Headlines News :
முகப்பு » , , , » ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நியாயத்துக்கு எதிராக வாதாடிய சேர்.பொன்இராமநாதன் - என்.சரவணன்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நியாயத்துக்கு எதிராக வாதாடிய சேர்.பொன்இராமநாதன் - என்.சரவணன்

தேசவழமைச் சட்டம் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளை கண்டிருக்கிறேன். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு பொதுக் குறைபாடு இருப்பதை அவதானிக்க முடிந்தது. மூலம் பற்றிய விபரங்களை சரியாக கூறப்படுவதில்லை. பின் வந்த ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளை பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்கிற போதும் அதன் மூலப் பிரதியை தேடிச் சென்று விபரங்களைத் முழுமையாக தந்தவர்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மேலும் முதன் முதலில் 1706 இல் அதைத் தொகுத்த க்ளாஸ் ஈசாக்ஸ்ஸின் பெயரைக் கூட ஒருவரும் ஒழுங்காக எழுதுவதில்லை. தமிழில் எழுதும்போது அருகிலேயே சரியான டச்சுப் பெயரை ஆங்கில எழுத்துக்களில் தந்ததில்லை. தந்தவர்களும் பிழையாகவே தந்து கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூட இதில் விதிவிலக்கில்லை. ஒரு இடத்தில் இடுகிற பிழை; அதன் பின் எழுதுகிற அனைவரும் அதையே ஈயடிச்சான் கொப்பியாக செய்து வருவதால் அவர்களும் அதே பிழைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு காரணமாக ஆகிவிடுகிறார்கள்.

குறிப்பாக நபர்களின் பெயர், இடங்களின் பெயர் என்பனவற்றை எனது ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடுகையில் அருகில் ஆங்கிலத்தில் சரியான பெயரைக் குறிப்பிட்டுவிடுவது எனது வழக்கம். மேலதிகமாக ஆராய தலைப்படுபவர்களுக்கு அந்த உறுதியான விபரங்கள் தேடுவதற்கு பேருதவியாக அமையும். இப்படிப்பட்ட குறைபாடுகளை இதற்கு முந்திய பல தமிழ், சிங்கள ஆய்வு நூல்களில் இருப்பதைக் கண்டு கடந்து வந்திருக்கிறேன். அவை எனக்கு ஏற்பட்ட சிரமம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக நான் எனது நூல்களில் கவனமாக அருகில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிடுவேன்.

இரு நாட்களாக முயற்சித்ததில் டச்சு மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன்னைய மேற்படி மூல ஆவணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது. நூறாண்டுக்கு முந்திய தேசவழமை பற்றி டச்சு மொழியில் எழுதப்பட்ட வேறு ஆவணங்களும் கிடைத்தன.

க்ளாஸ் ஈசக்ஸ்கின் பெயரையே எத்தனை ஆய்வாளர்கள் எத்தனை விதமாக எழுதியிருக்கிறார்கள் என்று இங்கே பாருங்கள்.

  • Claas Isaaks – பேராசிரியர் சிவத்தம்பி – யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் – 1993
  • Claas Isaakz - T.Sri Ramanathan – Tesawalamai -1962
  • Claas Isaaksz – Dr.H.W.Tambiah – The Law and Customs of The Tamils of Jaffna.
  • Claas Isaaksz - H.A.I.Goonatileke – A bibliography of Ceylon
  • Class  Isaaksz – Professor T.Nadaraja – The Administration of Justice in Ceylon Under the Dutch Gevernment 1656 - 1796 – Journal of the Ceylon Branch of the Royal Asiatic society – XII – 1968
  • Claas Isaaksz – Henry Francis Mutukisna of Lincold’s INN – A new Edition of The Thesawaleme or The Laws and customs of Jaffna – 1862
  • Claas Isaaksz – P.E.Pieris – Ceylon and the Hollanders (1658-1796) - 1918
  • Claas Isaacsz – Memoir of Hendrick Zwaardecroon, Commadeur of Jaffnapatam, 1697 (Translated 1911)
  • Claas Isaacsz – R.G.Anthonisz – Report on the dutch Records in the Government Archives at Colombo - 1907

வலது பக்கத்தில் கடைசி வரிக்கு முன்னைய வரியில் ஏப்ரல் 8ஆம் திகதி கிளாஸ் ஈஸாக்ஸ் புதைக்கப்பட்டதை கூறும் பதிவு

க்ளாஸ் ஈசாக்ஸ் இறந்ததும் 08.04.1718 அன்று ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு தேவாலய மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பது பற்றிய விபரங்களை அங்கிருக்கும் பதிவில் காண முடிகிறது. அதில் அவரின் பெயர் Isaak claas என்று காணப்படுகிறது. மேற்படி தேசவழமை சட்டத்தில் டச்சு மொழி மூல ஆவணத்தை நூறாண்டுகளுக்கு முன் 1919ஆம் ஆண்டு நெதர்லாந்தில் வெளியிடப்பட்ட “Bijdragen tot de Taal – Land – en Volkenkune” என்கிற நூலில் அதே டச்சு மொழியில் மீண்டும் முழுமையாக வெளியிட்டிருக்கிறார்கள். அத்தொகுப்பின் முடிவில் கையெழுத்திட்டுள்ள க்ளாஸ் ஈசாக்ஸின் பெயர் Claes Isaacqz என்று தான் இடப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை தேசிய சுவடிகூட திணைக்களம் 1943 இல் தொகுத்த Catalogue of the Archives of the Dutch Central Government of Coastal Ceylon,1640-1796 என்கிற நூலில் இலங்கை தொடர்பான டச்சு ஆவணங்களின் பெரும் பட்டியல் உள்ளது. அதில் தேசவழமை சட்டத்தை திரட்டிய கிளாஸ் ஈசாக்ஸ்ஸின் பெயர் தெளிவாக Claes Isaacqz என்று தான் இருக்கிறது.


ஒரு தகவலை தேடி எடுக்க வேண்டுமென்றால் எழுத்துப் பிழையின்றி சரியான சொல் கிடைத்துவிட்டால் தேடுபவர்களுக்கு இலகுவாகவும் இருக்கும், உறுதியான தகவல்களையும் தேடலாம், கால விரயம், தகவல் பிழைகள் என்பவற்றையும் தவிர்க்க முடியும். இதனை ஒரு உதாரணத்துக்காகத் தான் இங்கே வெளிப்படுத்துகிறேன். ஏனென்றால் இந்த குறை ஒரு போக்காகவே நிலைபெற்று தொடர்ந்து வருகிறது. இனி மற்றவர்களும் திருத்திக்கொள்ள உந்துவதே இக்குறிப்பின் நோக்கம். ஆய்வு முறையியலை கற்றுக்கொடுப்பவர்கள் இதனை வலியுறுத்தலாம். 

கட்டுரையில் மேலும் சுவாரசியமான தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் இறுதிக் கிரியையில் பறை முதலிய வாத்தியங்களையும் பயன்படுத்தி ஊர்வலமாகச் சென்று சடலத்தை எரிக்க முற்பட்டபோது ஆதிக்க சாதியினர் அதை எதிர்த்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீதிமன்றத்த்தை நாடினர். அவர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உயர்சாதித் தரப்பு குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டது. உயர்சாதித் தரப்பு மேன்முறையீடு செய்தனர். உயர்சாதியினர் சுப்ரீம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சேர் பொன் இராமநாதன் உயர் சாதியினருக்காக வாதாடினார். தேசவழமைச் சட்டத்தின்படி உயர்சாதியினர் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யும் உரித்துடையவர்கள் என்று எடுத்துக்காட்டி உயர்சாதியினருக்காக வாதாடினார்.

தேசவழமைச் சட்டம் எவ்வாறு ஒரு ஆதிக்க சாதி, ஆதிக்க வர்க்க, பிரதேசவாத சட்டம் என்பதை சுட்டுகிற கட்டுரைகளிலும், நூல்களிலும் இந்த வழக்கையும் ஒரு ஆதாரமாகக் காட்டுவது வழக்கம். இந்த வழக்கைப் பற்றிய முதற் தகவலை டி.ஸ்ரீ ராமநாதன் (T. Sri Ramanathan) எழுதிய “தேசவழமை” (Tesawalamai) என்கிற நூலில் இருந்து தான் ஆதாரம்காட்டி அனைவரும் எடுத்தாழ்வதைக் காண முடியும். ஆனால் அந்த நூலில் ஒரே ஒரு பந்திக்கு மேல் விபரங்கள் ஏதும் இல்லை. குறைந்த பட்சம் அந்த சம்பவம் எத்தனையாம் ஆண்டு நிகழ்ந்தது என்பது பற்றி கூட வேறு எவரும் குறிப்பிடுவதில்லை ஏனென்றால் டி.ஸ்ரீ ராமநாதனின் நூலில் கூட அந்த விபரம் கிடையாது.

எனது கட்டுரைக்காக அந்த வழக்கின் முழு நீதிமன்ற அறிக்கையையும் கடும் உழைப்பின் பின் தேடி எடுத்துவிட்டேன். கட்டுரை முடிந்து கொண்டிருக்கிறது. 


Share this post :

+ comments + 2 comments

சிறப்பான பணி. தொடருங்கள் சரவணன்.

ஐயா! தேசவழமைச் சட்டத்தினை தொகுத்தவரின் எந்தப் பெயர் ஐயா சரியானது? நீங்கள் அவரது பிறப்புச் சபன்றிதழைத்தான் பார்க்கவேண்டும்!! அதைத் தேடிப்பெற்றுப் பார்க்கவில்லையா? அப்படியானால், பலரும் பலவாக அந்தப் பெயரைத் தொடர்ந்து எழுதலாம்தானே?

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates