Headlines News :
முகப்பு » , , , , » விஜேவீரவை மீட்க - யாழ் கோட்டை சிறையுடைப்பு சமர் - செங்கை ஆழியான்

விஜேவீரவை மீட்க - யாழ் கோட்டை சிறையுடைப்பு சமர் - செங்கை ஆழியான்

 

இக்கட்டுரை 1995 இல் செங்கை ஆழியான் என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட கலாநிதி க.குணராசா எழுதிய "யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு" என்கிற நூலில் வெளிவந்த கட்டுரை. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் எட்டிய நிலையில் அந்த கிளர்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக ஜே.வி.பியின் தலைவர் றோகன விஜேவீரவை மீட்பதற்காக நிகழ்ந்த சமர் பற்றியது இக்கட்டுரை. சிங்களத்தில் பல நூல்களிலும், கட்டுரைகளிலும் அத்தாக்குதல் பற்றி வெளிவந்திருந்தாலும் தமிழில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த இக்கட்டுரையை தற்செயலாகக் கண்டு உங்களுடன் பகிர்கிறோம். உண்மையில் யாழ் கோட்டையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன்னீல் கோட்டை (Hammenhiel) என்று அழைக்கப்படுகிற கோட்டையில் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
05. ஏப்பிரல், 1971.
நள்ளிரவு 11.30 மணி. - யாழ்ப்பாண நகரம் நல்ல உறக்கத்தின் தழுவலில் ஆழ்ந் திருந்த வேளையில், யாழ்ப்பாணம் கோட்டைப்பக்கம் இருந்து துப்பாக்கிகளிலிருந்து விடுபட்ட சன்னங்கள் வெடித்துச் சிதறு கின்ற சத்தம் எழுந்தது. அமைதியான யாழ்ப்பாணத்தின் மோனத் தூக்கத்தை அத்துப்பாக்கி வெடிச்சத்தம் சிதைத்தது ஆங் கிலேயர் காலத்திற்குப் பின்னர் அப்படியான தொடர்ச்சியான துப்பாக்கி வெடிச்சத்ததை யாழ்ப்பாணம் கேட்டதில்லை. சுதந்திரமடைந்த பின்னர் அது தான் முதன் முதல் தொடர்ந்து கேட்ட துப்பாக்கிச் சத்தம். அது தான் முதன் முதல் யாழ்ப் பாணத்து மக்களின் நித்திரையைக் குழப்பிய துப்பாக்கிச்சத்தம். 

அதன் பின்னர் யாழ்ப்பாண மண்ணில் இன்னமும் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் ஓயவில்லை. நித்திரைக்கு ஒரு தாலாட்டு மாதிரி துப்பாக்கிவெடிச்சத்தம் அவசியும் - போலாகிவிட்டது இன்று. 

ஆம். யாழ்ப்பாணக்கோட்டைச் சிறைச்சாலையில் சிறை பட்டிருக்கும் தங்கள் இயக்கத்தின் மாபெருந்தலைஎன் ரோகன விஜயவீரவை, மீட்டுச் செல்வதற்காக தென்னிலங்கையிலிருந்து இங்கு வந்த ஜனதா எக்சத் பெரமுன என்ற ஜே.வி.பி இயக் கத்தினரின் மீட்புத் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. யாழ்ப் பாணம் பொலிஸ்நிலையத்தையும் யாழ்ப்பாணக் கோட்டைக் குள் புகுந்து சிறைச்சாலையும் ஜே வி பி. இயக்கத்தினர் முற்றுகையிட்டுத் தாக்கினர். 

அக்காலத்தில் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் எந்நேரமும் சர்வசாதாரணமாக உட்சென்று வரலாம். மாலை வேளைகளில் நேரம் கிடைத்தால் கோட்டை உள் மைதானத்தில் விளையாடி விட்டும் வரலாம். ஆக சிறைச்சாலைப் பகுதியில் மட்டும் ஜெயிலர்கள் காவலிருப்பார்கள்.

இலங்கைச் சுதந்திரத்தின் பின் முதன் முதல் யாழ்ப்பாணக் கோட்டைத்தாக்குதல் நடந்தது. ஏன்? எதற்கு? 

ஸ்ரீ லங்காவில் முதலாளித்துவ ஆட்சியாளருக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி மக்களாட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் கெரில்லா யுத்தத்தை ஜாதிக எச்சத் பெரமுன இளைஞர்களைச் சேர்த்து நடாத்தியது. அதன் தலைவர் றோகன  விஜயவீரவின் கோட்பாடு மிகத் தெளிவானது இலகுவானது. "எந்த ஒரு புரட்சியும் பாட்டாளிகளினால் ஆயுதம் எடுக்காமல் வெற்றியடைந்ததில்லை. ஆயுதப்போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தைச் சமாதானமாகக் கையளித்துமில்லை . அரசயந்திரங்கள் தாக்சப்பட வேண்டும்.'' 

1971 இல் நாடாளாவிய புரட்சியொன்றினை தோற்றுவிக்க றோகன விஜயவீர முயன்றார் ஆனால், அதற்கு முன் 13, மார்ச், 1971 இல் அம்பாறையில் வைத்துப் பொலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரியக்கத்தைச் சேர்ந்த லால் சோமஸ்ரீ, பிரேமரத்ன, நிசங்க விஜயரத்ன, ஹெலி சேனனாயக்க ஆகியோரும் கைதாகினர். அவர்கள் முத லில் மட்டக்களப்புச் சிறையில் வைக்கப்பட்டனர். பின்னர் கொழும்பு மகசின் சிறையிலும் கொழுப்பு றிமான்ட் சிறையிலும் வைக்கப்பட்டனர் அங்கு இவர்களை வைத்திருப்பதில் புாதுகாப்புக் கஷ்டங்கள் இருப்பதை அறிந்து, 14. மார்ச் இராணுவ வாகனங்களில் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர். அன்றே நாடு முழுவதும் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. வெகு இரகசியமாக இது நடந்தாலும் சிறை இடமாற்றும் வெளியில் தெரியவந்தது. 18 ஆம் திகதி றோகன விஜய வீரவின் தாயார் மகனைப்பார்த்துச் செல்ல, யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைக்கு வந்தார். -20 ஆந்திகதி எஸ் டி பண்டாரநாயக்கவும் பாத்தயாவும் (இது வேறு மாத்தயா, இவரின் பெயர் உயன் சொட) காரில் யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களால் கோட்டை சிறையில் இருந்த விஜயவீரவைப் பார்க்க முடியவில்லை. அனுமதி கிடைக்கவில்லை. எஸ் டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால அங்கத்தவராக இருந்தவர். கம்பஹா பாரளுமன்றப் பிரதிநிதியாகவும் விளங்கியவர். ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், பீக்கிங் கம்யூனிசக்கட்சி அங்கத்தவரானார். பின்னர் ஜே வி பி. ஆதரவாளரானார்.

21, மார்ச் 1971 - யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலை யிலிருந்து, விஜயவீரவும் அவருடன் லால் சோம ஸ்ரீ, பிரேமரத்ன ஆகியோரும் கல்முனை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட னர். நீதிமன்றத்து அடைப்புக் கூட்டினுள் இருக்கும் போது , விஜயவீர மற்றைய இருவருக்கும் தெளிவாக ஒரு தாக்குதலிற்கான விளக்கத்தைக் கொடுத்தார். 'என்னைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு 500 ஜே வி. பி. போராளிகள் யாழ்ப்பாணம் வர வேண்டும், சிறையைத் திட்ட மிட்டு உடைத்து என்னை உடன் விடுவிக்க வேண்டும். அவ்வாறு வருபவர்களுடன் லால் சோமஸ்ரீ அல்லது பிரேமரத்ன கூட வந்து நான் இருக்கும் சிறை அறையைக் காட்ட வேண்டும். இதனை இன்று ஜே.வி.பி.யின் அடுத்த தலைவர்களான சனத் என்பவரிடம் அல்லது பியதிலகவிடம் கூறுக' என விஜயவீர தகவல் அனுப்பினார். கல்முனை நீதிமன்றத்தில் சோமஸ்ரீயும் பிரேமரத்னவும் எதிர்பார்த்தது மாதிரி விடுதலையாகினர். விஜயவீர மீண்டும். கோட்டைச்சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். 

விஜயவீரவின் தகவல் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டது. திட்டம் வகுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்குச் சிலர் அனுப்பப்பட்ட னர்.

28 ஆந்திகதி எஸ். டி.. புண்டாரநாயக்க கொழும்பிலிருந்து தொலைபேசிமூலம், யாழ்ப்பாணத்திலிருக்கும் தன் நண்பர் பாஸ்கரன் என்பவரை அழைத்தார். காலை யாழ்தேவியில் யாழ்ப்பாணம் வருவதாகவும் புகையிரத நிலையத்தில் சந்திக்கு மாறும் தகவல் கொடுத்தார். பாஸ்கரன் அவரை யாழ்ப்பாணப் புகையிரதநிலையத்தில் சந்தித்தார். பண்டாரநாயக்கவுடன் மஞ்சு என்பவரும் வந்திருந்தார். பாஸ்கரனின் காரில் ஏறி அவரின் வீடுசென்றனர். சுன்னாகத்தைச் சேர்ந்த நாகரத் தினம் என்பவரையும் சந்தித்தனர். மறுநாள் யாழ்ப்பாணக் கோட்டைச்சிறைச்சாலைக்குச் சென்று விஜயவீரவைச் சந்திக்க முயன்றனர். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் பண்டாரநாயக்க கொழும்பு திரும்பிச்செல்ல நேர்த்தது. ஏப்பிரல் 1 ஆந் திகதி மாத் தயா, யாழ்ப்பாணத்திற்கு வந்த காரை நகருக்குச் சென்று. திலகரத்ன என்ற கடற்படை வீரனைச் சந்தித்தார், கடற்படை வீரர்களில் சிலர் விஜயவீரவை விடுவிக்க உதவுவதாகக் கூறினர். ஏப்பிரல் 3 ஆந்திகதி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்த மஞ்சு. பாஸ்கரனைச் சந்தித்து தனக்கு கொஞ்சம் டைனமயிற் வெடி குண்டுகள் செய்யத் தேவை எனக் கேட்டார் அவரைப் பாஸ்கரன், வேலாயுதம் என்பவரிடன் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். மஞ்சு கேட்ட டைனமயிற் கிடைக்கவில்லை - அவர் கொழும்புக்குத் திரும்பிச்சென்றார். 

விஜயவீரவைச் சிறையுடைத்து விடுவிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நிகல் கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நடந்தேறின ஏப்பிரல் 5 ஆந்திகதி யாழ்ப்பாணக்கோட்டைச் சிறைச்சாலை தாக்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ஏப்பிரல் 5 ஆந்திகதி, அதிகாலை கொழும்பிலிருந்து வித்தியோதய மாணவர்கள், ஆயுதங்களை மறைவாக்கியபடி, ஈபேட் சில்வா கம்பனியாரின் பஸ் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு வந்தனர் . 250 கைக்குண்டுகள் யாழ்தேவி வழி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தத் தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கிலால் சோம ஸ்ரீ வந்தார். இன்னொரு பிரிவினர், பியதிலக தலையையில், 100 பேர் கொண்ட குழுவாக பஸ்சில் வந்தனர். அவர்களால் புளியங்குளத்திற்கு இப்பால் வரமுடியாது போனது. பியதிலகவின் தலைமையில் வந்த குழுவினர் புளியங்குளத்தில் தரித்து நிற்கின்ற சங்கதி, முதலில் யாழ்ப்பாணம் வந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை .
அவர்கள் திட்டமிட்டபடி சரியாக நள்ளிரவு 11-30 மணிக்கு யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தையும் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறைச்சாலையையும் தாக்கத்தொடங்கினர். கோட்டைக்குள் புகுந்த அவர்கள் சிறைச்சாலையை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் சிறைக்காவலர்கள் பதுங்கிக்கொண்டனர். விஜயவீரவின் சிறை அறைக்குக் காவலிருந்த ஜெயில் கார்ட் அப்புக்குட்டி இரத்தினம், பெண்கள் சிறைச்சாலைக்கு அருகிலிருந்த படிகளினுடாகக் கோட்டை மதிலிற்குப் போராளிகள் ஏறு வதைக் கண்டார். அவ்வாறு ஏறிச்செல்லும் போது ஒரு கைக் குண்டினைப் பெண்கள் சிறைச்சாலைக் கூரைமீது வேணுமென்றோ, தற்செயலாகவோ போட்டார்கள். அது கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்து பெண் வார்டர் செல்லம்மா என்பவரின் வலது காலைத் துண்டித்தது. இவரே முதன் முதல் வெடிகுண்டிற்குக் காலைக் காவு கொடுத்த யாழ்ப்பாணப் பெண் யாழ்ப்பாணப் பொலிசாரின் தாக்குதல் உக்கிரமாகவிருந்தது. லால் சோம ஸ்ரீ எதிர்பார்த்தமாதிரி, பியதிலகா குழுவினர் உதவிக்கு வரவில்லை. போராளிகள் பலர் காயமுற்றனர். கையிருப்பில் உள்ள சன்னங்களும் குண்டுகளும் முடிந்து வந்தன. யாழ்ப்பாணப் பொலீசார் எதிர்ப்பினை முறியடித்தபடி கோட்டைக்குள் பிரவேசித்தனர். அதனால் பின்வாங்கும்படி நேர்ந்தது. 

பின் வாங்கி எங்கு ஓடுவது? எப்படி ஓடுவது? தென்னிலங்கையி லிருந்து வந்த யாழ்ப்பாணம் எப்படிப்பட்டது என்பதை அறியாத பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலம் இடம் தெரியவில்லை. மத்தியானம் போல யாழ்ப்பாணத்திற்கு வந்து இரவு தாக்கு தலைத் தொடக்கினால் அவர்சள் எங்கு எப்படி ஓடுவது? லால் சோம ஸ்ரீ மட்டும் தப்பி யாழ்ப்பாண நகரத்திற்கு ஓடி வர முடிந்தது. அவரும் அன்று அதிகாலையே கைது செய்யப்பட் டார். ஊர்காவற்றுறை ஹமன் ஹீல் கடற்கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 

றோகன விஜயவீரவின் யாழ்ப்பாணக் கோட்டைச் சிறையுடைப்புமுயற்சி தோல்வியில் முடிந்தது. இச்சிறையுடைப்பு முயற்சி சம்பந்தமாகப் பின்னர் பலர் கைதாகினர். யாழ்ப்பாணத்தில் பாஸ்கரன், நாகரத்தினம் ஆகியோர் கைதாகிப் பின்னர் விடு தசையாகினர். 

வடமாகாணப் பொலீஸ் மா அதிபர் பின்னர் ''ஒரு இயக்கத் தின் தலைவர் கைதாகி யாழ்ப்பாணம் கோட்டைச்சிறைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறார். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் அவரைச் சிறையிலிருந்து தப்பவைக்க முயன்றனர். அவர்கள் தென்னிலங்கையிலிருந்து விசேஷ பஸ்களில் வந்திருந்தனர். அவர்களின் முயற்சி தோல்வி கண்ட தற்குக் காரணம் அவர்களின் திடசங்கற்பமின்மைக்குறை மட்டுமன்று; உரிய நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் வந்து சேராமையுமாகும்" எனக் குறிப்பிட்டார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates