எஸ்.பொன்னுத்துரை 1965 இல் எழுதிய இக்கட்டுரை 1970இல் தமிழகத்தில் வெளியான "சுடர்" என்கிற சஞ்சிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்து நன்றியுடன் இங்கே மறு பிரசுரிக்கிறோம்.
நற்போக்கு இலக்கியம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளை நிகழ்த்தியவர், வீ, தீ முதலான நூல்களின் ஆசிரியர், ஈழத்து இலக்கிய உலகின் தனி ஓர் இயக்கம் என்னும் பல சிறப் புக்களுக்கு உரியவர் திரு. எஸ். பொன்னுத்துரை. தமிழில் இப்போது உருவாக வேண்டிய இலக்கியத்தைப் பற்றித் தமக்கென்று சில தனி நோக்குகள் கொண்டிருந்த அண்ணாவைப் பாராட்டும் இம்மலரில், 'ஈழத்துச் சிறு கதை மன்னன்' பொனனுத்துரையின் எண்ணச் செறிவு மிக்க குறிப்பு ஒன்றை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடை கிறோம். அவருடைய நோக்கையும் போக்கையும், எழுத்து வாழ்விலே அவருக்குள்ள நேர்மைத் துணிவையும் உணர்ந்து கொள்ள இந்தக் குறிப்பு ஒன்றே போதுமானது.
யாழ்ப்பாணம் ஒரு தனி உலகம். அந்த மண்ணிற்கே உரித் தான தனித்துவக் கலாச்சாரப் போக்கும் அதற்குண்டு. உணர்ச்சிகளின் சொரூபங்களையும், எண்ணங்களின் முகங்களையும் வெளியே காட்டாது, ஏதோ மனோ சிக்கலிலும் மன அவசத் திலும் அவற்றைத் திரையிட்டு வாழும் பண்பு அக் கலாச்சாரத் திற்கு மட்டுமே உண்டு. அந்தத் திரை தான் தென்னோலை வேலி கள், Cadjan Curtain. இந்த வேலியால், கறையான் பிடித்து உக்கிப்போன' செத்தையாக இருந்தாலும், தனது அம்மண வாழ்க்கையை மறைத்து விடலாமென்பதில் யாழ்ப்பாணத்திற்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கையும், அது எழுந்து நிற்கும் 'கதிகால்'களும் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் பிரிக்க இயலாத அம்சங்களாகும்.
கிடுகு வேலி
ஆமைக்கு ஓடு எப்படியோ, அப்படித்தான் யாழ்ப்பாணத் திற்கு வேலி. வேலியே வேலிகள். இவ்வேலிகளும் பல வகைத்து. வேலிகள் கட்டி வாழும் மனோபாவத்தின் உருவமாகத்தான் கிடுகு வேலி அமைந்துள்ளது. பழைமைக்கு இசைந்தொழுகுவ தாகக் காட்டிக்கொள்ளுதல்; தடிப்பான சாதி ஆசாரத்தைப் பேணுதல், 'மணச் சடங்கு மூன்று நாட்கள் நடைபெறும்'
என்று அழைப்பிதழ் விடுதல் ; மரக்கறி மனோபாவத்திற் பிரீதியென நடித்தல் ; உறவு முறைகளை இறுக்கி வைத்தல் ;-- எல்லாமே தாழ்வுச் சிக்கலில் அழுந்தும் ஒரு சமூகந் தன்னைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்திய வேலிகளே. பணம் என்ற ஜடத்தையே உயிர்ப் பொருளாக்கி, அதைத் தெய்வ பீடத்திலமர்த்தி, அதையே பூஜை செய்து கொண்டு அதைப் பூஜை செய்யாதது போலக் காட்டிக்கொள்வது கூட, அது பச்சையான மத்திய தர வகுப்பினைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும் - அதுவும் யாழ்ப் பாணக் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கவே உதவுகின்றது. உணர்ச்சிகளை மறைத்தும் அமுக்கியும், காப்புறுதியை உறுதிப்படுத்துஞ் சடங்குகளாகவே யாழ்ப்பாணக் கல்யாணங்கள் நிறைவேறுகின்றன. காணி பூமி - நகை நட்டு சேனை சனம்- குலம் கோத்திரம் - எல்லாமே அவர்களுக்கு 'இன்சூரன்ஸ் பொலிஸி'களே. அத்தகைய வாழ்க்கை முறைகளும், வேலிகளும்.
பூச்சு வேடம் இந்த வேலிகளை எஃகுலித்து, வீதிக்கு வரும் விவகாரங்கள் ஈழத்தின் சுவை மிகு வழக்குகளாகப் பிரபல்யமடைகின்றன. இவற்றைப் பிரபல்யப்படுத்தி, பழியைச் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது சுமத்தி, இவை விதிவிலக்குகளே என்று பறை சாற்றுவதும் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் ஓரம்சமாகும். யாழ்ப்பாணம் இறுக்கமான கட்டுப்பாடான ஒழுக்க நெறி களுக்கு இசைந்தொழுகிக் கற்புத்தனத்தைக் காப்பாற்றுகின்றது' எனப் பிறரை ஏமாற்ற இஃது உதவுகின்றது. பிறரை ஏமாற்றும் அதே நேரத்தில், அவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். இந்தப் போக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு இயல்பானதாகும். இந்தப் போக்கும்ஞ் சேராமல் யாழ்ப்பாணக் கலாசாரம் பூரண மடைவதில்லை. இவையெல்லாம் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் பூச்சு வேலைகளே, சைவனொருவன் தன்னை அவ்வாறு காட்டிக்கொள்ள நெற்றியிலே தாராளமாக விபூதிப்பூச்சை அப்பிக் கொள்வதைப் போல! சைவர்கள் புனைந்து கொள்ளும் வேடமே விபூதிப் பூச்சு. அந்த விபூதிப் பூச்சினால் சைவத்தின் உயிர் மூச்சினை உணர்த்த முடியாது. ஆனால், இந்த வெளிப்பூச்சையே யாழ்ப்பாணக் கலாசாரம் என்று நம்பி ஏமாறுவதும் ஏமாற்றுவதும் யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு இன்றியமையாத பண்பாகத் தேவைப்படுகின்றது.
நேர்மை உழவன் உண்மையில், இந்தப் பூச்சு வேடங்களைக் கலைத்து, வேலித் திரைகளை அகற்றி, ஆழமான பார்வையை ஊடறுத்துச் செலுத் தினாற்றான் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் மூல விக்கிரகத்தை, அல்லது உயிர் மூச்சினை நம்மால் தரிசிக்க முடியும். அவ்வாறு தரிசிப்பதற்கு நமக்குத் துணிவு வேண்டும்; தெளிவு வேண்டும்; யாழ்ப்பாணக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து, அதனின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு துறவறப் பக்குவமும் வேண்டும். இவை மூன்றும் அமையப்பெற்று, பேனாவை நேர்மையாக உழத்தெரிந்த பெற்றியனே உண்மை யான-வேடம் கலைக்கப்பட்ட சுயம்புவான யாழ்ப்பாணத்தைத் தரிசிக்கிறான்.
இடதுசாரி இயக்கம் புரட்சி ஓங்குக' என்ற சர்வதேசக் கோஷம் ஒன் றுடன் யாழ்ப்பாணத்திற்கு இடது சாரி இயக்கம் வந்து சேர்ந்தது. அதன் இலக்கியக் கிளையாக முற்போக்கு இலக்கிய இயக்கந் தோன்றிற்று. இந்த இயக்கம் முற்போக்கு இலக்கியம்-, தேசிய இலக்கியம் - மண்வாசனை இலக்கியம் - என்ற சில கோஷங்களை இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கைகளாக அறிமுகப் படுத்தியது. இக்கோஷங்களை எழுப்பியவர்களால், இக்கோஷங் களை விளக்கக் கூடிய திருட்டாந்தங்களாக அமையவல்ல இலக் கியங்களைப் படைக்க முடியவில்லை, இதன் கோஷங்களின் தாற் பரியங்களை அதை எழுப்பியவர்களாலேயே உய்த்துணர முடிய வில்லையென்பது தான் இந்த இயலாமைக்குக் காரணம். முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலக்கியப் பயிற்சி குறைந்தவர்களாகவும், தனித்துவப் பார்வை இல்லாதவர்களாக வும் இயக்கத்தின் பிரசார பலத்திலே சுயமனித முன்னேற்றங் காணவேண்டுமென்ற அவாவுடையவர்களாகவும் இருந்தமை மட்டுமே இக்கோஷங்களின் தோல்விக்குக் காரணங்களல்ல. இவை தோல்வியைக் கடுகதியிற் கொண்டுவர உதவின. ஆனால், இலக்கிய இயக்கத்திற்குக் குருபீடமாக அமைந்த அரசியல் இயக்கமே யாழ்ப்பாணக் கலாசாரத்தின் தனித்துவத்திற்குள் அமுங்கிவிட்டது. அப்படி அமுக்கும் வலிமை யாழ்ப்பாணக் கலாசாரத்திற்கு உண்டு இதன் காரணமாகத்தான் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களின் தலைமை பீடமே இடதுசாரி இயக்கத்தை வழிநடத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சாதிக் கட்டுப்பாடுகளின் இறுக்கம் வர்க்க முரண்பாடுகளுக்குத் தவறான விளக்கங்கொடுக்கத் தூண்டியது. சக்கிலியனான ஸ்டாலினை ருஷியப் பெருமக்கள் ஒரு வர்க்கத்தின் பெருந்தலைவனாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் இதனைக் கற்பனை செய்து பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டாது! எனவேதான், சிருஷ்டி இலக்கியத்தில் ஓரளவு பயிற்சியுள்ளவர்களும், சாதித்தாழ்வின் சிக்கலுறுத்த, சிருஷ்டி இலக்கியப் பயிற்சி அற்றவர்களைச் சாதி மேண்மை காரணமாக இலக்கிய இயக்கத்தின் தலைமைப் பீடத்திற்கு உயர்த்த வேண்டியிருந்தது.
முரண்பாடு
தலைமைப்பீடம் யாழ்ப்பாணத்து வெளிடே கலாசாரத்தைப் பேணவிழைந்த பொழுது, மற்றவர்கள் அப்போக்கிற்கு இசைவாக எழுதினர். இந்த முரண்பாடு முற்போக்கு இலக்கியகாரரின் எழுத்துக்களில் மிகமிக அம்மணமாகத் தெரிகிறது. இவர்களுடைய சிருஷ்டிகள், தலைமைப்பீடம் இவர்களுக்கு விளக்க முடியாத கோஷங்களை விளங்கிக் கொண்டதான 'பாவலா' வையும், தங்களுடைய சாதியே தொழிலாளி வர்க்கமாக நிலை நாட்டிவிட வேண்டுமென்ற ‘றாங்கி யையுங் கொண்டு போலியாகி விடுகின்றன. மேலும், இலக்கியப் பயிற்சி அதிகமில்லாத இவர்கள் பிராந்தியத்திற் பயிலப்படும் சில சொற்களை மட்டும் பெயர்த்தெடுத்து ஒட்டு வேலை செய்து விட்டால், தேசீய இலக்கியமும் - மண்வாசனை இலக்கியமுந் தோன்றிவிடுமெனத் திரிகரண சுத்தியாகவே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை இவர்களுடைய படைப்புக்கள் போலியானவை என்பதை நிறுவவே உதவுகின்றது.
மீண்டும் வேலி இலக்கியத்தின் தொனிப் பொருளே ஒரு பிராந்தியத்தின் உயிரைப் பிரதிபலிக்க வல்லது. அந்த உயிர் தனக்கு இசைவான உருவந்தாங்கி இலக்கியமாக உயர்கின்றது. இதைக் கூட உணராத தலைமைப்பீடம், இந்த போலிகளுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு என வாதாடி, தன்னைப் படித்த வர்க்கமாக உயர்த்திக் கொண்டது. மீண்டும் யாழ்ப்பாணக் கலாசாரத்தின் பிரிக்க இயலாத வேலி நுழைந்து கொண்டது சிருஷ்டி இலக்கிய ஆற்றலற்ற தலைவர்களுக்கும், எழுத்துப்பயிற்சியில் ஈடுபட்ட பாமர எழுத்தாளர்களுக்கும் இடையில் எழுந்த வேலி. வர்க்க போதத்தையூட்டி. சாதிகளை ஒழிக்க வந்த இயக்கம் புதிய சாதி களைத் தோற்றுவித்துத் தோற்றது.
- யாழ்ப்பாணக் கதைகள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...