தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்திய வம்சாவழி மலையகத்தமிழரின் தேசிய அபிலாசை ஆவணக்கோரிக்கைகளில் அடையாளப்பிரச்சினை பற்றி சென்ற வாரம் பார்த்தோம். இந்தவாரம் அரசியல் தீர்வுபற்றிப் பார்ப்போம்.
மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஆராயும் போது முதலில் சில கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். அவற்றில் மூன்று பிரச்சினைகள் முக்கியமானவை! ஒன்று மலையக மக்கள் ஒரு தேசிய இனமா? சிறுபான்மை இனமா? இரண்டாவது மலையக மக்களின் பிரச்சினை அடையாளப்பிரச்சினையா? இறைமைப் பிரச்சினையா? மூன்றாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு நிலம்சார்ந்த அரசியல் தீர்வா? சமூகம் சார்ந்த அரசியல் தீர்வா? இந்தக் கோட்பாட்டுப் பிரச்சினைகளும் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய பிரச்சினைகளாகவே உள்ளன. பெரும் தேசியவாதத்தை உசுப்பேற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்காகவும் கோட்பாட்டுப் பிரச்சனைகளை அடக்கி வாசிக்கும் நிலையும் உண்டு.
ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசிய இனம் என்று வரையறுப்பதற்கு மாக்சீய மூலவர்கள் நிலம், மொழி, பொருளாதாரம் கலாச்சாரம் என்பவற்றை நிபந்தனைகளாக முன்வைத்துள்ளனர். நவீன காலத்தில் இதுவும் மாற்றத்திற்குள்ளாகி இந்த நான்கில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட தேசிய இனமாகக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது. முக்கியமாக நாம் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற கூட்டுப் பிரக்ஞை இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மாக்சிய மூலவர்கள் குறிப்பிட்ட நான்கு நிபந்தனைகளும் மலையக மக்களுக்கு இருக்கின்றது. எனவே அவர்களை தேசிய இனமாக கொள்ளலாம் என மலையக செயற்பாட்டாளர்கள் பலர் வாதிடுகின்றனர்.
மலையக வரலாற்றை எடுத்துப் பார்க்கின்றபோதும் வர்க்க ரீதியான காரணிகளை விட இன ரீதியான காரணியே அதிகம் தொழிற்பட்டிருக்கிறது. டொனமூர் யாப்பின் கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது அதனை
சிங்கள மேட்டுக்குடியினர் எதிர்த்தனர். அதற்கு பிரதான காரணம் மலையக மக்களும் வாக்குரிமை பெற்றுவிடுவார்கள் என்பதே! 1931ம் ஆண்டு தேர்தலின் பின்னர் 1936ம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களின் வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது. சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இதன் பின்னர் 1977ம் ஆண்டுதான் மலையக மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைப் பெற்றனர்.
இன ரீதியான அரசியல் மேல்நிலைக்கு வராதமைக்கு தொழிற்சங்க அரசியலும் ஒரு காரணமாக அமைந்தது. மலையகத்தில் படித்த மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி இந்த நிலையை மாற்றியது. மலையக மக்கள் இயக்கமும் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியும் இன ரீதியான அரசியலில் வலுவான முனைப்புகளைக் காட்டின. தேசிய இனம் என்ற அடையாளத்தையும் தூக்கிப்பிடித்தன. மலையக மக்கள் முன்னணி தனி அதிகார அலகுக் கோரிக்கையையும் முன்வைத்தது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்னர் தேசிய இனம் தனி அதிகார அலகுக் கோரிக்கை என்பவற்றை சற்று அடக்கியே வாசித்தது. இதனால் மேலெழுந்த தேசிய இன அரசியல் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றது.
மலையகச் செயற்பாட்டாளர்களில் இன்னோர்சாரார் இன அரசியலை அவ்வப்போது உயர்த்திப் பிடித்தாலும் தேசிய இன அரசியலை முன்னெடுக்க விரும்பவில்லை. மலையக மக்கள் மத்திய மலைநாட்டைத் தவிர ஏனைய இடங்களில் சிதறி வாழ்வதால் எப்போதும் மென்மையான அடையாள அரசியலிலேயே ஆர்வம் காட்டினர். இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தையும் அதற்காகவே உயர்த்திப் பிடித்தனர்.
இரண்டாவது கோட்பாட்டுப் பிரச்சினையும் முதலாவது கோட்பாட்டுப் பிரச்சினையின் தொடர்ச்சியாகவே உள்ளது. மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தால் அவர்களின் பிரச்சினைகளை ஒரு இறைமைப் பிரச்சினையே! அவர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாமல் சிதறி வாழும் மக்கள் கூட்டமாக இருந்தால் அவர்களின் பிரச்சினை அடையாளப் பிரச்சினையே! இதிலும்பலர் இறைமைப் பிரச்சினை என்றும் பலர் அடையாளப் பிரச்சினை என்றும் கொள்கைகளைக் கொண்டுள்ளனர்.
மூன்றாவது கோட்பாட்டுப் பிரச்சினையும் இரண்டாவதன் தொடர்ச்சியே! மலையக மக்கள் ஒருதேசிய இனமாக இருந்து அவர்களின் பிரச்சினை ஒரு இறைமைப் பிரச்சினையாக இருந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வு நிலரீதியான அதிகாரப் பங்கீடாகவே
பங்கீடாகவே இருக்கவேண்டும். அவர்கள் ஒரு தேசிய இனமல்லாது சிதறி வாழும் மக்கள் கூட்டமாக இருந்தால் அடையாளப் பிரச்சினையின் வழி அவர்களுக்கான அரசியல் தீர்வு சமூக ரீதியான அதிகாரப் பகிர்வே! தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ளவில்லை. மாறாக சிதறிவாழும் ஒரு சிறுபான்மை இனமாகவே கொள்கின்றது. அதனால் சமூக ரீதியான அதிகாரப் பகிர்வையே முன்வைக்கின்றது. நிலவரம்பற்ற சமூகசபை என்ற கோரிக்கை இந்த அடிப்டையிலேயே எழுந்தது.
மலையக மக்கள் மத்திய மலைநாட்டில் செறிவாக வாழ்கின்றனர். ஐந்து பிரதேச சபைகளும் இரண்டு நகர சபைகளும் அவர்களது ஆட்சியில் உள்ளது. இந்த உள்ளுராட்சி சபைப்பிரதேசங்களை இணைத்தாலே நில ரீதியான அதிகாரப்பகிர்வைப் பெறலாம். இதனை ஏனைய மாவட்டங்களில் செறிவாக உள்ள பிரதேசங்களையும் நிலத் தொடர்ச்சியற்ற வகையில் இணைத்தால் ஒரு பெரிய நில ரீதியான அதிகாரப் பகிர்வைப் பெறலாம். மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரம் நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகுக் கோரிக்கையை (பாண்டிச்சேரி மாதிரி) முன்வைத்தார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
ஒரு அதிகார சபைக்கு சுயமான வருமான மார்க்கங்கள் அவசியம். நில ரீதியான அதிகாரப் பகிர்வின் மூலம்தான் சுயமான வருமான மார்க்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சமூக அதிகார சபையினால் சுயமானவருமான மார்க்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது குறிப்பாக வரிவிதிப்பு வருமானங்களை பெற்றுக்கொள்ள முடியாது. அனைத்து தேவைகளுக்கும் மத்திய அரசில் தங்கி நிற்கவேண்டிய நிலையே ஏற்படும்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலவரம்பற்ற சமூகசபை ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடு என்பதால் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் சுயமாக இயங்கக்கூடிய ஆற்றல் அதற்கு மிகக் குறைவு. சுயமான வருமான மார்க்கங்கள் அதற்கு இல்லை. மத்தியரசின் ஒதுக்கீட்டிலும் சர்வதேச தரப்புகளின் நிதி ஒதுக்கீட்டிலுமே அது தங்கியிருக்கின்றது. பெருந்தோட்டத்துறை, உள்ளுர் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை என வளமான பொருளாதார வளங்களைக் கொண்டிருக்கின்ற மலையக மக்கள் சுயமான வருமானமில்லாமல் அவலப்பட வேண்டுமா? என்ற நியாயமான கேள்வி இங்கு எழுகின்றது.
கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சாரம், மொழி, வீடமைப்பு, உட்கட்டுமான அபிவிருத்தி, வாழ்வாதாரம் என்பற்றில் பங்குபற்றல் அதிகாரங்களையே தமிழ் முற்போக்கு முன்னணி கோரியுள்ளது. இவ் அதிகாரங்களில் கூட தெளிவான அதிகாரமோ, வேறுபடுத்தல்களோ இல்லை. இடைநுழையும் அதிகாரங்களும் பங்குபற்றல் அதிகாரங்களும் உண்மையான அதிகாரங்களாக ஒருபோதும் இருக்கமாட்டாது.
உண்மையில் இரண்டு வகையான அதிகாரப் பகிர்வுகளே மலையக மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். மலையக மக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களில் நிலரீதியான அதிகாரப் பகிர்வும், ஐதாக உள்ள பிரதேசங்களில் சமூக ரீதியான அதிகாரப் பகிர்வுமே அவையாகும். தமிழ் முற்போக்குக் கூட்டணி பெல்ஜியம் மாதிரியையே முன்வைப்பதாகக் கூறியுள்ளது. பெல்ஜியம் மாதிரி நிலரீதியான அதிகாரப் பகிர்வு, சமூக ரீதியாக அதிகாரப் பகிர்வு என இரண்டையும் கொண்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்வது அவசியமானது.
மலையக சமூக ஆய்வுமையம் மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய அறிக்கையை நல்லாட்சிக் காலத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தபோது நில ரீதியான அதிகாரப் பகிர்வு, சமூக ரீதியான அதிகாரப்பகிர்வு என இரண்டையும் முன்வைத்துள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்ற வகையில்
வகையில் இணைத்து நில ரீதியான அதிகாரப் பகிர்வை உருவாக்க வேண்டும் என்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக மக்களுக்கு சமூக ரீதியான அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றும் கோரியுள்ளது. இந்தத் தீர்வு அதிகம் பொருத்தமானதாக இருக்கலாம்.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களும் ஆரம்பத்தில் அடையாள அரசியலையே முன்நகர்த்தினர். சமூக ரீதியான அதிகாரப் பகிர்வையே முன்வைத்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இறைமை அரசியல் முன்னிலைக்கு வரத்தொடங்கியது. அதன் பிந்திய வரலாறு அனைவரும் அறிந்ததே!
தமிழ் முற்போக்குக் கூட்டணி நிலவரம்பற்ற அதிகாரசபையை தமது கட்சியின் முன் மொழிவாக முன்வைக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது நடாத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு சிபார்சு செய்த யோசனையையே முன்வைப்பதாக கூறியுள்ளது. இதன் மூலம் பெரும்தேசியவாதம் உசுப்பேறி தாண்டவம் ஆடாமல் தடைவிதிக்க முற்படுகின்றது. இது ஒருவகையான இராஜதந்திரமே! ஆனால் அது மலையக மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலவரம்பற்ற சமூகசபைக் கட்டமைப்பிலும் பலவீனம் உள்ளது. நிலவரம்பற்ற சமூகசபைக்கு தனியான தேர்தலோ, பிரதிநிதித்துவமோ தேவையில்லை.
பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இங்கும் உறுப்பினர்களாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமானது எனக் கூற முடியாது. உறுப்பினர்களுக்கு இரட்டைச்சுமையை இது கொடுப்பதாக அமையும் ஏற்கனவே இவ் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒழுங்காகப் பணியாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இக் குற்றச்சாட்டுக்கள் மேலும் அதிகரிக்கப்படுமே தவிர குறைவதற்கான வாய்ப்புக்கள் இருக்காது.
குறைந்தபட்சம் தேர்தலைத் தவிர்க்கவேண்டுமானால் பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் என்பவற்றின் உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து நிலவரம்பற்ற சமூகசபைக்கான பிரதிநிதிகளைத்தெரிவுசெய்யலாம். புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வது செயற்பாட்டாளர்களின் பங்கை அதிகரிப்பதோடு மக்கள் பங்கேற்பு அரசியலையும், பொறுப்புக்கூறும் அரசியலையும் வளர்த்தெடுக்கும். இன்றைய அரசியல் சூழலில் இது மிகவும் அவசியமானது.
தவிர பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் சமூக சபைகளிலும் முன்வைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஜனநாயகப் பண்புகளைப் பரவலாக்குவதாக இருந்தாலும் சட்டமியற்றுவதில் காலதாமதங்களை உருவாக்கும். மலையக மக்களை பாதிக்கின்ற விடையங்களை மட்டும் இங்கு முன்வைக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
எல்லாவற்றையம்விட முக்கியமானது இக்கட்டுரையாளர் சென்றவாரக்கட்டுரையில் முன்வைத்த அளவுகோல்தான். மலையக மக்களுக்கான எந்தத் தீர்வு யோசனைகளும் அவர்களை இனஅழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இன அழிப்பு என்பது தொற்றுநோயைப் போன்றது. ஆரம்பத்திலேயே அதனைத் தடுக்கவேண்டும். இல்லையேல் உடல்முழுவதும் நோய்பரவி ஆளையே அழித்துவிடும்.
இறுதியாகக் கூறுவது இதுதான்
"மலையக மக்களின் விவகாரத்திலும் நூறு பூக்கள்மலரட்டும்."
பிற்குறிப்பு
இக் கட்டுரையாளர் மலையத்தைச் சேர்ந்தவர் அல்ல. மலையக மக்கள்மீது அக்கறை கொண்டவர். தேசிய இன ஒடுக்குமுறைகள் பற்றி தொடர்ச்சியாக ஆய்வு செய்பவர் என்றவகையில் ஒரு புறநிலையாளனாகவே தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். இக் கருத்துக்கள் முடிந்த முடிவுகள் அல்ல.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...