Headlines News :
முகப்பு » , » கக்கூசு வாளி - நீலாவணை இந்திரா

கக்கூசு வாளி - நீலாவணை இந்திரா

இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில்; ஈழத்து தமிழ் இலக்கியம் என்றும், மலையக இலக்கியம் என்றும் இருவழித் தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்படுகிற போதும் இந்த இரண்டினதும் கவனிப்புக்கும் உள்ளாகாத, இவை இரண்டுக்குள்ளும் உள்ளடக்கப்படாத இலக்கிய வகை ஒன்று உண்டு. ஈழத்தவராகவோ, மலையகத்தவராகவோ இராத இந்திய வம்சாவளியினர் அவர்கள். விளிம்பு நிலை சார் இந்த இலக்கியங்கள் பற்றிய உரையாடலுக்கு வழிதிறக்கப்பட வேண்டிய காலம் இது.

என் சரவணன் எழுதிய "தலித்தின் குறிப்புகள்" நூலின் பாதிப்பாலும், அவரின் வாழ்சூழலில் அவதானித்த விடயங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் வைத்து தன் சுய பாத்திரத்தையும் இச்சிறுகதையில் கொண்டு வந்திருக்கிறார் இந்த சிறுகதையின் ஆசிரியர் நீலாவணை இந்திரா. இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்கள் பற்றி மிகவும் அரிதாக வெளிவந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

'எளிய சக்கிலி நாயே உனக்கென்ன விசரா...” என்ற சாதியவசையோடே இந்தக் கதை ஆரம்பமாகிறது. இந்தக் கதையின் தொடக்கம் 1865 இல் ஆரம்பமாகிறது. 

யாராலும் வீழ்த்தப்பட முடியாதிருந்த கண்டி இராச்சியம் 1815 இல் ஆங்கிலேயர்களின் வசமானதுடன் பெருந்தோட்டத் தொழிலையும், ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தையும் காலணித்துவ ஆட்சியாளர்கள் கையில் எடுத்த வேளையில் கண்டியிலும், கொழும்பிலும் பெருநகரக் கட்டுமானங்களும் அது சார்ந்த சிறுநகர உட்கட்டுமானங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இப்படிப் பொருளாதார நலன்கள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களால் 1865 இல் நகரங்களின் நிர்வாக வேலைகளுக்காக நகரசபைகள் தோற்றுவிக்கப்பட்டவுடன் அதில் துப்பரவுப் பணிபுரியவென இந்தியாவின் அன்றைய தமிழகப் பரப்புக்குள்ளிருந்த தெலுங்கு பேசும் அருந்ததியர்களோடு, பள்ளர்களும், பறையர்களுமாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இறக்குமதி செய்யப்பட்டவேளையில் துமிந்த என்றழைக்கப்படுகின்ற துமிந்த சில்வாவின் பூட்டனும் வந்திருக்கலாம் என்பது கதையை எழுதிக் கொண்டிருக்கின்ற எனது கணிப்பாகும்.

கொழும்பின் உருகொடவத்தை சந்தியில் இறங்கி உள்முகமாக நடந்து போனால் புறாக்கூடுகள் போல கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புக்களுக்கு அப்பாலே, பறந்து செல்லும் தேவதைகளாலும் கண்டறிப்படாத எலி வளைகளாக சிறுதேசம் இருக்கும். இந்தியாவின் கடைக்கோடிக் கிராமமொன்றில் பிள்ளையை பெற்றவுடன் அறுத்தெறியப்பட்ட தொப்புள் கொடியொன்று எங்கேயோ கள்ளிப்பற்றையில் காய்ந்து, மடங்கி, கவிச்சி நாற்றமெடுத்துக் கிடப்பது போல பெருநகரத்திலிருந்து தொடர்பறுந்து போனதாக சகதிகளுக்குள் மிதக்கும் ஒரு குடியிருப்பைக் காணலாம். அந்தக் குடியிருப்புக்களை உங்களால் உணரமுடியவில்லை என்றால் நாயகன் படத்தில் வருகின்ற பம்பாயையோ, காலா படத்தில் வருகின்ற தாராவியையோ, தமிழ்த் திரைப்படங்களில் வருகின்ற சேரியையோ, இடுப்பொடிந்த நிலையில் காணும் ஒரு விம்பத்தை நீங்கள் காணுவீர்களாயின் அதுவே துமிந்த சில்வாவின் பிறப்பிடமாக இருக்கும்.

துமிந்த சில்வா என்கிற பெயரின் முன்னொட்டுக்கும் பின்னொட்டுக்குமான குழப்பம் அவனது வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களை காட்டிலும் அவ்வளவு பெரிய விடயமல்ல. 

பிறப்போடே சாதியும் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லோரும் பிரம்மனாலேயே படைக்கப்பட்டவர்கள். பிராமணர்கள் தலையிலிருந்தும், சத்திரியர்கள் மார்பிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் காலடியில் இருந்தும் பிறந்தவர்கள் எனக் கருதும் நிலையில், தாயின் வயிற்றிலிருந்து யாரும் பிறக்கவில்லை தான் போலும். இப்படி பிரம்மனின் உடலில் கூட இடம் கிடைக்காமல் அதற்கும் கீழாக படைக்கப்பட்ட சக்கிலியர் எனும் அருந்ததியர்களில் அவனும் ஒருவனாக இருந்தான்.

இப்போது நான் எழுதப் போகும் கதை அலெக்ஸ் ஹேலியின் 'த ரூட்ஸ்' என்கிற புகழ்பெற்ற ஆங்கிலப் புதினம் போல வாசகர்களுக்கு இருக்கலாம். ஆனால் துமிந்த சில்வாவின் வாழ்க்கை நீட்சியும் ஒரு வகையில் இதுவரை யாராலும் எழுதப்படாத சாதிய அடிமைத்தனமாகவே இருக்கிறது.

துமிந்த சில்வா - நெடுத்த உருவம், பரட்டைத் தலை, தீர்க்கமான கண்கள், வறுமை தின்று விட்ட தேகம் இப்படியாக அலைந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞன். துமிந்த என்பது அவனது இயற் பெயராக இருந்தாலும் கொழும்பின் பிரபலமான சிங்களப் பாடசாலையொன்றில் அவன் படித்த காலத்தில் அவனது பெயர் வாளி என்பதாகவே இருந்தது. சரியாகச் சொல்லப் போனால் கக்கூஸ் வாளி. இந்தப் பட்டப்பெயருக்குப் பின்னால் இருக்கும் கதை வலி நிறைந்தது.

உருகொடவத்தையின் உள்முக சேரிக் குடியிருப்பொன்றில் சாக்கடையையும், கக்கூஸ் குழியொன்றையும் சுத்தம் செய்துவிட்டு விபத்தொன்றில் உடைந்து போன கணுக்கால் முறிவால் தரையில் காலை இழுத்துக் கொண்டு நடக்கின்ற சக்கிலி சில்வா, கக்கூஸ் குழிக்குள் இறங்கி மலத்தையும், கழிவுகளையும் ஒரு துருப்பிடித்த பழைய வாளியினுள் அள்ளிக் கொண்டு தூக்கமுடியாமல் உடைந்த காலால் நிலத்தை அரைத்தபடி தடுமாறி விழுந்துவிடாமல் இருக்க குழிக்குள் இருந்து மேலேறியதும், வாளியை தலையில் தூக்கி வைத்துக் கொள்வார். உடைந்த வாளியினூடாக ஒழுகும் மலம் தலையையும், கன்னத்தையும் நனைத்துக் கடந்து அழுக்கேறிய நிலையில் அவற்றைக் கொட்டிவிட்டு வருகின்ற சில்வாவிற்கு நிகழ்காலம் குறித்தோ, எதிர்காலம் குறித்தோ எந்தக்கவலையும் இருந்ததேயில்லை. அவரது கவலையெல்லாம் அவரின் ஒரே மகன் துமிந்தவைக் குறித்தே இருந்தது. 

துமிந்தவின் தகப்பன் சக்கிலி சில்வாவின் இயற்பெயர் சில்வாவே. நகர சபைக்குள் மலம் அள்ளும் பணியில் அவர் இருந்ததால் சாதியச்சாடலுடன் 'சக்கிலி சில்வா” என்றே இழிவாக அழைக்கப்பட்டார்.

தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட மக்கள் வகைக்குள் பிறந்த சக்கிலி சில்வாவின் தந்தை காப்பிலி தனது சாதிய அடையாளங்களால் பிள்ளைகள் அழுந்திக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சேரிக்குடியிருப்பில் கிறிஸ்துமஸ் தினமொன்றிற்கு பழைய ஆடைகளை வழங்க வந்த பாதிரியார் ஒருவரை சந்திக்கிறார். இயேசுவின் நாமத்தால் இறைபணி செய்து கொண்டிருந்த குறித்த பாதிரியார் சில்வாவின் தந்தை காப்பிலியின் மனதில் ஏற்படுத்தி விட்ட தாக்கம், கர்த்தர் ஒருவரே இந்த மானுடத்தின் நேசர் என்ற உளச்சிந்தனையை அவருக்குள் விதைத்துவிட்டது. அதுவரை காலமும் கொச்சைத்தமிழோடு தெலுங்கு பேசிக்கொண்டு, அவரது குலதெய்வம் மாடசாமிக்குப் படைக்கும் கள்ளையும், இறைச்சியையும் உண்டுவிட்டு நெற்றி நிறைய விபூதி தரித்துக் கொண்டு திரிந்தவர். 

இயேசுவே எங்கும் நிறைந்தவர். மீட்பர். தேவன் என்று சொல்லிக் கொண்டு பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டு, கிறிஸ்தவ சபையிலும் இணைந்து கொண்டார். காப்பிலி எனும் தனது இயற்பெயரை மார்டின் என்று மாற்றிக் கொண்டவர். இப்படி கிறிஸ்தவனாக மாறி பெயரை மாற்றிக் கொள்வதன் மூலம் தன் ஒடுக்கப்பட்ட அருந்தியன் எனும் நிலை காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்பதை வலுவாக நம்பினார். இதன் பின்னர் தனது இழிவான சமூக நிலையை இயேசு ஒருவராலேயே மாற்ற முடியும் என்று நினைத்த மார்டினாகிய காப்பிலி இயேசுவின் சேவகன் நானே என்றபடி அலைந்தார். பெயர் மாற்றம் பெற்று மார்ட்டினான காப்பிலி இயற்கையிலே 'கப்பிரிஞ்ஞா” எனும் பறங்கிய பைலா பாடுவதில் விண்ணர். தொண்டை நிரம்புமளவு கள்ளைக் குடித்துவிட்டு வெறியின் உச்சக்கட்டத்தில் சிங்களத்தூஷணங்கள் சரமாரியாக வெடிக்க மார்டின் பாடிக் கொண்டே ஆடுகின்ற பைலாவில் ஒரு வித சந்தம் தொக்கிக் கொண்டிருக்கும். குடித்துவிட்டு தெருவை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் மார்டினைப் பிடித்து கொஞ்சம் கஞ்சாவை கசக்கி வாய்க்குள் திணித்துவிட்டு, அது கள்வெறியை முறிக்கின்ற வேளையில் சக குடிகாரப் பெருமகன்களால் பாடுறா என்று உசுப்பேற்றி விட நைலோன் கைலியை தொடைக்கு மேலாக இழுத்துக் கட்டிவிட்டு கொச்சைத் தூஷணத்தோடு சககுடிகாரன், அன்று கஞ்சா தராதவன், கள்ளை உள்ளங்கையில் ஊத்திக் குடிக்க கொடுக்கிறவன் என எல்லோரையும் தமிழ், தெலுங்கு, சிங்களம் என எல்லா மொழிகளிலும் திட்டித் திட்டி ததிங்கிணத்தோம் போடுகிற பழைய மார்டின், அதன் பின்னர் கர்த்தரே எல்லாம், தேவனே மீட்பர் என்று மாறத் தொடங்கினார். அன்றிலிருந்தே கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். நிறுத்திவிட்டார் என்றால் கள்ளை நிறுத்திவிட்டு கிறிஸ்தவ சபை ஊழியர்களோடு சேர்ந்து வெளிநாட்டுச் சரக்கை குடிக்கப் பழகியிருந்தார். காலப் போக்கில் அவரது கப்பிரிஞ்ஞா கலை வடிவம் கிறிஸ்தவர்களில் நத்தார் போன்ற விசேட தினங்களிலும், அவர்களது திருமண நிகழ்வுகளிலும் அரங்கேற்றம் கண்டது. இப்படி கிறிஸ்தவக் குடும்பங்களோடு உறவு பாராட்டி வந்த மார்டினுக்கு கிறிஸ்தவ சபையினால் கல் வீடொன்று அரசமட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளின் பார்வைக்குள் சிக்காமல் கட்டிக் கொடுக்கப்பட்டது. துப்புரவுப் பணியிலும், பைலாவிலும் சுற்றித்திரிந்த மார்டினுக்கு திருமணமாகி இன்று சக்கிலி சில்வா என்று அழைக்கப்படும் சில்வா மகனாகப் பிறந்த போது ஏற்பட்ட மலேரியா நோயினாலும், பரம்பரையாக இருந்த சிறுநீரகத் தொற்று காரணமாகவும் இறந்து போனார்.

குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்த சில்வா, அரசாங்கத்தின் நிலத்தில் இருந்த தன்னுடைய வீட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்காக படிப்பென்ற ஒன்றே கிடைக்காமல் நகர சபைக்குள் எடுபிடி வேலைகளுக்கும், பின்னர் மலம் அள்ளும் வேலைகளுக்குமாக அமர்த்தப்பட்டார். என்னதான் மார்டின் வீடு அந்தச் சேரிக்குள் இருக்கும் சீற் போட்ட கல்வீடாக இருந்தாலும், அங்கு குடியிருந்தவர்களெல்லாம் நகரசபைக்கு ஊழியம் செய்யவென கொண்டு வரப்பட்ட தெலுங்கு தலித் சமூகத்தினர். அங்குள்ள நிலமோ, தகரக் கொட்டில்களோ கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. நகரசபையில் எடுபிடி வேலை, சுத்திகரிப்பு வேலை, நகரின் குப்பை அள்ளும் வேலை என நகரசபைக்கு உட்பட்ட ஊழியம் ஏதாவதொன்றினுள் இருக்கும் வரை மட்டுமே அந்தக் கொட்டில்களில் அவர்கள் இருக்கலாம் என்ற நிலையில், தனது வீட்டைப் பாதுகாப்பதையும், கணவனை இழந்த தனது தாயை காப்பாற்றுவதையும் மட்டுமே அவர் எண்ணியிருந்தார். சில்வா வளரும் வரையில் குப்பை கூட்டி அள்ளுகின்ற தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு இருக்கும் வேலையில் சில்வாவின் அம்மா அமர்த்தப்பட்டிருந்தாள். இந்தப் பின்னணியில் சில்வாவின் காலுடைந்த அதே விபத்தில் அவனது தாயும் இறந்துவிட சில்வா தனித்துப் போனார். இந்தப் பின்னணியில் அங்குள்ள அருந்ததிய சமூகத்தை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வாழ்ந்து வந்த சில்வாவின் மகனே கக்கூஸ் வாளி என நண்பர்களால் கேலி செய்யப்படுகின்ற இக் கதையின் நாயகன் துமிந்த சில்வா.

துமிந்த பிறந்த போதே கன்னங்கரேலன்று இருந்தான். கறுப்பன் எல்லாம் தமிழன் என்கிற சிங்கள ஐதீகத்தில் சக்கிலித் தமிழனாக துமிந்த பிறந்தது, இயற்கையான நிகழ்வு அல்லது உயர்த்தப்பட்ட பிராமணர்களால் கற்பிதம் செய்யப்பட்ட கர்மா. இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவனைப் பகடைக் காயக்கி பரமபதம் விளையாட முடிவுகட்டியிருந்தது. சக்கிலி சில்வா தனக்கு மகன் பிறந்த உடனேயே எந்தளவு ஆனந்தமடைந்தாரோ அதே போல கோட்டான் விழிகளுடன் கறுத்தப் பிசாசு போல பிறந்த அவனது தோற்றத்தை அவரே ஒதுக்கி வைத்தார். வெள்ளையெல்லாம் உயர்ந்தது என்பது ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தில் அழிந்துவிட்டாலும் கூட ஆங்கில மேட்டுக்குடிக்கு முதுகு தேய்த்துவிட்ட சிங்கள மேட்டுக்குடிக்கு அது மனப்படமாகியிருந்தது. சக்கிலி சில்வா வாழ்ந்த உருகொடவத்தையின் நிலைமை அவரது அப்பா மார்டின் வாழ்ந்த காலத்திற்கும், இப்போது துமிந்த பிறந்த காலத்திற்கும் இடையே ஒரு நூற்றாண்டு மாற்றத்தை எட்டியிருந்தது. மார்டின் வாழ்ந்த போதெல்லாம் கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் இருந்ததென்றால் இப்போதெல்லாம் பௌத்த மேலாதிக்கமே அங்கு கொடிகட்டிப்பறந்தது. பௌத்தச் சக்கரங்களும், பல வர்ணக் கொடிகளும், நகரமயமாக்கலிலும், பெருவீதி விஸ்தரிப்பிலும் மிஞ்சிய அரசமரங்களுக்கு கீழெல்லாம் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டிருக்கும் சமாதி நிலைப் புத்தர் சிலைகளுமாக, உருகொடவத்தை தனது அடையாளங்களை முற்றிலுமாக மாற்றியிருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சிங்களவரின் நடைமுறைகளுக்கு கட்டுப்படும் வகையாக பாடசாலைகளும், தொண்டு நிறுவனங்களும் மாறியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிறந்த சில்வாவின் மகன் சிங்கள வழக்கத்தோடு துமிந்த சில்வா ஆவதே முறையாக இருந்தது. 

அருந்ததியர்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக, கால ஓட்டத்தில் எஜமானர்களின் அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் அவர்களது நிலைப்பாடகவே போயிற்று. மாடசாமிக்கு நேர்த்திக்கடன் எடுத்த காப்பிலி ஞானஸ்தானம் பெற்று மார்டின் ஆனதும், கிறிஸ்தவராக மாறிப்போன மார்டினின் மகன் சில்வா வீட்டைப் பாதுகாக்கவென மீண்டும் மலக்குழி அள்ளப் போனதும், அதே வரிசையில், தான் யாரென்றே தெரியாமல் ஒரு கிறிஸ்தவனின் மகனாகப் பிறந்து கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்திற்கும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் அருகிலுள்ள விகாரை அறநெறி வகுப்பிற்கும் அலைகிற இரண்டுங் கெட்டான் நிலையில் துமிந்தவின் பால்யம் கடந்து போனது. 

தனது மகனை உயர்ந்த சிங்களப் பாடசாலையில் படிப்பிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், படிப்பறிவே இல்லாத சக்கிலி சில்வா போட்ட முகமூடிகளில் சிலதான். துமிந்த என்கிற சிங்களச் சாயல் கொண்ட பெயரின் முன்னொட்டும், பின்னொட்டாக குடும்பப் பெயர் சில்வாவும் இருந்தது. கிறிஸ்தவ மிஷனரியின் சிபாரிசுக் கடிதத்திலும், பௌத்த அறநெறிப்பாடசாலை மாணவன் என்கிற ரீதியிலும் துமிந்த சில்வாவிற்கான பாடசாலை அனுமதி ஓரளவு ஒட்டத்திற்கும், நடைக்கும் பின்னர் கிடைத்தது. இப்படி தனது அருந்ததிய அடையாளங்களை மறைத்துவிட்டு அப்பா நகரசபையில் 'பியோன்” வேலை செய்கிறார். எனும் பொய்யுடன் படித்து வந்த துமிந்த சில்வா. கக்கூஸ் வாளியானது இப்படித்தான். 

எல்லா ஆண்களுடைய பால்யத்திலும் சில தேவதைகள் அவர்களை கடந்து கொண்டே இருக்கிறார்கள். முட்டை விழிகள் பிதுங்க சூத்தாமட்டியில் பிரம்பால் வெளுக்கின்ற கணக்கு வாத்தியார்கள் போலல்லாது இரண்டு கைகளையும் அசைத்து அசைத்து ஆங்கிலத்தில் கவிதைகள் சொல்லித்தருகின்ற பெரும்பாலான பெண் டீச்சர்கள் ஆண்களுக்கு தேவதைகள். பட்டாம் பூச்சி பிடித்து தா என்று கேட்கிற தங்கைகள், பாடசாலை முற்றத்தில் விரலிக்காய், தேங்காய்ப்பூ அல்வா, மிக்சர், மாங்காய்த்துண்டுகளை எனத் தின்பண்டங்களை விற்கும் பெயர் தெரியாத பல் விழுந்த கிழவி, பாடசாலைப் பேருந்தில் தினமும் ஏறுகின்ற அலுவலகப் பெண் எனப் பல தேவதைகள் கடந்து போகிறார்கள். இப்படித்தான் துமிந்தவின் வாழ்க்கையிலும் ஒரு தேவதை இருந்தாள். நகரத்தில் வேலை செய்கின்ற சட்டத்தரணி ஒருவரின் மகள். அவனோடு கூடப்படித்தவள், இந்தக் கதைக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் துமிந்தவின் ஸ்தீரமான பட்டப் பெயருக்கு அவளே முதற்காரணமாகிவிட்டாள். 

சம்பவம் நடந்த அன்று, துமிந்தவின் கன்னங்கள் இரண்டும் சிவப்புப் பழமாக பழுத்திருந்தன. இதில் தான் செய்த தவறு என்ன என்பது கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பகல் முழுவதும் செருப்புத்தைக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்த்துவிட்டு அசதியுடன் திரும்புகின்ற அவனது அம்மா, கலங்கி நிற்கும் கணவனையும் வெப்பிசாரத்துடன் அழுது கொண்டிருக்கும் துமிந்தவையும் ஒன்றாக நோக்கிவிட்டு நிலை தடுமாறினாள்.

அன்று காலை தனது சிநேகிதியுடன் வழக்கம் போல துமிந்த சென்றிருந்தான். நகர சபையில் அவனது தகப்பன் வேலை செய்கிறார் எனும் நினைப்பில் அந்தப் பெண்வீட்டில் துமிந்தவிற்கு ஓரளவு அன்பும் அவனது கெட்டித்தனத்தினால் அவனது மீது ஒரு ஈர்ப்பும் அவர்களுக்கு இருந்தமையால், குறித்த பெண்ணுடன் அவன் நட்பு வைத்திருப்பது அவர்களை பொறுத்தவரை இயல்பானதொன்றாகவே இருந்தது. 

எதிர்பாராத விதமாக அவளது வீட்டிலே மலக்குழி திருத்தும் வேலையில் அன்றைய தினம் சக்கிலி சில்வா இருக்க, இது வரை நாளும் தனது தந்தையின் நிலையை அறியாதவன் அன்று தான் முதல் முதலாக சில்வாவின் அலங்கோல நிலையை அறிகிறான். 

பாவித்த மலக்குழியொன்றினை திருத்தும் போது மலக்குழி நாற்றமெடுக்காமல் இருக்க அதில் ஒரு துவாரத்தை இட்டு கலன் கணக்கில் மண்ணெண்ணை ஊற்றிவிட்டு அதில் இறங்கும் சில்வா கொஞ்சம் தென்னஞ்சாராயத்தையும் குடித்துக் கொள்வார். இப்படி அரை போதையில் மலக்குழி அடைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்த சில்வாவின் சட்டையில், கழுத்தில், கைகளில் என மலத்தின் வாடையும், மண்ணெண்ணெய் நெடியும் ஒன்றாக வீசிக்கொண்டிருந்தது. தனது மகன் தன்னைக் கவனிப்பதைக் கூட அறியாமல் தெத்தித் தெத்தி உடைந்த காலுடன் சில்வா மலத்தை அள்ளி இன்னுமொரு குழிக்குள் இட்டு நிரப்பிய படியிருந்தார். மண்ணெண்ணெய் நாற்றமெடுத்தது. அது கக்கூஸ் குழியின் நாற்றத்தை முறித்திருந்தாலும் ஒரு அருவருக்கத்தக்க வாடையை அங்கு நிரம்பியே இருந்தது. இப்படியாக மலத்தை காவுகின்ற சில்வா களைப்பின் மிகுதியில் சறுக்கி கீழே விழ தனது தகப்பனை அவனே தாங்கிப்பிடித்தான். 

தன்னைத் தாங்கிப்பிடிப்பது மகனாக இருந்தாலும் அவனை அறியாதவன் போல் சில்வா அவனைத் தள்ளிவிட்டார்.

இவன் அப்பா என்றான்... 

யாரடா அப்பா போடா ..... என்றார் சக்கிலி சில்வா.

அவனைத் தள்ளிவிட்டதில் அவன் மண் குவியலின் மீது புரண்டு விழுந்தான். அவனது சட்டையில் மலமும், மண்ணும், ஈரமுமாக இருந்தது. 

சட்டத்தரணி, அவரது மனைவி, மகள், வீட்டிலிருந்த சமையல்காரி தொடக்கம் அவன் ஒரு சக்கிலியன் என்பதை அக்கணத்தில் அறிந்து கொண்டனர். சில்வா வெம்பினார். தனது அடையாளங்களில் கறை அவன் மீது படிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் தூரமாக இருந்திருக்கிறார். அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல.உயர்ந்த சிங்களப் பாடசாலை ஒன்றில் படிக்கும் போது அவன் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டுவிடும் என்றே எண்ணியிருந்தார். தெலுங்குத் தமிழ் வம்சாவளி என்றாலே அருந்ததியர் எனும் அடையாளம் மாற வேண்டும் என்பதற்காகவே துமிந்த என்று சிங்களப் பெயரும் வைத்தார். இன்று தன்னாலேயே தனது மகன் சக்கிலியன் ஆனான். என்பது அவருக்கு அழுகையையும் கோபத்தையும் ஒன்றாக ஏற்படுத்தியிருந்தது. 

மீண்டும் துமிந்த 'அப்பா' என்றான். மலம் நிறைந்த கைகளாலேயே இரண்டு அறை விழுந்தது. 

அடுத்த நாள் துமிந்தவின் அப்பா அரச வேலை செய்பவர் அல்ல, அவன் ஒரு மலம், பொய்யன், ஊத்தைக்கும்பன், கறுப்பு பேய், மலம் அள்ளும் வாளி என்றெல்லாம் அவனது நண்பர்கள் கதைக்கத் தொடங்கினார்கள்.  

அவனது நண்பர்களில் யாரோ ஒருவன் பெண்கள் மலசலகூடச் சுவரில், சிங்களத்தில் கக்கூஸ் வாளி தூக்கி - துமிந்த என்று எழுதி ஒரு அரைகுறை ஓவியத்தையும் கரித்துண்டு ஒன்றினால் வரைந்து விட்டிருந்தான். ஒரு பையன் தலையில் வாளியொன்றைத் தூக்குவதாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியம் பாடசாலை எங்கும் தீயாகப் பரவத் தொடங்கியது. இதைப் பார்க்கவென்றே சில ஆண்கள் பாடசாலை முடியும் நேரம் பெண்களின் மலசலகூடப் பக்கம் ஒதுங்கினார்கள். ஏற்கனவே பார்த்த பெண்கள் கடைவாயை மூடிச் சிரித்துக் கொண்டார்கள். அன்றைய கிரிக்கெட் போட்டியில் ஒழுங்காக பந்து வீசாத இலங்கை வீரர் மலிங்கவை சக்கிலி மலிங்கா எனக் கொச்சைப்படுத்தி பிரபல சிங்கள நாளிதழ் வெளியிட்ட செய்தியில் மலிங்கவை அழித்துவிட்டு சக்கிலி துமிந்த என்று ஒருவன் எழுதினான். இன்னுமொருவன் சக்கிலி என்பதை வெட்டிவிட்டு கக்கூஸ் வாளி துமிந்த பொய்யன் என்று கிறுக்கினான். இப்படி வகுப்பில் ஒவ்வொரு நாளும் வாளி வாளி என்று நண்பர்களால் கேலி செய்யப்பட்டு உடைந்து போனவன் தான் இந்தக் கதையின் நாயகன் துமிந்த சில்வா.

அவனோடு அதுவரை பழகிய அந்த தேவதை கொஞ்சக் காலத்திலே அவனை விலகினாள். அது அவனைப்பிடிக்காமலில்லை. அவள் தெரியாமல் உளறிய ஒரு சொல்லாலே அவன் அவமதிக்கப்படுகிறான் என்பது அவளை உறுத்தியதானால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விலத்தினாள். அவள் விலத்தினாலும் கக்கூஸ் வாளி எனும் பெயர் நிலைத்து விட்டது. அது இனி சாகும் வரை அவனை உறுத்திக் கொண்டேயிருக்கும். பாடசாலை முடியும் வரையிலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை ஞாபகமூட்டியபடியே இருந்தனர். அப்போதெல்லாம் அவனுக்கு ஆத்திரமாக இருக்கும். தலையைக் கொண்டு ஏதாவதொரு சுவற்றில் முட்டிமுட்டிச் சாகவேண்டும் போல இருக்கும். பெரிய கல்லொன்றை எடுத்து சேரிக்குள் ஓடித் திரியும் சொறி நாயொன்றை அடிப்பதை போல அவர்களை பழிதீர்க்கத் தோன்றும். இப்படியெல்லாம் இருந்த துமிந்த 'கக்கூஸ் வாளி” எனும் பெயரோடே பாடசாலை நாட்களை கடந்தேறினான்.

இந்த துமிந்ததான் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்து விட்டு வேலையொன்றிற்காக அலைந்து கொண்டிருந்தான். குறித்த தலைமுறையின் முதல் பட்டதாரி. 

சில தினங்களுக்கு முன்பு நடந்த நேர்முகத்தேர்வு அவனுக்கு வேலையைப் பெற்றுத் தரும் எனும் நம்பிக்கையோடு துமிந்த காத்திருக்கிறான். ஒரு அரச வேலையையே அவன் விரும்பியது. அவனைத் தலைநிமிரச் செய்வது.அவனை மட்டுமல்ல அவன் குடும்பத்தையே அது நிமிர்த்திவிடும். அந்தச் சேரி வீட்டைத் துறந்து வெளியே ஒரு வாடகை வீட்டில் குடியேறலாம். அது நல்ல வீடுதான். அந்தச் சேரிக்குடியிருப்புக்குள்ளே இருக்கும் கல்வீடு. தனக்கு அரசவேலை கிடைத்து, தான் வெளியேறிய பின்னர் அது வேறு யாருக்காவது கிடைக்கும். பரவாயில்லை. தன்னுடைய சுதந்திர வெளி அதிகரிக்கும். சக்கிலி சில்வா இனி அவனைக் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர் இனி மலக்குழி வெட்டப் போகத்தேவையில்லை. அவனது தாய் இறப்பர் செருப்புக்களுக்கு ஆணியடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பரம்பரையாக ஒரே சாதிக்குள்ளே கல்யாணம் கட்டிக் கொண்டு மார்டினைப் போலவே சிறுநீரகக் கடுப்பு நோயில் அவதிப்படும் தனது தந்தை சில்வா போல தனது பிள்ளைகள் இருக்கத் தேவையில்லை. சேரியிலிருந்து விலத்தினாலே தனக்கு புதுமுகம் கிடைத்துவிடும். வேலை செய்யும் இடத்திலே ஒரு பெண்ணை தேடிக் கொள்ளலாம். என்னுடைய நாகரீகமான சிங்களமும், ஆங்கிலமும் ஒரு பெண்ணை என்னை நேசிக்கச் செய்யும் எல்லாம், எல்லாம், எல்லாமே இன்று வரப்போகும் அரச முத்திரை பதித்த கடிதத்தில் தங்கியிருப்பதை அவன் எண்ணிக் கொண்டான். கனவுகளுடான காத்திருப்போடு உருகொடவத்தைச் சந்தியில் தபால் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவனை அவனது பாடசாலையில் கூடப் படித்த கிட்டத்தட்ட முகம் மறந்துபோன ஒருவன் சந்திக்கிறான்.

ஏ... கக்கூஸ் வாளி எப்படியிருக்கா என்றான்.

கோபம் தலைக்கேற துமிந்த அவனை முறைத்துப் பார்த்தான். பளார் என்று ஒரு அறைவிட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. பற்களை இறுக்கிக் கடித்துக் கொண்டான். முகம் சிவந்திருந்தது.

என்னடா முறைக்கிறா....

எளிய சக்கிலி நாயே உனக்கென்ன விசரா என்றான், எதிரே நின்றவன்.

இவன் அறைய முயற்சித்த அக்கணத்திலே அரச முத்திரை பதிக்கப்பட்ட அக்கடிதத்தை இவனிடம் கொடுத்துவிட ஒருவர் இடைமறித்தார்.

எதிரே நின்றவன் விடுவதாக இல்லை. நீ கக்கூஸ் வாளி துமிந்த தானே... என்றபடி அக்கடிதத்திலுள்ள பெயரை வலுக்கட்டாயமாக பார்க்க எத்தனித்தான்.

அரச வேலைக்கான கடிதத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையின் நடுவிரலை அவனது முகத்துக்கு முன்னால் நீட்டினான் துமிந்த....

நன்றி - "தளம்" சஞ்சிகை - இதழ் - 25

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates