Headlines News :
முகப்பு » , , , , » இன்றைய மெயின் வீதியும் அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -2) - என்.சரவணன்

இன்றைய மெயின் வீதியும் அன்றைய மயானம்! (கொழும்பின் கதை -2) - என்.சரவணன்

காலிமுகத்திடல் மயானமாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் மயானமாக பயன்படுத்தப்பட்டது புறக்கோட்டை மயானம் தான். ஆம் இலங்கையின் நெருக்கடியான சந்தைப் பகுதியாக இன்று இருக்கிற புறக்கோட்டையில் இன்னும் சொல்லப்போனால் கெய்சர் வீதி (Keyzer street), மெயின் வீதி (Main street) அமைந்திருக்கும் பகுதியில் தான் அன்றைய பெரிய மயானம் இருந்தது. வுல்பெண்டால் மயானம் அப்போது மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கே புதைப்பதற்கான கட்டணமும் அதிகமாக இருந்தது. 

BALDAEUS 1672இல் வரைந்த கொழும்பின் வரைபடம்

எனவே புறக்கோட்டை மயானம் தான் மாற்று மயானமாக அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அப்போது “கொழும்பு கோட்டை”யின் மதில்களுக்கு வெளிப்புறமாக இருந்த இந்தப் பகுதியில் மயானம் இருந்தது. இப்படியான மயானங்களை மேற்கத்தேய கிறிஸ்தவர்கள் தேவாலயத்தோடு தேவாலயத்தின் அங்கமாக வைத்துக்கொள்வது வழக்கம். இறந்தவரின் இறுதிக் கிரியைகள், பூசைகள் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்டு அத்தேவாலயத்துகுரிய மயானத்தில் புதைக்கப்பட்டபின் அது பற்றி தேவாலயக் குறிப்புகளில் குறித்து வைத்துக்கொள்வது நெடுங்காலமாக இருக்கும் வழக்கம். பிறப்பு, இறப்பு, திருமண, திருமுழுக்கு போன்ற குறிப்புகளைக் குறித்து வைத்துக்கொள்வதால் இன்றும் பலர் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. மேலும் இந்த மயானங்கள் சுதேசிய சாதாரணர்களைப் புதைக்கும் மயானமாக இருக்கவில்லை. இவை காலனித்துவ நாட்டு சிவில், இராணுவ, அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், ஊழியர்களையும், அவர்களின் குடும்பங்களையும், கிறிஸ்தவ பாதிரிகளையும் புதைக்கும் மயானங்களாகவே இயங்கின.

ஒரு காலத்தில் அதிகமான இறுதிக்கிரியைகளை செய்தவராக அங்கிலிக்கன் பாதிரியாரான பெய்லி (Anglican Archdeacon Bailey) பிரபலம் பெற்றிருந்ததால் பகிடியாக ‘Padre Bailey’s Go-Down’ என்று அந்த இடத்தை அழைத்தார்களாம்.


அன்றைய ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி லூவிஸ் பென்றி (Lewis, J. Penry) பிற்காலத்தில் காலனித்துவ காலத்தில் இருந்த மயானங்களில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய தேவாலயப் பதிவுகளை தொகுத்து “List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated” என்கிற ஒரு பயனுள்ள நூல் ஒன்றை 1913ஆம் ஆண்டு அரசாங்க அச்சகப் பதிப்பின் மூலம் வெளியிட்டார். பல ஆய்வுகளுக்கும் பயன்பட்ட நூல் அது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கண்டி ஒப்பந்தம் நிகழ்ந்து மூன்றாண்டுகளில் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பட்டிபொல தலைமையில் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து நிகழ்ந்ததை அறிவீர்கள். அதில் கொல்லப்பட்ட சில ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் நினைவுக் கல்லறைகளும் காலிமுகத்திடலில் இருந்ததாக லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களைப் புதைக்கும் மயானமாகத் தான் இது பேணப்பட்டது. 1866 ஆம் ஆண்டு பொரல்லை கனத்தை மயானம் இலங்கை வாழ் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்படும்வரை கொழும்பில் சுதேசிகளுக்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட மயானம் இருக்கவில்லை. இந்து, முஸ்லிம்களும், ஏனைய சகல கிறிஸ்தவ பிரிவினரும் கூட எந்த வர்க்க வேறுபாடுமின்றி அடக்கம் செய்யும் இடமாக பொரல்லை கனத்தை மயானம் ஆனது.

1870 இல் காலிமுகத்திடல்

இராணுவப் பாவனைக்கு

ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியின் இராணுவ மூலோபாயப் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் கருதியும், மயானத்தில்  அங்கு உடல்களைப் புதைப்பதை நிறுத்தி அங்கிருந்த கல்லறைகளை பொரல்லைக்கு இடம்மாற்றிவிட்டு அதை அப்படியே மூடிவிட்டார்கள். அந்த இடத்தை இராணுவப் பாவனைக்காக பயன்படுத்தினார்கள். முதலாம் உலக யுத்தம் முடியும் வரை அது இராணுவத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அதே இடத்தில் தான் பிற்கால இலங்கையின் இராணுவ தலைமையகமும் அமைக்கப்பட்டது.

அதுபோல கடற்படைத் தலைமையகமும் அங்கிருந்து அத்தனைத் தூரமில்லை. இராணி மாளிகையும் (இன்றைய ஜனாதிபதி மாளிகை) மிக அருகாமையில் தான் அமைந்திருக்கிறது. இதைச் சூழத் தான் பிற்காலத்தில் இலங்கையின் பாரளுமன்றம் (இன்றைய ஜனாதிபதிச் செயலகம்), பல ஹோட்டல்கள், மத்தியவங்கி, உள்ளிட்ட இலங்கையின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப் பகுதியும் அமைந்தது.

அதுபோல கண்டி ராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இயங்கிய ஜோன் டொயிலி தனது நாட்குறிப்பில் பலர் பற்றிய விபரங்களையும் பதிவிட்டிருக்கிறார். அதில் மேஜர் பெய்லட் பெய்லி பெயிலி (Major Bayley Bayly) பற்றி குறிப்பிடும்போது; 1779 இல் பிறந்த அவர் பிரெஞ்சுப் போரில் ஈடுபட்டபோது கைதுக்குள்ளாகி விடுதலையானார். பின்னர் எகிப்தில் இருந்த ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்து விருதுகளைப் பெற்றார். 88 வது படைப்பிரிவில் லெப்டினன்டாக  கடமையாற்றி 1814 இல் இந்தியாவிலும் பின் இலங்கையில் 1815 கண்டிப் போரிலும், 1817இல் ஊவா கிளர்ச்சியை எதிர்த்தும் போரிட்டு தளபதி நிலைக்கு உயர்ந்தார். 1818 இல் மூன்று கோரளைகளின் அரசாங்க பிரதிநிதியாக ஆகி இறக்கும் வரையிலும் அப்பதவியில் இருந்தார் என்றும் அவர் 10.02.1827 அன்று இறந்தார் என்றும் அவர் காலிமுகத்திடல் மயானத்தில் புதைக்கப்பட்டார் என்றும் டொயிலி தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். (1)

Christ Church - Galle Face

காலிமுகத்திடல் மயானத்தின் தேவாலயமாக 1853 இல் CMS சேர்ச்சுக்கு சொந்தமான தேவாலயம் அன்றைய காலிமுகத்திடலில் இருந்தது. இன்றும் அந்த Christ Church - Galle Face தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு பின்னால் உள்ளது. ஆக அப்போது இறந்தவர்கள் பலரது இறுதிப் பூசைகள் அங்கே நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தேவாலயம் அதிக காலம் தமது மயானமாக காலிமுகத்திடலைப் பயன்படுத்த முடியவில்லை.

1862 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் 9வது இலக்கத் தீர்மானத்தின்படி கொழும்பு பாதுகாப்பு அரணுக்குள் இருக்கிற காலிமுகத்திடல் மயானத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2) 1862 நவம்பர் 19 அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் (Government Gazette) இதைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அன்றைய United Church க்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்கிற விதிகளை நீக்கி பிரிட்டிஷ் குடிமக்களின் அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பியர்களுக்கு மட்டுமே காலி முகத்திடல் மயானத்தில் அடக்கம் செய்ய முடியும் என்று ஆளுநர் மூலம் அறிவிக்கப்பட்டது.

காலிமுகத்திடல் மயானம் மூடப்பட்டபோது அங்கே இருந்த பல நினைவுக் கல்லறைக் கற்கள் கனத்தை மயானத்துக்கு மாற்றப்பட்டது. இன்றும் கொழும்பு கனத்தை மயானத்தில் காலிமுகத்திடல் பிரிவு என்கிற ஒரு பிரிவு இருப்பதை அவதானிக்கலாம்.(3)

விக்ரர் ஐவன் “அர்புதயே அந்தறய” என்கிற தலைப்பில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் புகைப்படங்களைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். அதில் காலிமுகத் திடல் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“ஜனவரி 1803 இல், பிரிட்டிஷார் கண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்தனர், படையெடுக்கும் படைகளை தோற்கடித்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். போரில் ஏராளமான ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர், அதுமட்டுமன்றி பின்வாங்கிய இராணுவம் மலேரியா நோய்க்கு இலக்காகி இறந்தனர். மலேரியாவால் இறந்த வீரர்களுக்கு அடக்கம் செய்ய இடம் இல்லாததால், தற்போது காலி முகத்திடல் வளாகம் அமைந்துள்ள பகுதி மயானமாக மாற்ற வேண்டியிருந்தது...”

வுல்பெண்டால் மயானம்

டச்சு ஆட்சியில் கொழும்பு கோட்டையின் தேவாலயமாக வுல்பெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் 1749 இல் தான் டச்சு அரசின் கீழ் அமைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து பார்த்தால் மேட்டில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் தெரியும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. கொழும்பு விவேகானந்தா மேட்டில் பலரும் வுல்பெண்டால் தேவாலயம் தான் அது. கோட்டையிலிருந்து ஒரு மைல் தொலைவில் அது அமைக்கப்பட்டிருந்து. இந்த தேவாலயத்தோடு ஒட்டி இறந்தவர்களுக்கான மயானமும் இருந்தது.

அடுத்த இதழில்....

உசாத்துணை
  1. Diary Of Mr. John Doyly, Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1917 Vol.25
  2. “No. 9 of 1862: As Ordinance for restricting use of the Galle Face Burial Ground to the Garrison of Colombo, and to make other provision in respect thereof” (A Revised Edition of the Legislative Enactments of Ceylon: Volume I 1656-1879, Colombo, George J.A.Skeen, Gevernment Printer, Ceylon, 1900)
  3. Napoleon Pathmanathan, The History of Christ Church, Galle Face, (Formerly called the Colombo Mission Church of C.M.S )
நன்றி - தினகரன் 07.11.2021



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates