Headlines News :
முகப்பு » , » ஜோர்ஜ் ஃப்ளாய்டுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கிறீம் விளம்பரதாரிகள் - என்.சரவணன்

ஜோர்ஜ் ஃப்ளாய்டுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கிறீம் விளம்பரதாரிகள் - என்.சரவணன்


ஜோர்ஜ்  ஃபிலொய்ட்  இறந்த பிறகு, பொலிவுட் நடிக நடிகையர்கள் இனவெறிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதில் உள்ள பெரும் முரண்நகை என்னவென்றால் இவர்களில் பலர் பல்தேசியக் கம்பனிகளால் தயாரிக்கப்படும் தோல் நிறத்தை வெளிராக ஆக்குவதற்கான கிறீம்களை பயன்படுத்தும்படி விளம்பரங்கள் கொடுத்து வருபவர்கள் என்பது தான்.

இவர்கள் உண்மையிலேயே ஜோர்ஜ்  ஃபிலொய்ட் கொல்லப்பட்டதன் பின்னால் நிறவாதம் இருப்பதாகக் கருதுவதாயின் நிறம் ஒரு பொருட்டல்ல என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஜோர்ஜ்  ஃபிலொய்ட் மீதான அனுதாபத்தை அல்லது எதிர்ப்பை ஒரு பிரக்ஞை கொண்ட ஒரு வெளிப்பாடாக நாம் கருதியிருக்க முடியும். அவர்களுக்கு அத்தகைய எதிர்ப்பை வெளியிடுவதற்கு தார்மீகம் இருப்பதாகவும் நாம் கருதிக்கொள்ள முடியும். 

மாறாக பெண்கள் தமது இயற்கையான நிறத்தை மாற்றி வெளிராக காட்டுவதன் மூலம் தான் அழகாகவும், மற்றவர்களை கவரச் செய்வதாகவும் அர்த்தம் பொதிந்த விளம்பரங்கள் இந்த சமூகத்தில் எதைப் போதித்து வந்துள்ளன? வெளிர் நிறத்தின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும், அக்கறையையும் தூண்டுவதன் மூலம் வெளிர் அல்லாத நிறத்தை ஒரு வகையில் அழகற்ற, கவர்ச்சியற்ற ஒன்றாகத் தான் நிறுவிவிட்டுள்ளார்கள். 

நடிப்பு அவர்களின் தொழில் ஆகவே பணத்துக்காகத் தான் அதைச் செய்தார்கள் என்று இவர்களின் விளம்பரத்தை நாம் இலகுவாக நியாயப்படுத்திவிட முடியாது. இதகைகைய விளம்பரங்களை ஒருவித போதனையாகவும், பரிந்துரையாகவும் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் வேறு பெயரில் நடிக்கவும் இல்லை அவர்கள் நேரடியாக தமது சொந்த அடையாளத்துடன் தான் இத்தைகைய பரிந்துரைகளை செய்கிறார்கள். அந்த விளம்பரங்களுக்காக கொடுக்கப்படும் கொடுப்பனவு வெறும் நடிப்புக்காக மட்டுமல்ல, அவர்களின் அடையாளத்துக்கும் சேர்த்து தான். மேலும் பெரும்பாலான இத்தகைய அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களுடன், அவற்றுக்கான தூதுவர்களாகவும் (Brand ambassador) நியமிக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.


சோனம் கப்பூர், தீபிகா படுகோனே, திஷா பட்டானி போன்ற பல பொலிவூட் நடிகைகள் இத்தகைய கிறீம்களுக்கு விளம்பரம் செய்பவர்கள் தான். அனைவரும் சருமத்தை வெளிராக ஆக்குவது பற்றிய இந்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பெயார் எண்ட் லவ்லி என்கிற கிறீம். நடிகை திஷா பட்டானி கடந்த வாரம் “எல்லா நிறங்களும் அழகே” என்று செய்த கிராஃபிக் ஒன்றை ட்வீட் செய்தபோது, ட்விட்டர் பயனர்கள் திஷா பட்டானி பொன்ட் (Pond) கிறீமை விளம்பரப்படுத்தும் படங்களை பதிலுக்கு ட்வீட் செய்தனர்.

ஜோர்ஜ்  ஃபிலொய்ட்டுக்கு ஆதரவு தெரிவித்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஒருபுறம் கருத்து வெளியிட்டிருக்கிறார். மறுபுறம் உலகப் பிரசித்தி பெற்ற கார்னர் (Garnier) என்கிற கிறீமுக்கு விளம்பரம் செய்வதுடன் அதன் தூதுவராகவும் இயங்கிவருபவர். ஆனால் பிரியங்கா சோப்ரா கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இராணுவத்துக்கும், காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்கும் அரசுக்கும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.

அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகள் சர்வதேச ஆதரவு அந்தஸ்த்தை பெறுகிற போது அதில் தமக்கான பிரமுகர்த்தன விளம்பரம் தேடுகின்ற பாசாங்கு மிக்க அணுகுமுறையாகவே இத்தைகைய போக்குகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் நாளாந்தம் தம் கவனத்துக்கு எட்டக்கூடியவகையில் அருகாமையிலேயே நிகழும் பல்வேறு அடக்குறைகள், நாசச் செயல்கள் என்பவற்றுக்கு இதுபோன்ற எதிர்ப்பை ஏன் தெரிவிப்பதில்லை. இவற்றை எதிர்த்து இயங்குபவர்களுக்கு பகிரங்கமாக ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை. அப்பிரச்சினைகளுக்கு சர்வதேச கவன ஈர்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பார்களா இவர்கள் என்கிற கேள்வி நமக்கு எழாமல் எப்படி இருக்கும்?

நடிகை தமன்னா ஜோர்ஜ்  ஃபிலொய்ட்  கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகத்திலும் கழுத்திலும் கருப்பை பூசிக்கொண்டு ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். தோல் நிறமூட்டும் கிறீம்களின் விளம்பரத்தை செய்துகொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று தமன்னாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதை பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சருமத்தை வெளிராக்கும் கிறீம்களுக்கான விளம்பரங்களை பல நடிகைகளுக்கும் நடிகர்களும் செய்யவே செய்கிறார்கள். அது அவர்களுக்கு பணத்தை அள்ளித்தரும் தொழில் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்கள் நிறவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தார்மீகத்தை இழந்தவர்கள். அவர்களின் இரட்டை முகம் குறித்து நாம் இங்கு விமர்சிப்பது; இப்படியானவர்களை இரட்டை முகமற்ற சமூக பிரக்ஞையுடன் அணுகுவதற்கு உந்துவதற்குத் தான்.

பிரபல முன்னணி இந்தி நடிகர் ஷாருக்கான் கூட Fair and Handsome கிறீமுக்கு விளம்பரம் செய்பவர். அதன் தூதுவரும் கூட.

கருப்பு நிறம் பற்றி நம் சமூகத்தில் நிலவுகிற ஐதீகங்கள் வெறுமனே அழகோடு மட்டும் மட்டுப்படவில்லை. அது அபச குணத்தோடும் தான் தொடர்புபடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் இதன் வீரியம் அதிகமாகவே தென்படுகிறது.

சமூக ஒடுக்குமுறையினதும், பாரபட்சத்தினதும் அங்கமாக நிறவாதம் குடிகொண்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சமூகத்தில் கருப்பு x வெள்ளை என்கிற பாரபட்ச பார்வை பற்றிய கருத்துருவையும், நம்பிக்கைகளையும் இல்லாதொழிப்பதே இன்றைய தேவை. மாறாக வெள்ளை நிறத்தை உயர்ந்ததாக போற்ற எடுக்கப்படும் சகல முயற்சிகளும் சமூகத்தால் புறக்கணிக்கப்படவேண்டியதே.

நன்றி - தினகரன் (21.06.2020)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates