இலங்கையர்களாக பதிவு செய்யப்பட்டுவிட்டார்கள் என்கிற கருத்தை சமீபத்தில் பேராசிரியர் சந்திரபோசும் குறிப்பிட்டிருந்தார். இதில் பெருவாரி மக்கள் நிச்சயம் மலையகத்துக்கு வெளியில் வாழ்பவர்களாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. உண்மைதான் “இந்திய வம்சாவளியினர்” என்கிற அடையாளத்தை சுமக்க மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் விரும்பவில்லை என்பதை எவரிடம் உரையாடினாலும் உணர்ந்துகொள்ள முடியும். அப்படி அவர்கள் தள்ளப்பட்டதற்கு கடந்தகால “நாடுகடத்தல்” பற்றிய அச்சமும் ஒரு காரணம் என்பது முக்கிய காரணம் தான். ஆனால் அதே வேளை அவர்களுக்கு இருந்த மாற்றுத் தெரிவு தான் என்ன?
“மலையகத்தவர் என்று அவர்கள் ஏன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது” என்று கேட்கும் அந்த “எல்லாம் அறிந்த அறிவாளிகள்” யார்?
பெருந்தோட்ட தமிழர்களை மலையகத் தமிழர் என்றால், மற்றவர்களை நகரத் தமிழர்கள் என்றும், ஏனையோரையும் அந்தந்த பிரதேசத்துக்குரிய அடைமொழியுடன் அழைப்போமா என்று சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியில் உள்ள ஆழத்தையும் உணரவேண்டியிருக்கிறது.
“மலையக மக்கள்” என்கிற சொல்லாடலுக்கான அர்த்தத்தை மலையகத்துக்கு வெளியில் வாழும் மக்களிடம் விளக்கி ஒப்புதலை பெறட்டும். மலையகத்துக்கு வெளியில் ஒரு ஆயிரம் பேரின் ஒப்புதலைக் கூட பெறுவது இலகுல்ல. ஒரு இன அடையாளத்தை திணித்து வென்றதாக உலகில் எந்த வரலாறும் இல்லை. அப்படி ஒரு புதிய வரலாற்றை எவராலும் படைத்துவிடவும் முடியாது. அவர்களுக்கு வெளியில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு அடையாளத்தை அவர்களுக்கு சூட்டுவது அறிவுபூர்வமான காரியமா? நடைமுறை சாத்தியமான காரியமா? அப்படி செய்வதாக இருந்தால் கூட அதனை ஏற்கச் செய்வதற்கான படிநிலை முயற்சிகள் பலவற்றைத் தாண்ட வேண்டுமல்லவா? இது எதுவுமல்லாமல் இன்று கும்பல் பாணியில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெகுஜன ஒப்புதலற்ற தன்முனைப்பிலான ஒரு ஆர்வக்கோளாறு முயற்சி நடக்கிறது.
தொகைமதிப்பிலிருந்து இன அடையாளம் நீக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிற பீதியைக் காட்டியே இந்த முயற்சி நடக்கிறது. அந்த அச்சம் நியாயமானதே. அதற்கு இந்த குறுக்குவழி தீர்வாகிவிடமுடியுமா?
“இந்திய வம்சாவளி” என்கிற அடையாளத்துக்கு ஒரு “மாற்று” அவசியம் என்பது உண்மையே. அந்த “மாற்று” அனைத்து மக்களும் எற்கக்கூடியதும், விஞ்ஞானபூர்வமானதுமாக இருத்தல் முன்நிபந்தனை அல்லவா?
இலங்கையில் “தமிழர்” அடையாளம்
இந்திய வம்சாவளித் தமிழரென்றால் அது மலையகத்தில் உள்ளவர்கள் தான் என்றும், பெருந்தோட்டத்துறைக்கு வந்தவர்கள் மட்டும் தானென்றும் ஒரு கருத்து மிக ஆழமாக பலர் மத்தியில் குறிப்பாக மலையகத் தமிழர் மத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமன்றி மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினர் என்போர் வியாபார வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் உயர் வர்க்கத்தினர் என்றும், உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற கருத்தும் பிரச்சாரப்படுத்தப் பட்டுவந்திருக்கிறது. இவர்களின் சொத்துக்களைப் பேணிக்கொண்டு இந்தியாவுடன் வர்த்தக நலன்களை அனுபவித்துக்கொண்டு இந்தியாவினதும், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய அடையாளம் தேவைப்படுகிறது என்கிற கதையையும் பரப்பி வருகிறார்கள்.
இந்த புனைவுகளைப் பரப்பிவருபவர்களின் பத்தாம்பசலித் தனமான கருத்துக்களுக்கு இப்போது “மலையக அடையாள”த் தேடல் பற்றிய உரையாடல் களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
1. பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை திரித்தல்
2023 யூலை 22 அன்று கொழும்பில் நிகழ்ந்த மலையகம் 200 தொடர்பான ஆய்வரங்கமொன்று கொழும்பில் நிகழ்ந்தது. நான் அங்கே இதே மலையக அடையாளம் பற்றிய உரையை ஆற்றினேன். (13) எனது உரைக்கு பின்னர் அங்கே உரையாற்றியவர்களில் இதைவிட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜாவும் ஒருவர். அங்கே எனது உரைக்கு பதிலளிக்குமுகமாக திலகராஜா மலையக அடையாளத்துக்கான அவரின் கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். அந்த கருத்துக்களுக்கு எனக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை. இதே கருத்தை அப்படியே ஓகஸ்ட் 15ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய உரைக்குப் பின்னர் அவர் வெளியிட்டிருந்தார். அங்கேயும் பதில் வைப்பதற்கான சூழல் அமையவில்லை. அவரின் உரை பின்னர் “அபத்தம்” இதழிலும்(14) 2013 சாகித்திய விழா மலரிலும் கட்டுரையாக வெளிவந்திருந்ததாலும் அதற்கு எதிர்வினை இல்லாவிட்டால் அக்கருத்தை பலர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் அக்கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.
பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்ட ஒரு கருத்தை முதலில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
“இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகம்" எனும் தொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரைக் குறிப்பதாகும். மலையகப் பகுதிகளைச் சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில், அதாவது மேல், தென் மகாணங்களைச் சார்ந்த றப்பர் பெருந்தோட்டங்களில் காழ்ப்வர்களையும் மலைசார் பகுதிகளிலிருந்து சென்று வடகிழக்கு பகுதியின் வெசாயப் பிரதேசங்களிலும் (கிளிநொச்சி, வவுனியா, மாவட்டங்களில்) கொழும்பிலும் வாழ்பவர்களையும் கூட "மலையகத் தமிழர்” என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது.” நான் சொல்லவில்லை பேராசிரியரே கூறிவிட்டார்"
என்று அங்கே அவர் குறிப்பிட்டார்.
இங்கே பேராசிரியர் முடிக்கும் போது அவரின் கருத்தாகக் குறிப்பிடவில்லை. “சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது” என்கிறார். "வழக்கில் உள்ளது" என்று தான் அவர் குறிப்பிடுகிறார். அந்த நூலை அவர் எழுதிய 90களின் ஆரம்பம் என்பது மலையக வரலாற்றிலேயே மலையகத் தேசியம் குறித்த கருத்தாக்கம் எழுச்சியுற்ற காலம், மலையகத் தேசியம், மலையக அதிகார அலகு, மலையக சுய நிர்ணய உரிமை என்கிற கருத்தாக்கம் பரவலாக்கப்பட்ட காலம். இதனை முன்னெடுத்தவர்களில் பிரதானமானவர்கள் மலையக மக்கள் முன்னணியினர். அதன் தலைவர்கள் அப்போது தான் சிறையில் இருந்து வெளியேறிய காலம். அவர்களின் ஆதரவாளனாக பணியாற்றிய காலம் அது. சந்திரசேகரனும் நானும் தனிப்பட மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரின் தேசிய அடையாளம் பற்றி உரையாடிய போது இறுதியில் அனைவரையும் மலையக அடையாளத்துக்குள் கொண்டு வருவதே சரியானது என்கிற கருத்தை வலுவாக முன்வைத்த போது அது சரி என நம்பினேன். அதையே நாம் இனி வலியுறுத்த வேண்டும் என ஒப்புகொண்டமைக்குக் காரணம் அக்கருத்தாக்கத்தை விரைவில் பரவலாக்கி அனைவரையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிலை உருவாகி விடும் என்று உறுதியாக அன்று நம்பியது தான். அதனை அவர்கள் முன்கொண்டு செல்வார்கள் என்று நம்பியது தான்.
அக்கருத்தை அரசியல் களத்துக்கு முதலில் இழுத்துக்கொண்டு வந்த போதும் வந்த வேகத்தில் அவர்கள் மலையகம் பற்றிய உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து செயலிழந்து போனார்கள். அக்கட்சி வேகமாக பலவீனமானது போலவே அவர்களின் எழுச்சிகர கருத்துக்களும் காற்றோடு கரைந்தது.
நாங்கள் நம்பியது போலவே அன்று பேராசிரியர் சிவத்தம்பியும் அக்கருத்துக்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டார் என்றே கொள்ள வேண்டும். அக்கருத்து இன்றுபோல அன்றும் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருந்தால் அந்த விவாதத்தில் பேராசிரியர் சிவத்தம்பி வேறு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கக் கூடும்.
அதற்கு ஒரு உதாரணத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதே 90களின் நடுப்பகுதியில் அருந்ததியன் என்கிற பினைபெயரில் “தலித்தின் குறிப்புகள்” என்கிற தலைப்பில் சரிநிகர் பத்திரிகையில் ஒரு தொடர் பத்தியை எழுதத் தொடங்கினேன். தொடங்கியபோது “தலித்” என்கிற பதம் இலங்கைக்கு அவசியமா என்கிற கருத்தை என்னிடம் முன்வைத்தார். எனது தரப்பு விளக்கத்தையும் அவரிடம் முன்வைத்தேன். ஆனால் அடுத்தடுத்து வந்த அப்பத்தியின் தொடரை வாசித்த அவர். அப்பதத்தின் இலங்கைப் பயன்பாட்டில் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு உரிய தர்க்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய மதிப்புமிக்க புலமையாளர் அவர். அவர் “சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது” என்பதை அன்று வெளியில் உள்ள கருத்தாடலை வைத்துத் தான் முன்வைத்தார்.
அது மட்டுமல்ல, திலகராஜா வசதியாக அதே நூலில் மேற்படி பந்திக்கு அடுத்தபந்தியை ஏன் மறைத்தார், இருட்டடிப்பு செய்தார் என்கிற கேள்வியை இங்கே எழுப்ப விரும்புகிறேன். பேராசிரியர் அடுத்ததாக என்ன பதிவு செய்தார் என்பதை இதோ பாருங்கள்.
"மலையகத் தமிழர் என்ற இத்தொடர்," பொதுப்படையாக, பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் யாவரையும் குறிப்பிடுகின்றதெனினும், சற்றுக் கூர்ந்து நோக்கும் பொழுது, அது உண்மையிற் பெருந்தோட்ட உற்பத்தி முறையோடிணைந்துள்ள மூன்று முக்கிய "குழுவினரை" ஒருங்கு இணைத்துள்ள ஒரு பதமென்பது தெரிய வரும்.
- பெருந்தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளான இந்திய வம்சாவழித் தமிழர்கள் (கங்காணிளும் தொழிலாளர்களும்),
- பெருந்தோட்டங்களில் நிர்வாக அலுவலகங்களில் உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் (இவர்களுள் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்வர்),
- பெருந்தோட்டங்களைச் சார்ந்த நகரங்களிலும் வணிக முயற்சிகளிலிடுபட்டுள்ள இந்திய வம்சாவழித் தமிழர்கள்,
ஆகியோரே அந்த மூன்று குழுவினருமாவர். (15)
ஆக அவர் “மலையகத் தமிழர்” என்று பெருந்தோட்ட இந்தியவம்சவளியினரையே இங்கே வரையறுக்கிறார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
2. அடுத்ததாக திலகராஜா சாரல் நாடனை ஆதாரத்துக்கு அழைக்கிறார்.
“மலையகம் என்ற சொல் இன்று பரந்துபட்ட அர்த்தத்தில் வழக்கில் இருக்கிறது. இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழரை இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாலும் மலையகத் தமிழர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பூகோள எல்லைகளை மீறிய விதத்தில் உணர்வுபூர்வமாக ஒரு சமுதாய மக்களை இனம் காட்டும் முறையே இது” (16)
திலகராஜ் “எனவே “மலையகம்” என்பது புவியியல் எல்லைகளைக் கடந்த ஓர் இனக்குழுமத்தின் “உணர்வு” என்பதாகப் புரிந்து கொள்வதே அவசியமானதாகும்.” என அக்கருத்தை சாராம்சப்படுத்துகிறார்.
இங்கே “ஓர் இனக்குழுமத்தின் உணர்வு” என்று சொல்லும் போது ஏன் அந்த இனக்குழுமத்துக்குள் மலையகத்துக்கு வெளியில் உள்ளவர்களின் உணர்வையும் சேர்க்கவில்லை என்பதே இங்கே எழும் கேள்வி. மலையகத்தில் “மலையகம்” என்கிற அந்த உணர்வு வளர்த்தெடுக்கபட்டபோதும், அதற்கு வெளியில் உள்ளவர்களின் உணர்வும் கருத்தும் இது தானா? இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம். முடிந்தால் ஒரு கருத்துக் கணிப்பை மலையகத்துக்கு வெளியில் எடுத்துப் பார்க்கட்டும் என்றே கூற வேண்டியிருக்கிறது.
மேலும் ஒரு ஆழமான கருத்துருவாக்க விவாதத்துக்கு இப்படி தனிநபர்களின் “மேற்கோள்களை” விட களத்தில் உள்ள மக்களின் கருத்துக்களும் உணர்வுகளும், அவர்களின் நியாயங்களும், தர்க்கங்களுக்குமே அதிக வலுவுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தொண்டமான் பரிந்துரைத்த கண்டி அடையாளம்:
1948 குடியுரிமை சட்ட விவாதத்தின் போது தொண்டமான் ஒரு பரிந்துரையை வைத்தார். இனி இந்தியத் தொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக "கண்டித் தமிழர்கள்" என்று அழையுங்கள் என்றார். கண்டியில் தான் தேயிலை பயிர்ச்செய்கை முதற் தடவையாக தொடங்கப்பட்டது. அங்கே தான் தேயிலையை மையப்படுத்திய தொழிலாளர்களின் குடியேற்றமும், குடியிருப்புகளும் ஆரம்பமாகின. கண்டிச் சீமைக்குப் போகிறோம் என்று பொதுவாக தமிழகத்தில் அப்போதைய தொழிலாளர்கள் கூறுவார்கள். வாய்மொழிப் பாடல்களும், இலக்கியங்களும் கூட கண்டியையே தோட்டத் தொழிலாளர்களின் குறியீட்டு மையமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் கண்டி என்பது தோட்டத்தொழிலாளர்களின் மையமாகவும் குறியீடாகவும் இருந்தது உண்மை. மலையகத்துக்கு வெளியே; இந்திய வம்சாவளியினரின் வாழ்விடமாக பொதுத்தளத்தில் “பொதுப்புத்தியில்” அறியப்பட்ட இடமும் கண்டி தான். எனவே தொண்டமான் “கண்டித் தமிழர்கள்” என்று அடையாளப்படுத்த முயன்றதை இந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ளமுடியும்.
இன்று "மலையகத் தமிழர்", இந்திய வம்சாவழித் தமிழர்", இந்தியத் தமிழர், "இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழர்" என்கிற பல நாமங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்ற இந்த வேளை, அன்று "கண்டித் தமிழர்" என்கிற பதம் நிலைபெற்றிருக்குமானால் அதன் எதிர்காலம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று இன்று கேட்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரையும் "மலையகத் தமிழர்" என்கிற நாமத்தை சூட்ட வேண்டும் என்பவர்களிடம் இந்த விடயத்தை அழுத்தி நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.
இலங்கையில் கண்டியச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்பது சிங்கள சமூகத்துக்குள்ளேயே உப இன அடையாளமாக இருந்தது உண்மை தான். கண்டி ராஜ்ஜியம் கடைசியாக வீழ்ந்த ராஜ்ஜியம். அதாவது சிங்கள சமூக பண்பாட்டு அம்சங்களை இறுதி வரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்த சமூக அமைப்பு அது. எனவே கனடியப் பெருமிதம் என்பது “தூய” சிங்கள சமூகத்தின் பெருமிதமாக தம்மை உணர்ந்து வந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்த பின்னர் கூட தம்மை ஏனைய சிங்களவர்களிடம் இருந்து தனித்த அம்சங்களைக் கொண்ட சமூகமாக அவர்கள் தம்மை அடையாளப்படுத்தி வந்தார்கள். ஆங்கிலேயர்களும் அதனை கணக்கிற் கொண்டார்கள். எனவே தான் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின் போது கண்டிப் பிரதிநிதிகள் என தனியான சமூகமாக அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணினார்கள்.
எப்படியோ! இறுதியில் கண்டிச் சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் நாளடைவில் “கண்டி” என்றோ “கரையோரம்” தனியொரு பிரதேச அடையாளத்துக்குள் தங்களை சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக “சிங்களவர்” என்கிற பொது இன அடையாளத்துக்குள் தான் இறுதியாக வந்து சேர்ந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒரு சமூகத்தின் பெயரை ஒரு புவியியல் பிரதேசத்தை அடைமொழியாகக் கொண்ட அடையாளத்தை சூட்டுவதில் பல்வேறு சமூக, பண்பாட்டு இடையூறுகள் உள்ளன. அப்படி சூட்டுவது யதார்த்தத்துக்கும், விஞ்ஞானபூர்வத்துக்கும், நடைமுறைக்கும் கொஞ்சமும் அருகில் வர முடியாத அணுகுமுறை.
நான்கு வீதத்துக்கு குறைந்ததன் காரணிகள்
1950கள் வரை இரண்டாவது பெரும்பான்மை இனமாக இருந்தவர்கள் எப்படி நான்கு வீதமாக சுருங்கி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு, ஒரு இனம் என்கிற அடையாளத்துக்குள் அடங்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டதன் பின்னணியை நாம் அறிதல் வேண்டும். அது தற்செயல் நிகழ்வல்ல.
- பிரஜாவுரிமை பறிப்போடு வாக்குரிமையும் பறிபோய் நாடற்றவர்களாக ஆகி மீள நாடு திரும்பியவர்கள் கணிசமானோர்.
- நேரு கொத்தலாவல, சிறிமா சாஸ்திரி, சிறிமா இந்திரா ஆகிய ஒப்பந்தங்களின் பேரம் பேசல்களுக்கு ஊடாக நாடு கடத்தப்பட்டவர்களும், நாடு திரும்பியவர்களும்,
- இனக்கலவரங்களின் பாதிப்பால், உடமைகளை இழந்தும், சொந்தங்களின் உயிர்களை இழந்தும், நம்பிக்கை இழந்தும் தமிழ்நாடு திரும்பியவர்கள்.
- இந்த நிலைமைகளின் காரணமாக இந்திய வம்சாவளி என்று பதிவு செய்யாமல் இலங்கைத் தமிழர்களாக தம்மைப பதிவு செய்து கொண்டமை
- நாடளாவிய ரீதியில் ஏனைய சமூகங்களோடு கலந்து இந்திய வம்சாவளி என்கிற அடையாளத்தை செயற்கையாக இழந்தமை.
- “இந்திய வம்சாவளி” அடையாளத்தை நீக்கிவிட்டு “இலங்கைப் பிரஜை” என பதிவு செய்துகொண்டமை.
- தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கருத்தடைத் திட்டங்களால் உருவான’ செயற்கை இனப்பெருக்க குறைப்பு
- குறைந்த வாழ்வாதார வசதிகளின் காரணமாகவும், வறுமை காரணமாகவும் தாமாகவே குடும்பக் கட்டுப்பாடுகளை செய்து கொண்டு பிறப்பு வீதத்தை மட்டுப்படுத்திக் கொண்டமை.
காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் குடியேறிய மற்றும் குடியேற்றப்பட்ட இனங்களையும் சேர்த்து ஏறத்தாள முக்கியமாக இருபது இனங்கள் இலங்கையில் இன்று அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால் குடித்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு இனமாக அடையாளம் காண்பதற்கு உரிய வரைவிலக்கணங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஊடாக (RTI) 27.10.2022 அன்று எஸ்.விஜயகுமார் கோரியிருந்த கேள்விகளுக்கு இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்திற்கூடாக திரட்டி அளிக்கப்பட்ட பதில்களிலிருந்து புரிதலுக்காக இங்கே விபரங்களைத் தர வேண்டியிருக்கிறது.
புதிய வரைவிலக்கணத்தின் பிரகாரம் இந்திய வம்சாவளி மக்கள் அந்தப் பிரதான பட்டியலில் இருந்து அகற்றப்படக்கூடிய ஆபத்து இருப்பதை இன்று உணர முடிகிறது.
1901ஆம் ஆண்டு வரை தாம் எந்த தேசிய இனம் (Nationality) என்பதை அறிவித்துக்கொள்ளும் உரிமை இலங்கை மக்களுக்கு இருந்தது. 1901 முதல் 1953 வரையான காலப்பகுதியில் “இனம்” (Race) எது என்பது பற்றிய விபரங்களை தனிபர்கள் சுயமாக அறிவிக்க இயலுமானதாக இருந்தது. ஆனால் 1963 இலிருந்து “இனக்குழு” ( Ethnic Group) என்று அட்டயாளப்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேவேளை 1971 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தயாரிப்பின் போது இனங்களை வகைப்படுத்தும் போதும் பதிவு செய்யும்போதும் அவர்கள் கொண்டிருக்கிற சதவீதங்களைக் கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி அந்தத் தொகைமதிப்பின் போது தான் முதற் தடவையாக வேடர்களும், ஐரோப்பியர்களும் இனக்குழுக்கள் என்கிற அடையாளத்தை இழந்தார்கள் என RTI தெரிவிக்கிறது.
அதுமட்டுமன்றி அதே 1971 தொகைமதிப்பின் பிரகாரம் புதிதாக இரு இனக்குழுக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். “பரத” (பரதவர்), “இலங்கை செட்டிகள்” ஆகிய இரு பிரிவினரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
1971 இல் வேடர்களும், 1963இல் ஐரோப்பியர்களும் நீக்கப்பட்டதற்கு அவர்கள் 5% வீத மக்கள் தொகையை எட்டாதது தான் காரணம் என்கின்றனர். ஆனால் இந்த வரையறைகளை சர்வதேச குடித்தொகை கணக்கெடுப்பு பரிந்துரைகளின் படியும், நியமங்களின் படியும்தான் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
5% வீதத்துக்கு குறைகிற இனக்குழுக்கள் தேசிய இனம் என்கிற அடையாளத்தை இழந்து வேறு இனங்கள் (Others) என்கிற அடையாளத்துக்குள் தள்ளப்பட்டுவிடுகின்றனர்.
இன்றையை இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்கொள்ளும் உடனடி ஆபத்தான பிரச்சினை இது தான். புதிய கணக்கெடுப்புகளின்போது 5% வீதத்துக்கும் குறைவாக அவர்கள் கணிக்கப்பட்டுவிட்டால் அது அவர்கள் தனியொரு இனமாக அடையாளப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். அது அவர்களின் தேசிய அடையாளத்தையும் இல்லாது செய்வதுடன், அவர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும், ஈற்றில் அரசியல் இருப்பையும் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்க வாய்ப்புண்டு.
அரசியல் ரீதியான காப்புறுதியை இழக்க நேரிடும் ஆபத்தின் விளிம்பில் மலையக மக்கள் இருப்பதால் தான் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினரையும் ஒரே இன அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் அப்படியான ஒரு முயற்சி நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலோ, உரிய மக்களுக்கு தெரியாமலோ, அவர்களின் கண்களைக் கட்டிவிட்டோ மேற்கொள்ளப்படுவதில் உள்ள ஆபத்தை பலரும் உணருவார் இல்லை.
இந்திய வம்சாவளி மக்களின் அடையாளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரையாடல்கள் அவ்வப்போது மேலெழுவதும் அப்படியே அமுங்கி விடுவதுமான போக்கே சில தசாப்தங்களாக தொடர்ந்து வந்திருக்கிறது. அந்த உரையாடல் பக்கசார்பான விவாதங்களுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தது. உறுதியான முடிவுக்கு வருவதாயின் அந்த உரையாடல், ஜனநாயக பூர்வமானதும், ஒரு பன்முகப்பட்டதுமான உரையாடலாக வளர்த்தெடுக்கப்பட்டு முடிவுக்கு வராவிட்டால் அது நிச்சயம் வெற்றி பெறப்போவதில்லை என்பதை உறுதியாக கூறி வைக்கலாம். இது அவரவர் சுய இன்பத்தை தீர்த்துக் கொள்வதற்கான உரையாடல் அல்ல. மாறாக சம்பந்தப்பட்ட மக்கள் உரிய முறையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய உரையாடல். விஞ்ஞானபூர்வமாக தீர்க்கவேண்டிய பிரச்சினை.
- ராமையா சடகோபன், மலையக தமிழ் மக்களின் இன அடையாளம், வீரகேசரி - 04.12.2022.
- K.L. Gillion, A History Of Indlan Immigration And Settlement In Fiji, Thesis Submitted For The Degree Of Doctor Of Philosophy In The Australian National University. March 1958
- Shanta S. K. Davie, The Power and Plasticity Of Accounting: A Story Of Indian Indentured Labour To Britain’s Sugar Colonies, Discussion Papers in Management and Accounting History 2008.
- Donovan Moldrich, Bitter Berry Bondage: The Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Co-ordinating Secretariat for Plantation Areas, 1989
- SLNA Despatches 5/113 No 174 of20 November 1826 (, Bitter Berry Bondage இலிருந்து)
- Ceylon Examiner, 18 January 1860 (Bitter Berry Bondage)
- Gwyn Campbell & Alessandro Stanziani, The Palgrave Handbook of Bondage and Human Rights in Africa and Asia, Centre National de la recherchescientifique (CNRS), ris, France, 2019.
- Rodney Ferdinands, Proud & Prejudiced: The story of the Burghers of Sri Lanka, R. Ferdinands Melbourne 1995
- ‘Recruitment of Coolies for the Pioneer Labor Force in Ceylon,’ Department of Commerce and Industry, Emigration Branch, NAI; Edward Jackson, Report of a Commission on Immigration into Ceylon (printed and confidential), 1939.
- Ritesh Kumar Jaiswal , Mediated (Im)mobility: Indian Labour Migration to Ceylon under the Kangany System (c. 1850–1940), "The Palgrave Handbook of Bondage and Human Rights in Africa and Asia", pp 157–188. Centre National de la recherche scientifique (CNRS) Paris, France, 2019
- ‘Recruitment of Coolies for the Pioneer Labor Force in Ceylon,’ Department of Commerce and Industry (hereafter C&I), Emigration Branch, NAI; Edward Jackson, Report of a Commission on Immigration into Ceylon (printed and confidential), 1939, Department of Education, Health, and Lands (hereafter EHL), L&O Branch, NAI
- இந்தக் கதைகளில் கணிசமானவற்றை நான் எழுதிய “தலித்தின் குறிப்புகள்” நூலில் விபரங்களுடன் பதிவு செய்திருக்கிறேன்
- சமூகநீதி கட்சி நடத்திய “மலையகம் 200” ஆய்வரங்கம், 22 யூலை 2023, கொழும்பு WERC யில் நடத்தப்பட்டது.
- அபத்தம், ஆடி, 2023, கனடா,
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி I, 1993, உதயம் வெளியீடு.
- சாரல் நாடன், மலையகம் வளர்த்த தமிழ், துரைவி, 1997.
+ comments + 1 comments
இவ்வளவு பெரிய தகவல் யாரும் கூறாத பக்கங்கள் அனைத்து விக்கத்தக்கதாக உள்ளது அண்ணா. உண்மையில் இது பேசா பொருளை பேசுபொருளாக்குவதாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...