Headlines News :
முகப்பு » , , , , » சம்மாங்கோட்டுப் பள்ளி : கொழும்பின் அடையாளங்களில் ஒன்று (கொழும்பின் கதை - 45) - என்.சரவணன்

சம்மாங்கோட்டுப் பள்ளி : கொழும்பின் அடையாளங்களில் ஒன்று (கொழும்பின் கதை - 45) - என்.சரவணன்

கொழும்பு மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது சம்மாங்கோடு பள்ளிவாயல். சிங்களத்தில் இதனை “கொட்டுவ ரத்து பள்ளிய” (கோட்டை சிகப்பு பள்ளிவாயல்) என்று அழைப்பார்கள். அவ்வாறு சிகப்பு பள்ளிவாயல் என்று அழைக்கப்படுமளவுக்கு அந்த பிரமாண்டமான கட்டிட அமைப்பின் வெளித்தோற்றம் சிகப்பும் வேலையும் கலந்த அலங்கார வடிவத்துடன் நெடுங்காலமாக பேணப்பட்டு வருகிறது. இலங்கையின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் கலாசார பொக்கிசமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பள்ளிவாயல் கொழும்பில் சன நெரிசலும் இந்த மசூதி கொழும்பில் உள்ள பழமையான பள்ளிவாயல்களில் ஒன்று என்பது மட்டுமன்றி கொழும்பு நகரின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கொழும்பு துறைமுகம், மத்திய இரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் எல்லாமே அருகாமையில் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் தங்கும் பெரிய ஹோட்டல்கள் பலவும் கூட நடை தூரத்தில் இருப்பதாலும்; இது பலரின் பார்வைக்கு எட்டி விடுகிறது. சுற்றுலாப் பயணிகளையும், வர்த்தகர்களையும், வரலாற்று விரும்பிகளையும் மிகவும் கவருவதாக இது இருக்கிறது.

கொழும்பின் பரபரப்பான இரண்டாம் குறுக்குத் தெரு வழியின் நேராக துறைமுகப் பகுதியை நோக்கி செல்கையில் மெயின் வீதியைத் தாண்டியதும் சம்மாங்கோடு பள்ளிவாசலைக் காணலாம். நெரிசலான சந்தைப் பகுதியில் உயரமாகவும், கம்பீரமாகவும், அழகான வர்ணத்திலும் தனித்துவமாக எவர் கண்களிலும் இலகுவாக பதிந்துவிடும் கட்டிடம் அது.

முன்னர் தென்னிந்திய முஸ்லிம்களின் கடைகள்; பெரும்பாலும் இந்தக் குறுக்குத் தெருக்களின் கிழக்குப் பகுதியிலும், வடஇந்திய போரா முஸ்லிம்களினதும், மேமன்களினதும் கடைகள் பெரும்பாலும் மேற்குப் பகுதியிலும் அதிகமாக இருந்தன. 

சம்மாங்கோட்டுப் பள்ளி என்று நெடுங்காலமாக பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டுவந்த இந்த பள்ளிவாயல் பிற்காலத்தில் ஜாமி-உல்-அழ்ஃபர் பள்ளிவாயல் (Jami Ul-Alfar Mosque) என்று அழைக்கப்பட்டுவருகிறது.

யார் இந்த சம்மான்கள்

அக்காலத்தில் “சம்மான்கள்” என்று அழைக்கப்பட்ட இந்திய முஸ்லிம் வியாபார குழுமத்தின் பெயராக “சம்மான்” என்பது விளங்குகிறது. “சாமான்களை” விற்பனை செய்கிற இந்திய வியாபாரிகளாக அறியப்பட்டவர்களை “சம்மான்கள்” என்று அழைக்கப்பட்டதாகவும் அதுவே காலப்போக்கில் அவர்கள் ஏற்றுக்கொண்ட அடையாளமாக ஆனதாகவும் கூறப்படுவதுண்டு. இலங்கையில் நிலைபெற்ற முஸ்லிம்கள் பெரும்பாலும் பல்வேறு நாடுகளில் இருந்து வியாபார, வர்த்தக நோக்கத்துக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள் தான். இலங்கையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை முஸ்லிம்கள் மத்தியில் தெளிவாக வேறுபிரித்து அறியப்பட்டார்கள். அரபு, துருக்கி, மொரோக்கோ, இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் அந்தந்த சமூகங்களாகவே தனி அடையாளத்துடன் வாழ்ந்த காலமொன்று இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்குள் “முஸ்லிம்களாக” கலந்து ஒரே அடையாளத்துக்குள் கணிசமான அளவு வந்துவிட்ட போதும் இன்றும் அந்த வேறுபாடுகளின் மிச்சங்கள் தொடரவே செய்கின்றன. அவ்வாறு இலங்கையில் வந்து குடியேறிய வர்த்தகர்கள் காலப்போக்கில் இலங்கையர்களைத் திருமணம் செய்துகொண்டபோதும் பிற்காலத்தில் குடிப்பரம்பல் அதிகரித்தபின்னர் தமக்குள்ளேயே தனி முஸ்லிம் அடையாளத்துடன் திருமண பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கம் வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது.

பெரும்பாலான முஸ்லிம் வியாபாரிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை கொழும்புக்குத் தான் வந்து சேர்ந்தார்கள். குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தில் வந்திறங்கினார்கள். எனவே இன்னொருவகையில் சொல்வதாயின் கொழும்பு என்பது முஸ்லிம்களின் ஒரு கோட்டை தான். கொழும்பின் மையமான “கொழும்பு மத்திய” தொகுதி சந்தையையும் நெருக்கமான குடியிருப்பையும் கொண்டிருக்கும் பகுதி. அந்தப் பகுதி முஸ்லிம் மக்களை பெருவாரியாகக் கொண்ட பகுதி தான். காலனித்துவத்தின் ஆரம்ப காலத்தில் காலனித்துவ சக்திகளுக்கு வெளியில் என்று பார்த்தால் கூட; கொழும்பில் முஸ்லிம்களிடமும், தமிழர்களிடமும் தான் வியாபாரம், வர்த்தகம் என்பன இருந்தது. சிங்களவர்களிடம் குறைவாகவே இருந்தது. இலங்கையின் இனத்துவ ஆதிக்க அரசியல் சூழல்; அந்த நிலைமையில் செயற்கையாகவே மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும் கூட இன்றும் கொழும்பின் வர்த்தக மையத்தைப் பொறுத்தளவில் முஸ்லிம்களும், தமிழர்களும் கணிசமான பலத்துடன் தான் இருக்கிறார்கள் எனலாம். எனவே தான் பேரினவாத போக்குகள் தீவிரமடைகின்ற போதெல்லாம் தமிழர்களும் முஸ்லிம்களும் இங்கே இலக்குக்கு ஆளாகி வருகின்றனர்.

eylon Moor family of Colombo. Abdul Rahim & family C.1906

கொழும்பில் மலே முஸ்லிம்கள், ஜா (ஜாவா) முஸ்லிம்கள் போல இந்தியப் பின்னணியைக் கொண்ட “சம்மான்” முஸ்லிம்களும் ஒரு சமூகமாக அறியப்பட்டிருந்தார்கள். கொழும்பின் வர்த்தக மையத்தின் இதயப் பகுதியில் இந்த “சம்மான்காரர்கள்” கோலோச்சியிருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். 

இந்தியாவில் இருந்து வந்த முஸ்லிம்களில் அதிகமாக தமிழ்நாடு, கேரளப் பகுதிகளில் இருந்து வந்தார்கள். இந்தியாவின் முதலாவது பள்ளிவாயல் கேரளாவில் தான் இருக்கிறது. சேரமான் ஜூம்மா மசூதி (Cheraman Juma Masjid) கி.பி 612 இல் அதாவது இஸ்லாம் தோன்றி ஓரிரு ஆண்டுகளில் கட்டப்பட்டது.

முஸ்லிம் மேமன் சமூகத்தினர் அன்றைய இந்தியாவின் சிந்து பகுதியில் இருந்து வந்தவர்கள். பாகிஸ்தான் உருவானபோது அப்பகுதி பாகிஸ்தானுக்குள் அடங்கியது. அதன் பின்னர் அவர்கள் பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்றே இலங்கையில் அழைக்கப்பட்டார்கள்.

கொழும்பு புறக்கோட்டை ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாகவும், சான்றாகவும் திகழ்கிறது. கிழக்கிலங்கையில் “சம்மாந்துறை” என்கிற பிரதேசம் எப்படி பெயர் பெற்றது என்பதற்கு பல கதைகள் கூறப்படுவதுண்டு. “சம்மான்காரர்கள்” குடியிருக்கும் ஊர் என்பதும் அதில் ஒரு பிரபலமான கூற்று. 

தொழில் முனைப்புக்காக தென்னிந்தியாவில் இருந்து வந்த முஸ்லிம் வியாபாரிகள் மாலை வேளைகளில்  பள்ளியின் பெரும்பகுதியில் அமர்ந்து ஓய்வெடுப்பது அப்போது வழக்கமாக இருந்தது.

அவ்வாறு வியாபாரத்துக்காக வந்தவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளை பொலிஸ், நீதிமன்றம் என்றெல்லால் செல்லாமல் இந்தப் பள்ளியில் ஒரு பகுதியில் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்திருக்கும் பல புத்திஜீவிகளிடம் முறையிட்டு தீர்த்துக்கொண்டுள்ளார்கள்.  இவ்வாறு முரண்பாடுகளை மத்தியஸ்தம் செய்து தீர்த்து வைக்கப்பட்டுவந்த இடமாக இந்த பள்ளிவாயல் இருந்ததால் “சம்மான் + கோடு” (பஞ்சாயத்து) என்று அழைக்கப்பட்டிருக்கிறது. சம்மான்கள் கூடி வாழ்ந்த இடமாக திகழ்ந்ததால் 'சம்மான் கோட்டை’ என்று அழைக்கப்பட்டதாகவும் அப்பெயர் தோன்றுவதற்கான இன்னொரு காரணம் கூறப்படுவதுண்டு.

சம்மான்காரர்களின் முயற்சியில் புறக்கோட்டைப் பகுதியில் அன்றாடம் வியாபாரம் செய்கிற, கொள்வனவில் ஈடுபடுகிற, சந்தையில் சந்தித்துக்கொள்கிற முஸ்லிம்கள் அங்கே ஐந்து நேரத் தொழுகைக்கு ஒரு முறையான பள்ளிவாசலின் தேவையை உணர்ந்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் பள்ளிவாசலின் தேவை அதிகமாக உணரப்பட்டது. அதன் விளைவாக இந்திய வர்த்தகர்கள் பலர் ஒன்றுகூடி இந்த நிலத்தை வாங்கி அங்கே பள்ளிவாசலைத் கட்டத் தீர்மானித்தார்கள். புறக்கோட்டையைத் தளமாகக் கொண்ட இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தப் பணியில் முன்னணி வகித்தாலும்,  புறக்கோட்டை முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் நிதி ஆதரவு கொடுத்தார்கள். 1908ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் ஆரம்பமாகின. ஒரே ஆண்டில் 1909இல் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் தொழுகைக்காக வக்பு செய்யப்பட்டது.

குறிப்பாக இலங்கைக்கு அண்மையாக தமிழகத்திலிலுள்ள “அதிரை” என்கிற கரையோர பிரதேசத்தில் இருந்து வந்த வர்த்தகர்களாலேயே சம்மாங்கோடு பள்ளிவாயல் கட்டப்பட்டதென அவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெரியவர்கள் இன்றும் கூறி வருவதை இணையத்தளக் கட்டுரைகளில் காண முடிகிறது. அப்போதெல்லாம் படகுகளில் வரும் வர்த்தகர்களுக்கு கொழும்பு துறைமுகத்தின் தூரத்தில் கடலில் இருந்தே இந்தப் பள்ளிவாயலின் கோபுரம் தெரியுமாம்.

இலங்கை வாழ் ஆப்கான் முஸ்லிம்கள் நூறாண்டுகளுக்கு முன்னர்

தூரரக்கனவு (A Distant Dream) என்கிற வரலாற்றுப் நாவலை எழுதிய விவியன்ன டொக்கர்ட்லி (Vivienne Dockerty) தூரகிழக்குக்கான கடற்போக்குவரத்துப் பாதையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பை நெருங்கும்போது ஜாமி-உல்-அழ்ஃபர் பள்ளிவாயல் கொழும்பை நெருங்கிவிட்டதை நமக்கு உணர்த்தும் என்று எழுதுகிறார். 

இப்பள்ளியின் நிலத்தை நன்கொடையாக வழங்கி இப் பள்ளியின் நிர்மாண வேலைகளுக்கு முன்னின்று உழைத்தவர்கள் அதிராம் பட்டணம் கொ. முஹம்மது அப்துல்லா ஆலிம் ஸாஹிபு, கொ. செய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் ஆகிய இரு சகோதரர்களாவர். அவர்களுடன் காயல்பட்டணம் P. S. K.V. பல்லக் வெப்பை. P.B.உம்பிச்சி ஆகிய தனவந்தப் பிரபுக்களும் இதன் நிர்மாணிப்பில் ஊக்கமுடன் உதவியிருக்கிறார்கள். பெரும்பாலும் தென்னிந்திய முஸ்லிம்களின் பொருளுதவியினாலேயே இப்பள்ளி வாயல் கட்டப்பட்ட தென்றலும், இலங்கைவாழ் முஸ்லிம்கள் சிலரும் மனமுவந்து உதவ முற்பட்டதால், அவர்களுடைய உதவியும் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பள்ளியின் தர்மச் சொத்தே இதனை நிர்வகிக்கப் போதுமானதாக இருக்கிறது என்பார்கள். அதன் வருவாயினால் இந்த பள்ளி வாசலுக்கு சொந்தமான சொத்துக்கள் இதனை இயக்கப் போதுமானதெனவும் கூறப்படுவதுண்டு.

இப்பள்ளியின் நுழைவாயில் சென்றதும், வலதுபுறமுள்ள சுவரில், இப்பள்ளியின் சிற்பியின் பெயரும் ஆண்டும் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன:

H. L. SAIBOO - LEBBE ARCHITECT 1908

கலைநுட்பத்தின் பின்னணி

இந்தக் கட்டிடக் கலைஞரான ஹபிபு லெப்பை சைபு லெப்பை எழுத்தறிவற்ற ஒருவராக இருந்த போதும் இந்தப் பள்ளிவாசலின் கட்டிட கலைத்துவ நுட்பத்தை காண்பவர்கள் எவரும் அதை நம்ப மாட்டார்கள். அவரும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய ஒரு வர்த்தகர் தான்.

அவர் இந்த பள்ளிவாசலுக்கான கட்டிடத் தோற்றத்தை வரைந்து இந்திய வர்த்தகர்களிடம் கொடுத்தபோது அதனை ஒரே தடவையில் ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள். அவர் வரைந்திருந்தது இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையின் சாயலைக் கொண்ட  (Indo-Saracenic இது Indo-Gothic, Mughal-Gothic, Neo-Mughal, Hindoo style என்றும் அழைக்கப்படுகிறது) வரைவு அது. இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய பேரரசில் குறிப்பாக பிரித்தானிய இந்தியாவிலும், சுதேச சமஸ்தானங்களில் பொது மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட ஒரு கட்டிடக்கலை பாணியாகும். இது இந்திய-இஸ்லாமியக் கட்டிடக்கலை, குறிப்பாக முகலாயக் கட்டிடக்கலை, பிரித்தானிய இந்திய பாரம்பரிய பாணி, சிலசமயம் கொஞ்சம், இந்துக் கோயில் கட்டிடக்கலை ஆகியவற்றின் அலங்கார கூறுகளைக் கொண்ட கலப்பு வடிமாக இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் கூட இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலைக்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்தியாவில் சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் இந்த பாணியிலான பலியாய அரச பொதுக் கட்டிடங்களைப் பார்க்கலாம். இலங்கையில் இதற்கு ஒப்பான மேலும் இரு கட்டிடங்களைக் கூறுவதாயின் பெரிய கண் ஆஸ்பத்திரியாக இன்று இயங்கும் “Victoria Memorial Building”, அடுத்தது மருதானை தொழில்நுட்பக் கல்லூரி. சாரசென் என்பது மத்திய கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள அரபு மொழி பேசும் முசுலிம் மக்களைக் குறிக்க இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்பதமாகும்.

இலங்கையின் பல பள்ளிவாயல்களின் வெளித்தோற்ற அமைப்பில் பொதுவான ஒரே சாயலைக் கூட காண முடியும் ஆனால் சம்மாங்கோடு பள்ளிவாசலின் சாயலில் வேறொன்றையும் காண இயலாது. கண்டியில் இதன் சாயலில் சிகப்பு பள்ளிவாயல் (Red Mosque) என்று ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் அது அமைப்பில் மிகவும் வேறுபட்டது.

சம்மாங்கோடு பள்ளிவாயல் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாமெக் பள்ளிவாசலின் (Jamek Mosque) சாயலைக் கொண்டிருப்பதாகக் கூறுவோரும் உளர். அதில் ஓரளவு உண்மையும் உண்டு. ஆனால் இந்த இரண்டும் ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை. அப்படி கட்டிக்கொண்டிருந்த காலத்தில் இந்த இரண்டுமே பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் இருந்தது. 

இது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது புத்தளத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரைக்கார் பரம்பரையினர் தமது அன்பளிப்பாக தேக்கு மரமொன்றை வழங்கினார்கள். இன்றும் வாசலின் நடுப்பகுதியில் இரண்டு மாடிகளையும் இணைப்பதாக அது இருக்கிறது.

பள்ளியின் மேல் உயரத்தில் பதினான்கு கோபுர மினார்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பெரியனவாகவும், ஏனையவை ஒரே அளவு உயரத்தையும் கொண்டுள்ளன. கூரையின் ஒவ்வொரு முனையிலும் ஒலிபெருக்கிகள் உள்ளன. அவை எட்டுத்திக்கிலும் பாங்கோசையை பரப்பும் வகையில் உள்ளன. 

கட்டப்பட்ட காலத்திலேயே சுமார் 1500 பேர் ஒரே தடவையில் தொழுகையில் கலந்துகொள்ளக் கூடிய வகையில் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் சுமார் 500 பேரளவில் தான் கலந்து கொண்டார்கள். காலப் போக்கில் அதன் கொள்ளளவையும் தாண்டி ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

வெள்ளிகிழமை ஜூம்மா தொழுகை இங்கே மிகவும் விசேடமானது. பள்ளிவாசலில் இடமின்றி பள்ளிவாயல் அமைந்துள்ள இரண்டாம் குறுக்குத்தெருவின் வீதியிலும் மெயின்வீதி, பேங்க்ஷால் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பாதையில் குழுமியிருப்பதைக் காணலாம்.

1975 ஆம் ஆண்டு பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்காக ஒரு திட்டம் தீட்டப்பட்டு இது பெருப்பிக்கப்பட்டது. ஜூம்ஆ நாட்களில் சுமார் 7000 பேரும் ஏனைய நாட்களில் 3000 பேரும் வந்து சென்றார்கள்.

ஜூம்ஆ நாட்களில் தொழுகைக்காக வரும் பலர் நடு வீதிகளில் நின்று தொழுகிற அசௌகரிய நிலையும், நோன்பு காலங்களில் அதுவே பல மடங்காக பெருகிவிடுகிற நிலையும், மழை, வெயில் நேரங்களில் ஏற்படுகிற அசௌகரியங்களின் காரணமாகவும் இதன் விஸ்தரிப்புக்கான தேவை இன்னும் அதிகமாக உணரப்பட்டது. இதற்கான பணி ஹாஜி ஓமர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டது (Haji Omar Trust).

அதன் மூலம் பிரதான வீதியில் (மெயின் வீதி) பல வருடங்களாக இயங்கிவந்த தொடராக இருந்த பெறுமதிமிக்க 34 கடைகள் வாங்கப்பட்டன. பின்னர் அவை இடிக்கப்பட்டு புதியதொரு பிரமாண்டமான பள்ளிவாயல் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் பிரதான பள்ளிவாயலுடன் “ட” வடிவில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் அதே சிகப்பு வெள்ளை நிறத்துடன் அதே இந்தோ சாரசெனிக் வடிவத்தில் மெயின் வீதியில் இன்று அதிசயிக்கத்தக்க கலை நுட்பத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. சுமார் 50,000 சதுர அடியில் நான்கு மாடிக் கட்டிடமாக எழுந்துள்ள இப்பள்ளிவாயலில் இன்று 10,000க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தொழும் வசதியைக் கொண்டிருக்கிறது. பல ஓய்வறைகள், குளியலறைகள், கழிவறைகள் மண்டபம் என ஏராளமான வசதிகளுடன் நவீன வசதிகளையும் கொண்டிருக்கிறது. 

நூற்றாண்டையும் தாண்டிய வரலாற்றைக் கொண்டதும், இலங்கையில் அதிகமாக தொழவரும் பள்ளிவாயலாகவும் இது திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

நன்றி - தினகரன் 16.10.2022

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates