சிறையிலிருக்கும் முன்னால் போராளிகளை விடுவிக்கும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சிங்கள ஊடகங்களில் இதனை கடுமையாக விமர்சிக்கின்ற வகையில் இனவாத செய்திகளும் நிறையவே வெளிவருகின்றன. இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு டிசம்பர் 18அன்று ஜனாதிபதி த் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பியபோதும் அவரின் வலது கண் நிரந்தரமாக செயலிழந்தது. தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்தி அனுப்பிய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறை அனுபவித்து வருகின்றனர். அவர்களை இருபதாண்டுகளுக்குப் பின்னர் விடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சந்திரிகா 1959 இல் தனது தந்தையை (பிரதமர் பண்டாரநாயக்க) துப்பாக்கி சூட்டினால் பறி கொடுத்தவர். அது போல 1988 இல் தனது கணவர் விஜயகுமாரனதுங்கவை துப்பாக்கிச் சூட்டில் இழந்தவர்.
உங்களை கொலை செய்ய வந்தவரை விடுவிக்கும்படி நீங்கள் கூறியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது அது உண்மையா?
ஆம் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னை கொலை செய்ய வந்த பெண்ணின் உடலில் அந்த குண்டுகளை கொண்ட பட்டியை கட்டிய இருவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர்கள் இருவரும் கோவிலைச் சேர்ந்த பூசாரியும் அவரது மனைவியும். அவர்கள் இருவரும் இருபது வருடத்திற்கும் மேல் தண்டனை அனுபவித்து இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிறையில் இருப்பதால் என் கண்கள் திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. இந்த நாட்டில் நிலவுகிற இனப் பிரச்சனையும் தீரப் போவதில்லை. அவர்கள் சிறையில் இருக்கும்போதே அதாவது ஏழெட்டாண்டுகளிலேயே அவர்களை விடுவிக்கும்படி நான் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரவிருந்தேன்.
இந்த சூழலில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் விடுதலைப் போராளிகளை விடுவிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
அவரின் செயலாளர் என்னை அழைப்பில் வந்து என்னிடம் கேட்டார் மேடம் இதனை கேட்கவும் கஷ்டமாக இருக்கிறது கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர் எதைக் கூறுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே பத்திரிகைகளும் அதனை பார்த்து விட்டேன். எனவே அவர் தொடர்ந்து வினவு முன்னமே நான்; ஆம் நீங்கள் அதனை செய்யுங்கள் என்று கூறினேன். அதை செய்வதாயின் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் உடனடியாக செய்யுங்கள் என்றேன். அப்படி செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது. ஒரு பௌத்தராக மட்டுமல்ல எந்த மதப் பின்னணியை சேர்ந்திருந்தாலும் மன்னிப்பு என்பது வழங்கப்பட வேண்டிய ஒன்று. எனக்கு ஒரு கண் போனாலும் நான் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அவர்கள் புணர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிப்பது நல்லது. அந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்ட மூன்றாவது நாள்; நான் சத்தியப் பிரமாணம் எடுக்கும் போதும் கூட எனது உரையில் நான் ஒன்றைக் கோரி இருந்தேன்.
அதாவது இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர என்னோடு கைகோருங்கள் என்று விடுதலைப் புலி இளைஞர்களிடம் கோரி இருந்தேன். உங்களை என் பிள்ளைகளைப் போல் நடத்துவேன். உங்களிடம் நான் பழிவாங்க மாட்டேன் எனக் கூறி இருந்தேன்.
அவ்வாறு நான் கூறியதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. என் தகப்பனார் தன்னை சுட்ட பிக்குவுக்கு மன்னிப்பு வழங்கும் படி மரணப்படுக்கையில் கேட்டார். அந்தத் தகப்பனின் பிள்ளை நான்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...