48 வருடங்களுக்கு முன்னர் (1973 - நவம்பர்) கண்டியிலிருந்து வெளியான ஊற்று என்கிற ஆய்வுச் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டிருந்த கட்டுரை இது. தொல்லியல் சார் சர்ச்சைகள் இன்று எரியும் பிரச்சினையாக ஆகியிருக்கும் இந்த நேரத்தில் இக்கட்டுரை மறுவாசிப்புக்காக மீண்டும் இங்கே பகிர்கிறோம். இக்கட்டுரை வெளியாகி அடுத்த ஆண்டு (1974 மே) தமிழகத்தில் இருந்து அன்று வெளியான "கொங்கு" என்கிற சஞ்சிகையில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தொல்பொருளியல் எனில், பழையகால மனிதன் பயன்படுத் திய மண், மரம். கல், உலோகம் முதலியவற்றினாலான கருவிகள், உபகரணங்கள். விளையாட்டுப் பொருட்கள், வழிப்பட்ட கோயில் கள் சிலைகள், பிறசிற்பங்கள், தீட்டிய ஓவியங்கள், பொறித்துள்ள சாசனங்கள் பயன்படுத்திய நாணயங்கள், இருப்பிடங்கள், முதலி யனவும், இறந்த மனிதனின் எலும்புகள் ஆகியனவும், பற்றிய திட்டவட்டமான அறிவு எனலாம்.
இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொல்பொருளி யல் என்றால் பழைய கட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், முதலி யனவற்றைச் சேகரிப்பதும், அவைபற்றிய அறிவும் எனக்கருதப் பட்டது. ஆனால், இன்றோ நிலை வேறு. முழு மனிதனைப் பற்றிய ஞானமே தொல்பொருளியலின் பிரதான நோக்கம் என அறிஞர் கருதுவர். இக்கருத்து மேற்குறிப்பிட்ட வரைவிலக் கணத்திலே காணப்படுகின்றது.
மனிதவரலாற்றினை, குறிப்பாக எழுத்துப் பயன்படுத்து வதற்கு முற்பட்ட வரலாற்றினை அறிவதற்கான வரலாற்று மூலங் களிலே தொல்பொருளியல் மிக முக்கியமானதாகும் எழுத்துப் பயன்படுத்தப்பட்ட கால வரலாற்றின் பல கூறுகளையும் அறி தற்கு இஃது ஓர் உறு துணையாக உள்ளது. யாழ்ப்பாண வரலாற் றினைப் பொறுத்த அளவிலே, கி. பி. 13 ஆம் நூற்றாண்டில், தனிப் பட்ட சுதந்திர அரசு இங்கு உதயமாகிய பின்னரே ஒழுங்கான வரலாற்று மரபு உருவாகி நிலவிற்று. இம்மரபு கைலாய மலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை முதலிய நூல்களிலே பிரதி பலிக்கின்றது. இதே வகையினைச் சேர்ந்த இராசமுறை பரராச சேகரன் உலா ஆகிய இரு நூல்களும் இதுவரை கிடைத்தில. இனிமேலாவது கிடைக்குமா?
ஈழத்தில் வளர்ந்த பௌத்த சிங்கள வரலாற்று மரபைப்பின் பற்றி எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் முதலிய பாளி நூல்கள், அநுராதபுரம், பொலநறுவை முதலிய இடங்களி லிருந்து ஆட்சி செய்த சிங்கள மன்னர், காலத்திற்குக்காலம் யாழ்ப்பாணத்திற் கொண்டிருந்த தொடர்புகளை இடையிடையே குறிப்பிடுவன. எனவே கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய யாழ்ப்பாண வரலாற்றினை அறிவதற்கு தொல்பொருளியலின் முக்கியத்துவம் வெள்ளிடைமலை. ஆகவே, யாழ்ப்பாணத்தி லுள்ள தொல்பொருட்கள் யாவை? என்பது பற்றிச் சற்றுக் குறிப்பிடலாம்.
இலங்கையின் பிறபாகங்களிற் போலவே, யாழ்ப்பாணத்தி லும் நாகரிகமுள்ள மக்கள் கிறித்து ஆண்டிற்குச் சற்று முந்திய சில நூற்றாண்டுகள் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இம்மனி தர்-எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ள நிலையான பொருட் களிற் பல போத்துக்கேயர், ஒல்லாந்தர் முதலியோரின் சுதேசக் கலை அழிவுக் கொள்கையால் அழிந்து விட்டன; எஞ்சியவற்றிலும் சில எம்மவரின் தேசப்பற்றற்ற கொள்கையால் முற்றாகவோ, பகுதி பகுதியாகவோ அழிந்து விட்டன; அழிந்து கொண்டிருக் கின்றன; மூடி மறைக்கப்படுகின்றன. ஒரு சிலவே. சுதேச நூதனசாலைகளிலும், தனிப்பட்டவா சிலரின் சேகரிப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.
இங்குள்ள தொல் பொருட்களிலே, சில கட்டிட அழிபாடுகள் சிலைகள், மரவேலைப்பாடுகள், நாணயங்கள், சில சாசனங்கள், குறிப்பாக மட்பாண்ட ஓடுகள், பிற்காலக் கோட்டைகள் ஆகியன வற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளே, யாழ்ப்பாணம் கோட்டை, ஊர்க்காவற்றுறைக்கு அண்மையிலுள்ள ஹமென் ஹீல் கோட்டை, கந்தரோடையிலுள்ள ஒரு சில பௌத்த சின்னங்கள் முதலியனவற்றைத் தவிர்த்துப் பிறவிடங்களிலுள்ளவை, முறைப் படி பேணப்படுகின்றனவா? மேற்குறிப்பிட்டவையும் அரசாங் தொடர்பாலே தான் பேணப்படுகின்றன. ஒரு சில சாசனங்கள் அவற்றில் ஈடுபாடுள்ள சிலரின் அரும்பெரும் முயற்சிகளால் யாழ்ப்பாண நூதனசாலையிலே, சிதைந்த நிலையிலாவது வைக்கப் பட்டுள்ளன. வேறுசில அவ்வவ்வடங்களிலேயே விடப்பட் டுள்ளன. அவற்றின் கதி என்னவாகுமோ?
யாழ்ப்பாணத்தினைப் பொறுத்த மட்டில், ஈழத்தின் வேறு பல இடங்களிலும் பார்க்கத் தொல்பொருட்கள் தற்போது குறை வாகக் காணப்படினும், இங்கு உள்ளவற்றினைத் தேடுவதிலும் தேடிப் பாதுகாப்பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. பொது மக்கள் மத்தியிலே, இவற்றின் முக்கியத்துவம், இன்றியமை யாமை, அருமை பற்றிய அபிப்பிராயம் நன்கு நிலவவில்லை. பலருக்கு, படித்தவர் மத்தியிற்கூட இவைபற்றிய அறிவோ மிகக் குறைவு. இவற்றின் முக்கியத்துவத்தினை அறிந்தோர்கூட, இவற் றைப் புறக்கணித்தற்குச் சிறந்த உதாரணம் நல்லூர். இன்று நல்லூரைப் பார்ப்பவர் எவரும் அதனை மத்தியகால ஈழத்தமிழ் மன்னரின் தலைநகர் என்று கூறுவாரா? எஞ்சியிருக்கும் யமுனாரி யின் தோற்றமே பயங்கரமாயுள்ளது. இத்தகைய நிலை எங்க ளுடைய நாட்டுப் பற்றற்ற வெட்க நிலையைத்தான் காட்டுகின்றதா? எமக்கு வரலாற்றுச் சிந்தனையிலுள்ள பராமுகத்தினைக் காட்டுகிறதா?
இன்றைய யாழ்ப்பாணத்திலே. கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலேதான் தொல்பொருட்கள் ஓரளவாவது பரவ லாகக் கிடைக்கின்றன. நாணயங்கள், மணிவகைகள். மட் பாண்ட ஓடுகள், சில கட்டிட அழிபாடுகள் முதலியன குறிப்பிடற் பாலன. வல்லிபுரத்திலே கிறித்துவுக்கு முற்பட்டகாலத் தமிழர் நாகரிகத்தினைப் பிரதிபலிக்கும் தாழியொன்றும் கிடைத்துள்ளது. ஆனால், இத்தாழிபற்றிய கருத்து திட்டவட்டமான அகழ் வாராய்ச்சி நடைபெற்று நிரூபிக்கும் வரை ஊகமேயாம். ஆனால் வல்லிபுரம் கந்தரோடை ஆகிய இடங்களில் இன்று தொல்பொருட் கள், குறிப்பாகப் பழைய நாணய வியாபாரம் நடைபெறுகின் றது. குறிப்பாக, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும், அறி ஞர் சிலரும் அதிக பணம் கொடுத்து எமது தொல்கலைச் செல்வங் களைப் பெற்றுச் செல்லுகின்றனர். எம் நாட்டவர் இவற்றைப் பேணிப் பாதுகாத்துத் தமது முன்னோரை நினைவுகூர முடியாதா? அவர்களைப் பற்றிப் பெருமைப் படலாமே. நல்லூர் அல்லது மாவிட்டபுரத்தில் இருந்த புகழ்பெற்ற முருகன் ஆலயத்திலே பேணப்பட்டுவந்த செப்புப்பட்டயம் எங்கே? எவரின் பண ஆசைக்காகவோ, பிற காரணத்திற்காகவோ உருக்கி அழிக்கப் பட்டது? இன்னும் சில இடங்களிற்கிடைக்கும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் இதேகதி அடைகின்றன. இதனைத் தடுக்க முடியாதா?
கந்தரோடை |
சில இடங்களிலே பௌத்த அழிபாடுகள் வந்தவுடன் சிலர் நியாயமாகவோ, நியாயமின்றியோ அச்சமடைகின்றனர். அவை பற்றிக் கூறமறுக்கின் றனர். எமது மூதாதையரில் ஒரு சாரார் பௌத்தராக விளங்கினர் என்பது வரலாறு கண்ட உண்மை. இப்பொழுது எம்மவர் மத்தியிலே சைவர் , வைணவர் மட்டுமன்றி கிறித்தவர், இசுலாமியர், பௌத்தர்களும் வாழுகின்றார் களே. தென்னிலங்கையிலே, இந்து சமயம், தமிழர் சார்பான தொல்பொருட்கள் வரும்போது பௌத்த சிங்கள மக்களும், தமிழரைப் போன்றே பாராமுகமாயுள்ளனர். இத்தகைய நிலை மாறிப் பரஸ்பர நல்லெண்ணமும், ஒற்றுமையும் ஏற்பட வேண் டும்.
யாழ்ப்பாணத்திலே, மேலும் பொன்னாலை, சம்பல் துறை, சுழிபுரம், பனாளை, சுன்னாகம், தெல்லிப்பழை, கீரிமலை, கோப்பாய் கட்டைவேலி, நாகர்கோயில், லைடன் தீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலே. தொல்பொருட் சின்னங்கள் பல்வேறு வகையில் உள்ளன. இவற்றை முறைப்படி பாதுகாக்க வேண்டும்; ஆய வேண்டும். யாழ்ப்பாணத்தின் பல விடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் ஒரேயொரு தொல்பொருட் சின்னம் மட்பாண்ட ஓடு களாகும். இவை முறைப்படி ஆயப்படல் வேண்டும்.
கந்தரோடை தவிர்த்த வேறு எவ்விடங்களிலும் முறையான ஆய்வுகள் இன்று வரை நடைபெற்றில. கந்தரோடையிலும், வேறு சில இடங்களிலும் திரு போல் இ.பீரிஸ் 1916-17 லேயே மேலாய்வுகள் நடத்திக் குறிப்பிடத்தக்க பெளத்த சின்னங்கள், நாணயங்கள் முதலியன சேகரித்தார்; இவைபற்றி எழுதினார். பின்னர் 1966லே தொல்பொருளியல் இலாகா அகழ்வாராய்ச்சி ஒன்று நடத்திற்று. இவ் ஆய்வு நடத்திய பகுதியிலே கண்டு பிடிக்கப்பட்ட ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள் இப்போது திருத் தப்பட்டு மேற்பகுதிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இத் தகைய போக்கு அவற்றின் பழமையினை எந்த அளவிற்கு எடுத் துக்காட்டுமோ தெரியாது. கடைசியாக 1970-ஆம் ஆண்டு பென்சில்வேனியாப் பல்கலைக்கழக நூதன சாலையினைச் சேர்ந்த திரு புறோன் சன், கலாநிதி விமலா பெக்லி ஆகியோர் நடத்திய
அகழ்வாராய்ச்சியே மிகக் குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக முழுமையான அகழ்வாய்வு சில வளவுகளிலாவது நடைபெற்றது. இவர்களுடைய கண்டுபிடிப்புகளின்படி வட இலங்கையிலே ஆரிய நாகரிகம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே பரவுமுன் ஆரியச் சார்பற்ற நாகரிகம் நிலவிற்று. இந்நாகரிகத்திற்கும், சமகாலத் தமிழகத்திலுள்ள அரிக்கமேடு போன்ற இடங்களிலே நிலவிய நாகரிகத்திற்குமிடையிலே மிக நெருங்கிய ஒருமைப்பாடு காணப் படுகிறது. இவ் ஆய்வாளர்களின் விபரங்களடங்கிய அறிக்கை வெளிவரும். அப்போது மிகப் பழையகால யாழ்ப்பாணத்தின் நாகரிகம் மற்ற விபரங்கள் பல தெளிவாகும்.
மேற்குறிப்பிட்ட சூழ்நிலையிலேதான், யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகம் 1971ல் ஆரம்பமாயிற்று. ஆண்டுதோறும் தொல்பொருளியல் பற்றிய விரிவுரைகள், குறிப்பாகச் சாசன வியல் விரிவுரைகள் நடத்தியும், வேரப்பிட்டி (காரைநகரில்) நல்லூர், கந்தரோடை, கட்டைவேலி, வல்லிபுரம் போன்ற இடங் களிலே சில மேலாய்வுகளும் செய்து வருகின்றது ; இவற்றுடன் இவைபற்றிக் கட்டுரைகளும், செய்திகளும், பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெளியிட்டு வருகிறது. பொது மக்கள் மத்தியிலே தொல்பொருள் பற்றிய கவனம் ஓரளவாவது ஏற்படவேண்டும்; முக்கியமான கிராமங்கள், நகரங்கள் தோறும் அவ்வப் பகுதிச் சின்னங்கள் சிலவாவது ஓரிடத்திலே பேணப்பட வேண்டும். அறிவியலின் பல்வேறு துறைகளிலும் மேம்பட்டு விளங்கும் யாழ்ப்பாண மக்கள் இத்துறையிலும் சற்று கவனத்தைத் திருப்புவார்களாக!
வி. சிவசாமி B.A. Hons. (Lond.) MA. (Cey) (இணைச் செயலாளர், யாழ், தொல்லியற் கழகம்)
வரலாற்று விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை
நன்றி - ஊற்று - 1973 - நவம்பர்
நன்றி - நூலகம்
+ comments + 2 comments
தமிழரின் வரலாற்றுத் தடயங்களை அழிக்க முயலும் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர் எனினும் அது பயன்தருமா என்பது கேள்விக் குறியே
யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பட்ட தொல்பொருட்களுள் நாணயங்கள்,உலோக ஏடுகள், சிலைகள்,ஏனையவைகள் முக்கியமானவை. நாணயங்களில் அடையாளங்கள் (Symbols) இடப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் பற்றிய ஆய்வுப் பிரச்சினை பற்றி சிவசாமி ஐயா ஏன் குறிப்பிடவில்லை?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...